பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்
ஐ.என்.எஸ். விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்: பிரதமர்
ஐ.என்.எஸ். விக்ராந்த் என்பது தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவற்றின் தலைசிறந்த சின்னமாகும்: பிரதமர்
முப்படைகளுக்கும் இடையிலான அசாதாரண ஒருங்கிணைப்பு, சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானைச் சரணடைய கட்டாயப்படுத்தியது: பிரதமர்
உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் குறிக்கோள்: பிரதமர்
இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலராக நிற்கிறது: பிரதமர்
நமது பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு நன்றி, நாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, நாங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறோம்: பிரதமர்
Posted On:
20 OCT 2025 12:53PM by PIB Chennai
ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்தில் கழித்த தமது இரவை நினைவு கூர்ந்த பிரதமர், அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்கக் கடினமாக இருப்பதாகக் கூறினார். கடலில் ஆழ்ந்த இரவையும் சூரிய உதயத்தையும் இந்தத் தீபாவளியை பல வழிகளில் மறக்கமுடியாததாக மாற்றுவதாக அவர் விவரித்தார். ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து, நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பிரதமர் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட தருணத்தை நினைவுகூர்ந்த திரு மோடி, அந்த நேரத்தில், விக்ராந்த் ஒரு பிரமாண்டமானது, மகத்தானது, பரந்து விரிந்த, தனித்துவமானது என்று குறிப்பிட்டதாகக் கூறினார். "விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல; இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்" என்று பிரதமர் தெரிவித்தார். நாடு உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்தைப் பெற்ற நாளிலேயே, இந்திய கடற்படை காலனித்துவ மரபின் முக்கிய சின்னத்தைக் கைவிட்டதை அவர் நினைவு கூர்ந்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு, கடற்படை ஒரு புதிய கொடியை ஏற்றுக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியாவின் ராணுவ வலிமையை பிரதிபலிக்கிறது என்று கூறிய பிரதமர், சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்தின் பெயரே பாகிஸ்தானின் தூக்கத்தைக் கெடுத்ததை நினைவு கூர்ந்தார். ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பல் எதிரிகளின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போதுமானது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்திய ஆயுதப் படைகளுக்கு தமது சிறப்பு வணக்கத்தைத் தெரிவித்த பிரதமர், இந்திய கடற்படையால் ஏற்படுத்தப்பட்ட பயம், இந்திய விமானப்படையால் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரண திறமை மற்றும் இந்திய ராணுவத்தின் துணிச்சல், முப்படைகளுக்கிடையேயான அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவை, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானை விரைவாக சரணடைய கட்டாயப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
எதிரி முன்னால் இருக்கும்போதும், போர் நெருங்கும்போதும், சுதந்திரமாகப் போராடும் வலிமையைக் கொண்ட தரப்புக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்று திரு. மோடி கூறினார். ஆயுதப் படைகள் வலுவாக இருக்க, தன்னம்பிக்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியப் படைகள் தன்னிறைவை நோக்கி சீராக முன்னேறி வருவதைப் பற்றி பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, கடந்த ஆண்டு ரூ 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
“பிரமோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தங்கள் திறன்களை நிரூபித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இப்போது இந்த ஏவுகணைகளை வாங்க ஆர்வமாக உள்ளன” என்று பிரதமர் கூறினார், மூன்று ஆயுதப் படைகளுக்கும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா வளர்த்து வருவதாக அவர் கூறினார். “உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகக் கருதப்படுவதே இந்தியாவின் இலக்கு” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறினார். இந்த வெற்றிக்கு பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் பங்களிப்புகள் கணிசமாகக் காரணம் என்று அவர் கூறினார்.
"இந்தியக் கடற்படை இந்தியாவின் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது" என்று பிரதமர் வலியுறுத்தினார். ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் ஒவ்வொரு தீவிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு சில காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவை அவர் நினைவு கூர்ந்தார். இந்த தேசிய உறுதியை கடற்படை நிறைவேற்றியதாக திரு மோடி கூறினார். இன்று, ஒவ்வொரு இந்தியத் தீவிலும் கடற்படையால் மூவர்ணக் கொடி பெருமையுடன் ஏற்றப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்திய ஆயுதப் படைகள் அவ்வப்போது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று திரு மோடி கூறினார். ஏமன் முதல் சூடான் வரை, தேவை ஏற்படும் போதெல்லாம், எங்கிருந்தாலும், அவர்களின் வீரமும் துணிச்சலும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. இந்தப் பணிகள் மூலம் இந்தியா ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் துணிச்சலால், நாடு ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. நக்சல்-மாவோயிஸ்ட் தீவிரவாதத்திலிருந்து இந்தியா இப்போது முழுமையான விடுதலையின் விளிம்பில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். 2014 க்கு முன்பு, சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டன; இன்று, இந்த எண்ணிக்கை வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
'பாரத் மாதா கீ ஜெய்!' என்ற முழக்கத்துடன், பிரதமர் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
***
AD/PKV/SH
(Release ID: 2180967)
Visitor Counter : 18