பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவா ராய்ப்பூரில் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
01 NOV 2025 7:31PM by PIB Chennai
பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே! தந்தேஷ்வரி மாதாவுக்கு ஜே! மஹா மாயா மாதாவுக்கு ஜே! பம்லேஸ்வரி மாதாவுக்கு ஜே! சத்தீஸ்கர் மாதாவுக்கு ஜே!
சத்தீஸ்கர் மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் ரமேன் தேகா அவர்களே, முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களான ஜூவல் ஓரம், துர்கா தாஸ் உய்கே மற்றும் டோக்கன் சாஹு அவர்களே, மாநில சட்டமன்ற சபாநாயகர் இராமன் சிங் அவர்களே, துணை முதலமைச்சர்கள் அருண் சாவ் மற்றும் விஜய் ஷர்மா அவர்களே, அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, மற்றும் சத்தீஸ்கரின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு பெருமளவில் வருகை தந்துள்ள எனது அன்பான சகோதர சகோதரிகளே,
சத்தீஸ்கரில் உள்ள எனது அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும் கைகூப்பி வணங்குகிறேன்.
ஜெய் ஜோஹார்!
இன்று, சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த மகத்தான தருணத்தில், சத்தீஸ்கர் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
சத்தீஸ்கர் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் இந்த மாநிலத்தின் சகோதர சகோரிகளுடன் பங்கேற்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும். சத்தீஸ்கர் உருவாவதற்கு முந்தைய காலத்தை ஒரு பாரதிய ஜனதா கட்சி ஊழியனாக நான் கண்டவன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அத்துடன், அதன்பிறகு அது கடந்து வந்த இந்த 25 ஆண்டுகாலப் பயணத்திற்கும் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். எனவே, இந்த அற்புதமான தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பது அரியதோர் உணர்வாகும்.
நண்பர்களே,
நாம் 25 ஆண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்துள்ளோம். 25 ஆண்டுகளின் ஒரு அத்தியாயம் முடிவடைந்து, இன்று, அடுத்த 25 ஆண்டுகளின், ஒரு புதிய சகாப்தத்தின் சூரிய உதயத்தை நாம் காண்கிறோம். நீங்கள் அனைவரும் எனக்காக ஒரு காரியம் செய்வீர்களா? சொல்லுங்கள், செய்வீர்களா? ஆம்? உங்கள் மொபைல் ஃபோன்களை எடுத்து, அதன் ஒளிரும் விளக்கை ஒளிர விடுங்கள், ஏனெனில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான விடியல் தொடங்கிவிட்டது! உங்கள் கைகளில் இருக்கும் ஒவ்வொரு மொபைல் ஃபோனிலும் ஒளிரும் விளக்கை ஒளிர விடுங்கள். என்னால் அதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. புதிய கனவுகளின் சூரியன் உங்கள் கைகளில் உதித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் உள்ளங்கைகளில் புதிய உறுதிமொழிகளின் ஒளியை நான் காண்கிறேன். உங்கள் கடின உழைப்புடன் பிணைக்கப்பட்ட அந்த ஒளிதான் உங்கள் விதியை வடிவமைக்கும்.
நண்பர்களே,
25 ஆண்டுகளுக்கு முன்பு, அடல்ஜியின் அரசு நீங்கள் கனவு கண்ட சத்தீஸ்கரை உங்களிடம் ஒப்படைத்தது. அதனுடன், சத்தீஸ்கர் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும் என்ற உறுதியையும் அவர் அளித்திருந்தார். இன்று, இந்த 25 ஆண்டுகாலப் பயணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, என் தலை பெருமையால் உயர்கிறது. சத்தீஸ்கரின் எனது அனைத்துச் சகோதர சகோதரிகளும் இணைந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட அந்த விதை, இப்போது வளர்ச்சியின் வலிமையான மரமாக வளர்ந்துள்ளது. இன்று சத்தீஸ்கர் மிகுந்த வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்கிறது. இன்றும்கூட, சத்தீஸ்கருக்கு ஜனநாயகத்தின் புதிய ஆலயமாக, புதிய சட்டமன்றக் கட்டிடம் கிடைத்துள்ளது. இங்கு வருவதற்கு முன், பழங்குடியினர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மேலும், இந்த மேடையில் இருந்தே சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த அனைத்துச் சாதனைகளுக்காகவும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முழுத் தலைமுறையே மாறியுள்ளது. இன்று, இங்கு இருக்கும் இளைஞர்களின் புதிய தலைமுறையினர், 2000-த்திற்கு முந்தைய நாட்களைப் பார்க்காதவர்கள். சத்தீஸ்கர் உருவானபோது, கிராமங்களைச் சென்றடைவது கடினமாக இருந்தது. அப்போது பல கிராமங்களில் சாலைகளின் தடம்கூட இருக்கவில்லை. ஆனால் இன்று, சத்தீஸ்கர் கிராமங்கள் 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த11 ஆண்டுகளில், மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ளது. புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் இப்போது சத்தீஸ்கரின் பெருமையின் அடையாளங்களாக வெளிப்படுகின்றன. முன்பு, ராய்ப்பூரில் இருந்து பிலாஸ்பூருக்குப் பயணிக்க பல மணி நேரம் ஆனது. இப்போது அந்த நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் ஒரு புதிய நான்கு வழிச் சாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை ஜார்க்கண்டுடன் சத்தீஸ்கரின் இணைப்பை மேலும் மேம்படுத்தும்.
நண்பர்களே,
சத்தீஸ்கரின் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்புகளும் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று, வந்தே பாரத் இரயில்கள் மாநிலத்தில் இயங்குகின்றன. ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் ஜக்தல்பூர் போன்ற நகரங்கள் இப்போது நேரடி விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில், சத்தீஸ்கர் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே அறியப்பட்டது. ஆனால் இன்று, இது ஒரு தொழில்துறை மாநிலமாகப் பங்காற்றுவதற்கு உருவாகி வருகிறது.
நண்பர்களே,
கடந்த 25 ஆண்டுகளில் சத்தீஸ்கர் அடைந்துள்ள அனைத்துச் சாதனைகளுக்காகவும் பங்களித்த ஒவ்வொரு முதலமைச்சரையும், ஒவ்வொரு அரசையும் நான் பாராட்டுகிறேன். இருப்பினும், சவால்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் சத்தீஸ்கருக்குத் தலைமை தாங்கிய டாக்டர். ரமண் சிங் அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள் சேரும். அவர் இன்று சட்டமன்ற சபாநாயகராகத் தொடர்ந்து வழிகாட்டுதல் அளிப்பதிலும், விஷ்ணு தியோ சாய் அரசாங்கம் சத்தீஸ்கரின் வளர்ச்சியை மிகுந்த வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
நீங்கள் அனைவரும் என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள். இன்றும், நான் எனது ஜீப்பில் கடந்து செல்லும்போது, பல பரிச்சயமான முகங்களைப் பார்த்தேன், எனது இதயம் ஆழ்ந்த மனநிறைவுடன் நிரம்பியது. இந்த மண்ணின் எந்தப் பகுதிக்கும் நான் செல்லாமல் இருக்க வாய்ப்பில்லை, அதனால்தான் நீங்கள் அனைவரும் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
நண்பர்களே,
நான் வறுமையை மிக அருகில் இருந்து பார்த்தவன். ஒரு ஏழையின் கவலைகளும், கையறுநிலையும் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால்தான், நாட்டிற்குச் சேவை செய்யும் வாய்ப்பை தேசம் எனக்கு வழங்கியபோது, ஏழைகளின் நலனை எங்கள் பணியின் மையமாக வைத்தேன். ஏழைகளுக்கான மருந்து, வாழ்வாதாரம், கல்வி மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளில் எங்கள் அரசு முழு கவனத்தைச் செலுத்தியுள்ளது. நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
நண்பர்களே,
25 ஆண்டுகளுக்கு முன்பு, நம் சத்தீஸ்கரில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான் இருந்தது. இன்று, மாநிலத்தில் 14 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ராய்ப்பூரில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையும் நமக்கு உள்ளது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் இயக்கம் சத்தீஸ்கரில் இருந்துதான் தொடங்கியது என்பதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இன்று, மாநிலத்தில் 5,500 க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.
நண்பர்களே,
ஏழைகளுக்குக் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நிலையான முயற்சியாகும். குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழும் ஏழைகளின் வாழ்க்கை பெரும்பாலும் விரக்தியையும், நம்பிக்கையற்ற தன்மையையும் தருகிறது. இது வறுமையுடன் போராடும் அவர்களின் தைரியத்தைப் பறிக்கிறது. அதனால்தான், ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு நிரந்தர வீட்டைக் கொடுப்போம் என்று எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டது. கடந்த 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் நான்கு கோடி ஏழைக் குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர். இப்போது, மேலும் மூன்று கோடி புதிய வீடுகளைக் கட்டும் உறுதிமொழியுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். இன்றும், இந்த நாளிலும்கூட, சத்தீஸ்கரில் உள்ள 3.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளில் குடியேறுகின்றனர். சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் 1,200 கோடி ரூபாய் தவணையையும் பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
இது, ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் சத்தீஸ்கரில் உள்ள பாஜக அரசாங்கம் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், நமது சத்தீஸ்கரில் ஏழு லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இவை வெறும் எண்கள் அல்ல. ஒவ்வொரு வீட்டிற்கும் பின்னால் ஒரு குடும்பத்தின் கனவு, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி உள்ளது. பயனடைந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், உங்கள் அன்றாட வாழ்வில் உள்ள சிரமங்களைக் குறைக்கவும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இன்று, சத்தீஸ்கரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் மின்சாரம் என்பது கனவாக இருந்த பகுதிகளில் இன்று இணையவசதிகூடச் சென்றடைந்துள்ளது.
ஒரு காலத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் அல்லது எல்பிஜி இணைப்பு என்பது ஒரு சாதாரண குடும்பத்திற்கு எட்டாத கனவாக இருந்தது. ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டர் கிடைத்தால், மற்றவர்கள் தூரத்தில் இருந்து பார்த்து, "அது ஒரு பணக்காரனின் வீடாக இருக்க வேண்டும். எப்போது நம் வீட்டிற்கு வரும்?" என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை, வறுமையுடன் போராடும் ஒவ்வொரு குடும்பமும் எனது சொந்தக் குடும்பம்தான். அதனால்தான், உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை நான் உறுதி செய்தேன். இன்று, சத்தீஸ்கர் முழுவதும் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின குடும்பங்களின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் கிடைத்துள்ளன.
இப்போது, எங்களின் அடுத்த இலக்கு என்னவென்றால், குழாய் மூலம் தண்ணீர் சமையலறைக்குச் செல்வது போல, மலிவான விலையில் எரிவாயுவும் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும். இன்று, நாக்பூர்–ஜார்சுகுடா எரிவாயு குழாய் இணைப்பு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியத் திட்டத்திற்காக சத்தீஸ்கர் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
சத்தீஸ்கர், ஒரு பெரிய பழங்குடியின மக்களைக் கொண்ட தாயகமாகும். இந்தப் பழங்குடியின சமூகம் மகத்தான வரலாறு கொண்டதுடன், பாரதத்தின் 'விராசத்' (பாரம்பரியம்) மற்றும் 'விகாஸ்' (வளர்ச்சி) ஆகியவற்றிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. நமது பழங்குடியின சமூகங்களின் பங்களிப்பை நாடும் உலகமும் அங்கீகரிக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நாடு முழுவதும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகங்களை உருவாக்குவது, அல்லது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ‘ஜான்ஜாதிய கௌரவ் திவஸ்’ (பழங்குடியினரின் கௌரவ தினம்) என்று அறிவித்தது என, பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு என்றென்றும் பெருமையுடன் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதே எங்களின் முயற்சியாகும்.
நண்பர்களே,
இந்தத் திசையில் இன்று நாம் மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். ஷஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் இப்போது நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், நாட்டின் சுதந்திரத்திற்கு முந்தைய 150 ஆண்டுகளுக்கும் மேலான பழங்குடியின சமூகத்தின் போராட்டங்களை வெளிப்படுத்துகிறது. நமது பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக எவ்வாறு போராடினார்கள் என்பதை இது விரிவாகச் சித்தரிக்கிறது. இந்த அருங்காட்சியகம் வரும் தலைமுறையினருக்குப் பல ஆண்டுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
ஒருபுறம், நமது அரசாங்கம் பழங்குடியின பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது. மறுபுறம், பழங்குடியின சமூகங்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்குச் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. மண்ணின் மைந்தன் பெயரிலான பழங்குடியின கிராமங்களின் மேன்மைக்கான இயக்கம் (Dharati Aba Janjatiya Gram Utkarsh Abhiyan), நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு வளர்ச்சியின் புதிய ஒளியை பாய்ச்ச உள்ளது. இது தோராயமாக 80,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டமாகும். எண்பதாயிரம் கோடி! சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு பழங்குடியினப் பகுதிகளில் இவ்வளவு பெரிய அளவிலான வளர்ச்சிப் பணி ஒருபோதும் நடந்தது இல்லை.
அதேபோல், மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் வளர்ச்சிக்காக முதன்முறையாக ஒரு பிரத்யேக தேசியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்புத் திட்டமான பிஎம்-ஜன்மன் திட்டத்தின் கீழ், இந்தப் பின்தங்கிய பழங்குடியின சமூகங்களின் ஆயிரக்கணக்கான குக்கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
நண்பர்களே,
பல தலைமுறைகளாக, பழங்குடியின சமூகத்தினர் வாழ்க்கையை நடத்துவதற்காக வனப் பொருட்களைச் சேகரித்து வருகின்றனர். வனப் பொருட்களில் இருந்து சிறந்த வருமான வாய்ப்புகளை வழங்குவதற்காக வனவள மையங்களை உருவாக்கியது எங்கள் அரசாங்கம்தான். தண்டு இலைகளை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேம்படுத்தினோம். இன்று, சத்தீஸ்கரில் தண்டு இலைகளைச் சேகரிப்பவர்கள் முன்பை விட மிகச் சிறந்த விலையைப் பெறுகிறார்கள்.
நண்பர்களே,
நமது சத்தீஸ்கர், நக்சல்-மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டு வருவது கண்டு இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நக்சலிசத்தின் காரணமாக 50-55 ஆண்டுகள் நீங்கள் அனுபவித்தவை மிகவும் வேதனையானவை. இப்போது அரசியலமைப்பின் புத்தகத்தை ஏந்திக் காண்பிப்பவர்களும், சமூக நீதியின் பெயரால் முதலைக் கண்ணீர் வடிப்பவர்களும், தங்களின் அரசியல் சுயநலனுக்காகப் பல தசாப்தங்களாக உங்களுக்கு அநீதி இழைத்தனர்.
நண்பர்களே,
மாவோயிஸ்ட் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கரின் பழங்குடியினப் பகுதிகள் நீண்ட காலமாகச் சாலைகள் இல்லாமல் இருந்தன. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, நோயாளிகள் மருத்துவமனைகளை அடைய முடியவில்லை, எங்கெல்லாம் இவை இருந்தனவோ, அங்கெல்லாம் குண்டுகள் வெடித்தன. மருத்துவர்களும், ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் உங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் விட்டுவிட்டு, குளிர்சாதன அறைகளில் வாழ்க்கையை அனுபவித்தனர்.
நண்பர்களே,
வன்முறையின் இந்தச் சுழற்சியால் தனது பழங்குடியின சகோதர சகோதரிகள் அழிவதை மோடியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் லட்சக்கணக்கான தாய்மார்களையும் சகோதரிகளையும் என்னால் விட்டுவிட முடியவில்லை. அதனால்தான், 2014-ல் நீங்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தபோது, இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்போம் என்று உறுதியேற்றோம். இன்று நாடு அதன் முடிவுகளைக் காண்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று, அந்த 125 மாவட்டங்களில், மாவோயிஸ்ட்களின் செயல்பாடு இன்னும் ஓரளவு இருப்பைக் காட்ட முயற்சிக்கும் மாவட்டங்கள் மூன்று மட்டுமே உள்ளன. ஆனால், நமது சத்தீஸ்கர், நமது பாரதம், நாட்டின் ஒவ்வொரு மூலையும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் நாட்டுக்கு உறுதி அளிக்கிறேன்
நண்பர்களே,
சத்தீஸ்கரில் ஒரு காலத்தில் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் இப்போது விரைவாகத் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான், கான்கேரில் 20 க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர். இதற்கு முன், அக்டோபர் 17 அன்று, பஸ்தரில் 200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரணடைந்தனர். கடந்த சில மாதங்களில் மட்டும், நாடு முழுவதும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய டஜன் கணக்கான மக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனர். இவர்களில் பலர் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ஏன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளைத் தங்கள் தலையில் சுமந்து சென்றனர். இப்போது, அவர்கள் துப்பாக்கிகளையும் வன்முறையையும் கைவிட்டு, அரசியலமைப்பைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
நண்பர்களே,
மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முடிவானது, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியவற்றை, இப்போது நிஜமாக்கியுள்ளது. ஒரு காலத்தில் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் பயத்தில் இருந்த இடங்கள், முற்றிலும் மாற்றமடைந்துள்ளன. பீஜப்பூர் மாவட்டத்தின் சில்கேபள்ளி கிராமத்திற்கு ஏழு தசாப்தங்களில் முதல்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளது. அபுஜ்மாத் கிராமத்தின் ரெகவாயா கிராமத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாகப் பள்ளி கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் கோட்டையாக அறியப்பட்ட புவார்தி கிராமம், இப்போது வளர்ச்சியின் அலையைக் கண்டு வருகிறது. எங்கு ஒரு காலத்தில் சிவப்புக் கொடி பறந்ததோ, இன்று அங்கு மூவண்ணக் கொடி பெருமையுடன் பறக்கிறது. இப்போது, பஸ்தர் போன்ற பகுதிகளில் பயம் இல்லை, அங்கு கொண்டாட்டத்தின் சூழல் நிலவுகிறது. பஸ்தர் பண்டும் மற்றும் பஸ்தர் ஒலிம்பிக்ஸ் போன்ற விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
நண்பர்களே,
நக்சலிசத்தின் சவாலுக்கு மத்தியிலும் நாம் 25 ஆண்டுகளில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றால், இந்தச் சவாலை முழுவதுமாக நீக்கிய பிறகு, நாம் எவ்வளவு வேகமாக முன்னேறுவோம் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்!
நண்பர்களே,
வரும் ஆண்டுகள் சத்தீஸ்கருக்கு மிக முக்கியமானவை. ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக, சத்தீஸ்கரும் வளர்ச்சியடைவது அத்தியாவசியமானது. சத்தீஸ்கரின் இளைஞர்களுக்கு நான் சொல்கிறேன், இந்த நேரம், இந்த சகாப்தம், உங்களுக்கானது. நீங்கள் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு உறுதிமொழியிலும், மோடி உங்களுடன் நிற்பார் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், இது மோடியின் உத்தரவாதம். நாம் அனைவரும் இணைந்து சத்தீஸ்கரை முன்னோக்கி எடுத்துச் செல்வோம், மேலும் நாட்டையும் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.
இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை, சத்தீஸ்கரின் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, முழு பலத்துடன், உங்கள் இரு கைகளையும் உயர்த்தி என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே!
மிக்க நன்றி!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185296®=3&lang=2
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2207781)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam