பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேசம் இட்டா நகரில் வளர்ச்சிப் பணிகளின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
22 SEP 2025 3:28PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜெய்! பாரத் மாதா கி ஜெய்! பாரத் மாதா கி ஜெய்!
ஜெய் ஹிந்த்! ஜெய் ஹிந்த்! ஜெய் ஹிந்த்!
மதிப்பிற்குரிய அருணாச்சலப் பிரதேச ஆளுநர் திரு கே டி பர்னாயக் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பெமா கண்டு அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சரான திரு கிரண் ரிஜிஜூ அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு நபாம் ரெபியா, திரு தபீர் காவோ அவர்களே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களே, மக்கள் பிரதிநிதிகளே, அருணாச்சல பிரதேசத்தின் எனது அன்பான சகோதர சகோதரிகளே,
பொம்யெருங் தொன்யி போலோ! சர்வ வல்லமையுள்ள தொன்யி போலோ நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
நண்பர்களே,
ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து இந்த மைதானத்திற்கு வரும் வழியில், மூவர்ணக் கொடியை அசைக்கும் குழந்தைகள், மகன்கள், மகள்கள் பலரைச் சந்தித்தேன். இங்குள்ள மக்களின் மரியாதையும் அன்பும் என்னை பெருமையடையச் செய்கிறது. உங்களின் வரவேற்பு மிகவும் அபாரமாக இருந்ததால், இங்கு வருவதற்கு தாமதமானது, அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தப் புனித மண் சூரியன் உதிக்கும் நிலம் மட்டுமல்ல, தேசபக்தி உச்சம் எட்டும் நிலமும் கூட. நமது மூவர்ண கொடியின் முதல் நிறம் காவி, அதுபோல் அருணாச்சலப் பிரதேசத்தின் முதன்மையான நிறமும் காவி. இங்குள்ள ஒவ்வொருவரும் வீரம் மற்றும் எளிமையின் சின்னமாக உள்ளனர். அரசியல் அதிகாரத்தின் பாதைகளுக்குள் நான் நுழைவதற்கு முன்பே, பலமுறை அருணாச்சலப் பிரதேசத்திற்கு வந்துள்ளேன். இங்கிருந்து எண்ணற்ற நினைவுகளை நான் சுமந்து செல்கிறேன், அவற்றை நினைவுகூருவது எப்போதும் என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு தருணமும் எனக்கு பொக்கிஷமான நினைவு. நீங்கள் என் மீது பொழியும் அன்பும் பாசமும், வாழ்க்கையில் ஒருவர் பெறக்கூடிய மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன். தவாங் மடாலயம் முதல் நம்சாயின் பொற்கோவில் வரை, அருணாச்சலப் பிரதேச அமைதியும் கலாச்சாரமும் சங்கமிக்கும் இடம். இது பாரத தாயின் பெருமை, இந்தப் புனித மண்ணை நான் பணிவுடன் வணங்குகிறேன்.
நண்பர்களே,
இன்று அருணாச்சலப் பிரதேசத்திற்கான எனது வருகை மூன்று காரணங்களால் மிகவும் சிறப்பானதாகி உள்ளது. முதலாவதாக, நவராத்திரியின் இந்த முதல் நாளில் இந்த அழகான மலைகளைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. நவராத்திரியின் இந்த நாளில், வலிமைமிக்க இமயமலையின் மகளான மா சைலபுத்ரியை நாம் வழிபடுகிறோம். இரண்டாவது காரணம், இன்று முதல் நாடு முழுவதும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவின் தொடக்கம். இந்தப் பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது. மூன்றாவது காரணம், இந்த நல்ல நாளில் அருணாச்சலப் பிரதேசம் பல புதிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுவது. இன்று, மின்சாரம், இணைப்பு, சுற்றுலா மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பரிசளிக்கப்பட்டுள்ளன. இது பாஜகவின் இரட்டை-இயந்திர அரசின் "இரட்டிப்பு நன்மை"க்கு ஒரு ஒளிரும் எடுத்துக்காட்டு. இந்தத் திட்டங்களுக்காக அருணாச்சலப்பிரதேச மக்களுக்கு மனமார வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன், சிறு வணிகர்களைச் சந்திக்கவும், அவர்களின் கடைகளில் உள்ள பொருட்களைப் பார்க்கவும், அதைவிட முக்கியமாக, அவர்களின் ஆற்றலையும் உற்சாகத்தையும் அனுபவிக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த சேமிப்பு திருவிழாவில் வணிகர்களிடையே, கைவினைஞர்களிடையே பொதுமக்களிடையே உள்ள உற்சாகத்தை என்னால் தெளிவாகக் காண முடிந்தது.
நண்பர்களே,
சூரியனின் முதல் கதிர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது விழுந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, வேகமான வளர்ச்சியின் கதிர்கள் இங்கு வர பல தசாப்தங்கள் எடுத்தன. 2014-க்கு முன்பே நான் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன், உங்களிடையே வாழ்ந்திருக்கிறேன், இயற்கை இந்த மண்ணிற்கு அளித்துள்ள வளத்தையும், அதன் உழைக்கும் மக்களையும், அதன் அபார திறனையும் நேரடியாகக் கண்டிருக்கிறேன். ஆனாலும் டெல்லியில் அமர்ந்து நாட்டை நடத்தியவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் இங்கு மிகக் குறைந்த மக்கள் வாழ்கிறார்கள், இரண்டு மக்களவைத் தொகுதிகள் மட்டுமே உள்ளன, பிறகு ஏன் அருணாச்சலப் பிரதேசத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தன. காங்கிரஸின் இந்த மனநிலை அருணாச்சலப் பிரதேசத்திற்கும் முழு வடகிழக்குக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. நமது வடகிழக்குப் பகுதி முழுவதும் வளர்ச்சியில் வெகுவாக பின்தங்கியிருந்தது.
நண்பர்களே,
2014-ஆம் ஆண்டில் நாட்டிற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தபோது, இந்த காங்கிரஸ் மனநிலையிலிருந்து நாட்டை விடுவிக்க நான் உறுதி பூண்டேன். எங்களது உத்வேகம் ஒரு மாநிலத்தில் கிடைக்கும் வாக்குகள் அல்லது இடங்களின் எண்ணிக்கை அல்ல. நமது வழிகாட்டும் கொள்கை நாடு முதலில் என்பதே. நமது மந்திரம் நாகரிக தேவோ பவ (குடிமகன் கடவுள் போன்றவர்). யாரும் கவனித்திராதவர்களை மோடி மதிக்கிறார். அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் மறக்கப்பட்ட வடகிழக்குப் பகுதி 2014 முதல் எங்கள் வளர்ச்சி முன்னுரிமைகளின் மையமாக மாறியுள்ளது. வடகிழக்குக்கான பட்ஜெட்டை நாங்கள் பலமடங்கு அதிகரித்தோம். கடைசி-மைல் இணைப்பையும் கடைசி-மைல் வினியோகத்தையும் எங்கள் அரசின் சிறப்பியல்பாக மாற்றினோம். இது மட்டுமல்ல, தில்லியில் மட்டும் அமர்ந்து அரசு நடத்தப்படாது என்பதை உறுதி செய்தோம். அதிகாரிகளும் அமைச்சர்களும் வடகிழக்குக்கு அடிக்கடி வர வேண்டும், இங்கு இரவு தங்க வேண்டும், களத்தில் இங்கே வேலை செய்ய வேண்டும்.
நண்பர்களே,
காங்கிரஸ் அரசின் போது, ஒரு மத்திய அமைச்சர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வடகிழக்கிற்கு வருவார். மாறாக, பிஜேபி அரசின் கீழ் மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே 800 முறைகளுக்கு மேல் வடகிழக்கை பார்வையிட்டுள்ளனர். வெறும் அடையாளத்திற்காக மட்டும் அவர்கள் வந்து செல்வதில்லை. எங்கள் அமைச்சர்கள் வரும்போது, தொலைதூரப் பகுதிகளுக்கு, மாவட்டங்களுக்கு, வட்டாரங்களுக்கு செல்வதை கட்டாயமாக்குகிறார்கள், அதுமட்டுமல்லாமல், குறைந்தபட்சம் ஒரு இரவையாவது இங்கே கழிப்பதை உறுதிசெய்கிறார்கள். நானே பிரதமராக 70 முறைகளுக்கு மேல் வடகிழக்கை பார்வையிட்டுள்ளேன். கடந்த வாரம் மட்டுமே, நான் மிசோரம், மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தேன், குவாஹாத்தியில் இரவு தங்கினேன். வடகிழக்கு எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. அதனால்தான் இதயத்தின் தூரத்தை அழித்து, தில்லியை உங்களுக்கு அருகில் கொண்டு வந்துள்ளோம்.
நண்பர்களே,
வடகிழக்கின் எட்டு மாநிலங்களையும் நாங்கள் 'அஷ்ட லட்சுமி' (லட்சுமி தேவியின் எட்டு வடிவங்கள்) என்று மதிக்கிறோம். அதனால்தான் இந்தப் பிராந்தியம் வளர்ச்சியில் பின்தங்குவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதியை செலவிட்டு வருகிறது. உங்களுக்கு ஒரு உதாரணத்தை தெரிவிக்கிறேன். மத்திய அரசு வசூலிக்கும் வரிகளின் ஒரு பகுதி மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அருணாச்சலப் பிரதேசம் பத்து வருடங்களில் மத்திய வரிகளிலிருந்து சுமார் 6,000 கோடி ரூபாய்களை மட்டுமே பெற்றது. ஆனால் எங்கள் பிஜேபி அரசு பத்து ஆண்டுகளில், அருணாச்சலப் பிரதேசம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளது. மேலும் பிஜேபி அரசு அருணாச்சலப் பிரதேசத்திற்கு 16 மடங்கு அதிக பணம் கொடுத்துள்ளது. இது வரி பங்கு மட்டுமே. இதைத் தவிர, மத்திய அரசு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து, இங்கு பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால்தான் இன்று அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் இத்தகைய பரந்த அடிப்படையிலான மற்றும் விரைவான வளர்ச்சியை நீங்கள் காண்கிறீர்கள்.
நண்பர்களே,
சரியான நோக்கத்துடன் வேலை செய்யப்படும்போது, நேர்மையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, முடிவுகள் புலப்படும். இன்று, நமது வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சியின் உந்து சக்தியாக மாறி வருகிறது. இங்கு நல்லாட்சி மீது பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. மக்களின் நலனைக் காட்டிலும் வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்த்து இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கையை எளிதாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அதே போல மக்களின் போக்குவரத்து வசதிகளை சிரமமின்றி மேற்கொள்வது உறுதிசெய்யப்படும். சுகாதாரத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, எளிதான மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் தங்கள் படிப்பில் தடைகளை எதிர்கொள்ளாமல் இருக்க, எளிதான கல்வி. வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஆதரிக்க, எளிதாக தொழில் செய்யும் வசதி ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. இந்த அனைத்து இலக்குகளையும் மனதில் கொண்டு, பிஜேபியின் இரட்டை-இயந்திர அரசு அயராது உழைக்கிறது. முன்பு சாலைக் கட்டமைப்பைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத பகுதிகளில், இன்று நவீன நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன. செலா சுரங்கப்பாதை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் ஒரு காலத்தில் கற்பனை செய்ய முடியாததாக இருந்தன, ஆனால் இன்று செலா சுரங்கப்பாதை அருணாச்சலப் பிரதேசத்தின் அடையாளச் சின்னமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கின் தொலைதூரப் பகுதிகளில் ஹெலிகாப்டர் நிறுத்துதளம் உருவாக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் இந்தப் பகுதிகள் உடான் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஹொல்லோங்கி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்போது, இங்கிருந்து தில்லிக்கு நேரடி விமான சேவை உள்ளது. இது வழக்கமான பயணிகளுக்கு, மாணவர்களுக்கு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் சிறு தொழில்களுக்கும் பயன் அளிக்கிறது. இங்கிருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு கொண்டு செல்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.
நண்பர்களே,
2047-ம் ஆண்டுக்குள் பாரதத்தை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்குடன் நாம் அனைவரும் உழைத்து வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடையும்போது மட்டுமே பாரதம் வளர்ச்சியடையும். ஒவ்வொரு மாநிலமும் தேசிய இலக்குகளை நிறைவேற்றும் போது மட்டுமே பாரதம் முன்னேறும். இந்த தேசிய நோக்கங்களை அடைவதில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பங்காற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மின்சார துறை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கை பாரதம் நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர்மின்சக்தி மூலம் அடையப்படும். அருணாச்சலப் பிரதேசமும் நாட்டுடன் இணைந்து அடியெடுத்து வைக்கிறது. இன்று திறக்கப்பட்ட இரண்டு மின்சார திட்டங்கள் மின் உற்பத்தியாளராக அருணாச்சலப் பிரதேசத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும். இந்தத் திட்டங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும், மேலும் இங்கு வளர்ச்சிப் பணிகளுக்கு மலிவான மின்சாரத்தையும் உறுதிசெய்யும். காங்கிரஸுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. கடினமான வளர்ச்சிப் பணி இருக்கும்போதெல்லாம் அவர்கள் அதை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள், இந்தப் பழக்கத்தால், வடகிழக்கும் அருணாச்சலமும் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொலைதூரமான, மலைப்பாங்கான, அல்லது காடுகளின் ஆழத்தில் அமைந்த, வளர்ச்சி சவாலாக இருந்த பகுதிகளை, காங்கிரஸ் கைவிட்டது, பின்தங்கிய பகுதிகள் என்று அறிவித்து மறந்துவிட்டது. இதில் பழங்குடியின பகுதிகளும் வடகிழக்கின் மாவட்டங்களும்தான் அதிகம். எல்லையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை காங்கிரஸ் "நாட்டின் கடைசி கிராமங்கள்" என்று நிராகரித்து, அவ்வாறு செய்வதன் மூலம், காங்கிரஸ் தனது தோல்விகளை மறைக்க முயன்றது. இதன் விளைவாக, பழங்குடியின மற்றும் எல்லைப் பகுதிகளிலிருந்து மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்தனர்.
நண்பர்களே,
எங்கள் பிஜேபி அரசு இந்த அணுகுமுறையை மாற்றியது. காங்கிரஸ் "பின்தங்கிய மாவட்டங்கள்" என்று அழைத்ததை, நாங்கள் ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்று மறுபெயரிட்டு, அவற்றின் வளர்ச்சியை முன்னுரிமையாக ஆக்கினோம். காங்கிரஸ் "கடைசி கிராமங்கள்" என்று அழைத்த எல்லையோரக் கிராமங்களை, நாங்கள் நாட்டின் முதல் கிராமங்கள் என்று மதிக்கத் தொடங்கினோம். முடிவுகள் இன்று புலப்படுகின்றன. எல்லைக் கிராமங்கள் வளர்ச்சியில் புதிய வேகத்தைக் காண்கின்றன. துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் வெற்றி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திலும், 450-க்கும் மேற்பட்ட எல்லைக் கிராமங்கள் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. சாலைகள், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் இந்தப் பகுதிகளை அடைந்துள்ளன. முன்பு, மக்கள் எல்லைக் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர், ஆனால் இப்போது இந்த எல்லைக் கிராமங்கள் சுற்றுலாவின் புதிய மையங்களாக மாறி வருகின்றன.
நண்பர்களே,
அருணாச்சலப் பிரதேசம் சுற்றுலாவுக்கான மகத்தான திறனைக் கொண்டுள்ளது. புதிய பகுதிகளுக்கு இணைப்பு தொடர்ந்து விரிவடையும்போது, இங்குள்ள சுற்றுலா சீராக வளர்ந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அருணாச்சலத்தின் திறன் இயற்கை மற்றும் கலாச்சார அடிப்படையிலான சுற்றுலாவிற்கு அப்பாற்பட்டது. இன்று, உலகம் முழுவதும் மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சி சுற்றுலாவின் வளர்ந்து வரும் போக்கு உள்ளது. அதனால்தான் தவாங்கில் வரவிருக்கும் நவீன மாநாட்டு மையம் அருணாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும். அரசின் துடிப்பான கிராமங்கள் திட்டம் நமது எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களுக்கு ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்படுகிறது, இது அருணாச்சலப் பிரதேசத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.
நண்பர்களே,
இன்று, அருணாச்சலப் பிரதேசம் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது, ஏனெனில் தில்லியிலும் இட்டாநகரிலும் பிஜேபி அரசு உள்ளது. மத்திய மற்றும் மாநிலத்தின் ஒருங்கிணைந்த ஆற்றல் ளவளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இங்கு ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன, இங்குள்ள பலர் காப்பீட்த் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுகின்றனர். இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநிலத்தில் இரட்டை-இயந்திர அரசின் காரணமாக சாத்தியமாகியுள்ளது.
நண்பர்களே,
இரட்டை-இயந்திர அரசின் முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் விவசாயம் மற்றும் தோட்டக்கலையிலும் முன்னேறி வருகிறது. இங்கிருந்து கிடைக்கும் கிவி, ஆரஞ்சு, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பழங்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்குப் புதிய அடையாளத்தை அளிக்கின்றன. விவசாயிகளுக்கான பிரதமரின் ஆதரவு நிதியிலிருந்து வரும் நிதிகளும் இங்குள்ள விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை வலுப்படுத்துவது எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும். மூன்று கோடி 'லட்சாதிபதி சகோதரிகளை ' உருவாக்குவது ஒரு பெரிய நோக்கமாகும். இது மோடியின் நோக்கமாகும். திரு பெமா கண்டு அவர்களும் அவரது குழுவினரும் இந்த நோக்கத்தை விரைவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ஏராளமான பணிபுரியும் மகளிருக்கான விடுதிகளை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது, இது நமது மகள்களுக்கு பெரும் வசதியை கொண்டு வரும்.
நண்பர்களே,
இன்று, இங்கு தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மிகப்பெரிய அளவில் கூடியிருப்பதை நான் காண்கிறேன். உங்கள் அனைவருக்கும், ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். இனிமேல், உங்கள் மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் மிகவும் தேவையான சேமிப்பு கிடைக்கும். சமையலறைப் பொருட்கள், குழந்தைகளின் கல்விப் பொருட்கள், அல்லது ஆடைகள் மற்றும் காலணிகள் என அனைத்தும் இப்போது மிகவும் மலிவாகிவிட்டன.
நண்பர்களே,
2014-க்கு முந்தைய நாட்களை நினைத்துப் பாருங்கள். எத்தனை சிரமங்கள் இருந்தன. பணவீக்கம் வானளவாக இருந்தது, எல்லா இடங்களிலும் மாபெரும் ஊழல்கள் நடந்து கொண்டிருந்தன, அப்போதைய காங்கிரஸ் அரசு மக்கள் மீது வரிகளின் சுமையை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில், யாராவது வருடத்திற்கு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியிருந்தது. இது 11 ஆண்டுகளுக்கு முன்பு. இரண்டு லட்சம் ரூபாய் வருமானத்தின் மீது, வரி விதிக்கப்பட்டது. மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் மீது, காங்கிரஸ் அரசு 30 சதவீதத்திற்கும் அதிகமான வரியை விதித்தது. குழந்தைகளின் 'இனிப்புப் பண்டம் மீது கூட மிகவும் அதிகமாக வரி விதிக்கப்பட்டன.
நண்பர்களே,
அந்த நேரத்தில், உங்கள் வருமானத்தையும் உங்கள் சேமிப்பையும் அதிகரிக்க நான் உழைப்பேன் என்று உங்களுக்கு உறுதியளித்திருந்தேன். பல ஆண்டுகளாக, நாடு பல பெரிய சவால்களை எதிர்கொண்டது. ஆனால் நாங்கள் தொடர்ந்து வருமான வரியை குறைத்தோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், 11 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் வருமானத்தின் மீது வரி இருந்தது. இந்த ஆண்டு, 12 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்தை முழுமையாக வரி இல்லாததாக அறிவித்துள்ளோம். மேலும் இன்று முதல், ஜிஎஸ்டி வெறும் இரண்டு வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம். பல பொருட்கள் முற்றிலும் வரி இல்லாததாக மாறியுள்ளன, மற்ற பொருட்களுக்கு வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய வீடு கட்ட விரும்பினாலும், ஸ்கூட்டர் அல்லது பைக் வாங்கினாலும், வெளியில் சாப்பிட்டாலும், அல்லது பயணம் செய்தாலும் அனைத்தும் இப்போது மிகவும் மலிவாகிவிட்டன. இந்த ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா உங்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாததாக இருக்கப்போகிறது.
நண்பர்களே,
"வணக்கம்" என்று சொல்வதற்கு முன்பே "ஜெய் ஹிந்த்" என்று சொல்லும் இந்த சிறப்புத் தன்மைக்காக நான் எப்போதும் அருணாச்சலப் பிரதேசத்தை பாராட்டுகிறேன். நீங்கள் உங்களுக்கு முன்னால் நாடு மிக முக்கியம் என்று கருதுகிறீர்கள். இன்று, நாம் அனைவரும் சேர்ந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உழைக்கும்போது, நாடும் நம்மிடம் ஒரு எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பு 'ஆத்மநிர்பர்' அதாவது தற்சார்பு ஆகும். இந்தியா தற்சார்பானதாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடையும். பாரதத்தின் தன்னம்பிக்கைக்கு, சுதேசியின் மந்திரம் அவசியம். காலத்தின் கோரிக்கை, நாட்டின் கோரிக்கை, நாம் சுதேசியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதை மட்டுமே வாங்குங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதை மட்டுமே விற்பனை செய்யுங்கள், பெருமையுடன் சொல்லுங்கள்—இது சுதேசி என்று நீங்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து சொல்வீர்களா? நான் "பெருமையுடன் சொல்லுங்கள்" என்று சொல்லும்போது, நீங்கள் "இது சுதேசி" என்று சொல்லுங்கள். பெருமையுடன் சொல்லுங்கள்—இது சுதேசி! பெருமையுடன் சொல்லுங்கள்—இது சுதேசி! பெருமையுடன் சொல்லுங்கள்—இது சுதேசி! பெருமையுடன் சொல்லுங்கள்—இது சுதேசி! இந்த மந்திரத்தை பின்பற்றுவதன் மூலம்தான் நாடு முன்னேறும், அருணாச்சலப் பிரதேசத்தின் மற்றும் வடகிழக்கின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நவராத்திரியின் புனிதமான பண்டிகை மட்டுமல்ல, சேமிப்பு திருவிழாவும் கூட. நீங்கள் அனைவரும் இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தின் பகுதியாக இருப்பதால், எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. தயவுசெய்து உங்கள் மொபைல் போன்களை எடுங்கள், ஃப்ளாஷ் லைட்களை ஆன் செய்து, அவற்றை உயர்த்துங்கள். சுற்றிலும் பாருங்கள், இதுதான் சேமிப்பு திருவிழாவின் காட்சி; இதுதான் அதன் வலிமை. நவராத்திரியின் இந்த முதல் நாளில், எல்லா இடங்களிலும் ஒளி உள்ளது, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒளி முழு நாடு முழுவதும் பரவுகிறது. உங்களைச் சுற்றி எல்லாம் பாருங்கள். இது ஒளிரும் விளக்குகள், மின்னும் நட்சத்திரங்களைப் போல. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். மிக்க நன்றி!
----
(Release Id: 2169574)
SS/VK/KR
(रिलीज़ आईडी: 2207731)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam