உள்துறை அமைச்சகம்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது
Posted On:
24 OCT 2025 4:09PM by PIB Chennai
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒற்றுமையை இந்த நாள் குறிக்கிறது. சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும் இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் பல வழிகளில் தனித்துவமானவையாகும்.
சுதந்திர இந்தியாவை உருவாக்கியதில், 562 சமஸ்தானங்களை ஒன்றிணைத்ததில், நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததில் சர்தார் படேல் வகித்த முக்கிய பங்கை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவரது தலைமைத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக, சர்தார் படேல், "தேசிய ஒற்றுமையின் சிற்பி மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று போற்றப்படுகிறார்.
இந்த ஆண்டு தனித்துவமான கொண்டாட்டங்களில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் ஒரு பிரமாண்டமான அணிவகுப்பு மற்றும் கலாச்சார விழா ஆகியவை அடங்கும். அணிவகுப்பின் போது, மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில காவல் படைகள் தங்கள் திறமைகள், ஒழுக்கம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்த உள்ளன. இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை , மத்திய தொழில் பாதுகாப்புப் படை , இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை ,சஷ்த்ர சீமா பால் ஆகியவற்றின் படைகளும், அசாம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காவல் படைகளும் இடம்பெறும். அணிவகுப்பில் குதிரைப்படை மற்றும் ஒட்டகப் படைகள், பல்வேறு தற்காப்புக் கலைகள் மற்றும் ஆயுதம் ஏந்தாத போர் பயிற்சிகள் ஆகியவை இடம்பெறும்.
இந்த அணிவகுப்பு, பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்கேற்பையும் சிறப்பிக்கும். பிரதமருக்கு வழங்கப்படும் மரியாதை அணிவகுப்புக்கு ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்குவார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலாச்சார நிகழ்ச்சியில், 900 கலைஞர்கள் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களை நிகழ்த்துவார்கள், இது நமது கலாச்சாரத்தின் வளமான பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182158
***
SS/PKV/SH
(Release ID: 2182299)
Visitor Counter : 45