பிரதமர் அலுவலகம்
விங்ஸ் இந்தியா 2026: "உலகளாவிய விமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் இந்தியா"
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரை
प्रविष्टि तिथि:
28 JAN 2026 6:43PM by PIB Chennai
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற 'விங்ஸ் இந்தியா 2026' மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றிய பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் இத்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். இந்தியா இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2014-இல் 70-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 160-க்கும் மேலாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 2047-ஆம் ஆண்டிற்குள் 400-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 'உடான்' திட்டத்தின் மூலம் சாமானிய மக்களும் குறைந்த கட்டணத்தில் வான்வழிப் பயணம் மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது. இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் தேவைகளுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே விமான தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ராணுவ மற்றும் போக்குவரத்து விமானங்களைத் தொடர்ந்து, சிவில் விமானத் தயாரிப்பிலும் இந்தியா கால்பதித்துள்ளது. வரும் காலங்களில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மின்சார வான்வழி ஊர்திகள் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பசுமை விமான எரிபொருள் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த டிஜிட்டல் தளங்கள் மற்றும் நவீனக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியா உலகளாவிய விமானப் போக்குவரத்து நுழைவாயிலாகத் திகழ்கிறது என்றார். "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உலக முதலீட்டாளர்கள் 'துணை விமானிகளாக' இணைந்து செயல்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்த அவர், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள பொற்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219735®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2219832)
आगंतुक पटल : 5