|
நிதி அமைச்சகம்
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 1:08PM by PIB Chennai
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சரும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சருமான திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கடமை மாளிகையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்ஜெட் 3 கடமைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- முதல் கடமையாக உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பது, உலக அளவிலான நிலையற்ற சூழலுக்கு எதிரான நெகிழ்வுத் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்.
- இரண்டாவது கடமையாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது, அவர்களின் திறனை வளர்ப்பது, நாட்டின் வளமையான பாதையில் அவர்களின் வலுவான பங்களிப்பை உருவாக்கும் நடவடிக்கைகள்.
- மூன்றாவது கடமையாக அனைவருக்காகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பம், சமூகம், பிராந்தியம் மற்றும் துறைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான பட்ஜெட் மதிப்பீடுகள்
பட்ஜெட் மதிப்பீடுகள்
- கடன் சாரா வருவாயினங்கள், மொத்த செலவினங்கள் முறையே ரூ.36.5 லட்சம் கோடி ரூ.53.5 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- மொத்த சந்தைக் கடன்கள் ரூ.17.2 லட்சம் கோடியாகவும், காலவரம்புடன் கூடிய கடன் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நிகர சந்தைக் கடன்கள் ரூ.11.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- கடன் அல்லாத வருவாயினங்களின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் ரூ.34 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் நிகர வரிவருவாய் ரூ.26.7 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- திருத்தியமைக்கப்பட்ட மொத்த செலவினங்களின் மதிப்பீடு ரூ.49.6 லட்சம் கோடியாகவும், இதில் ரூ.11 லட்சம் கோடி மூலதன செலவினமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 2025-26-ம் நிதியாண்டில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை அந்த நிதியாண்டுக்கு இணையாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது.
- உள்நாட்டு மொத்த உற்பத்தி - கடன் விகிதம் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 55.6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26-ம் நிதியாண்டில் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 56.1 சதவீதமாக இருந்தது.
முதல் கடமை என்பது நீடித்த மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது; 6 அம்சங்களை முன்மொழிகிறது.
- முன்னணியில் உள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 7 துறைகளில் உற்பத்தியை விரைவுபடுத்துதல்.
- உயிரிமருந்து சக்தி (அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு மூலம் சுகாதார மேம்பாட்டுக்கான உத்திசார் நடவடிக்கை) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் உயிரி மருந்து உற்பத்திக்கான உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மேம்படுத்வதே இதன் நோக்கமாகும்.
- 3 புதிய தேசிய மருந்துப் பொருள்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்குவதன் மூலமாகவும் தற்போதுள்ள 7 நிறுவனங்களை மேம்படுத்துவதன் மூலமாகவும் உயிரி மருந்து உற்பத்தி வலையமைப்பைக் கட்டமைத்தல்.
- 1000-க்கும் அதிகமான அங்கீகாரம் பெற்ற இந்திய மருத்துவப் பரிசோதனை தளங்களில் வலையமைப்பைக் உருவாக்குதல்
- இந்திய செமிக்கண்டக்டர் உற்பத்தி இயக்கம் 2.0 விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது உபகரணங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யவும், முழுமையான இந்திய அறிவுசார் சொத்துரிமைகளை வடிவமைக்கவும் தொழில்நுட்பம் மற்றும் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்கும் வகையில் தொழில்துறை தலைமையிலான பயிற்சி மையங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் விநியோக நடைமுறைகளை வலுப்படுத்தும்.
- மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அரிய வகை கனிமவள சிறப்பு வழித்தடத்தை அமைப்பதன் வாயிலாக ஒடிசா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுரங்கம், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.
- மூன்று சிறப்பு ரசாயன பூங்காக்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், தொகுப்பு அடிப்படையில் உடனடி செயல்பாட்டு மாதிரித் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்படும்.
- மூலதனப் பொருட்களுக்கான உற்பத்தித் திறனை வலுப்படுத்துதல்
- மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உயர் தொழில்நுட்பக் கருவி அறைகள் நிறுவப்பட உள்ளன. இவை டிஜிட்டல் முறையில் தானியங்கி இயக்கம் கொண்ட சேவை மையங்களாக செயல்படுவதன் மூலம் துல்லியமான உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு பரிசோதனை செய்வதற்குக் வசதிகளை உருவாக்கி குறைந்த செலவிலான அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்
- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் உயர் மதிப்பிலான நவீனத்தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமான உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உத்வேகம் பெறும்.
- உலக அளவில் போட்டித்தன்மையுடன் கூடிய கொள்கலன் உற்பத்திக்கான சூழல் அமைப்பை உருவாக்கும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் கொள்கலன் உற்பத்தித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜவுளித்துறை மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டம் அறிவிப்பு
- பட்டு, கம்பளி, சணல் போன்ற இயற்கை இழைகள், செயற்கையில் உருவாக்கப்பட்டுள்ள நூலிழைகள் மற்றும் நவீன கால நூலிழைகள் ஆகியவற்றின் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான தேசிய ஃபைபர் திட்டம் தொடங்கப்படும்.
- பாரம்பரிய கட்டமைப்புகளை நவீனமயமாக்கும் வகையில் எந்திரங்களுக்கான மூலதன ஆதரவு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பொதுச்சோதனை, சான்றுகள் மையங்களுடன் கூடிய ஜவுளித்துறை விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திட்டம்.
- தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளிகளுக்கு மதிப்புக்கூட்டும் நடவடிக்கையாக மிகப்பெரிய ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும்.
- காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களின் உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி ஊரக சுயாட்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உலக அளவிலான சந்தை வாய்ப்புகளுக்கான இணைப்பு, வர்த்தக முத்திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், பயிற்சி, திறன் மேம்பாடு, தரமான செயல் முறை மற்றும் உற்பத்தியை நெறிப்படுத்துவதற்கான நடைமுறைகளை மேம்படுத்துதல்.
- பாரம்பரிய தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்கும் நடைமுறைகள்
200 பாரம்பரிய தொழில்முறை சார்ந்த தொகுப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் உற்பத்திக்கான செலவு, போட்டித்தன்மை, செயல் திறனை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கான “சாம்பியன்” திட்டம் மற்றும் குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள்.
- எதிர்காலத்தில் சிறந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட அளவுருக்களின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் ரூ.10,000 கோடி மதிப்பிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தனி நிதியம் அறிமுகப்படுத்தப்படும்.
- தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கான நிதியத்திற்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் குறு நிறுவனங்களுக்கான பராமரிப்பு இடர்பாட்டு மூலதன நிதி கிடைப்பதற்கு வகை செய்யப்படும்.
- இந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம், இந்திய பெருநிறுவன செயலாளர் நிறுவனம், இந்திய செலவுகள், மேலாண்மை கணக்கியல் நிறுவனம் போன்ற அரசுத்துறை உயர் கல்வி நிறுவனங்களுக்கு குறைந்தகால பாடநெறிமுறைத் தொகுப்பை வடிவமைப்பதற்கு உதவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களில் பெறுநிறுவனங்களுக்கு உதவும் வகையில், செயல்பாட்டு அடிப்படையிலான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான வலுவான நடவடிக்கைகள்.
- 2026-27-ம் நிதியாண்டில் பொது மூலதனச் செலவினங்களுக்கான தொகை ரூ.12.2 கோடியாக அதிகரிக்கப்படும்.
- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் போது, ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையும் வகையிலும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மத்திய அரசால் உள்கட்டமைப்பு இடர்பாட்டு உத்தரவாத நிதியம் வலுப்படுத்தப்படும்.
- கட்டுமான முதலீட்டு அறக்கட்டளை என்ற சிறப்பு அமைப்பை உருவாக்குவதன் வாயிலாக மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானத்துறை சார்ந்த சொத்துக்களின் மறுசுழற்சி நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.
- நீடித்த சரக்குப் போக்குவரத்துக்கான சூழல் அமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பின்வரும் நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
- கிழக்குப் பகுதியில் உள்ள தன்குனி என்ற இடத்திலிருந்து மேற்கில் உள்ள சூரத் நகருக்கு சரக்கு போக்குவரத்துக்கான இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வழித்தடம் அமைத்தல்.
- 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். ஒடிசாவில் நீர்வழிப் போக்குவரத்து -5-ல் தொடங்கி கனிம வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளான தால்சர், அங்குல் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கும் கலிங்கா நகர் போன்ற தொழில்துறை மையங்களை இணைப்பதற்குமான வழித்தடங்களை அமைத்தல்.
- தேவையான மனிதவள மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் பயிற்சி நிறுவனங்களை மண்டல அளவிலான சீர்மிகு மையங்களாக உருவாக்குதல்.
- வாரணாசி மற்றும் பாட்னாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான கப்பல் பழுதுநீக்கும் சூழல் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் கடல்சார் போக்குவரத்தின் பங்களிப்பை 2047-க்குள் 6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்திலிருந்து மாற்று முறையிலான கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும்.
- உள்நாட்டுக் கடல் விமான உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், தொலைதூரப் பகுதிகளில் போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- கடல் விமானப் போக்குவரத்துத் திட்டங்களின் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் லாபமில்லா நிலையை ஈடுசெய்யும் நிதியம் அமைக்கப்படும்.
- நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்
- கரிம ஈர்ப்பு மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- நகர்ப்புற பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்.
- நகர்ப்புற பகுதிகளில் மண்டல அளவிலான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீர்திருத்தம் மற்றும் முடிவுகள் அடிப்படையிலான நிதிசார் நடைமுறைகள் சார்ந்த திட்டங்களை அமல்படுத்த உதவிடும்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணியர் போக்குவரத்து அமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நகர்ப்புறங்களுக்கு இடையே மேம்பட்ட போக்குவரத்துக்கான இணைப்பை உறுதி செய்யும் வகையில், 7 அதிவிரைவு ரயில் வழித்தடங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பின்வரும் திட்டங்கள் அடங்கும்
- மும்பை – புனே
- புனே – ஐதராபாத்
- ஐதராபாத் – பெங்களூரு
- ஐதராபாத் - சென்னை
- சென்னை – பெங்களூரு
- தில்லி – வாரணாசி
- வாரணாசி - சிலிகுரி
- வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வங்கி நடவடிக்கைகளுக்கு உயர்நிலைக் குழு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கும் வகையில் வங்கித்துறையை விரிவுபடுத்துவதற்கான மறு ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதுடன் நிதிசார் பாதுகாப்பு நிலைத்தன்மை, உள்ளடக்கிய நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும்.
- மின் நிதி நிறுவனம், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ஆகியவற்றில் மறு கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது பொதுத்துறையில் உள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதுடன் அதன் செயல்பாடுகளை சாதனை அளவில் அதிகரிக்கவும் உதவும்.
- அந்நியச் செலாவணி பரிமாற்ற மேலாண்மை (கடன் அல்லாத ஆவணங்கள்) விதிமுறைகள் விரிவான மறுசீராய்வுக்கு உட்படுத்துவதற்கான முன்மொழிவு, அந்நிய முதலீடுகளுக்கான பயனாளிகளுக்கு உகந்த கட்டமைப்புகள், சமகாலத்திற்குத் தேவையான சூழலை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதார முன்னோடி நடவடிக்கைகளுக்கு உதவும்.
நகராட்சிக் கடன் பத்திரங்கள்
- பெருநகரங்களின் மேம்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் கூடுதலான ஒற்றைக் கடன் பத்திரங்களுக்கு 100 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
2-வது கடமையாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்:
- வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்க ஏதுவாக, சேவைத்துறை சார்ந்த செயல்பாடுகளுக்குப் பரிந்துரைக்கும் வகையில், தொழில்நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் உயர்நிலைக் கல்விக்கான நிலைக்குழு ஏற்படுத்தப்படும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்முறை உருவாக்கம்
- அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய துணை சுகாதார தொழில்முறையாளர்களுக்கான நிறுவனங்கள் உருவாக்கப்படும். மேலும் தற்போது செயல்பாட்டில் உள்ள துணை சுகாதார தொழில்முறையாளர்களுக்கான நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும்.
- ஒரு லட்சம் கூடுதல் துணை சுகாதார தொழில்முறையாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள்.
- இந்தியாவை மருத்துவச் சுற்றுலா சேவைக்கான மையமாக உருவாக்கும் வகையில் மண்டல அளவிலான 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.
ஆயுஷ் துறை
- 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்
கால்நடை வளர்ப்பு
- கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை 20,000-க்கும் கூடுதலாக அதிகரிக்க நடவடிக்கைகள்
- கடனுதவியுடன் கூடிய முதலீட்டு மானிய ஆதரவுத் திட்டத்தின் கீழ் தனியார் துறையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் துணைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவமனைகள், பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் இனப்பெருக்க வசதி மையங்கள் தொடங்கப்படும்.
படைப்பாற்றல் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்
- மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவுடன் 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு, சித்திரக்கலை (காமிக்ஸ்) போன்ற படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
கல்வி
- முக்கியத் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளில் 5 பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும்.
- லாபம் இல்லாத நிலையை ஈடு செய்யும் நிதியம் அல்லது மூலதன ஆதரவுத் திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் ஒரு மாணவியர் விடுதி ஏற்படுத்தப்படும்.
சுற்றுலா
- தேசிய உணவு விடுதி மேலாண்மை மற்றும் சமையற்கலை தொழில்நுட்பக் குழுமத்தை மேம்படுத்தி தேசிய விருந்தோம்பல் நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
- இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நேர்முக மற்றும் மெய்நிகர் முறையிலான 12 வாரகால பாடத் திட்டத்தின் கீழ், உயர்தரப் பயிற்சி அளிக்கும் வகையில் 20 சுற்றுலாத் தலங்களின் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
- கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பகுதிகள் குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துவதற்கான தேசிய மின்னணு அறிவுசார் கட்டமைப்பு நிறுவனம் உருவாக்கப்படும்.
பாரம்பரியம் மற்றும் கலாச்சார சுற்றுலா
- லோத்தல், டோலவீரா, ராக்கிகரி, ஆதிச்சநல்லூர், சாரநாத், அஸ்தினாபூர், லே அரண்மனை உள்ளிட்ட 15 தொல்லியல் இடங்கள் சிறப்பான கலாச்சார அனுபவத்தை அளிக்கும் களங்களாக மேம்படுத்தப்படும்.
விளையாட்டு
- அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் கேலோ இந்தியா இயக்கம் தொடங்கப்படும்.
மூன்றாவது கடமையாக அனைவருக்காகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப 4 துறைகளில் இலக்குகளுடன் கூடிய முன்முயற்சிகள்:
- விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது
- பின்வரும் திட்டங்களுக்கான புதிய முன்முயற்சிகள்
- 500 நீர்நிலைகள் மற்றும் அமிர்த ஏரிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு
உயர் மதிப்பிலான வேளாண் நடைமுறைகள்
- உயர் மதிப்பிலான பயிர் வகைகளுக்கு அரசின் ஆதரவு நடவடிக்கைகள்
- கடலோரப் பகுதிகளில் தென்னை, சந்தனம், கோக்கோ மற்றும் முந்திரி மரங்கள் வளர்ப்பு
- தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் தென்னை ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பாரத் விஸ்தார்: (வேளாண் ஆதார வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மெய்நிகர் அமைப்பு)
- தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புடனான வேளாண் பணிகள் சார்ந்த நடைமுறைகளை புதிய பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கும் வகையிலான பாரத் விஸ்தார் திட்டம் தொடங்கப்படும். செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் கூடிய வேளாண் நடைமுறைகளுக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தொகுப்பு ஏற்படுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்
- தகவல் தொழில்நுட்பம், வரைகலை (அனிமேஷன்), ஒளிக்காட்சி, விளையாட்டு, சித்திரக்கலை (காமிக்ஸ்) துறைகள், விருந்தோம்பல், உணவு மற்றும் குளிர் பானங்கள் உற்பத்தித் துறையில் இலக்கு அடிப்படையிலான, நடைமுறை சார்ந்த பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்.
- விபத்து மற்றும் மனநலன் சார்ந்த சிகிச்சைக்கான நடவடிக்கைகள்
- வடஇந்தியாவில் அரசு சார்பில் இரண்டாவது தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
- ராஞ்சி மற்றும் தேஸ்பூரில் உள்ள மத்திய தேசிய மனநலன் சிகிச்சைக்கான மண்டல நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
- வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்பும் பூர்வோதய மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்.
- பொருளாதார முன்னேற்றத்தை அடைய விரும்பும் 5 பூர்வோதய மாநிலங்களில் 5 சுற்றுலா தலங்களை உருவாக்கும் வகையில். துர்க்காபூரிலிருந்து போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த கிழக்குக் கடற்கரை தொழில்துறை விழித்தடம் மேம்படுத்தப்படும். இதற்கென 4,000 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படும்.
- அருணாசலப்பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் புத்தமத சுற்றுலாத் திட்டங்கள் தொடங்கப்படும்.
16-வது நிதிக்குழு
- 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி 2026-27-ம் நிதியாண்டுக்கான நிதிக்குழு மானியத் தொகையாக மாநிலங்களுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
பகுதி –பி
நேர்முக வரிகள்
புதிய வருமான வரிச்சட்டம்
- புதிய வருமான வரிச்சட்டம் 2025 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
- எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிமுறைகள் மற்றும் படிவங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். சாமானிய மக்களுக்கு எளிதான இணக்க நடைமுறைகளுடன் இந்தப் படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன
வாழ்க்கையை எளிதாக்குதல்
- தனிநபர் வாகன விபத்து உரிமைக் கோரல் தீர்ப்பாயத்தால் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில், இழப்பீட்டுக்கான வட்டித் தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், இந்தத் தொகைக்கு வருமான வரிப் பிடித்த நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
- வரிவசூல் நடைமுறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள்
- வெளிநாட்டு சுற்றுலாத் திட்ட தொகுப்பு, விற்பனை சார்ந்த நடவடிக்கைகளுக்கு வரிவசூல் விகிதங்கள் தற்போதைய 2.2 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.
- கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக எல்ஆர்எஸ் முறையில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கான வரிவசூல் விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.
- அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பணியமர்த்தும் வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், மனிதவளம் அளிக்கும் நிறுவனங்களுக்கு வருமான வரிப் பிடித்த நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
- மதிப்பீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறைக்கு மாற்றாக குறைந்த அல்லது பூஜ்ய வரிப்பிடித்ததற்கான சான்றிதழ் வழங்க விதிகள் அடிப்படையிலான தானியங்கி நடைமுறைகள்.
- பங்கு ஈவுத்தொகை, வட்டி ஆகியவற்றுக்கு வரிப்பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், 15 ஜி, 15 எச் படிவங்கள் ஒற்றைச் சாளர முறையில் சமர்ப்பிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
- வருமான வரிப்படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை குறைந்த கட்டணத்துடன் நீட்டிக்கப்படும்.
- வருமான வரிப்படிவம் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்புடைய சொத்து சார்ந்த பரிவர்த்தனைகளுக்கான வரி அடையாள எண்ணுக்கு மாற்றாக உள்நாட்டு சொத்து வாங்குவோரின் நிரந்தர கணக்கு எண் (பான்) அடிப்படையிலான சலான் நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
- குறைந்த வரிசெலுத்துவோர் வெளிநாடுகளில் உள்ள வருவாய் அல்லது சொத்து குறித்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் 6 மாதத்திற்கு ஒரு முறை என மாற்றியமைக்கப்படும்.
அபராதம் மற்றும் வழக்கு நடைமுறைகள்
- வருமான வரி மதிப்பீடு அபராத நடைமுறைகள் ஆகிய இரண்டுக்கும் பொதுவான ஆணைகள் அடிப்படையில் ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவுகள்.
- வருவமான வரி தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வருமான வரிப்படிவத்தில் மதிப்பீடுகளுக்குப் பிந்தைய திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக, வரி செலுத்துவோருக்கு 10 சதவீத கூடுதல் வரியுடன் அனுமதி வழங்கப்படும்.
- வருமான வரிப்படிவத்தில் தவறான தகவல்களை அளிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையிலிருந்து நிவாரணம் வழங்க கூடுதல் வரிசெலுத்த அனுமதி வழங்கப்படும்.
- வருமான வரிச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்பான நடைமுறைகள் சீரமைக்கப்படும்.
- வரிப்பிடித்தம் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் அரசுக்கு செலுத்தப்படும் தொகைகள் குறித்த கணக்குப் புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் தேவையான படிவங்களை தாக்கல் செய்யாதவர்கள் பிற வகைகளில் வரி செலுத்தியிருந்தால் அவை குற்றமாகக் கருதப்பட மாட்டாது.
- ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சத்துக்கும் குறைந்த மதிப்பில் வெளிநாட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள் மீதான வழக்குகளிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். இந்த நடைமுறைகள் 01.10.2024 என்ற பின் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
கூட்டுறவு நிறுவனங்கள்
- பால், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் அல்லது காய்கறி விநியோகம் அல்லது கால்நடை தீவனம் மற்றும் பருத்தி விதைகளை உற்பத்தி செய்யும் கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கழிவு நீட்டிக்கப்படும்.
- புதிய வரி நடைமுறைகளின் கீழ் கூட்டுறவு சங்கங்களுக்கு இடையேயான பங்கு ஈவுத் தொகை மீதான வரிக்கழிவு சலுகைகள் அதன் உறுப்பினர்களுக்கான ஈவுத்தொகைக்கும் விரிவுபடுத்தப்படும்.
- அறிவிக்கப்பட்ட தேசிய கூட்டுறவு கூட்டமைப்பின் நிறுவனத்தால் பெறப்பட்ட பங்கு ஈவுத்தொகை வருவாய்க்கான வரிவிலக்கு மேலும் 3 ஆண்டுக் காலத்திற்கு நீட்டிக்கப்படும். இது 31.01.2026 வரை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பெறும் ஈவுத் தொகை வருவாய்க்கும் இந்த வரி விலக்கு நீட்டிக்கப்படும்.
இந்தியாவின் வளர்ச்சி எந்திரத்திற்கு உத்வேகம் அளிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை
- மென்பொருள் மேம்பாட்டு சேவைகள், இணையதளம் சார்ந்த சேவைகள், அறிவுசார் சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகள் மற்றும் அவை சார்ந்த அனைத்து மென்பொருள் சேவைகளும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளின் கீழ் ஒரே வரி விதிப்பு முறையில் இணைக்கப்படும். இதன் மூலம் இத்துறை சார்ந்த அனைவருக்கும் 15.5 சதவீதம் வரிசேமிப்பு உறுதி செய்யப்படும். ..
- தகவல் தொழில்நுட்ப சேவைக்கான வரி சேமிப்புத் திட்டத்தைப் பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.300 கோடியிலிருந்து ரூ.2000 கோடியாக உயர்த்தப்படும்.
- தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான வரி சேமிப்புத் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகள், விதிமுறைகள் சார்ந்து தானியங்கி முறையில் அடுத்த 5 ஆண்டு காலத்திற்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான ஒரு தரப்பு முன்கூட்டிய வேலை ஒப்பந்த நடவடிக்கைகள் இரண்டு ஆண்டு காலத்திற்குள் விரைவான முறையில் இறுதி செய்யப்படும். வரி செலுத்துவோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
- முன்கூட்டிய விலை ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் வசதிகள் அதன் துணை நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
உலக அளவிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள்
- இந்தியாவிலிருந்து தரவு சேவைகள் மையத்தின் மூலம் உலக அளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிளவ்ட் சேவைகள் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- அதே சமயம் இந்தியாவிலிருந்து தரவு மைய சேவைகள், வழங்கும் அதன் துணை நிறுவனங்களுக்கு சேவை சார்ந்த செலவினங்களில் 15 சதவீத அளவிற்கான வரி சேமிப்பிற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
- வரையறுக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் அது சார்ந்த பாகங்களுக்கான விற்பனை மதிப்பில் உள்ள லாபத்தொகையில் 2 சதவீதம் வரை வெளிநாட்டவருக்கு வரி சேமிப்புக்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக வரிவிதிப்பிற்கான எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 0.7 சதவீதம் என்ற குறைந்த வரி விதிக்கப்படும்.
- வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 3-ம் தரப்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கான மூலதனப் பொருள்கள், உபகரணங்கள் அல்லது கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியர் அல்லாத வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கீழ், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு நிபுணர்களின் சர்வதேச அளவிலான வருவாய்க்கு (இந்தியாவிற்கு வெளியே ஈட்டப்படும் வருவாய்க்கு) 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
- அனுமான அடிப்படையில் வரி செலுத்தும் அனைத்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களுக்கும் குறைந்தபட்ச மாற்றுவிகித வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
வரி நிர்வாக நடைமுறைகள்
- இந்தியக் கணக்கியல் தரநிலை விதிமுறைகளின் கீழ் வருவாய் கணக்கீடு மற்றும் விவரங்களைத் தாக்கல் செய்வது குறித்த நெறிமுறைகளை வகுப்பதற்கான மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இணைந்த கூட்டுக் குழு அமைக்கப்படும். 2027-28-ம் வரி ஆண்டிலிருந்து இதற்கான தனிப்பட்ட கணக்கியல் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
- வரிசேமிப்பு தொடர்பான விதிமுறைகளை நெறிப்படுத்தும் வகையில் கணக்காளர் என்பதற்கான வரைமுறைகள் வகுக்கப்படும்.
வரி தொடர்பான இதர முன்மொழிவுகள்
- சிறிய பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து வகையான பங்குதாரர்களின் பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் மூலதன ஈவுத்தொகைக்கு நிறுவனம் சார்ந்த உரிமையாளர்களுக்கு கூடுதலாக 22 சதவீதமும் நிறுவனம் அல்லாத உரிமைதாரர்களுக்கு கூடுதலாக 30 சதவீதமும் மூலதன வரி விதிக்கப்படும்.
- மதுபானங்கள், பயன்பாடற்ற கழிவுகள் மற்றும் கனிமங்கள் தொடர்பான குறிப்பிட்ட பொருட்களின் விற்பனை மீதான வரி வசூல் விகிதம் 2 சதவீதமாகவும் பீடி சுற்றப்பயன்படும் இலைகள் மீதான வரிவசூல் விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும் குறைக்கப்படும்.
- எதிர்கால பங்குகள் மீதான பங்கு பரிவர்த்தனை வரி விகிதம் 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும்.
- விருப்பத் தேர்வு அடிப்படையில் கூடுதல் தொகைக்கான பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வரி விகிதங்கள் முறையே 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்படும்.
- புதிய வரி நடைமுறைகளுக்கு மாறும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முந்தைய ஆண்டுகளின் குறைந்தபட்ச மாற்றுமுறை வரி வரவை, புதிய வரிவிதிப்பு நடைமுறையைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கான மொத்த வரித்தொகையில் நான்கில் ஒரு பங்கு வரிக்கழிவாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
- குறைந்தபட்ச மாற்றுமுறை வரி விகிதத்தை இறுதி வரித்தொகையாக கணக்கிடுவதற்கு முன்மொழியப்படும். 2026 ஏப்ரல் 1 முதல் இதற்கான வரிவிகித வரவு கூட்டுத்தொகைக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத குறைந்தபட்ச மாற்றுமுறை வரிவிகிதம் 14 சதவீதமாகக் குறைக்கப்படும். 2026 மார்ச் 31 வரை வரி செலுத்துவோரால் சேர்க்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மாற்றுமுறை வரிவிகித வரவுத் தொகையை வரி செலுத்த வேண்டிய தொகையிலிருந்து கழித்துக் கொள்வதற்கான நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுக வரிகள்
எளிய வரிவிகிதங்கள்
தோல் ஜவுளி மற்றும் கடல்சார் பொருட்கள் மீதான மறைமுக வரிகள்.
- ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் சிலவகை பொருட்களுக்கான வரியில்லாத இறக்குமதி உச்சவரம்பு இந்திய துறைமுகத்தை வந்தடையும் செலவுத் தொகையில் (எஃப்ஓபி) தற்போது ஒரு சதவீதம் என்று இருப்பதிலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும்.
- தோல் அல்லது செயற்கை இழை காலணி ஏற்றுமதிக்குத் தற்போது கிடைக்கும் வரியில்லா இறக்குமதியின் குறிப்பிட்ட சிலவகை பொருட்களுக்கும் அனுமதிக்கப்படும்.
எரிசக்தி மாற்றம் மற்றும் பாதுகாப்பு
- மின்கலனுக்கான லித்தியம் –அயர்ன் செல் உற்பத்திக்குப் பயன்படும் மூலதனப் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- சூரியசக்தி கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படும் சோடியம் ஆன்டிமொனேட் இறக்குமதி மீதான அடிப்படை சுங்கவரிக்கு விலக்கு அளிக்கப்படும்.
அணுமின் சக்தி
- அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான தற்போதைய அடிப்படை சுங்கத் தீர்வைக்கு அளிக்கப்படும் விலக்கு 2035-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.
அரியவகை கனிமவளங்கள்
- அரியவகை கனிமங்களின் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
உயிரி எரிவாயு கலந்த அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு
- உயிரி எரிவாயுவின் ஒட்டுமொத்த மதிப்பு, உயிரி எரிவாயு கலப்புடன் கூடிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுக்கான உற்பத்தி வரியைக் கணக்கிடும் நடைமுறைகளிலிருந்து தவிர்க்கப்படும்.
பயணியர் மற்றும் பாதுகாப்பு விமான உற்பத்தி
- பயணிகள், பயிற்சி மற்றும் இதர சேவைகளுக்கான விமான உற்பத்திக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- பாதுகாப்புத் துறையில் பராமரிப்பு, பழுது நீ்க்கம் அல்லது மேம்பாட்டு அலகுகளில் பயன்படுத்தப்படும் விமான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் மீதான அடிப்படை இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மின்னணு சாதனங்கள்
- மின்காந்த அலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கு அடிப்படை இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
சிறப்புப் பொருளாதார மண்டலம்
- சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தகுதிவாய்ந்த உற்பத்தி அலகுகளிலிருந்து உள்நாட்டு வரிவிதிப்பு பகுதிகளில் விற்பனைக்கான வசதிகளுக்கு சிறப்பு சலுகையாக ஒரு முறை மட்டுமே வரிச் சலுகை அளிக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதுள். இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கான விற்பனை அளவு அதன் ஏற்றுமதி விகிதத்தில் குறிப்பிட்ட வரம்பிற்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.
வாழ்க்கையை எளிதாக்குதல்
- தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து வரிவிதிப்பு பொருட்களுக்கான இறக்குமதி வரி விகிதம் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.
- 17 வகையான மருந்துகள் மீதான அடிப்படை இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
சுங்க நடைமுறைகள் எளிமையாக்கம்
- சுமூகமான, விரைவான சரக்குப் போக்குவரத்திற்கு சுங்க நடைமுறைகளில் அரசின் குறைந்தபட்ச தலையீடுகள்.
நம்பிக்கை அடிப்படையிலான நடைமுறைகள்
- 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆப்பரேட்டர்களுக்கு வரி ஒத்திவைப்பு காலம் 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்படும். இது தகுதி வாய்ந்த பொருள் உற்பத்திக்கான இறக்குமதியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
- சுங்க நடைமுறைகள் மீதான புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் செல்லத்தக்க காலம் வரை தற்போதைய 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
- அரசு முகமைகளின் சரக்குகளுக்கான அனுமதிக்கு சலுகை அளிப்பதற்கான நடைமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார ஆப்பரேட்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்.
- நம்பிக்கைக்குரிய இறக்குமதியாளர்கள் தங்களின் இறக்குமதி அனுமதி சார்ந்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காக தாக்கல் செய்யப்படும் நுழைவு ரசீது மற்றும் சரக்குகளின் வருகை குறித்த தரவுகள் தானியங்கி முறையில் சுங்கத்துறைக்கு அறிவிக்கப்படும். (இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இணக்க நடைமுறைகளுக்கு அவசியமில்லை)
- சுய அறிவிப்பு, மின்னணு முறையிலான தடம் அறிதல், இடர் அடிப்படையிலான தணிக்கை ஆகியவற்றுடன் சுங்கத்துறை கிடங்குகள் கட்டமைப்பு, கிடங்கு பராமரிப்பவர் மைய நடைமுறையாக மாற்றம் செய்யப்படும்.
வணிகம் செய்வதை எளிதாக்குதல்
- இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஒற்றை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சாளரம் மூலம் பல்வேறு அரசு முகமைகளிலிருந்து சரக்குகளை வெளிக்கொண்ட வருவதற்கான அனுமதி தடையின்றி கிடைக்கும் வகையிலான நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.
- உணவுப் பொருட்கள், மருந்துகள், தாவர, வனவிலங்குப் பொருட்கள் ஆகியவை தொடர்பான அனுமதி நடைமுறைகள் இந்த வகையில் 2026 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.
- இணக்க நடைமுறைகள் தேவைப்படாத சரக்குகளுக்கான அனுமதி இறக்குமதியாளரால் இணையதளப் பதிவு நடைமுறைகள் நிறைவடைந்த உடன் சுங்கத்துறையால் வழங்கப்படும்.
- ஒருங்கிணைந்த சுங்க நடைமுறை (சிஐஎஸ்) என்பது அனைத்து சுங்க நடவடிக்கைகளுக்கும், ஒற்றை, ஒருங்கிணைந்த, அளவீடுள்ள தளமாக இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும்.
- நவீன படமாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தனி உரிமை பாதிக்காத ஸ்கேனிங் முறையின் பயன்பாடு படிப்படியாக அனைத்து பெரிய துறைமுகங்களிலும் ஒவ்வொரு கொள்கலனுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய ஏற்றுமதி வாய்ப்புகள்
- சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அல்லது ஆழ்கடல் பகுதியில் இந்திய மீன்பிடி படகுகளால் பிடிக்கப்படும் மீன்களுக்கு வரி விதிப்பு இருக்காது. வெளிநாட்டு துறைமுகத்தில் இத்தகைய மீன் கொண்டு செல்லப்படுவது சரக்குகளின் ஏற்றுமதியாகக் கருதப்படும்.
- கூரியர் ஏற்றுமதிகள் மீது ஒரு சரக்குத் தொகுப்புக்கு 10 லட்சம் ரூபாய் வரை தற்போதுள்ள மதிப்பு வரம்பு முற்றிலுமாக நீக்கப்படுவது இந்தியாவில் சிறு வணிகங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை இ-வணிகம் மூலம் உலகளாவிய சந்தைகளை அணுகும். விருப்பத்திற்கு உதவியாக இருக்கும்.
வாழ்க்கையை எளிதாக்குதல்
- சர்வதேச பயணத்தின் போது, பொருட்கள் அடங்கிய பெட்டிகளின் அனுமதி கட்டணங்கள் திருத்தியமைக்கப்படும். தற்போதுள்ள எதார்த்த நிலைக்கு ஏற்ப திருத்தப்பட்ட விதிகள், கட்டணமில்லா சலுகைகளாக விரிவுபடுத்தப்படும்.
- கண்ணியமான வரி செலுத்துவோர் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் விருப்பத்துடன் அபராதம் என்ற முறையில் கூடுதல் தொகை செலுத்துவதன் மூலம் வழக்குகளை முடித்துக் கொள்ள முடியும்.
***
(Release ID: 2221455)
SG/VL/SMB/SV/KPG/RJ/KR
(रिलीज़ आईडी: 2221913)
|