பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
28 DEC 2025 11:47AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம். சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள். 2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன. தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, அறிவியலின் பரிசோதனைக்கூடங்கள் தொடங்கி உலகின் பெரும் மேடைகள் வரை. பாரதம் அனைத்து இடங்களிலும் தனது வலுவான முத்திரையைப் பதித்தது. இந்த ஆண்டு ஆப்பரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமாக ஆனது. பாரதம் தனது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ளாது என்பதை உலகமே பார்த்தது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் பாரத அன்னையிடம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் காட்சிகள் காணக் கிடைத்தன. மக்களெல்லோரும் அவரவருக்கு உரித்தான வகையிலே தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, வந்தே மாதரத்திற்கு 150 ஆண்டுகள் நிறைவான வேளையிலும் கூட இதே உணர்வு மேலோங்கியது. ‘#VandeMataram150’ என்பதில் உங்கள் ஆலோசனைகளையும், செய்திகளையும் அனுப்பித்தாருங்கள் என்று உங்களிடம் வேண்டிக் கொண்டேன். நாட்டுமக்கள் இந்த இயக்கத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள்.
நண்பர்களே, 2025ஆம் ஆண்டு விளையாட்டுக்கள் என்ற வகையிலும் கூட நினைவில் கொள்ளத்தக்க ஆண்டாக இருந்தது. நமது ஆடவர் கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. சேம்பியன்ஸ் கோப்பையை வெற்றி பெற்றார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியும் கூட, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றெடுத்தார்கள். பாரதத்தின் பெண்கள், பார்வைத்திறனில்லா மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள். ஆசியக் கோப்பை டி20 போட்டிகளிலும் கூட மூவண்ணத்தின் வண்ணங்கள் பளிச்சிட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், தன்னம்பிக்கைக்கு முன்னால் எந்தத் தடையும் தடையல்ல என்பது நிரூபணமாகியிருக்கிறது. விஞ்ஞானம் மற்றும் விண்வெளித் துறைகளிலும் கூட பாரதம் மிகப்பெரிய எல்லையைத் தாண்டியிருக்கிறது. சுபான்ஷு சுக்லா அவர்கள் தாம் சர்வதேச விண்வெளி நிலையம் வரை சென்ற முதல் இந்தியர் ஆவார். சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்போடு தொடர்புடைய பல முயற்சிகளிலும் கூட 2025ஆம் ஆண்டு தனது அடையாளத்தைப் பதித்திருக்கிறது. பாரதத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது 30க்கும் அதிகமாகி இருக்கிறது. 2025ஆம் ஆண்டிலே நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரதத்தின் ஈடு இணையற்ற பாரம்பரியம் அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்க முடிந்தது. ஆண்டின் தொடக்கத்திலே பிரயாக்ராஜிலே மகாகும்ப மேளாவின் ஏற்பாடுகள், உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியிலே அயோத்தியிலே, இராமர் ஆலயத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து, இந்தியர்கள் அனைவரின் உள்ளங்களிலும் பெருமையை நிறைத்தது. சுதேசி தொடர்பாக அனைவரின் உற்சாகமும் மிகத் தெளிவாகக் காணப்பட்டது. இந்தியர்களின் வியர்வை சிந்தப்பட்ட, இந்தியர்களின் உழைப்பு மணம் வீசும் பொருளையே மக்கள் வாங்குகிறார்கள். 2025ஆம் ஆண்டு பாரதத்திற்கு, மேலும் தன்னம்பிக்கையை அளித்தது என்று நாம் பெருமையோடு கூறிக் கொள்ளலாம். இந்த ஆண்டு இயற்கைப் பேரிடர்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது உண்மைதான், பல துறைகளிலும் சந்திக்க வேண்டிவந்தது. இப்போது 2026ஆம் ஆண்டிலே புதிய நம்பிக்கைகள், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேகிச் செல்ல தேசம் தயாராக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, மிகுந்த நம்பிக்கையோடு உலகம் இன்று பாரதத்தை உற்று கவனிக்கிறது. பாரதத்தின் மீது உலகு வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள் சக்திதாம். விஞ்ஞானத் துறையிலே நமது சாதனைகள், புதியபுதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தின் பரவல் ஆகியவை அனைத்தும் உலக நாடுகளை மிகவும் கவர்ந்திருக்கின்றன.
நண்பர்களே, பாரதத்தின் இளைஞர்கள் எப்போதுமே புதியது எதையாவது கண்டுபிடிக்கும் பேரார்வம் உடையவர்களாக இருக்கும் அதே வேளையில், விழிப்புணர்வு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை எப்படி இன்னும் அதிகப்படுத்த முடியும் என்று எப்போதும் என்னுடைய இளைய நண்பர்கள் என்னிடம் வழக்கமாகக் கேட்பார்கள். எப்படி தங்களுடைய எண்ணங்களைப் பகிரலாம் என்று கேட்பார்கள். என் முன்பாக எப்படி அளித்தல் மூலமாகத் தங்களுடைய எண்ணங்களை முன்வைக்கலாம் என்றும் பலர் வினவுவார்கள். நம்முடைய இளைய நண்பர்களின் இந்த பேரார்வத்திற்கான விடை தான் விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக். கடந்த ஆண்டு இதன் முதல் பதிப்பு நடந்தது, இப்போது சில நாட்களுக்குப் பிறகு அதன் இரண்டாவது பதிப்பு நடக்கவிருக்கிறது. அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படும். இதே நாளன்று இளம் தலைவர்கள் உரையாடலும் நடக்கும், நானும் கூட கண்டிப்பாக இதில் பங்கேற்பேன். இதிலே நமது இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள், உடலுறுதி, ஸ்டார்ட் அப், விவசாயம் போன்ற மகத்துவம்வாய்ந்த விஷயங்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பாக நான் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்.
நண்பர்களே, இந்த நிகழ்ச்சியிலே நமது இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சில நாட்கள் முன்பாகத் தான் இதோடு தொடர்புடைய ஒரு வினாவிடைப் போட்டி நடந்தது. இதிலே 50 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஒரு கட்டுரைப் போட்டியும் நடந்தது, இதிலே மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள். இந்தப் போட்டியிலே தமிழ்நாடு முதல் இடத்தையும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
நண்பர்களே, இன்று தேசத்திலே இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் புதியபுதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன. இளைஞர்கள் தங்களுடைய தகுதி-ஆர்வங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த உதவும் பல தளங்கள் மேலும் உருவாகி வருகின்றன. இப்படி ஒரு தளம், கருத்துக்களும் எண்ணங்களும், செயல்வடிவம் பெறுகின்ற ஒரு தளம் என்றால் அது தான் ‘Smart India Hackathon’.
நண்பர்களே, ‘Smart India Hackathon 2025’ இதன் நிறைவு நிகழ்ச்சி இந்த மாதம் தான் நடந்தது. இந்த ஹேக்கத்தானின் போது 80க்கும் அதிகமான அரசுத் துறைகளின் 270க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்கள் ஈடுபட்டார்கள். மாணவர்கள் அளித்த தீர்வுகள், நிஜ வாழ்க்கையின் சவால்களோடு தொடர்புடையவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக போக்குவரத்துப் பிரச்சினை. இது தொடர்பாக இளைஞர்கள் ‘Smart Traffic Management’ அதாவது புத்திசாலித்தனமான போக்குவரத்து மேலாண்மையோடு தொடர்புடைய பல சுவாரசியமான கோணங்கள் பகிரப்பட்டன. நிதிசார் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைதுகள் போன்ற சவால்களுக்கான தீர்வுகளுக்கும் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள். கிராமங்களில் டிஜிட்டல் வங்கிச்சேவைகளுக்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்கள். பல இளைஞர்கள் விவசாயத் துறையின் சவால்களுக்கான தீர்வு காண்பதிலே ஈடுபட்டிருந்தார்கள்.
நண்பர்களே, கடந்த 7-8 ஆண்டுகளிலே ‘Smart India Hackathon’லே, 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 6,000த்துக்கும் அதிகமான நிறுவனங்களும் பங்கெடுத்தன. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கும், உகந்த தீர்வுகளை அளித்திருக்கிறார்கள். இவை போன்ற ஹேக்கத்தான்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த ஹேக்கத்தான்களில் நீங்களும் கண்டிப்பாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் எனது இளைய நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, இன்றைய வாழ்க்கை தொழில்நுட்பம் சார்ந்து இருக்கிறது, எந்த மாற்றங்கள் ஏற்பட பல நூற்றாண்டுகள் பிடித்ததோ, அவையெல்லாம் இன்று சில ஆண்டுகளிலேயே நடந்து விடுவதை நாம் பார்த்து வருகிறோம். ரோபோக்கள் மனிதர்களின் இடத்தைப் பிடித்து விடுமோ என்றுகூட பல வேளைகளில் மக்கள் கவலையைத் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட மாறிவரும் காலத்திலே மனித மேம்பாட்டின் பொருட்டு நாம் நமது வேர்களோடு இணைந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நமது அடுத்த தலைமுறை புதிய சிந்தனைகளோடும், புதிய வழிமுறைகளோடும் தனது கலாச்சாரத்தின் வேர்களோடு, நன்கு ஒன்றரப் பிணைந்திருப்பதைக் காணும் வேளையில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
நண்பர்களே, நீங்கள் Indian Institute of Science இந்திய அறிவியல் கழகத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆய்வு மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்பு ஆகியன இந்த நிறுவனத்தின் அடையாளங்கள். கல்விக்கும் ஆய்வுக்கும் இடையே இசைக்கும் ஓரிடம் வேண்டும் என்று சில ஆண்டுகள் முன்பாக இங்கே சில மாணவர்கள் உணர்ந்தார்கள். அவ்வளவு தான். அதிலிருந்து இசை வகுப்பு தொடங்கியது. பெரிய மேடை இல்லை, பெரிய பட்ஜெட்டும் இல்லை. மெல்லமெல்ல இந்த முன்னெடுப்பு அதிகரித்துக் கொண்டே சென்று, இன்று இதை நாம் ‘Geetanjali IISc’ என்ற பெயரால் அறிகிறோம். இப்போது இது ஒரு வகுப்பு மட்டுமல்ல, வளாகத்தின் ஒரு கலாச்சார மையம். இங்கே இந்துஸ்தானி பாரம்பரிய இசை இருக்கிறது, மக்களின் பாரம்பரிய இசை இருக்கின்றது, பாரம்பரிய முறைகள் இருக்கின்றன, மாணவர்கள் இங்கே அமர்ந்து கொண்டு சாதகம் செய்யலாம். பேராசிரியரும் உடன் அமர்வார், அவர்களுடைய குடும்பத்தாரும் இணைகிறார்கள். இன்று 200க்கும் மேற்பட்ட மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், யார் அயல்நாடுகளுக்குச் சென்று விட்டார்களோ, அவர்களும் கூட இணையவழியில் இணைந்து இந்தக் குழுவோடு தொடர்பை வலுவாக வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே, நமது வேர்களோடு இணையும் இந்த முயற்சி, பாரதத்தோடு மட்டும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. உலகின் பல்வேறு இடங்களிலும், அங்கே வசிக்கும் பாரத நாட்டவர்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றார்கள். மேலும் ஒரு எடுத்துக்காட்டு, நமது தேசத்திற்கு வெளியே நம்மை இட்டுச் செல்கிறது, அந்த இடம் தான் துபாய். அங்கே வசிக்கும் கன்னடக் குடும்பங்கள் தங்களிடத்தில் ஒரு வினாவை எழுப்பிக் கொண்டார்கள் – நமது குழந்தைகள் தொழில்நுட்ப உலகில் முன்னேறிக் கொண்டு என்னமோ இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய மொழியை விட்டு விலகிச் செல்கிறார்களோ? இங்கிருந்து தொடங்கியது தான் கன்னடப் பாடசாலை. இந்த முயற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு கன்னடம் படித்தல், எழுதுதல், பேசுதல், கற்றல் ஆகியன கற்பிக்கப்படுகின்றன. இன்று இதோடு ஓராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலே, கன்னட நாடு-நுடி, நம்ம ஹெம்மே. அதாவது கன்னட பூமியும் மொழியும், நம்முடைய பெருமிதம் என்பதே இதன் பொருள்.
நண்பர்களே, ஒரு பழமொழி ஒன்று உண்டு. மனம் போல் வாழ்வு. இந்த முதுமொழியை மீண்டும் உண்மை என நிரூபித்திருக்கிறார்கள் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞரான மோயிராங்க்தேம் சேட் அவர்கள். இவர் 40 வயதுக்கும் குறைவானவர். மோயிராங்க்தேம் அவர்கள் மணிப்பூரின் மிகத் தொலைவான பகுதியில் வசிக்கிறார், இங்கே மின்சாரம் தொடர்பான பெரும்பிரச்சினை இருந்து வந்தது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் இவர் உள்ளூர்மட்டத்திலேயே ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார், அந்தத் தீர்வு சூரியசக்தியால் கிடைத்தது. நமது மணிப்பூரில் சூரியசக்தியை உற்பத்தி செய்வது எளிதானது. மோயிராங்க்தேம் அவர்கள் சூரியசக்தி பேனலைப் பொருத்தும் இயக்கத்தைத் தொடங்கினார், இந்த இயக்கம் வாயிலாக இன்று அவருடைய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளில் சூரியசக்தி சென்றடைந்து விட்டது. குறிப்பாக, இவர் சூரியசக்தியைப் பயன்படுத்தி உடல்நலப் பராமரிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறார். இன்று இவருடைய முயற்சிகளால் மணிப்பூரில் பல உடல்நல மையங்களுக்கும் சூரியசக்தி கிடைத்து வருகிறது. இவருடைய இந்தப் பணிக்காக மணிப்பூரின் பெண்சக்திக்கும் மிகப்பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கிறது.
நண்பர்களே, இன்று அரசாங்கம் பிரதம மந்திரி சூரியசக்தி இல்லம் இலவச மின்சாரம் திட்டம் வாயிலாக பயனாளிக் குடும்பங்கள் அனைவருக்கும் சூரியத் தகடுகளைப் பொருத்த கிட்டத்தட்ட 75 முதல் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. மோயிராங்க்தேம் அவர்களின் இந்த முயற்சி என்னவோ தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம், ஆனால் சூரியசக்தியோடு தொடர்புடைய இயக்கத்துக்குப் புதிய வேகத்தை அளித்து வருகிறது. நான் மனதின் குரல் வாயிலாக அவருக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
என் இனிய நாட்டுமக்களே, வாருங்கள் நாம் சற்று ஜம்மு கஷ்மீரம் வரை சென்று வருவோம். ஜம்மு கஷ்மீரத்தின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம், அதன் ஒரு விஷயம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், இது உங்கள் அனைவரையும் பெருமைப்படச் செய்யும். ஜம்மு கஷ்மீரத்தின் பாராமூலாவிலே, ஜெஹன்போரா என்ற பெயருடைய இடம் இருக்கிறது. அங்கே பல்லாண்டுகளாக சில உயரமான மேடுகளை மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். பொதுவாக இந்த உயரமான மேடுகள் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒருநாள் அகழ்வாய்வாளர்களின் கவனம் இவற்றின்பால் திரும்பியது. அவர்கள் இந்தப் பகுதியை கவனமாக ஆராய்ந்த போது, இந்த மேடுகள் வித்தியாசமானவையாகப் பட்டன. இதன் பிறகு இந்த மேடுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொண்டார்கள். ட்ரோன்கள் வாயிலாக மேலிருந்து படங்கள் எடுக்கப்பட்டன, தரையின் வரைபடம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு திகைப்பை ஏற்படுத்தும் விஷயம் புலனாகியது. இந்த மேடுகள் இயற்கையாக உருவானவை அல்ல என்பது தெரியவந்தது. இவை மனிதனால் உருவாக்கப்பட்ட ஏதோ பெரிய கட்டிடத்தின் மிச்சங்கள். இந்த வேளையில் மேலும் ஒரு சுவாரசியமான விஷயமும் தெரிய வந்தது. கஷ்மீரிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஃப்ரான்ஸ் நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தின் ஆவணக்காப்பகத்தில் ஒரு பழைய, மெல்லிய படம் ஒன்று கிடைத்தது. பாராமூலாவின் அந்தப் படத்திலே மூன்று பௌத்த தூபிகள் காணப்பட்டன. காலச்சக்கரம் சற்றே பின்னால் சென்றது, கஷ்மீரத்தின் மிக்க பெருமைவாய்ந்த கடந்தகாலம் நம் கண்களின் முன்னால் விரிந்தது. இது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு. கஷ்மீரின் ஜேஹன்போராவின் இந்த பௌத்த வளாகம், கஷ்மீரின் கடந்தகாலம் என்ன, அதன் அடையாளம் எத்தனை வளமானதாக இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் இப்போது பாரதத்தை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவாக, ஒரு சிறப்பான முயற்சி குறித்து கலந்துகொள்ள இருக்கிறேன், இது இதயத்தைத் தொடவல்லது. ஃபிஜியில் பாரதநாட்டு மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்ப ஒரு பாராட்டுதற்குரிய முன்னெடுப்பு நடந்து வருகிறது. அங்கே இருக்கும் புதிய தலைமுறையினர், தமிழ் மொழியோடு இணைந்து கொள்ள பல நிலைகளில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மாதம் ஃபிஜியில் ராக்கீராக்கீ பகுதியில், அங்கிருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் முதன்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தன்று குழந்தைகளுக்குக் கிடைத்த மேடையில் அவர்கள் தங்களுடைய மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்று உரையாற்றினார்கள். குழந்தைகள் தமிழில் கவிதைகளை உரைத்தார்கள், சொற்பொழிவு ஆற்றினார்கள், தங்களுடைய கலாச்சாரத்தை, மெத்த தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினார்கள். நண்பர்களே, தேசத்திலேயும் கூட, தமிழ் மொழியின் பரவலாக்கம் தொடர்பாக தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியில் காசி தமிழ் சங்கமத்தின் 4ஆம் பதிப்பு நடந்தது. இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க இருக்கிறேன். நீங்கள் கேளுங்கள், தமிழில் பேச முயலும் இந்தக் குழந்தைகள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?
நண்பர்களே, தமிழ் மொழியில் இத்தனை சரளமாகத் தன்னுடைய கருத்தை முன்வைக்கும் இந்தக் குழந்தைகள் காசியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய தாய்மொழி ஹிந்தி, ஆனால் தமிழ்மொழியிடம் கொண்ட ஈடுபாடு இவர்களைத் தமிழ் கற்க உத்வேகப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு வாராணசியில் காசி தமிழ் சங்கமத்தின் போது தமிழ் கற்பது தொடர்பாக சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் கற்கலாம் என்ற மையக்கருவையொட்டி, வாராணசியின் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது. இதன் விளைவாக நாம் இந்த ஒலிக்குறிப்பைக் கேட்க முடிகிறது.
நண்பர்களே, தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் மனதின் குரலில் வேண்டிக் கொண்டிருந்தேன். இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள்-இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதுதான் மொழியின் பலம், இதுவே பாரதத்தின் ஒற்றுமை.
நண்பர்களே, அடுத்த மாதம் நமது தேசத்தில் 77ஆவது குடியரசுத் திருநாளை நாம் கொண்டாட இருக்கிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும் போது, நமது மனம் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அரசியல்சட்ட நிறுவனர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்த்து, உணர்வுமயமாகி விடுகிறது. நமது தேசம் விடுதலை அடைய மிக நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. சுதந்திரப் போராட்டத்திலே தேசத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்தார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரம் பெற்றுத்தந்த பல வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அவர்களுக்கு உரித்தான மரியாதையும், பெருமையும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தாம் ஓடிஷாவின் பார்வதி கிரி அவர்கள். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்படும். அவர் 16 வயதிலேயே வெள்ளையேனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். நண்பர்களே, சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, பார்வதி கிரி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை சமூகசேவை மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். பல அனாதை இல்லங்களை நிறுவினார். கருத்தூக்கம் அளிக்கும் அவருடைய வாழ்க்கை, அனைத்துத் தலைமுறையினருக்கும் வழிகாட்டும் விளக்காக இருக்கும்.
“मूँ पार्वती गिरि जिंकु श्रद्धांजलि अर्पण करुछी |”
நான் பார்வதி கிரி அவர்களுக்கு நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன் என்பதே இதன் பொருள்.
நண்பர்களே, நாம் நமது மரபுகளை மறக்காமல் இருப்பது அவசியம். நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த நாயகர்கள்-நாயகிகளின் மகத்துவம் வாய்ந்த கதைகளை அடுத்த தலைமுறைவரை கொண்டு செல்ல வேண்டும். விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அரசாங்கம் ஒரு சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கியிருந்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதிலே ஒரு பகுதி, ‘Unsung Heroes’ புறக்கணிக்கப்பட்ட நாயகர்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இன்றும்கூட இந்த இணையத்தளத்திற்குச் சென்று, தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த ஆளுமைகளின் மாபெரும் பங்களிப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
என் கனிவான நாட்டுமக்களே, மனதின் குரல் வாயிலாக, சமூகத்தின் நன்மையோடு தொடர்புடைய மகத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க மிக நல்லதொரு சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்கிறது. நம்மனைவருக்கும் கவலையளிக்கவல்ல ஒரு விஷயம் குறித்து நான் பேச விரும்புகிறேன். ICMR, அதாவது இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தற்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது. நிமோனியா மற்றும் UTI, அதாவது சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களுக்கு எதிராக ஆண்டிபயாட்டிக் மருந்துகள், அதாவது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பலம் குன்றியவையாக இருக்கிறது என்று இதில் கூறப்பட்டிருக்கிறது. நம்மனைவருக்கும் இது மிகவும் கவலைதரும் விஷயம். அந்த அறிக்கையின்படி, இதற்கான மிகப்பெரிய காரணம் என்றால், மக்கள் சற்றும் சிந்திக்காமல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது தானாம். போகிற போக்கில் எடுத்துக் கொள்ளக்கூடியவை அல்ல இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள். இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படியே மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாத்திரை போட்டுக் கொள்வோம், அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுதலை அடைவோம் என்று இப்போதெல்லாம் மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நோய்களும், நோய்த் தொற்றுக்களும் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை பயனற்றுப் போகச் செய்கின்றன. தயவுசெய்து உங்கள் இஷ்டப்படி மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் விஷயத்தில் இதை நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியம். மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிகாட்டுதலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மருத்துவர்களும் அவசியம் என்றே நான் கூறுவேன். இந்தப் பழக்கம் உடல்நலத்தை மேலும் சிறப்பாக்க உதவுவதாக இருக்கும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, நமது பாரம்பரியக் கலைகள், சமூகத்தை சக்தியுடையதாக ஆக்குவதோடு, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ஊடகமாகவும் ஆக்கி வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் நார்சாபுரம் மாவட்டத்தின் லேஸ் கிராஃப்ட் தேசமெங்கும் பேசுபொருளாக ஆகி இருக்கிறது. இந்த லேஸ் கிராஃப்ட், பல தலைமுறைகளாக பெண்களின் கைப்பொருளாகவே இருந்து வந்தது. மிகுந்த பொறுமையோடும், நுணுக்கமாகவும் தேசத்தின் பெண்சக்தி இதனைப் பாதுகாத்து வந்தது. இன்று இந்தப் பாரம்பரியத்தின் ஒரு புதிய வண்ணமயமான வடிவம் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. ஆந்திரப் பிரதேச அரசாங்கமும், நாபார்ட் வங்கியும் இணைந்து கைவினைஞர்களுக்குப் புதிய வடிவமைப்பைக் கற்பித்துக் கொண்டு வருகிறார்கள், சிறப்பான திறன்பயிற்சி அளித்து வருகிறார்கள், புதிய சந்தைகளோடு இணைத்து வருகிறார்கள். நார்சாபுரம் லேஸுக்கு புவிசார் காப்பீடும் கிடைத்திருக்கிறது. இன்று இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெண்களுக்கு இதனால் வேலைவாய்ப்பு உண்டாகியிருக்கிறது.
நண்பர்களே, தங்களுடைய உழைப்பால், பாரம்பரியக் கலைகளை முன்னெடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் இதனால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரமளிக்கும் பணியைச் செய்யும் மக்களை முன்னிலைப்படுத்தப்படுவதற்கான மேடையாக மனதின் குரல் இருக்கிறது. மணிப்பூரின் சுராசாந்துபுரின் மார்கரெட் ராம்தர்சியம் அவர்களுடைய முயற்சியும் இப்படிப்பட்டது தான். இவர் மணிப்பூரின் பாரம்பரியமான பொருட்களை, அங்கிருக்கும் கைவினைப் பொருட்களை, மூங்கில் மற்றும் மரத்தாலான பொருட்களை, ஒரு பெரும் தொலைநோக்கோடு அணுகியதால், இவர் தான் ஒரு கைவினைபொருள் கலைஞராக மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றமேற்படுத்தும் ஊடகமாகவும் ஆகியிருக்கிறார். இன்று மார்கரெட் அவர்களின் அலகில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். தன்னுடைய உழைப்பால் தில்லி உட்பட, தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய பொருட்களுக்கான சந்தையையும் மேம்படுத்தியிருக்கிறார்.
நண்பர்களே, மணிப்பூரிலிருந்து மேலும் ஒரு எடுத்துக்காட்டு சேனாபதி மாவட்டத்தில் வசிக்கும் சோகோனே கிரிசேனா அவர்களுடையது. இவருடைய மொத்த குடும்பமும் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. கிரிசேனா அவர்கள் இந்த பாரம்பரிய அனுபவத்தை மேலும் விரிவாக்கினார். இவர் மலர்கள் பயிர் செய்வதைத் தனது ஆர்வமாக ஆக்கிக் கொண்டார். இன்று இவர் இதன் காரணமாக பல்வேறு சந்தைகளை இணைத்து வருவதோடு, தனது பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சமூகங்களுக்கும் அதிகாரமளித்து வருகிறார். நண்பர்களே, பாரம்பரியமான ஞானத்தோடு, நவீன தொலைநோக்கினை இணைத்து நாம் முன்னேறினோம் என்று சொன்னால் இது பொருளாதார வளர்ச்சிக்கான பெரிய ஊடகம் ஆகி விடும் என்பதையே இந்த எடுத்துக்காட்டு காட்டுகிறது. உங்களுக்கு அருகிலே இப்படிப்பட்ட வெற்றிக்கதைகள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, நமது தேசத்திலே மிகவும் அழகான விஷயம் என்னவென்றால், ஆண்டு முழுவதும் தேசத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் உற்சவங்கள்-கொண்டாட்டங்கள் நடந்த வண்ணம் இருப்பது தான். பல்வேறு திருநாட்கள்-பண்டிகைகள் இருக்கின்றன, இவற்றோடு கூடவே பல்வேறு மாநிலங்களில், அந்த வட்டாரத்துக்குரிய கொண்டாட்டங்களும் நடந்து வருகின்றன. அதாவது, நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால், அனைத்து நேரத்திலும், தேசத்தின் எங்காவது ஓரிடத்தில், ஏதாவது தனித்தன்மையான கொண்டாட்டம் காத்திருக்கும். இப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் இப்போது கட்சின் ரண் பகுதியில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு கட்சின் ரணோத்சவம் நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தொடங்கியது. இது பிப்ரவரி 20 வரை நடக்கும். இங்கே கட்சின் நாட்டுப்புறக் கலாச்சாரம், நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் கைவினைத் திறனின் பன்முகத்தன்மை காணக்கிடைக்கும். கட்சின் பாலை நிலத்தின் மீது வெண்ணிலவு கம்பளம் விரிக்கிறது, அந்தக் காட்சி அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளக்கூடிய ஒன்றாகும். இந்த ரண் உற்சவத்தின் Tent City, கூடார நகரம் மிகவும் பிரபலமானதாகும். கடந்த ஒரு மாதத்தில் இதுவரை 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்த ரணோத்சவத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால், நீங்கள் கண்டிப்பாக இதில் கலந்து கொள்ளுங்கள், பாரதத்தின் பன்முகத்தன்மையின் ஆனந்தத்தை உணர்ந்து பாருங்கள்.
நண்பர்களே, 2025இலே மனதின் குரலின் இது கடைசிப் பகுதி, நாம் 2026ஆம் ஆண்டிலே, இதே உற்சாகம்-பேரூக்கத்தோடு, உள்ளார்ந்த உணர்வோடு நமது மனதின் குரலில் கண்டிப்பாக ஈடுபடுவோம். புதிய ஆற்றல், புதிய விஷயங்கள், புதிய உள்ளெழுச்சி நிரப்பவல்ல நாட்டுமக்களின் கணக்கேயில்லாத நிகழ்ச்சிகள் தாம், நம்மை மனதின் குரலில் இணைத்து வைக்கிறது. ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட அநேக செய்திகள் கிடைத்து வருகின்றன, இவை வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பான நம்முடைய தொலைநோக்கை விளக்குகின்றன. மக்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைகள், மேலும் இந்தத் திசையில் அவர்களின் முயற்சிகளைக் காணும் போது, இந்த நம்பிக்கை மேலும் வலுவடைகிறது; அதோடு கூடவே இவையனைத்தும் என்வரை வந்து சேரும் போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உறுதிப்பாடு கண்டிப்பாக மெய்யாகும். இந்த நம்பிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது. 2026ஆம் ஆண்டு, இந்த உறுதிப்பாடு மெய்யாகும் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும், உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை நலத்தோடு இருக்கட்டும் என்ற நல்விருப்போடு இந்த பகுதிக்கு நான் விடையளிக்கிறேன். ஆனால் ஒன்று – ‘Fit India Movement’, உடலுறுதி இந்தியா இயக்கம், இதன்படி நீங்களும் உடலுறுதியோடு இருக்க வேண்டும். இந்தக் குளிர்காலம் உடற்பயிற்சிக்கு உகந்த காலம், கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களனைவருக்கும் 2026ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி. வந்தே மாதரம்!!!
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209184)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Malayalam
,
Punjabi
,
Punjabi
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Kannada