பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 23 NOV 2025 2:33PM by PIB Chennai

தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஐபிஎஸ்ஏ (IBSA) எனப்படும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையேற்று நடத்தினார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா சில்வாவும் இதில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎஸ்ஏ என்பது மூன்று நாடுகளின் குழு மட்டுமல்ல என்றும் மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக நாடுகள், மூன்று முக்கிய பொருளாதாரங்கள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தளம் என்றும் பிரதமர் கூறினார்.

உலகளாவிய நிர்வாக நிறுவனங்கள் 21-ம் நூற்றாண்டின் யதார்த்த நிலைகளிலிருந்து வெகு தொலைவில் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உலக நிர்வாக நிறுவனங்களில், குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் என்பது இப்போது ஒரு கட்டாயத் தேவை என்பதை ஐபிஎஸ்ஏ நாடுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாத எதிர்ப்பில் நெருக்கமான ஒருங்கிணைப்பின் அவசியத்தையும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்போது இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமளிக்கக்கூடாது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். மனித குலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை உறுதி செய்வதில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். யுபிஐ போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, கோவின் போன்ற சுகாதார தளங்கள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப முயற்சிகள் ஆகியவற்றை மூன்று நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளும் வகையில் 'ஐபிஎஸ்ஏ டிஜிட்டல் புதுமை கூட்டமைப்பு' என்ற அமைப்பை நிறுவலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார்.

பாதுகாப்பான, நம்பகமான, மனிதகுல நலனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளை வகுப்பதில் ஐபிஎஸ்ஏ-வின் திறனையும் பிரதமர் எடுத்துரைத்தார். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு வருமாறு ஐபிஎஸ்ஏ தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஐபிஎஸ்ஏ அமைப்பில் ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்து  நிலையான வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்று பிரதமர் கூறினார். சிறு தானியங்கள், இயற்கை வேளாண்மை, பேரிடர் மீள்தன்மை, பசுமை எரிசக்தி, பாரம்பரிய மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.

கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சூரிய மின்சக்தி போன்ற துறைகளில், நாற்பது நாடுகளின் திட்டங்களை ஆதரிப்பதில் ஐபிஎஸ்ஏ நிதியத்தின் பணியைப் பிரதமர் பாராட்டினார். வளரும் நாடுகளுக்கு (உலகளாவிய தெற்கு நாடுகள்) இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் பருவநிலை மீட்சித் தன்மையுடன் கூடிய வேளாண்மைக்கான ஐபிஎஸ்ஏ நிதியத்தை அமைக்கலாம் என்ற கருத்தைப் பிரதமர் முன்மொழிந்தார்.

***

(Release ID: 2193135)

AD/PLM/RJ


(Release ID: 2193197) Visitor Counter : 6