பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்திய இளைஞர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்: பிரதமர்

பத்து ஆண்டுகளில், ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கம் ஒரு புரட்சியாக மாறியுள்ளது; இப்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் நாடாக மாறியுள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 16 JAN 2026 3:22PM by PIB Chennai

தேசிய புத்தொழில் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.01.2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியின் பத்து ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வான இந்த தேசிய புத்தொழில் பங்கேற்பதாகக் குறிப்பிட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு விவசாயம், நிதித் தொழில்நுட்பம், இயக்கம், சுகாதாரம் ஆகிய துறைகளில் பணிபுரியும் சில புத்தொழில் நிறுவனத்தினருடன் தாம் உரையாடியதாகவும், அவர்களின் கருத்துக்கள் தன்னைக் கவர்ந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்டார்ட்அப் இந்தியா 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இந்த முயற்சியின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஸ்டார்ட்அப் இந்தியாவின் பத்து ஆண்டுகால பயணம் அரசுத் திட்டத்தின் வெற்றிக் கதை மட்டுமல்ல எனவும், பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுப் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தொழில்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகள் இருந்ததையும், ஆனால் ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் ஏற்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். வெறும் 10 ஆண்டுகளில், ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கம் ஒரு புரட்சியாக மாறியுள்ளது எனவும் இப்போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பைக் கொண்ட நாடாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 500- க்கும் குறைவான புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன என்றும் ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2025-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 44,000 புதிய புதிய புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் கூட, இளைஞர்கள் தங்கள் சொந்த புத்தொழில் நிறுவனங்களைத் திறந்து, மிகவும் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றனர் என்று அவர் எடுத்துரைத்தார். சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வு தனக்கு மகத்தான மகிழ்ச்சியைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த மாற்றத்தில் நாட்டின் மகள்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும், அங்கீகரிக்கப்பட்ட 45 சதவீதத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த உள்ளடக்கிய வளர்ச்சி இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்துகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு சூழல் அமைப்பை நாடு உருவாக்கியுள்ளது என்பதை பிரதமர் விளக்கினார். குழந்தைகளிடையே புதுமை உணர்வைத் தூண்டுவதற்காக பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டன எனவும் தேசிய பிரச்சினைகளைத் தீர்க்க இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஹேக்கத்தான்கள் தொடங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

ஸ்டார்ட்அப் இந்தியா என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல எனவும் பல்வேறு துறைகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் ஒரு வானவில் பார்வை என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். பாதுகாப்பு உற்பத்தியில், புத்தொழில் நிறுவனங்கள் முன்பு இல்லை என்றும், ஆனால் ஐடெக்ஸ் முயற்சியின் மூலம் இதுபோன்ற துறைகளில் புதிய கொள்முதல் பாதைகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட விண்வெளித் துறை இப்போது தனியார் பங்களிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் கிட்டத்தட்ட 200 புத்தொழில் நிறுவனங்கள் இந்தத் துறையில் செயல்பட்டு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய ஆராய்ச்சி நாளைய அறிவுசார் சொத்தாக மாறும் என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இதை ஊக்குவிப்பதற்காக, 1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகள் அதிக நன்மைகளைப் பெறும் என்றும், இந்தியாவிற்கு இந்தப் பொறுப்பு புத்தொழில் நிறுவனங்களிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 2026 பிப்ரவரியில் இந்தியா, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை நடத்தவுள்ளதையும் இது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகள் நாட்டின் திறன்களை நிரூபித்துள்ளன என்றும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான இலக்கு, புதிய தொழில்நுட்பங்களில் இந்தியா, உலகை வழிநடத்துவதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215280&reg=3&lang=1

***

TV/PLM/RK/SE


(रिलीज़ आईडी: 2215409) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam