பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 1:13PM by PIB Chennai
"மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்றைய நாள் இந்த அவையின் அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் ஒரு பெருமிதமான தருணமாகும். உங்களை வரவேற்கும் அதே வேளையில், உங்கள் வழிகாட்டுதலின் கீழ் இந்த அவையின் மூலம் முக்கியமான விவகாரங்களைப் விவாதிக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும், உங்கள் விலைமதிப்பற்ற வழிகாட்டுதலைப் பெறவும் இது நம் அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
அவையின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த மேலவையின் கண்ணியத்தை எப்போதும் நிலைநிறுத்துவார்கள் என்றும், உங்கள் கண்ணியத்தையும் எப்போதும் மதித்துப் போற்றுவார்கள் என்றும் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது உங்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி.
நமது தலைவர் (குடியரசுத் துணைத்தலைவர்) ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து, ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். சமூக சேவையே அவரது நிலையான பாதையாக இருந்து வருகிறது. அரசியல் என்பது அதன் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம், ஆனால் அவரது வாழ்க்கையின் முதன்மை ஓட்டம் எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதாகவே இருந்துள்ளது. தனது இளமைக் காலம் முதல் இப்போது வரை, அவர் சமூகத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார். ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து, சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வந்து, மாறிவரும் அரசியல் சூழல்களைக் கையாண்டு, இன்று இந்த நிலையை எட்டி நம் அனைவருக்கும் வழிகாட்டுவது என்பது இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமையாகும்.
உங்களை நீண்ட காலமாக அறிந்திருப்பதையும், பொது வாழ்வில் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருப்பதையும் நான் எனது நற்பேறாகக் கருதுகிறேன். நான் பிரதமராக இங்கே பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு, பல்வேறு பொறுப்புகளில் உங்களது செயல்பாடுகளைக் கவனித்தபோது, அது குறித்து நான் இயல்பாகவே மிகுந்த நேர்மறையான எண்ணத்தைப் பெற்றேன்."
"கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தபோது, அந்த நிறுவனத்தை வரலாற்றிலேயே அதிக லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக நீங்கள் மாற்றினீர்கள். ஒருவர் ஒரு நிறுவனத்தின் மீது அர்ப்பணிப்புடன் இருந்தால், அங்கு எவ்வளவு மேம்பாடு சாத்தியம் என்பதையும், அதன் அடையாளத்தை உலக அளவில் எவ்வாறு உயர்த்த முடியும் என்பதையும் நீங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்.
பாரதத்தில் மிகச் சிலருக்கே பல பிராந்தியங்களில் பணியாற்றும் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகிய பொறுப்புகளை நீங்கள் சுமந்துள்ளீர்கள். குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியின மக்களுடன் நீங்கள் எவ்வளவு ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். மிகச்சிறிய கிராமங்களுக்குக் கூட நீங்கள் நேரில் செல்வீர்கள். நாம் சந்திக்கும் போதெல்லாம் அங்கிருந்த முதலமைச்சர் இதனைப் பெருமையுடன் குறிப்பிடுவார்.
சில நேரங்களில் அங்கிருந்த அரசியல்வாதிகள் கவலைப்படுவார்கள்; ஏனெனில் ஹெலிகாப்டர் வசதி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் பயணம் செய்வீர்கள். எந்த வாகனம் கிடைக்கிறதோ அதில் ஏறி, தொடர்ந்து பயணம் செய்து, சிறிய இடங்களில் கூட இரவு தங்கி பணியாற்றுவீர்கள். ஆளுநர் பதவியில் இருந்தபோதும் நீங்கள் கடைப்பிடித்த இந்தச் சேவை மனப்பான்மையும், அந்தப் பதவிக்கு நீங்கள் வழங்கிய புதிய பரிமாணங்களும் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே.
ஒரு கட்சித் தொண்டராக (காரியகர்த்தா), என்னுடன் பணியாற்றிய ஒரு சக ஊழியராக உங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த உயர் பதவியை (மாநிலங்களவைத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர்) அடைவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளிலும் உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்; பொதுவாகப் பொது வாழ்வில் மக்கள் ஒரு உயர்ந்த பதவியை அடையும்போது, அந்தப் பதவியின் சுமையை உணர்வார்கள் அல்லது நெறிமுறைகளுக்குள் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு இந்த நெறிமுறைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் கண்டிருக்கிறேன்.
நீங்கள் எப்போதும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்திருக்கிறீர்கள். பொது வாழ்வில் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்வதில் ஒரு தனித்துவமான வலிமை இருப்பதாக நான் நம்புகிறேன், அந்த வலிமையை உங்களிடம் நாங்கள் எப்போதும் உணர்ந்திருக்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,"
"உங்கள் ஆளுமையை வரையறுக்கும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நிதானம் ஆகிய குணங்களை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம். நீங்கள் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட 'டாலர் சிட்டி' (திருப்பூர்) பகுதியில் பிறந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையை 'அந்தியோதயா' (கடைக்கோடி மனிதனுக்கான சேவை) பணிக்காக அர்ப்பணிக்கத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்த 'டாலர் சிட்டி'யிலும் கூட, ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் அல்லல்படும் குடும்பங்கள் மீதே நீங்கள் எப்போதும் அக்கறை காட்டினீர்கள்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
உங்களிடமிருந்தும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் நான் கேள்விப்பட்ட, உங்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு சம்பவங்களை நான் இங்கே குறிப்பிட வேண்டும். முதலாவது உங்கள் சிறுவயதில் நடந்தது; அவினாசி கோயில் குளத்தில் நீங்கள் மூழ்கும் தருவாயில் இருந்தீர்கள். 'நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்; என்னை யார் காப்பாற்றியது, எப்படி நான் காப்பாற்றப்பட்டேன்?' என்பது உங்களுக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருந்தது. 'எனக்குத் தெரியாது, ஆனால் நான் உயிர் பிழைத்தேன்' என்று நீங்கள் கூறுவீர்கள். உங்கள் மீது இறை அருள் இருப்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக உங்கள் குடும்பத்தினர் இதனை இப்போதும் நினைவு கூர்கின்றனர்.
இரண்டாவது சம்பவம் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. கோயம்புத்தூரில் அத்வானி அவர்களின் யாத்திரை நடைபெறுவதற்குச் சற்று முன்பு, அங்கு ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சுமார் 60 முதல் 70 பேர் கொல்லப்பட்டனர். அது ஒரு பேரழிவை ஏற்படுத்திய குண்டுவெடிப்பு. அந்த நேரத்தில், நீங்கள் மிக நூலிழையில் உயிர் தப்பினீர்கள். இந்த இரண்டு சம்பவங்களையும் இறைவனின் தலையீடாகக் கருதி, உங்களை இன்னும் முழுமையாகச் சமூக சேவைக்கு அர்ப்பணிக்க நீங்கள் முடிவெடுத்தது, ஆழமான நேர்மறைச் சிந்தனையால் உருவான ஒரு வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
எனக்கு முன்பு தெரியாத, ஆனால் சமீபத்தில் நான் தெரிந்துகொண்ட ஒரு விஷயம் உண்டு. ஒருவேளை நீங்கள் குடியரசுத் துணைத்தலைவர் ஆன பிறகு காசிக்குச் சென்றபோது, நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அங்கு எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று இயல்பாகவே உணர்ந்தேன். ஆனால் நீங்கள் அங்கு எனக்குப் புதிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டீர்கள்.
இதற்கு முன்பு நீங்கள் வழக்கமாக அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தீர்கள்; ஆனால் உங்கள் வாழ்க்கையில் முதல்முறையாகக் காசிக்குச் சென்று, அன்னை கங்கையின் ஆசியைப் பெற்று பூஜை செய்தபோது, உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அன்றைய தினமே, இனி அசைவ உணவு உண்பதில்லை என்று நீங்கள் உறுதி பூண்டீர்கள். அசைவம் சாப்பிடுவது கெட்டது என்றோ, அதைச் சாப்பிடுபவர்கள் தவறு என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் காசி என்னும் புனித மண்ணில் உங்கள் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை, காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் எப்போதும் நினைவில் கொள்வேன். ஏதோ ஒரு உள்ளார்ந்த ஆன்மீக உணர்வு உங்களை அந்தத் திசையில் ஈர்த்தது என்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது."
"மாண்புமிகு தலைவர் அவர்களே,
மாணவப் பருவம் முதலே, நீங்கள் ஒரு வலிமையான தலைமைப் பண்பைக் கொண்டவராக இருந்திருக்கிறீர்கள். இன்று, தேசத்தின் தலைமைப் பாதையில் எங்களை வழிநடத்த நீங்கள் இங்கே அமர்ந்திருப்பது, எங்கள் அனைவருக்கும் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயமாகும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
ஜனநாயகத்தின் பாதுகாவலராக, பெரும்பாலான இளைஞர்கள் எளிதான வழியைத் தேடும் ஒரு வயதில், நீங்கள் அந்த எளிய பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. போராட்டப் பாதையையே தேர்ந்தெடுத்தீர்கள். ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதைத் தேர்ந்தெடுத்தீர்கள். அவசரநிலைக் காலத்தில் , ஒரு உண்மையான ஜனநாயக வீரராக நீங்கள் போராடினீர்கள். வளங்கள் குறைவாக இருந்தன, பல கட்டுப்பாடுகள் இருந்தன, ஆனால் உங்களது மன உறுதி முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
இன்றும் கூட, உங்கள் பிராந்தியத்தில் உள்ள அந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் அவசரநிலைக்கு எதிராக நீங்கள் நடத்தியப் போராட்டத்தை நினைவில் வைத்துள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் மேற்கொண்ட திட்டங்களும், மக்களை நீங்கள் ஊக்கப்படுத்திய விதமும், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு நீடித்த உத்வேகமாகத் திகழ்கின்றன. நீங்கள் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளர்; இதை நான் நன்கு அறிவேன். அமைப்பிற்குள் உங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும், உங்கள் கடின உழைப்பால் அந்தப் பதவிக்கு மேலும் பெருமை சேர்த்தீர்கள். மக்களை ஒன்றிணைக்கவும், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், புதிய தலைமுறைக்கு வாய்ப்புகளை வழங்கவும் நீங்கள் எப்போதும் முயன்றீர்கள். இதுவே உங்கள் அமைப்பு ரீதியான பணிகளின் அடையாளமாகத் திகழ்கிறது.
கோயம்புத்தூர் மக்கள் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்ய இங்கு அனுப்பி வைத்தனர்; அப்போதும் கூட, உங்கள் பிராந்தியத்தின் பிரச்சினைகளை இந்த அவையின் முன் மிகத் தீவிரமாகத் தொடர்ந்து எழுப்பினீர்கள். இந்த அவையின் தலைவர் மற்றும் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் என்ற முறையில் உங்களது விரிவான அனுபவம் தொடர்ந்து எங்களை ஊக்குவித்து வழிநடத்தும். நான் உணர்வதைப் போலவே, இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும் இந்தப் பெருமிதமான தருணத்தை மிகுந்த பொறுப்புணர்வுடன் முன் எடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உணர்வுடன், எனது சார்பாகவும், இந்த அவையின் சார்பாகவும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196810®=3&lang=2
***
TV/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2209477)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam