பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இளம் பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை வழி நடத்துவார்கள் : பிரதமர்
Posted On:
24 OCT 2025 12:27PM by PIB Chennai
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இன்றைய பணிநியமனங்கள் வெறும் அரசு வேலைகள் மட்டுமல்ல, தேசக்கட்டுமானத்திற்கு பங்களிக்கும் மிகச்சிறந்த வாய்ப்புமாகும் என்று பிரதமர் கூறினார். பணிநியமனங்களைப் பெற்றிருப்போர் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதிய நியமனதாரர்கள் மக்களே தெய்வம் என்ற மந்திரத்தை மறந்துவிடக் கூடாது என்றும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இந்திய இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த தளமாக உள்ளது என்றும் அண்மைக் காலங்களில் இத்தகைய திருவிழாக்கள் மூலம் 11 லட்சத்திற்கும் அதிகமான பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வேலைகள் மட்டுமின்றி 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்குடன் பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு தொடங்கியிருப்பதாக பிரதமர் கூறினார். தேசிய பணி சேவை போன்ற தளங்களின் மூலம் புதிய வாய்ப்புகளுடன் இளைஞர்கள் இணைக்கப்படுவதாகவும் இவற்றில் 7 கோடிக்கும் அதிகமான பணியிடங்கள் பற்றிய தகவல்கள் இளைஞர்களுக்கு பகிரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் இறுதிப் பட்டியலில் இடம் பெற்று ஆனால் தேர்வு பெறாத இளைஞர்களுக்கு வாய்ப்புகளை தரும் பிரதிபா சேது போர்ட்டல் முன்முயற்சி பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். இவர்களின் முயற்சி வீணாகாமல் திறமையுள்ள இளைஞர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த போர்ட்டல் மூலம் பணியில் சேர்கிறார்கள் என்று அவர் கூறினார். இளைஞர்களின் திறனை உரிய முறையில் பயன்படுத்துவது இந்தியாவின் இளையோர் ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று விவாதிக்கப்பட்ட வெற்றிகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வரும் காலத்தில் முக்கியமான பங்களிப்பை செய்யும் என்பதை அவர் அடிக்கோடிட்டு காட்டினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய பிரதமர், இவர்களைப் போன்ற இளம் பணியாளர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தலைமை தாங்குவார்கள் என்று உறுதிபட தெரிவித்தார். இவர்களின் முயற்சிகள் மூலம் இந்தியாவின் எதிர்காலம் புதுவடிவம் பெறும் என்றும் நாட்டு மக்களின் கனவுகள் நனவாகும் என்றும் அவர் தெரிவித்தார். நியமனதாரர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்து தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182053
***
SS/SMB/AG/RJ
(Release ID: 2182194)
Visitor Counter : 19
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam