பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்
உலக அளவில் இடையூறுகள், நிச்சயமற்ற தன்மை நிலவி வந்த போதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது: பிரதமர்
தற்சார்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்து வருவதுடன் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்க வேண்டும்: பிரதமர்
Posted On:
25 SEP 2025 11:55AM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யுபிஐ, ஆதார், டிஜி லாக்கர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கான தளங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலக அளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற சூழல் நிலவி வந்த போதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். எண்ணற்ற சவால்கள், வரும் தசாப்தங்களுக்கான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் உள்ளது என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா என்பதை நாட்டின் வளர்ச்சிக்கான தாரக மந்திரமாகக் கொண்டு பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தற்சார்பு நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், 40,000-க்கும் அதிகமான விளக்க நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளதையும், முன்பு சிறு சிறு தவறுகள் குற்றச்செயலாக கருதப்பட்டு வந்த சட்டவிதிமுறைகள் இப்போது குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆராய்ச்சிப் பணிகளுக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஆராய்ச்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கு முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுதங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், நவீன ஆயுதங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருவதையும் இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முக்கியப் பங்கு வகிப்பதையும் அவர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் கூறினார். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் ஜிஎஸ்டி பதிவு வரி தொடர்பான சர்ச்சைகளைக் குறைக்கவும், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் நடைமுறையை விரைவுபடுத்துதல் போன்ற பயன்களை அளிக்க வகை செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171027
***
AD/SV/KPG/KR
(Release ID: 2171212)
Visitor Counter : 10
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam