ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே வாரியத்தின் வார் ரூமில் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
Posted On:
20 OCT 2025 2:16PM by PIB Chennai
மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இன்று ரயில்வே வாரியத்தில் உள்ள வார் ரூமுக்குச் சென்று பண்டிகைக் காலத்தில் பயணிகளின் இயக்கத்தை ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் பணியாற்றிய ஊழியர்களைப் பாராட்டிய அவர், தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தற்போதைய பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய இந்திய ரயில்வே விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் சத் பூஜை காலங்களில் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய ரயில்வே 12,011 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இயக்கப்பட்ட 7,724 ரயில்களை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
தற்போதைய பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு சீரான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே முழு பலத்துடன் இயங்குகிறது. வழக்கமான ரயில் சேவைகளுக்கு அதிகமாக, பண்டிகைக் காலத்தில் அதிகரித்த பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 19, 2025 வரை இந்திய ரயில்வே வெற்றிகரமாக 3,960 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.
தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்கு எதிர்பார்க்கப்படும் பயணிகள் போக்குவரத்தை மேலும் பூர்த்தி செய்யும் வகையில், வரும் நாட்களில் சுமார் 8,000 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 19 வரை, இந்தச் சிறப்பு சேவைகள் மூலம் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். பயணிகள் நடமாட்ட மேலாண்மை, ரயில் நிலையங்கள் முழுவதும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பிரத்யேக ரயில் நிறுத்தும் பகுதிகள், கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், குடிநீர் வசதிகள் மற்றும் சுத்தமான கழிப்பறைகள் ஆகிய வசதிகளை வழங்குவதன் மூலம், வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன.
முன்னதாக, மத்திய அமைச்சர் புதுதில்லி மற்றும் ஆனந்த் விஹார் ரயில் நிலையங்களுக்குச் சென்று, இந்திய ரயில்வே பயணிகளுக்காகச் செய்த ஏற்பாடுகள் குறித்து கருத்துகளைப் பெற பயணிகளுடன் கலந்துரையாடினார்.
பண்டிகைக் காலத்தில் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்தை வழங்க இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. திறமையான செயல்பாடுகளையும், ஒவ்வொரு பயணிக்கும் இனிமையான பயண அனுபவத்தையும் உறுதி செய்வதற்காக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகின்றனர்.
***
AD/PKV/SH
(Release ID: 2181005)
Visitor Counter : 15