பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 127-வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 OCT 2025 11:40AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நாடு முழுவதிலும் இப்போது பண்டிகைக்காலக் குதூகலம் நிரம்பி இருக்கிறது. நாமனைவரும் சில நாட்கள் முன்னர் தாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம், பெரும் எண்ணிக்கையில் மக்கள் இப்போது சட்பூஜையில் சுறுசுறுப்பாகி வருகிறார்கள். வீடுகளில் டேகுவா தின்பண்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் கரையோரங்கள் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சந்தைகளில் மினுமினுப்பு நிரம்பி வழிகிறது. அனைத்து இடங்களிலும் சிரத்தை, நேசம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம் தென்படுகிறது. சட் பண்டிகையின் விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் பக்தியோடு இந்தப் பண்டிகைக்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதே கூட மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
நண்பர்களே, சட் எனும் பெரும்பண்டிகைக் கலாச்சாரம், இயற்கை மற்றும் சமூகத்திற்கு இடையேயான ஆழமான ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. சட்பூஜையின் போது நதிக்கரைகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைகிறார்கள். இந்தக் காட்சி பாரத சமூகத்தின் ஒற்றுமைக்கான மிக அழகான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நீங்கள் தேசம் மற்றும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், கண்டிப்பாக சட் உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள். நான் சட் அன்னைக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். நாட்டுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு சட் பெரும் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்கள் அனைவரின் பெயரிலும் ஒரு கடிதம் வரைந்து என் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். தேசத்தின் எந்தச் சாதனைகள் காரணமாக பண்டிகைகளின் பகட்டு மேலும் அதிகரித்துள்ளதோ, அவை பற்றி நான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன். நான் வரைந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாட்டின் பல குடிமக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பியிருக்கிறார்கள். உண்மையிலேயே ஆப்பரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு காலத்தில் மாவோயிச பயங்கரவாத இருள் சூழ்ந்திருந்த பகுதிகளில் கூட இந்த முறை சந்தோஷ தீபங்கள் ஏற்றப்பட்டன. அந்த மாவோயிச பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள், இது அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நமனாக ஆகியிருந்தது.
ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. இந்த முறை பண்டிகைகளின்போது மேலும் ஒரு இனிமையான விஷயத்தைப் பார்க்க முடிந்தது. சந்தைகளில் சுதேசிப் பொருட்கள் வாங்குவது பலமாக அதிகரித்திருந்தது. எந்த சுதேசிப் பொருட்களைத் தாங்கள் வாங்கியிருந்தார்கள் என்பதை இந்த முறை எனக்கு மக்கள் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள்.
நண்பர்களே, சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டில் பத்து சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், இது தொடர்பாகவும் உங்கள் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளைப் பார்க்க முடிந்தது.
நண்பர்களே, தூய்மை மற்றும் தூய்மை தொடர்பான முயற்சிகள் தொடர்பாகவும் ஏராளமான செய்திகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. நான் பல்வேறு நகரங்களின் சம்பவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன், இவை மிகவும் உத்வேகம் அளிக்கவல்லவை. சத்திஸ்கட்டின் அம்பிகாபூரிலே, நெகிழிக் குப்பையை அகற்றும் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்பிகாபூரில் குப்பைக் கஃபே நடத்தப்படுகிறது. இது எப்படிப்பட்ட கஃபே என்றால், இங்கே குப்பைக்கழிவுகளைக் கொண்டு சேர்த்தால், வயிறார உணவு கொடுக்கப்படுகிறது. யாரேனும் ஒருவர் ஒரு கிலோ நெகிழிக் குப்பையைக் கொண்டு சேர்த்தால், அவருக்கு பகலுணவோ, இரவு உணவோ கொடுக்கப்படுகிறது. யாரேனும் அரை கிலோ நெகிழிக் கழிவுகளைக் கொண்டு வந்து கொடுத்தால், அவருக்கு காலை உணவு அளிக்கப்படுகிறது. இந்தக் கஃபேயை அம்பிகாபூரின் நகராட்சி நிர்வகித்து வருகிறது.
நண்பர்களே, இதைப் போலவே ஒரு அருமையான விஷயத்தை பெங்களூரூவின் பொறியாளர் கபில் ஷர்மா செய்திருக்கிறார். பெங்களூரூ என்பது ஏரிகள்-குளங்களின் நகரமாகக் கருதப்படுகிறது, கபில் அவர்கள் இங்கிருக்கும் ஏரிகள்-குளங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். கபில் அவர்களின் குழுவானது பெங்களூரூ மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் 40 குளங்கள் மற்றும் 6 ஏரிகளுக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார்கள். குறிப்பான விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களுடைய இந்தப் பணியோடு தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் அந்தப் பகுதிவாழ் மக்களையும் இணைத்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய இந்த அமைப்பானது மரம் நடும் இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. நண்பர்களே, அம்பிகாபூர் மற்றும் பெங்களூரூ, இந்த கருத்தூக்கம் அளிக்கவல்ல எடுத்துக்காட்டுகள் எல்லாம், நாம் ஒன்றைச் செய்ய தீர்மானித்துவிட்டால், மாற்றம் ஏற்பட்டே தீரும் என்பதையே நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நண்பர்களே, மாற்றத்திற்கான மேலும் ஒரு உதாரணம், மேலும் ஒரு முயற்சி குறித்து நான் உங்களோடு பகிர விரும்புகிறேன். மலைகளின் மீதும், சமவெளிகளிலும் இருக்கும் காடுகள் எல்லாம், வனங்களின் மண்ணை இறுக்கப் பிணைத்து வைக்கின்றன, அதே போல கடலோரங்களிலும் இருக்கும் சதுப்புநிலக்காடுகளும் சிறப்புத்தன்மை வாய்ந்தவை. இந்த அலையாத்திக் காடுகள் கடலின் உவர்நீர் மற்றும் சதுப்புநிலத்திலே வளர்கின்றன, கடற்பகுதி சூழலமைப்பின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. சுனாமியோ, சூறாவளியோ, எந்த ஒரு இயற்கைப் பேரிடர் வந்தாலும், இந்த அலையாத்திக் காடுகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
நண்பர்களே, குஜராத்தின் வனத்துறை சதுப்புநிலக்காடுகளின் இந்த மகத்துவத்தைப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பான இயக்கம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகள் முன்பாக வனத்துறையின் குழுக்கள், அஹமதாபாதிற்கு அருகிலே தோலேராவிலே, அலையாத்திக் காடுகளை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கினார்கள். இன்று, தோலேராவின் கரையோரத்தில் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரவியிருக்கின்றன. இந்த அலையாத்திக் காடுகளின் தாக்கம் இன்று மொத்தப் பகுதியிலும் காணக் கிடைக்கிறது. இங்கிருக்கும் சூழலமைப்பில் டால்ஃபின் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கேகடே மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், முன்பைவிட அதிகம் காணப்படுகின்றன. இது மட்டுமல்ல, இப்போது இங்கே வலசைவரும் வெளிநாட்டுப் பறவைகளும் கணிசமான எண்ணிக்கையில் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக அங்கே சுற்றுச்சூழலின் மீது நல்ல தாக்கம் ஏற்பட்டிருப்பதோடு, தோலேராவில் இருக்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கும் ஆதாயங்கள் ஏற்பட்டு வருகிறது.
நண்பர்களே, தோலேராவைத் தவிர, குஜராத்தின் கட்ச் பகுதியிலும் கூட இப்போதெல்லாம் சதுப்புநிலக்காடுகள் அதிக அளவில் அமைக்கப்படுகிறது, மேலும் கோரி க்ரீக்கிலே சதுப்புநிலக்காடுகள் கற்றல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, செடிகள்-தாவரங்கள், மரங்களின் சிறப்புத்தன்மையே இதுதான். எந்த இடமாக இருந்தாலும், அவை அனைத்து உயிரினங்களின் சிறப்பான நன்மைக்கு உதவிகரமாக விளங்குகின்றன. ஆகையால் தான் நமது புனித நூல்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் –
தன்யா மஹீரூபா ஏப்யோ,
நிராஷாம் யாந்தி நார்த்தின:
அதாவது, யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத மரங்கள்-தாவரங்களுக்கும் தலைவணங்குகிறோம் என்பதே இதன் பொருள். நாம் எந்தப் பகுதியில் வசிக்கிறோமோ, அங்கே கண்டிப்பாக மரங்களை நாம் நட வேண்டும். தாயின் பெயரால் ஓர் மரம் இயக்கத்தை நாம் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
என் கனிவான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் உரையாடும் விஷயங்களில் எனக்கு அதிக நிறைவை அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா? இது குறித்து நான் ஒன்றை மட்டும் கூறுவேன், நாம் எந்த விஷயங்கள் குறித்துப் பேசுகிறோமோ, அவற்றால் சில நல்லவற்றை, சில புதுமையானவற்றை சமுதாயத்திற்குக் செய்யும் உத்வேகம் மக்களுக்குக் கிடைப்பதாக இருக்கவேண்டும், இதனால் நமது கலாச்சாரம், நமது தேசத்தின் பல கோணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்.
நண்பர்களே, உங்களில் பலருக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், நான் இந்த நிகழ்ச்சியில் இந்திய நாய் இனங்கள் பற்றிப் பேசியிருந்தேன். நாட்டுமக்களோடு இணைந்து நான் நமது பாதுகாப்புப் படைகளிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன், அதாவது இந்திய நாய் இனங்களைப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் அவை நமது சூழல்-நிலைகளோடு அதிக எளிதான வகையில் இணைந்து விடுகின்றன. நமது பாதுகாப்புப் படைகள் இந்தத் திசையில் மிகவும் பாராட்டுக்குரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லையோரக் காவல்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தங்களுடைய அணிகளில் இந்திய இனங்களைச் சேர்ந்த நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றார்கள். நாய்களின் பயிற்சிக்காக, எல்லையோரக் காவல்படையின் தேசிய பயிற்சி மையம் குவாலியரின் டேகன்பூரில் இருக்கிறது. இங்கே உத்தர பிரதேசத்தின் ராம்பூர் ஹவுண்ட், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முதோல் ஹவுண்ட் ஆகியவை மீது சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலின் துணையோடு நாய்களுக்குச் சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இந்திய நாய் ரகங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான கையேடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன, இதன் வாயிலாக அவற்றின் தனித்தன்மை வாய்ந்த பலங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூரூவிலே, மத்திய ரிசர்வ் காவல்படையின் நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சிப் பள்ளியில், மாங்க்ரெல்ஸ், முதோல் ஹவுண்ட், கோம்பை மற்றும் பாண்டிகோனா போன்ற இந்தியரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே, கடந்த ஆண்டு லக்னவில், அகில இந்திய காவலர்கள் பணிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், ரியா என்ற பெயருடைய ஒரு நாய், அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது. இது ஒரு முதோல் ஹவுண்ட், இதற்கு எல்லையோரக் காவல் படை பயிற்சி கொடுத்திருந்தது. பல அயல்நாட்டு நாய் இனங்களை இங்கே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசினை வென்றது ரியா.
நண்பர்களே, இப்போது எல்லையோரக் காவல்படையானது தனது நாய்களுக்கு அந்நியப் பெயர்களைக் கொடுப்பதற்கு பதிலாக, இந்தியப் பெயர்களைச் சூட்டும் பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறது. நமது நாட்டு ரக நாய்கள் அற்புதமான சாகஸங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. கடந்த ஆண்டு, சத்திஸ்கட்டின் மாவோயிஸம் பாதித்த பகுதிகளில், ரோந்துப் பணிகளின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு நாட்டுரக நாயானது, 8 கிலோகிராம் வெடிப்பொருட்களை இனம் கண்டது. எல்லையோரக் காவல்படையும், மத்திய ரிசர்வ் காவல் படையும் இந்தத் திசையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மேலும் நான் அக்டோபர் 31ஆம் தேதிக்காகவும் காத்திருக்கிறேன். இது இரும்புமனிதர் சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தின் ஒற்றுமை நகரில் உள்ள ஒற்றுமைச் சிலைக்கு அருகிலே ஒரு சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். இங்கே ஒற்றுமை நாள் அணிவகுப்பு நடக்கும், அந்த அணிவகுப்பிலே மீண்டும் இந்தியரக நாய் ரகங்களின் வல்லமை வெளிப்படுத்தப்படும். நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் இதைக் கண்டிப்பாகப் பாருங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், நாடெங்கிலும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும். சர்தார் படேல், நவீனகால தேசத்தின் அதிக மகத்துவம் வாய்ந்த ஆளுமைகளில் ஒருவர். அவருடைய மாபெரும் ஆளுமைத்தன்மையில் பல குணங்கள் நின்று ஒளிவீசுகின்றன. அவர் பெரும் மேதாவிலாசம் உடைய மாணவர். அவர் பாரதம் மற்றும் பிரிட்டன், இருநாடுகளிலும் கல்வியில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தன்னுடைய காலத்தின் மிக வெற்றிகரமான வழக்குரைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும், காந்தியடிகளால் உத்வேகம் அடைந்து, தன்னைத்தானே சுதந்திரப் போராட்ட வேள்வியில் அர்ப்பணம் செய்து கொண்டார். கேடா சத்தியாகிரகம் தொடங்கி போர்சத் சத்தியாகிரகம் வரை பல போராட்டங்களில் அவருடைய பங்களிப்பு இன்றும் கூட நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது. அஹ்மதாபாத் நகராட்சியின் தலைவர் என்ற வகையிலே அவருடைய பணிக்காலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என்ற வகையிலே அவருடைய பங்களிப்பிற்காக நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம்.
நண்பர்களே, சர்தார் படேல் தான் பாரதத்தின் bureaucratic framework, அதிகாரத்துவ சட்டகத்தின் பலமான அடித்தளத்தை அமைத்தார். தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அவர் ஈடு இணையற்ற முயற்சிகளைச் செய்திருக்கிறார். அக்டோபர் 31 அன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் நாடெங்கிலும் நடக்கவிருக்கிறது, இதிலே நீங்கள் பங்கெடுப்பது மட்டுமல்லாது, மற்றவர்களோடு கூடவும் சேர்ந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு வகையில் இளைஞர்களின் விழிப்புணர்வுக்கான சந்தர்ப்பமாக இந்த ஒற்றுமை ஓட்டம் ஆக வேண்டும், இது ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கும். இதுவே பாரதத்தை ஒற்றுமை என்ற இழையில் இணைக்கின்ற அந்த மகத்தான ஆளுமைக்கு நாம் செலுத்தக்கூடிய மெய்யான சிரத்தாஞ்சலியாக இருக்கும்.
என் அன்பான நாட்டுமக்களே, தேநீருடனான என்னுடைய ஈடுபாட்டை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள் ஆனால் நாம் ஏன் இன்றைய மனதின் குரலில் காஃபியோடு உரையாடலை நிகழ்த்தக் கூடாது என்று நான் எண்ணமிட்டேன். கடந்த ஆண்டு நாம் மனதின் குரலில் அராகு காப்பி பற்றிப் பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். சில காலம் முன்பாக, ஒடிஷாவின் பலர் கோராபுட் காப்பி பற்றியும் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். மனதின் குரலில் கோராபுட் காப்பி பற்றியும் நான் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டார்கள்.
நண்பர்களே, கோராபுட் காப்பியின் சுவை அலாதியானது, இது மட்டுமல்ல, சுவை ஒருபுறம் இருந்தாலும், காப்பி சாகுபடி மக்களுக்கு ஆதாயங்களை அளித்து வருகிறது. கோராபுட்டில் சிலரோ தங்களின் பேரார்வம் காரணமாக காப்பி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் பெருநிறுவன உலகில், மேல்நிலைகளில் வேலை பார்த்து வந்தாலும், காப்பியின் மேலுள்ள பிரியத்தால் இந்தத் துறைக்கு வந்ததோடு, வெற்றிகரமாகப் பணியாற்றியும் வருகிறார்கள். இதிலே பல பெண்களும் இருக்கிறார்கள், இவர்களின் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. காப்பியால் அவர்களுக்கு மரியாதை, வளமை இரண்டுமே கிடைக்கின்றன. சொல்லப்படும் இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை :
இதன் பொருள், கோராபுட் காப்பி மிகவும் சுவையானது!
இதுவே ஒடிஷாவின் பெருமிதம்!!
நண்பர்களே, உலகெங்கிலும் பாரதத்தின் மீதான நாட்டம் மிகவும் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தின் சிக்மங்களூருவாகட்டும், கூர்காகட்டும், ஹாஸனாகட்டும், தமிழ்நாட்டின் பழனி, ஷெவ்ராய், நீலகிரி, அண்ணாமலை பகுதிகளாகட்டும், கர்நாடக-தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளின் பிலிகிரி பகுதியாகட்டும், கேரளத்தின் வயநாடு, திருவாங்கூர் மற்றும் மலபார் பகுதிகளாகட்டும், பாரதத்தில் கணிசமான அளவு காப்பியின் பன்முகத்தன்மை இருக்கிறது. நமது வடகிழக்கிலும் கூட காப்பி சாகுபடி அதிகரித்து வருகிறது. இதனால் பாரத நாட்டு காப்பியின் அடையாளம் உலகெங்கிலும் பலமடைந்து வருகிறது. இதனால் தான் காப்பிப் பிரியர்கள் கூறுகிறார்கள் – இந்தியாவின் காப்பிதான் மிகச் சிறப்பான காப்பி. இது இந்தியாவில் காய்ச்சப்பட்டு, உலகத்தால் விரும்பப்படுகிறது.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது மனதின் குரலில் நாம் உரையாட இருக்கும் ஒரு விஷயம், அனைவரின் இதயங்களுக்கும் மிகவும் நெருக்கமானது. இந்த விஷயம் நமது தேசியப் பாடல் பற்றியது – பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம். இது எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது. வந்தேமாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்!! இயல்பான வகையிலே இது நமக்கு பாரத அன்னையின் தாய்மை உணர்வை உணரச் செய்கிறது. இதுதான் பாரத அன்னையின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டுமக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது.
நண்பர்களே, தேசபக்தி, பாரத அன்னையிடம் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும். பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் இதனை இயற்றினார். வந்தேமாதரம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது. மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா: என்று வேதங்கள் முழங்கி, பாரதீய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பங்கிம்சந்திரர், வந்தேமாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.
நண்பர்களே, நான் திடீரென்று வந்தேமாதரம் பற்றி ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணமிடுவீர்கள்!! உள்ளபடியே சில நாட்களுக்குப் பிறகு, நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் முதன்முறையாக இதனைப் பாடினார்.
நண்பர்களே, வந்தேமாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டுமக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வுத் திவலைகளை உணர்ந்தார்கள். நமது தலைமுறைகள் வந்தேமாதரத்தின் சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள்.
சுஜலாம், சுஃபலாம், மலயஜ சீதளாம்,
சஸ்ய சியாமளாம், மாதரம்.
வந்தே மாதரம்.
நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும். நமது இந்த முயற்சிகளில் நமக்கு என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும். அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இனிவரும் காலங்களில் வந்தேமாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இருக்கும், தேசத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நாட்டுமக்களான நாமனைவரும் வந்தேமாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்பதிலே கண்டிப்பாக அனுப்புங்கள். நான் உங்களுடைய ஆலோசனைகளுக்காக காத்திருப்பேன், நாமனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தை வரலாற்றுப்பூர்வமானதாக ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.
எனதருமை நாட்டுமக்களே, சம்ஸ்கிருதம் என்ற பெயரைச் சொன்னவுடனேயே நமது மனங்களில் வருவது, நமது அறநூல்கள், வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், பண்டைய ஞானம்-விஞ்ஞானம், ஆன்மீகம் மற்றும் தத்துவஞானம் ஆகியவைதாம். ஆனால் ஒரு காலத்தில் இவை அனைத்தோடு கூடவே சம்ஸ்கிருதம் வழக்கு மொழியாகவும் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் கல்விக்கான சாதனமாக இருந்ததோடு கூடவே, சம்ஸ்கிருதம் வழக்கு மொழியாகவும் இருந்து வந்துள்ளது. நாடகங்கள்-நடனங்கள் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தில் இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடிமைத்தளைக் காலகட்டத்திலும் சரி, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, சம்ஸ்கிருதம் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக இளைய தலைமுறையினரிடம், சம்ஸ்கிருதத்திடம் ஈடுபாடு குறைந்து கொண்டே சென்றது. ஆனால் நண்பர்களே, இப்போது காலம் மாறி வருகிறது, சம்ஸ்கிருதத்தின் காலமும் மாறி வருகிறது. கலாச்சாரம் மற்றும் சமூக ஊடக உலகம் சம்ஸ்கிருதத்திற்குப் புதிய உயிர்ப்பினை அளித்திருக்கின்றன. இப்போதெல்லாம் பல இளைஞர்கள், சம்ஸ்கிருதம் தொடர்பாக பல சுவாரசியமான பணிகளைச் செய்து வருகிறார்கள். நீங்கள் சமூக ஊடகத்திற்குச் சென்றால், பல ரீல்களில் பல இளைஞர்கள் சம்ஸ்கிருதம் பற்றியும், சம்ஸ்கிருதத்தில் உரையாடல் மேற்கொண்டும் வருவதை உங்களால் காண முடியும். பலர் தங்களுடைய சமூக ஊடக சேனல் வாயிலாக, சம்ஸ்கிருதத்தைக் கற்பித்தும் வருகிறார்கள். இப்படிப்பட்ட Content Creator ஒரு உள்ளடக்க உருவாக்குபவரான சகோதரர் யஷ் சாலுங்கே அவர்கள்; இவருடைய சிறப்பம்சம் என்னவென்றால் இவர் உள்ளடக்கம் உருவாக்குபவர் என்பதோடு, ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் கூட. சஸ்ம்கிருதத்தில் உரையாடிக் கொண்டே கிரிக்கெட் விளையாடும் இவருடைய ரீல் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. நீங்களே கேளுங்களேன் -
நண்பர்களே, கமலா, ஜாஹ்னவி ஆகிய இந்த இரு சகோதரிகளின் பணியும் மிகவும் சிறப்பானது. இந்த இரு சகோதரிகளும் ஆன்மீகம், தத்துவஞானம், சங்கீதம் ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு இளைஞர்களுக்கான சேனல் இருக்கிறது, இதன் பெயர் சம்ஸ்கிருத சாத்ரோஹம். இந்த சேனலை நடத்தும் இளைய நண்பர் சம்ஸ்கிருதம் தொடர்பான பல தகவல்களை அளிப்பதோடு, சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை காணொளிகளையும் உருவாக்குகிறார். இளைஞர்களால் இந்த காணொளிகள் மிகவும் விரும்பப்படுகின்றன. உங்களில் பல நண்பர்கள் சமஷ்டியின் காணொளிகளைப் பார்த்திருக்கலாம். சம்ஸ்கிருதத்தில் தனது பாடல்களை பல்வேறு வகையில் அளித்து வருகிறார் சமஷ்டி. மேலும் ஒரு இளைஞரான பாவேஷ் பீமநாதனி. பாவேஷ் அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், ஆன்மீகம், தத்துவம் மற்றும் சித்தாந்தங்கள் குறித்துப் பேசி வருகிறார்.
நண்பர்களே, மொழி என்பது எந்த ஒரு நாகரீகத்தின் விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இந்தக் கடமையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சம்ஸ்கிருதம் ஆற்றியிருக்கிறது. இப்போது சம்ஸ்கிருதம் தொடர்பாக சில இளைஞர்கள் தங்களுடைய கடமையை ஆற்றி வருவது மிகவும் இனிமையானதாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நான் உங்களை சிலகாலம் பின்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறேன். நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலகட்டம். அப்போது சுதந்திரம் பற்றிய எந்தவொரு ஒளிக்கீற்றும் கூட தென்படவில்லை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறையின் அனைத்து எல்லைகளையும் பாரதநாடு முழுவதும் அனுபவித்துக் கொண்டிருந்தது, அந்தக் காலகட்டத்திலே, ஹைதராபாதின் தேசபக்தர்களுக்கு தமனுக்குப் பயணம் என்பது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் கொடூரமும், கருணையும் இல்லாத நிஜாமின் கொடுமைகளை சகித்துக் கொள்ள ஆட்படுத்தப்பட்டார்கள். ஏழைகள், ஆதரவற்றவர்கள், பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைக்கு எல்லையே இல்லை. அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன, மேலும் சொல்லொணா அளவுக்கு வரிகள் போடப்பட்டன. இந்த அநியாயத்துக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தால், அவர்களுடைய கைகள் வெட்டப்பட்டன.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்தில் சுமார் 20 வயது பெருமானமுடைய ஒரு இளைஞன், இந்த அநீதிக்கு எதிராக எதிர்த்து நின்றான். இன்று ஒரு சிறப்பான காரணத்துக்காக நான் இந்த இளைஞன் குறித்து உங்களோடு உரையாடவிருக்கிறேன். இவருடைய பெயரைக் கூறும் முன்பாக இவருடைய வீரம் பற்றி நான் கூறுகிறேன். நண்பர்களே, அந்த நாட்களில் நிஜாமுக்கு எதிராக ஒரு சொல்லைக் கூறுவது கூட பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. நிஜாமின் ஒரு அதிகாரியான சித்திக்கி என்பவனுக்கு எதிராக நேருக்கு நேர் சவால் விட்டார் அந்த இளைஞர். விவசாயிகளின் மகசூலைக் கைப்பற்ற சித்திக்கியை அனுப்பினான் நிஜாம். ஆனால் இந்த அராஜகத்துக்கு எதிரான போராட்டத்திலே சித்திக்கியை வதம் செய்தார் இந்த இளைஞர். அது மட்டுமல்லாமல் கைது செய்யப்படாமல் தப்பியும் விட்டார். நிஜாமின் அடக்குமுறை காவல்துறையிடமிருந்து தப்பிய இந்த இளைஞர், அங்கிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவான அஸாமுக்குச் சென்று விட்டார்.
நண்பர்களே, நான் பேசிக் கொண்டிருக்கும் மகத்தான ஆளுமையின் பெயர் கோமரம் பீம். சில நாட்கள் முன்னர் அக்டோபர் 22ஆம் தேதியன்று தான் அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கோமரம் பீமுடைய ஆயுள் அதிகம் இருக்கவில்லை, வெறும் 40 ஆண்டுக்காலம் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தாலும், தனது வாழ்நாளிலே இவர் எண்ணில்லா மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகத்தவரின் இதயங்களிலே அழிக்கமுடியாத முத்திரையைப் பதித்தார். இவர் நிஜாமுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்குப் புதிய சக்தியை அளித்தார். இவர் தன்னுடைய தந்திரோபாயத் திறமைக்குப் பெயர் போனவர். நிஜாமின் ஆட்சிக்கு எதிரான பெரிய சவாலாக இவர் உருவெடுத்தார். 1940இலே, நிஜாமின் ஆட்கள் இவரைப் படுகொலை செய்தார்கள். இவரைப் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று நான் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
கோமரம் பீம் கீ…
நா வினம்ர நிவாளி.
ஆயன ப்ரஜல ஹ்ருதால்லோ….
எப்படிகி நிலிசி வுண்டாரூ.
அதாவது கோமரம் பீம்ஜிக்கு என் பணிவான அஞ்சலிகள். அவர் என்றுமே மக்களின் இதயங்களில் உறைந்திருக்கிறார்.
நண்பர்களே, அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று நாம் பழங்குடி மக்களின் பெருமித நாளான ஜனஜாதீய கௌரவ் திவஸைக் கொண்டாட இருக்கிறோம். இது பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாள் என்ற சுபமான தினம். நான் பகவான் பிர்ஸா முண்டா அவர்களை மிகுந்த சிரத்தையுணர்வோடு வணங்குகிறேன். தேசத்தின் சுதந்திரத்திற்காக, பழங்குடி சமூகத்தின் உரிமைகளுக்காக, அவர் செய்திருக்கும் பணிகள் ஈடு இணையற்றவை. ஜார்க்கண்டில் பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் கிராமமான உலிஹாதுவுக்குச் செல்லும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. பகவான் பிர்ஸா முண்டா அவர்கள், கோமராம் பீம் அவர்களைப் போல நமது பழங்குடி சமூகங்களில் இன்னும் பல ஆளுமைகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நீங்கள் அனுப்பியிருக்கும் பல செய்திகள் கிடைத்திருக்கின்றன. பலர் இந்தச் செய்திகளில் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பல மதிப்புமிக்க ஆளுமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். நமது சிறிய நகரங்கள், பகுதிகள், கிராமங்களில் கூட பல நூதனமான கருத்துக்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சேவை உணர்வோடு சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுவரும் இப்படிப்பட்ட நபர் அல்லது சமூகங்களைப் பற்றி உங்களுக்கும் தெரியும் என்றால், நீங்கள் கண்டிப்பாகத் தெரிவியுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். அடுத்த மாதம், நாம் மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் சந்திப்போம். புதிய விஷயங்கள் குறித்து விவாதிப்போம், அதுவரை எனக்கு விடை தாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.
*****
(Release ID: 2182581)
AD/RJ
(Release ID: 2182599)
Visitor Counter : 19
Read this release in:
Punjabi
,
Telugu
,
Manipuri
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam