பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
25 AUG 2024 6:53PM by PIB Chennai
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் கிசன்ராவ் பகாடே அவர்களே, ராஜஸ்தானின் பிரபல முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா அவர்களே, நீதிபதி திரு சஞ்சீவ் கன்னா அவர்களே, மத்திய சட்ட அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்களே, இதர மாண்புமிகு நீதிபதிகளே, சட்டத்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களே, இங்கு கூடியிருக்கும் தாய்மார்களே, அன்பர்களே!
முதலில், உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு வருவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. நான் மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டேன், வானிலை காரணமாக சரியான நேரத்தில் வந்து சேர முடியவில்லை, இதற்காக, உங்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் உங்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் வேளையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனவே, நீதித்துறையின் நேர்மை மற்றும் பல்வேறு சிறந்த ஆளுமைகளின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அரசியலமைப்பின் மீதான நமது நம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து நீதிபதிகளையும், ராஜஸ்தான் மாநில மக்களையும் நான் பாராட்டுவதுடன், அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இருப்பு நமது நாட்டின் ஒற்றுமையின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து நாட்டை ஒரே இழையாகப் பின்னியபோது, ராஜஸ்தானின் பல சமஸ்தானங்களும் அதன் ஒரு பகுதியாக இருந்தன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் கோட்டா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அவற்றின் சொந்த உயர்நீதிமன்றங்கள் இருந்தன. ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவற்றின் ஒருங்கிணைப்புடன் உருவானது. அதாவது, தேசிய ஒற்றுமையும் நமது நீதித்துறை அமைப்பின் நிறுவனக் கல்லாகும். இந்த அஸ்திவாரம் எந்த அளவுக்கு வலிமையானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது நாடும் அதன் நிறுவனங்களும் வலிமையானதாக இருக்கும்.
நண்பர்களே,
நீதி எப்போதும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது என்று நான் நம்புகிறேன். ஆனால் சில நேரங்களில், நடைமுறைகள் அதை சிக்கலாக்குகின்றன. நீதியை முடிந்தவரை எளிமையாகவும் தெளிவாகவும் மாற்றுவது நமது கூட்டுப் பொறுப்பு. இதைக் கருத்தில் கொண்டு, நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். முற்றிலும் பொருத்தமற்றதாகிவிட்ட நூற்றுக்கணக்கான காலனித்துவ சட்டங்களை நாம் ரத்து செய்துள்ளோம். சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பின், அடிமைத்தன மனநிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்காக, நாடு இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாயச் சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. தண்டனைக்கு பதிலாக நீதியை வலியுறுத்துவதுதான் இந்திய தத்துவத்தின் அடித்தளமாகும். பாரதிய நியாயச் சட்டம், இந்த மனிதாபிமான சிந்தனையை மேம்படுத்துகிறது. பாரதிய நியாயச் சட்டம் நமது ஜனநாயகத்தை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவிக்கிறது. இப்போது, நியாயச் சட்டத்தின் இந்த முக்கிய உணர்வு பயனுள்ளதாக மாறுவதை உறுதி செய்வது நமது பொறுப்பு.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், நமது நாடு வேகமாக மாற்றத்தை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாம் 10வது இடத்தில் இருந்தோம், இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம். இன்று, நாட்டின் கனவுகள் பெரிதாக உள்ளன, நமது மக்களின் அபிலாஷைகள் உயர்ந்திருக்கின்றன. அதனால்தான் புதிய பாரதத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளை உருவாக்குவதும், நமது அமைப்புகளை நவீனமயமாக்குவதும் அவசியம். அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கு இது முக்கியம். நமது நீதித்துறை அமைப்பில் தொழில்நுட்பம் எவ்வாறு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை நாம் காண்கிறோம். தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் சாத்தியமான மாற்றத்திற்கு மின்னணு நீதிமன்றங்கள் திட்டம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இன்று, நாடு முழுவதும் 18,000 க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 26 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் பற்றிய தகவல்கள் தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு மூலம் மையப்படுத்தப்பட்ட இணையவழி தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். நாட்டில் 3,000க்கும் மேற்பட்ட நீதிமன்ற வளாகங்களும் 1,200க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளும் இப்போது காணொலிக் காட்சி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானும் இந்த திசையில் வேகமாக நகர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு, நூற்றுக்கணக்கான நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. காகிதமில்லா நீதிமன்றங்கள், மின்னணு தாக்கல், மின்னணு சம்மன் சேவை மற்றும் மெய்நிகர் விசாரணைகள் முதலியவை சாதாரண மாற்றங்கள் அல்ல. ஒரு சாதாரண குடிமகனின் பார்வையில், பல தசாப்தங்களாக நீதிமன்றங்களுக்கு வரும்போது "சக்கரம்" (சுற்றுகள்) என்ற வார்த்தை கிட்டத்தட்ட கட்டாயமாகிவிட்டது. யாரும் புண்படக்கூடாது. நீதிமன்றத்தின் "சக்கரம்", வழக்குகளின் "சக்கரம்", அதாவது நீங்கள் சிக்கிக்கொண்டால், நீங்கள் எப்போது வெளியே வருவீர்கள் என்று யாருக்கும் தெரியாது! இன்று, அந்த சாதாரண குடிமகனின் வலியை முடிவுக்குக் கொண்டுவர, பல தசாப்தங்களுக்குப் பிறகு அந்த முடிவில்லா "சக்கரத்தை" உடைக்க, நாடு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது நீதியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நம்பிக்கையை நாம் நிலைநிறுத்தி, நமது நீதித்துறை அமைப்பை தொடர்ந்து சீர்திருத்த வேண்டும்.
நண்பர்களே,
பல நிகழ்ச்சிகளில், நான் பல நூற்றாண்டுகள் பழமையான நமது மத்தியஸ்த முறையைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டுள்ளேன். இன்று, மலிவு மற்றும் விரைவான முடிவுகளுக்கு, மாற்று தகராறு தீர்வு வழிமுறைகள் மிகவும் முக்கியமானதாகி வருகின்றன.இந்த மாற்று தகராறு வழிமுறை, வாழ்க்கையை எளிமைப்படுத்துவதுடன், நீதியையும் மேம்படுத்தும். சட்டங்களைத் திருத்துவதன் மூலமும் புதிய விதிகளைச் சேர்ப்பதன் மூலமும், அரசு இந்த திசையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நீதித்துறையின் ஒத்துழைப்புடன், இந்த அமைப்புகள் இன்னும் வலுவடையும்.
நண்பர்களே,
தேசியப் பிரச்சனைகளில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை நமது நீதித்துறை தொடர்ந்து வகித்து வருகிறது. அரசியலமைப்பு ஒருங்கிணைப்பை உறுதி செய்த காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கப்பட்டது ஒரு எடுத்துக்காட்டாக நம் முன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மனிதாபிமானச் சட்டமும் நமக்கு முன் ஒரு எடுத்துக்காட்டாகும். இதுபோன்ற விஷயங்களில், தேசத்தின் நலனுக்காக இயற்கை நீதி என்ன சொல்கிறது என்பது நமது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் எப்போதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை, நீதித்துறை பல சந்தர்ப்பங்களில், தேசத்திற்கு முன்னுரிமை என்ற உறுதியை வலுப்படுத்தியுள்ளது. இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து, பொது சிவில் சட்டம் பற்றி நான் பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒருவேளை, ஒரு அரசு இந்த விஷயத்தில் முதல் முறையாக இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருக்கலாம், ஆனால் நமது நீதித்துறை பல தசாப்தங்களாக அதை ஆதரித்து வருகிறது. தேசிய ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளில் நீதித்துறையின் தெளிவான நிலைப்பாடு குடிமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
21 ஆம் நூற்றாண்டில் பாரதத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சொல், ஒருங்கிணைப்பு. போக்குவரத்து முறைகளின் ஒருங்கிணைப்பு, தரவுகளின் ஒருங்கிணைப்பு, சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பு! நாட்டில் தனித்தனியாக செயல்படும் அனைத்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. அது காவல்துறை, தடயவியல், செயல்முறை சேவை வழிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை முழு நீதித்துறை அமைப்பு என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு துறையும் இணைக்கப்பட்ட அமைப்பில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று, இந்த ஒருங்கிணைப்புத் திட்டம் ராஜஸ்தானின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய பாரதத்தில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முயற்சி மற்றும் சோதிக்கப்பட்ட சூத்திரமாக தொழில்நுட்பத்தின் பயன்பாடு மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில், பல சர்வதேச முகமைகள் மற்றும் அமைப்புகள் இதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ளன. நேரடி பணப் பரிமாற்றம் முதல் ஒருங்கிணைந்த கட்டண இடையீடு (யுபிஐ) வரை, பல துறைகளில் இந்தியாவின் செயல்பாடு உலகளாவிய மாதிரியாக உருவெடுத்துள்ளது. இந்த அனுபவத்தை இப்போது நமது நீதி அமைப்பிலும் செயல்படுத்த வேண்டும். இந்த திசையில், தொழில்நுட்பம் மூலமாகவும் ஒருவரின் சொந்த மொழியிலும் சட்ட ஆவணங்களை அணுகுவது ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மிகவும் பயனுள்ள ஊடகமாக மாறும். இந்த நோக்கத்திற்காக அரசு திஷா என்ற புதுமையான தீர்வையும் ஊக்குவித்து வருகிறது. நம் சட்ட மாணவர்கள் மற்றும் பிற சட்ட வல்லுநர்கள் இந்தப் பிரச்சாரத்தில் எங்களுக்கு ஆதரவளிக்க முடியும். கூடுதலாக, நாட்டில் உள்ள மக்கள் உள்ளூர் மொழிகளில் சட்ட ஆவணங்கள் மற்றும் தீர்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதைத் தொடங்கியுள்ளது. அதன் வழிகாட்டுதலின் கீழ், நீதித்துறை ஆவணங்களை 18 மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு எங்கள் நீதித்துறையையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
எளிதான நீதிக்கு நமது நீதிமன்றங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் கட்டமைக்க விரும்பும் வளர்ச்சியடைந்த இந்தியாவில், அனைவருக்கும் எளிமையான, அணுகக்கூடிய மற்றும் வசதியான நீதியை உறுதி செய்வது அவசியம். இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
***
(Release ID: )
SS///SH
(Release ID: 2174671)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam