பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா, பன்முகத்தன்மையை அதன் ஜனநாயகத்தின் பலமாக மாற்றியுள்ளது: பிரதமர்

உலகளாவிய தெற்கு நாடுகளின் கவலைகளையும் முன்னுரிமைகளையும் ஒவ்வொரு சர்வதேச தளத்திலும் இந்தியா பேசுகிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 15 JAN 2026 12:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவைத் தலைவரின் பங்கு தனித்துவமானது என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதிகம் பேச வாய்ப்பில்லை என்றாலும், அவர்களின் பொறுப்பு மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும், அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்வதும் ஆகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களைக் கூட புன்னகையுடன் கையாள்வது அவைத் தலைவர்களின் பொதுவான பண்பு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

காலனித்துவ ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், இந்தியாவின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசியல் சாசன சபை இந்த மைய மண்டபத்தில் கூடியதை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகளாக, இந்தக் கட்டடம் இந்தியாவின் நாடாளுமன்றமாகச் செயல்பட்டது எனவும் இங்கு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பல முக்கியமான விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இந்தியா இப்போது சம்விதான் சதன் என்று பெயரிட்டு ஜனநாயகத்திற்கு அர்ப்பணித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அண்மையில், இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடியது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இது நான்காவது முறை என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள் நாடாளுமன்ற 'ஜனநாயகத்தை திறம்பட செயல்படுத்துதல்' என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இவ்வளவு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்காது என்ற அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். ஆனால் இந்த பன்முகத்தன்மையையே இந்திய ஜனநாயகத்தின் பலமாக மாறியதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து இருந்தாலும், வளர்ச்சி குறித்த கவலை இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இப்போது வளர்ச்சியும் அதிகரித்திருப்பதாகவும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். யுபிஐ மூலம் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண முறையை இந்தியா கொண்டுள்ளது என்றும் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார். உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர், மூன்றாவது பெரிய புத்தொழில் அமைப்பு, மூன்றாவது பெரிய விமான சந்தை, மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பு, மிகப்பெரிய பால் உற்பத்தியாளர், இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தியாளர் என பல முன்னணி நிலைகளை இந்தியா அடைந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவில், ஜனநாயகம் என்பது கடைசி நிலை வரை சேவை வழங்குவதைக் குறிக்கிறது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா பொது நல உணர்வோடு செயல்படுகிறது என்றும், அரசுத் திட்டப் பலன்கள் பாகுபாடின்றி ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைவதை உறுதி செய்கிறது என்றும் கூறினார். இந்த உணர்வின் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில், ஜனநாயகம் வலுவாக உள்ளதுடன் மக்களுக்கு வலுவான பலன்களை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு நடைமுறைகள் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மக்களின் நலனுக்காக சேவை செய்வது இந்தியாவின் நெறிமுறை என்றும், இந்த நெறிமுறை இந்தியாவின் ஜனநாயகத்தால் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள பலர் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறிவார்கள் என்பதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்திய ஜனநாயகத்தின் அளவு உண்மையிலேயே அசாதாரணமானது என்பதை எடுத்துரைத்தார். 2024-ல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவை மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயகப் நடைமுறை என்று குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 98 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்ததாகவும், அதில் 700 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டதாகவும் கூறினார். இந்தத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் சாதனை அளவில் பங்கேற்று வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று இந்தியப் பெண்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், வழிநடத்தவும் செய்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் ஒரு பெண் என்றும், மாநாடு நடைபெறும் நகரமான தில்லியின் முதலமைச்சரும் ஒரு பெண் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமப்புற, உள்ளாட்சி அமைப்புகளில், இந்தியாவில் சுமார் 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ஜனநாயகம் பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன எனவும் பல்வேறு மொழிகளில் 900க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன என்றும் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தியா பகவான் புத்தரின் பூமி என்றும், இங்கு புத்த சங்கத்தினர் ஒருமித்த கருத்து அல்லது வாக்களிப்பு மூலம் திறந்த, கட்டமைக்கப்பட்ட விவாதங்களை நடத்தினர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-ம் நூற்றாண்டின் கல்வெட்டை அவர் எடுத்துரைத்தார். அது ஜனநாயக விழுமியங்களுடன் செயல்படும் ஒரு கிராமக் கூட்டத்தை விவரிப்பதாக அவர் கூறினார்.

காமன்வெல்த் நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர் என்று பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து பங்களிக்க முயன்று வருவதாக அவர் கூறினார். இந்தியாவின் அனுபவங்கள் பிற காமன்வெல்த் நாடுகளுக்கு பயனளிப்பதாகவும் அவர் கூறினார்.

உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்திற்கு உள்ளாகி வரும் இந்த நேரத்தில், உலகளாவிய தெற்கு நாடுகள் (வளரும் நாடுகள்) புதிய பாதைகளை வகுக்க வேண்டிய தருணம் இது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சர்வதேச தளத்திலும் உலகளாவிய தெற்கு நாடுகளின் கவலைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் இந்தியா வலுவாகக் குரல் கொடுத்து வருவதாக அவர் கூறினார். ஜி20 தலைமைத்துவத்தின் போது, இந்தியா உலகளாவிய தெற்கு நாடுகளின் கவலைகளை உலகளாவிய செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாக வைத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த அறிவையும் புரிதலையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை ஆராய்வது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த முயற்சியில் அவைத் தலைவர்களும், தலைமை அதிகாரிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றார். இந்த மாநாடு கற்றலையும், நல்ல அம்சங்களின் பகிர்வையும் மேலும் வளப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியன் தலைவர் டாக்டர் துலியா ஆக்சன், காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் கலிலா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 காமன்வெல்த் நாடுகள், 4 பகுதி அளவு தன்னாட்சி நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 61 அவைத் தலைவர்களும் (சபாநாயகர்கள்) தலைமை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214823&reg=3&lang=1

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2214876) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam