உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், செவ்வாய்க்கிழமை, புது தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

Posted On: 19 OCT 2025 11:00AM by PIB Chennai

காவல் நினைவு தினமான அக்டோபர் 21 அன்று (செவ்வாய்க்கிழமை), புது தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

1959 அக்டோபர் 21 அன்று, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், அதிக ஆயுதம் ஏந்திய சீன துருப்புக்களின் தாக்குதலில், பத்து வீரம் மிக்க காவல்துறையினர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று காவல் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. காவல் துறையினர் செய்த தியாகங்களையும், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கிய பங்கையும் அங்கீகரிக்கும் விதமாக, 2018 ஆம் ஆண்டு காவல் நினைவு தினத்தன்று, புது தில்லியில் உள்ள சாணக்யபுரியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த நினைவுச்சின்னம் காவல் படையினருக்கு தேசிய அடையாளமாகத் திகழ்கிறது. மேலும்  உயிரைக் கொடுத்தாவது,  தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்த நினைவுச்சின்னம் ஒரு மைய சிற்பம், 'வீரத்தின் சுவர்' மற்றும் ஒரு அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் காவல் துறை குறித்த ஒரு வரலாற்று மற்றும் வளர்ந்து வரும் கண்காட்சியாகக் கருதப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் ஒரு புனித யாத்திரைத் தளம், காவல் பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு மரியாதை செலுத்தும் இடமாகும். தேசிய காவல் நினைவுச்சின்னம் திங்கட்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

நாடு முழுவதும் காவல் துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 21-ம் தேதி காவல் துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. முக்கிய நிகழ்வு புது தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவார். மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs) மற்றும் தில்லி காவல்துறையின் கூட்டு அணிவகுப்பு நடைபெறும். மத்திய உள்துறை இணை அமைச்சர் , காவல் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

காவல் துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, தியாகிகளை நினைவுகூர்ந்து, காவல் துறையின் சவால்களை கோடிட்டுக் காட்டும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிகழ்ச்சியில்  உரையாற்றுவார். இந்த நிகழ்வு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும், காவல் துறை வலைத்தளங்களில் இணைய ஒளிபரப்பு செய்யப்படும்,

நினைவு தினங்களின் ஒரு பகுதியாக, அக்டோபர் 22 முதல் 30 வரை தேசிய காவல் நினைவிடத்தில் பல்வேறு நினைவு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, காவல் இசைக்குழுவின் நிகழ்ச்சி, மோட்டார் சைக்கிள் பேரணிகள், தியாகிகளுக்கான ஓட்டம், இரத்த தான முகாம்கள், குழந்தைகளுக்கான கட்டுரை/ஓவியப் போட்டிகள்  காவல் துறையினரின் தியாகம், வீரம் மற்றும் சேவைகளை வெளிப்படுத்தும் வீடியோ படங்களின் திரையிடுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் படைகளும் இதே போன்ற நிகழ்ச்சிகளுக்கு  ஏற்பாடு செய்கின்றன.

***

AD/PKV/SH


(Release ID: 2180839) Visitor Counter : 9