பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
ரூ.9,700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
15 NOV 2025 5:28PM by PIB Chennai
குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
தேசிய வளர்ச்சி மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான பல திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதாக திரு மோடி எடுத்துரைத்தார். பிரதமர்-ஜன்மன் மற்றும் பிற திட்டங்களின் கீழ், இப்பகுதியில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான ஏகலைவா மாதிரி பள்ளிகள் மற்றும் ஆசிரமப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. பிர்சா முண்டா பழங்குடி பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ கோவிந்த் குரு இருக்கை நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சுகாதாரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான பல திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மற்றும் சேவை முயற்சிகளுக்கு அனைவரையும் அவர் பாராட்டினார்.
குஜராத் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பல துணிச்சலான தேசபக்தர்களின் தாயகமாகவும் உள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பகத் இயக்கத்தை வழிநடத்திய கோவிந்த் குரு, பஞ்ச்மஹாலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக நீண்ட காலம் போராடிய ராஜா ரூப்சிங் நாயக், ஏகி இயக்கத்தைத் தொடங்கிய மோதிலால் தேஜாவத் மற்றும் காந்திஜியின் கொள்கைகளை பழங்குடி சமூகத்திற்கு கொண்டு சென்ற தஷ்ரிபென் சவுத்ரி ஆகியோரைக் குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்டத்தின் பல அத்தியாயங்கள் பழங்குடி பெருமை மற்றும் வீரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர இயக்கத்திற்கு பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். நாடு முழுவதும் பல பழங்குடி அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குஜராத்தில், ராஜ்பிப்லாவில் 25 ஏக்கரில் ஒரு பெரிய பழங்குடி அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கருக்குச் சென்று அங்கு ஷாஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்ததையும் அவர் பகிர்ந்து கொண்டார். பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை, ராஞ்சியில் பழங்குடி அருங்காட்சியகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழங்குடி சமூகங்களால் பேணப்படும் பாரம்பரியங்களின் உண்மையான சாரத்தை பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டுள்ளது என்றும், எதிர்கால சந்ததியினருக்கான விருப்பங்களையும் கொண்டுள்ளது என்றும் திரு மோடி மேலும் கூறினார். எனவே, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதி, இந்தியா முழுவதும் பழங்குடியினர் கௌரவ தினம் என்று கொண்டாடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியத்தன்மையில் வேரூன்றி புதிய வலிமையுடனும், வீரியத்துடனும் நாம் முன்னேறி, புதிய மகிமையின் சிகரங்களை அடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190336
***
SS/PVK/SH
(Release ID: 2190389)
Visitor Counter : 6