பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
20 SEP 2025 2:33PM by PIB Chennai
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!
பாவ்நகர், ஒரு ஆச்சரியமூட்டும் சூழலை உருவாக்கி இருக்கிறது. எனக்கு முன்பு பந்தலுக்கு வெளியே கடலென மக்கள் திரண்டிருப்பதை நான் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் தங்களது ஆசிகளை வழங்குவதற்காக குழுமி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சி பாவ்நகரில் நடைபெற்றாலும் ஒட்டுமொத்த நாட்டிற்குமான விழா, இது. இன்று ஒரு ஊடகமாகத் திகழும் பாவ்நகர், ‘கடலிலிருந்து வளம்’ என்ற பாதையை நோக்கி இந்தியா எவ்வாறு பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த முக்கிய நிகழ்வுக்காக பாவ்நகர் மைய இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் பாவ்நகர் மக்களுக்கு வாழ்த்துகள்.
நண்பர்களே,
செப்டம்பர் 17-ம் தேதி நரேந்திராவிற்கு நீங்கள் அனைவரும் அனுப்பிய வாழ்த்துகளும், நாடு முழுவதிலும் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்குக் கிடைத்த வாழ்த்துகளுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பது இயலாத காரியம். இருந்த போதும் இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்குக் கிடைத்த அன்பும், ஆசிகளும் தான் எனது மிகப் பெரிய சொத்து மற்றும் வலிமை. எனவே என் நாட்டு மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். இங்கு மகள் ஒருவர் ஒரு ஓவியத்தை. அதேபோல மற்றொரு ஓவியத்தை அங்கு ஒரு மகன் வைத்திருக்கிறார். தயவு கூர்ந்து அவற்றை சேகரித்துக் கொள்ளுங்கள், நண்பர்களே. உங்களது அன்பிற்கு நான் கடன் பட்டுள்ளேன். மிகுந்த சிரத்தையுடன் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள்- மிக்க நன்றி.
நண்பர்களே,
விஸ்வகர்மா ஜெயந்தி முதல் காந்தி ஜெயந்தி வரை, அதாவது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சேவை இருவார நிகழ்வுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இது ஒரு 15 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும், குஜராத்திலும் கடந்த இரண்டு மூன்று தினங்களில் ஏராளமான நிகழ்வுகள் நடத்தப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். நூற்றுக்கணக்கான ரத்ததான முகாம்கள் நடத்தப்படுவதுடன், ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் பேர் ரத்ததானம் வழங்கி இருக்கிறார்கள். இது குஜராத்தில் இருந்து எனக்குக் கிடைத்த தகவல் மட்டுமே. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏராளமான தூய்மைப் பணிகள் நடைபெறுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் அதில் இணைந்திருக்கிறார்கள். மாநிலத்தில் சுமார் 30,000 சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்டுக்குரிய எண்ணிக்கை. பெண்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பரிசோதனை, சிகிச்சை முதலியவை மக்களுக்கு வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த தருணத்தில், மதிப்புமிக்க திரு கிருஷ்ணகுமார் சிங் அவர்களை நினைவு கூர்கிறேன். சர்தார் படேல் இயக்கத்தில் சேர்ந்த அவர், இந்தியாவின் ஒற்றுமைக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார். அவரைப் போன்ற தேசபக்தர்களால் ஊக்குவிக்கப்பட்டு பாரதத்தின் ஒற்றுமையை இன்று நாம் வலுப்படுத்துவதுடன் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வையும் வலியுறுத்துகிறோம்.
நண்பர்களே,
புனித பண்டிகையான நவராத்திரி தொடங்க உள்ள வேளையில் பாவ்நகருக்கு நான் வந்துள்ளேன். இந்த முறை ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக சந்தைகள் மேலும் துடிப்பானதாக இருக்கும். இத்தகைய பண்டிகை உணர்வுடன் ‘கடலில் இருந்து வளம்’ பிரம்மாண்டமான விழாவை நாம் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் நான் இந்தியில் உரையாற்றுகிறேன், பாவ்நகரின் சகோதரர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் ஒரு நிகழ்வில் அங்கம் வகிக்கும் போது உங்கள் அனுமதியுடன் நான் இந்தியில் உரையாற்றுகிறேன்.
நண்பர்களே,
21ம் நூற்றாண்டின் இந்தியா, கடலை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு தான் துறைமுகம் சார்ந்த மேம்பாட்டு பணிகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நாட்டில் கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக சர்வதேச கப்பல் முனையம் மும்பையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாவ்நகர் மற்றும் குஜராத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஏராளமான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கும், குஜராத் மாநில மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
நண்பர்களே,
‘வசுதைவ குடும்பகம்’, அதாவது உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வுடன் இந்தியா இன்று முன்னேறுகிறது. உண்மையில் நமது ஒரே எதிரி, பிற நாடுகள் மீதான நமது சார்புதான். அனைவரும் இணைந்து இந்த எதிரியை ஒழிக்க வேண்டும். வெளிநாடுகளை அதிகம் சார்ந்து இருப்பது தேசத்திற்கான மிகப்பெரிய தோல்வி என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஏற்பட, மிகப் பெரிய மக்கள்தொகை உள்ள நாடு, தன்னிறைவு அடைய வேண்டும். பிறரை நாம் சார்ந்திருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும். பிறரின் நலனுக்காக 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நாம் கேள்விக்குள்ளாக்க முடியாது. நாட்டின் வளர்ச்சி இலக்குகள், பிறரை சார்ந்திருக்க அனுமதிக்க முடியாது. வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்க அனுமதிக்க முடியாது.
எனவே சகோதர, சகோதரிகளே,
நூறு நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து இருக்கிறது என்று குஜராத்தியில் நாம் சொல்கிறோம். அந்த மருந்துதான் தற்சார்பு இந்தியா. ஆனால் இதற்காக, நாம் சவால்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தொடர்ந்து குறைக்க வேண்டும். பாரதம் ஒரு தன்னிறைவு தேசமாக உலகத்தின் முன் வலுவாக தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.
சகோதர சகோதரிகளே,
பாரதத்தில் திறனுக்குப் பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ், பாரதத்தின் அனைத்து ஆற்றலையும் புறக்கணித்தது. எனவே, சுதந்திரம் அடைந்த ஆறு அல்லது ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், இந்தியாவால் தகுதியான வெற்றியை அடைய முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. நீண்ட காலமாக, காங்கிரஸ் அரசுகள் நாட்டை உரிம-ஒதுக்கீட்டு ராஜ்ஜியத்தில் சிக்க வைத்து, உலக சந்தைகளிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்தின. உலகமயமாக்கலுடன், அவை இறக்குமதிக்கான கதவுகளைத் திறந்தன. இதற்கு மேல், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மோசடிகள் நடைபெற்றன. இந்தக் கொள்கைகள், நாட்டின் இளைஞர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தின, மேலும் பாரதத்தின் உண்மையான பலம் வெளிப்படுவதைத் தடுத்தன.
நண்பர்களே,
கப்பல் துறையில் நமது நாடு சந்தித்த இழப்பின் அளவை தெளிவாகக் காணலாம். பல நூற்றாண்டுகளாக இந்தியா ஒரு பெரிய கடல்சார் சக்தியாக இருந்து வருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மையங்களில் ஒன்றாக நாம் இருந்தோம். இந்தியாவின் கடலோர மாநிலங்களில் கட்டப்பட்ட கப்பல்கள், நாட்டிற்குள்ளும் உலகத்துடனும் வணிகம் மற்றும் வர்த்தகத்தை இயக்கின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட, நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தி வந்தோம். அந்த நேரத்தில், இந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளில் 40% க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கப்பல் துறையும் காங்கிரஸின் குறைபாடுள்ள கொள்கைகளுக்கு பலியாகிவிட்டன. பாரதத்தில் கப்பல் கட்டும் பணியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, காங்கிரஸ் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு வாடகைக் கட்டணம் செலுத்த விரும்பியது. இதன் விளைவாக, இந்தியாவின் கப்பல் கட்டும் சூழலியல் சரிந்தது, மேலும் வெளிநாட்டுக் கப்பல்களைச் சார்ந்திருப்பது நமது கட்டாயமாக மாறியது. ஒரு காலத்தில் நமது வர்த்தகத்தில் 40% இந்தியக் கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அந்தப் பங்கு வெறும் 5% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, நமது 95% வர்த்தகத்திற்கு நாம் வெளிநாட்டுக் கப்பல்களைச் சார்ந்துள்ளோம். இது நமக்கு மிகவும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
சில முக்கிய புள்ளிவிவரங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர்களை, அதாவது, சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு அவர்களின் சேவைகளுக்காக செலுத்துகிறது என்பதை அறிந்து குடிமக்கள் அதிர்ச்சியடைவார்கள். இது இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டிற்கு சமமான அளவு. ஏழு தசாப்தங்களாக மற்ற நாடுகளுக்கு நாம் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளோம் என்று கற்பனை செய்து பாருங்கள். நமது பணத்தில், வெளிநாடுகளில் லட்சக்கணக்கான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய அரசுகள் இந்தப் பணத்தில் ஒரு சிறிய பகுதியை நமது கப்பல் துறையில் முதலீடு செய்திருந்தால் கூட, இன்று உலகம் நமது கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். கப்பல் சேவைகளில் நாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்திருப்போம். இவற்றுக்கெல்லாம் மேலாக, நாம் மிகப்பெரிய தொகையைச் சேமித்திருப்போம்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டு சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், தன்னிறைவு மட்டுமே ஒரே வழி. இதற்கு மாற்று வழி இல்லை. 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும். அது ஒரு சிப்பாக இருந்தாலும், ஒரு கப்பலாக இருந்தாலும், நாம் அதை இந்தியாவில் உருவாக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியாவின் கடல்சார் துறை அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல், நாட்டின் ஒவ்வொரு பெரிய துறைமுகமும் எண்ணற்ற ஆவணங்கள் மற்றும் பல்வேறு செயல்முறைகளிலிருந்து விடுபடும். "ஒரு தேசம், ஒரு ஆவணம்" மற்றும் "ஒரு தேசம், ஒரு துறைமுக நடைமுறை" வர்த்தகத்தை மேலும் எளிதாக்கும். நமது அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அவர்கள் குறிப்பிட்டது போல், சமீபத்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஏராளமான பழமையான காலனித்துவ சட்டங்களைத் திருத்தினோம். கடல்சார் துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளோம். எங்கள் அரசு ஐந்து கடல்சார் சட்டங்களை புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை கப்பல் துறையிலும் துறைமுக நிர்வாகத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும்.
நண்பர்களே,
இந்தியா பல நூற்றாண்டுகளாக பெரிய கப்பல்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் இந்த மறக்கப்பட்ட பெருமையை மீட்டெடுக்க உதவும். கடந்த பத்தாண்டுகளில், நாம் 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படையில் சேர்த்துள்ளோம். ஒன்று அல்லது இரண்டு தவிர, இவை அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. ஐஎன்எஸ் விக்ராந்த் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்- இந்த வலிமைமிக்க கப்பல் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நமக்குத் திறன் உள்ளது என்பதையும் அத்தகைய திறமைக்கு பஞ்சமில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. பெரிய கப்பல்களைக் கட்டுவதற்குத் தேவையானது அரசியல் மன உறுதிதான். இந்த உறுதியை என் சக குடிமக்களுக்கு நான் வழங்குகிறேன்.
நண்பர்களே,
நாட்டின் கடல்சார் துறையை வலுப்படுத்த, நேற்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாங்கள் ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை செய்துள்ளோம்- அரசு இப்போது பெரிய கப்பல்களை நாட்டின் உள்கட்டமைப்பாக அங்கீகரித்துள்ளது. எந்தவொரு துறையும் உள்கட்டமைப்பாக அங்கீகரிக்கப்படும்போது, அது மகத்தான நன்மைகளைப் பெறுகிறது. கப்பல் கட்டும் நிறுவனங்கள், இப்போது வங்கிக் கடன்களை எளிதாகப் பெற முடியும், குறைந்த வட்டி விகிதங்களைப் பெறும், மேலும் உள்கட்டமைப்பு நிதியுதவியின் மற்ற அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கும். இந்த முடிவு, இந்திய கப்பல் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் உலகளவில் போட்டியிட உதவும்.
நண்பர்களே,
பாரதத்தை ஒரு சிறந்த கடல்சார் சக்தியாக மாற்ற, அரசு மூன்று முக்கிய திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் கப்பல் கட்டும் துறைக்கு நிதி ஆதரவை எளிதாக்கும், நமது கப்பல் கட்டும் தளங்கள் நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள உதவும், வடிவமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தும். வரும் ஆண்டுகளில் இவற்றிற்காக சுமார் ரூ.70,000 கோடி செலவிடப்படும்.
நண்பர்களே,
2007-ம் ஆண்டு, நான் இங்கு முதலமைச்சராக உங்களுக்கு சேவை செய்தபோது, குஜராத் கப்பல் கட்டும் வாய்ப்புகள் குறித்த ஒரு பெரிய கருத்தரங்கை ஏற்பாடு செய்ததை நான் நினைவு கூர்கிறேன். அந்த நேரத்தில் குஜராத்தில் கப்பல் கட்டும் சூழலியலை நாங்கள் ஆதரித்தோம். இப்போது, நாடு முழுவதும் கப்பல் கட்டுவதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கப்பல் கட்டுதல் என்பது சாதாரண தொழில் அல்ல என்பதை இங்குள்ள நிபுணர்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இது "அனைத்துத் தொழில்களின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது ஒரு கப்பலை உருவாக்குவது மட்டுமல்ல - எஃகு, இயந்திரங்கள், மின்னணுவியல், ஜவுளி, வண்ணப்பூச்சுகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பல தொடர்புடைய தொழில்களும் இதில் விரிவடைகின்றன. கப்பல் கட்டும் தொழில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட எண்ணற்ற துறைகளை ஆதரிக்கிறது. கப்பல் கட்டும் துறையில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பு முதலீட்டை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஒரு கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலையும் விநியோகச் சங்கிலியில் ஆறு முதல் ஏழு புதிய வேலைகளுக்கு வழிவகுக்கிறது. அதாவது கப்பல் கட்டும் துறையில் 100 வேலைகள் உருவாக்கப்பட்டால், தொடர்புடைய துறைகளில் 600 க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்படுகின்றன. கப்பல் கட்டும் துறையின் பெருக்க விளைவு இதுதான்.
நண்பர்களே,
கப்பல் கட்டுமானத்திற்கான அத்தியாவசிய திறன் தொகுப்புகளிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நமது தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். மேலும் நம் கடல்சார் பல்கலைக்கழகத்தின் பங்கு விரிவடையும். சமீபத்திய ஆண்டுகளில், கடற்படை மற்றும் தேசிய மாணவர் படை (என்சிசி) இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் கடலோரப் பகுதிகளில் புதிய அமைப்புகளை நாங்கள் நிறுவியுள்ளோம். தேசிய மாணவர் படை வீரர்கள் கடற்படைக்கு மட்டுமல்ல, வணிகத் துறையிலும் பங்கு பெறத் தயாராக இருப்பார்கள்.
நண்பர்களே,
இன்றைய பாரதம் ஒரு புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருகிறது. நாம் நிர்ணயித்த இலக்குகளை, இப்போது நாம் முன்கூட்டியே அடைகிறோம். சூரிய சக்தி, பாரதத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதன் இலக்குகளை அடைந்து வருகிறது. இதேபோல், துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில், 11 ஆண்டுகளுக்கு முன்பு நாம் நிர்ணயித்த இலக்குகள் பெரும் வெற்றியுடன் எட்டப்படுகின்றன. பெரிய கப்பல்களுக்கான பெரிய துறைமுகங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம், மேலும் சாகர்மாலா போன்ற திட்டங்கள் மூலம் துறைமுக இணைப்பை மேம்படுத்துகிறோம்.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில், பாரதம் அதன் துறைமுக திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. 2014 க்கு முன்பு, இந்தியாவில் சராசரி கப்பல் திரும்பும் நேரம் இரண்டு நாட்களாக இருந்தது. இன்று அது ஒரு நாளுக்கும் குறைவாக உள்ளது. நாங்கள் புதிய, பெரிய துறைமுகங்களை உருவாக்கி வருகிறோம். சமீபத்தில், இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் மாற்று துறைமுகம் கேரளாவில் திறக்கப்பட்டது. மகாராஷ்டிராவில், வாதவன் துறைமுகம் சுமார் 75,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் முதல் பத்து துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
நண்பர்களே,
தற்போது, உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 10 சதவீதம் மட்டுமே. இதை நாம் அதிகரிக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் நமது பங்கை மூன்று மடங்காக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். இதை நாம் அடைவோம்.
நண்பர்களே,
நமது கடல்சார் வர்த்தகம் வளரும்போது, நமது மாலுமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த கடின உழைப்பாளி நிபுணர்கள் கடலில் கப்பல்களை இயக்குகிறார்கள், இன்ஜின்கள் மற்றும் இயந்திரங்களை நிர்வகிக்கிறார்கள், சரக்குகளின் ஏற்றுதல் மற்றும் இறக்குதலை மேற்பார்வையிடுகிறார்கள். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் குறைவான மாலுமிகள் இருந்தனர். இன்று அவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகிற்கு கடல் பயணிகளை வழங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இப்போது இடம்பிடித்துள்ளது. இது நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இதனால், இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் துறையும் உலக நாடுகளை வலுப்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்தியா ஒரு வளமான கடல்சார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நமது மீனவர்களும், நமது பண்டைய துறைமுக நகரங்களும் அதன் சின்னங்களாக விளங்குகின்றன. இந்த பாவ்நகர், இந்த சௌராஷ்டிரா, அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பாரம்பரியத்தை நாம் எதிர்கால சந்ததியினரிடமும் கொண்டு செல்ல வேண்டும். இதுமட்டுமின்றி, நமது ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். அதனால்தான் லோதலில் ஒரு பிரமாண்டமான கடல்சார் அருங்காட்சியகத்தை உருவாக்குகிறோம். இதுவும் உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியகமாக இருக்கும். ஒற்றுமை சிலையைப் போலவே, இது இந்தியாவின் புதிய அடையாளமாக மாறும். விரைவில், நானும் அங்கு செல்வேன்.
நண்பர்களே,
பாரதத்தின் கடற்கரைகள் செழிப்பின் நுழைவாயில்களாக மாறும். இந்தியாவின் கடற்கரைகள் நமது செல்வத்தின் நுழைவாயில்களாக இருக்கும் என்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும். குஜராத்தின் கடற்கரை மீண்டும் இந்த பிராந்தியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக மாறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முழுப் பகுதியும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியின் புதிய பாதையை நாட்டிற்குக் காட்டுகிறது. இன்று, இந்திய துறைமுகங்களால் கையாளப்படும் சரக்குகளில் 40%, குஜராத்தின் துறைமுகங்கள் வழியாக வருகின்றன. விரைவில், இந்தத் துறைமுகங்களும் பிரத்யேக சரக்கு வழித்தடத்தால் பயனடையும். இது நாடு முழுவதும் பொருட்களை விரைவாக கொண்டு செல்லவும், நமது துறைமுகங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.
நண்பர்களே,
கப்பல்களை மறுசுழற்சி செய்யும் பெரிய சூழலியல் இங்கேயும் உருவாகி வருகிறது. அலங்கில் உள்ள கப்பல்களை மறுசுழற்சி செய்யும் தலம் இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம். இது நமது இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
நண்பர்களே,
ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, நாம் ஒவ்வொரு துறையிலும் விரைவாகச் செயல்பட வேண்டும். மேலும் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பாதை ஒரு ‘தற்சார்பு இந்தியா’வின் வழியாக அமைந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் எதை வாங்கினாலும் அது உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும், எதை விற்கிறோமோ அது உள்நாட்டு பொருளாக இருக்க வேண்டும். "இது சுதேசி தயாரிப்பு என்று பெருமையுடன் சொல்லுங்கள்", என்ற ஒரு அறிவிப்பை விற்பனையாளர்கள் அனைவரும் தங்கள் கடைகளில் வைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சி ஒவ்வொரு பண்டிகையையும் இந்தியாவின் செழிப்பான பண்டிகையாக மாற்றும். இந்த உணர்வுடன், நவராத்திரியை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறு குழந்தை நீண்ட நேரமாக இங்கே ஒரு ஓவியத்தைப்பிடித்துக் கொண்டிருக்கிறது; அவரது கைகள் வலிக்கக்கூடும். தயவுசெய்து அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். நல்லது, மகனே. உன் படம் பெறப்பட்டுவிட்டது. அழாதே மகனே, அது பெறப்பட்டுவிட்டது. உங்கள் முகவரி அதில் எழுதப்பட்டிருந்தால், நான் நிச்சயமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்.
நண்பர்களே,
வாழ்க்கையில் இதுபோன்ற சிறு குழந்தைகளின் அன்பை விட பெரிய பொக்கிஷம் வேறு என்ன இருக்க முடியும்? மீண்டும் ஒருமுறை, எனக்கு அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பு, விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றபோது, முழு பாவ்நகரும் களத்தில் இருந்தது என்பது எனக்குத் தெரியும். உங்கள் மனப்பான்மையை நான் அறிவேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாவ்நகரின் சகோதர சகோதரிகளே, நவராத்திரி மண்டபத்திலிருந்து உங்கள் குரல்களை எழுப்புங்கள், இதனால் தற்சார்பு இந்தியாவின் செய்தி நாடு முழுவதும் எதிரொலிக்கும்.
மிக்க நன்றி, என் சகோதரர்களே!
**
(Release ID: 2168888)
AD/BR/KR
(Release ID: 2171140)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam