பிரதமர் அலுவலகம்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
Posted On:
01 OCT 2025 1:28PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இன்று மகா நவமி மற்றும் சித்திதாத்ரி தேவியின் தினம் என்று அவர் குறிப்பிட்டார். நாளை, இப்பண்டிகையின் பத்தாம் நாளான விஜயதசமி மகத்தான வெற்றியைக் குறிக்கும் பண்டிகை என்று அவர் கூறினார். இது இந்திய கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியம், அநீதிக்கு எதிரான நீதி, பொய்க்கு எதிரான உண்மை மற்றும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த புனிதமான தருணத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் தொண்மையான மரபின் மறுசீரமைப்பு இது என்றும், ஒவ்வொரு சகாப்தத்தின் சவால்களையும் எதிர்கொள்ள தேசிய உணர்வு புதிய வடிவங்களில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த யுகத்தில், தேசிய உணர்வின் ஒரு நல்லொழுக்கத்துடன் கூடிய அவதாரமாக சங்கம் இருக்கிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காண்பது தற்போதைய தலைமுறை ஸ்வயம்சேவகர்களுக்கு பாக்கியம் என்பதை எடுத்துரைத்த திரு மோடி, தேசிய சேவைக்கான உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சங்கத்தின் நிறுவனர் மற்றும் மதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்ஜ்வாரின் பாதங்களில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். சங்கத்தின் 100 ஆண்டு கால மகத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு ஒரு சிறப்பு தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிடுவதாக அவர் அறிவித்தார். இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுப்பக்கத்தில் வரத முத்திரையில் சிங்கத்துடன் நிற்கும் பாரத மாதாவிற்கு ஸ்வயம்சேவகர்கள் வணக்கம் செலுத்துவது போன்ற உருவமும் இடம்பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் இந்திய நாணயத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று திரு மோடி எடுத்துரைத்தார். "ராஷ்ட்ரயா ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ரயா, இதம் ந மமா" என்ற சங்கத்தின் வழிகாட்டும் குறிக்கோளையும் இந்த நாணயம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்று வெளியிடப்பட்ட நினைவு தபால் தலையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் ஆழமான வரலாற்று பொருத்தத்தைக் குறிப்பிட்டு, 1963 - ம் ஆண்டு ஜனவரி 26 - ம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் மிகுந்த பெருமையுடன்
பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். அந்த வரலாற்று தருணத்தின் நினைவை இந்த முத்திரை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நினைவு நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்கு இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி கூறினார்.
பெரிய அளவிலான ஆறுகளின் கரைகளில் மனித நாகரிகங்கள் வளர்வது போல, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் எண்ணற்ற உயிர்களை வளர்த்து வளப்படுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும், பல நீரோடைகளாக கிளை நதிகளை போன்று வெவ்வேறு பகுதிகளில் வளமையை உருவாக்குகிறது என்றும், சங்கத்தின் பயணம் இதை பிரதிபலிக்கிறது என்றும், அதன் பல்வேறு இணைப்பு அமைப்புகள் தேசிய பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173507
******
SS/SV/SH
(Release ID: 2173752)
Visitor Counter : 14