உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களில் 900 புத்தொழில் நிறுவனங்களை மகளிர் வழிநடத்துகின்றனர் – மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 23 SEP 2025 5:01PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று புத்தொழில் மாநாடு-2025-ஐ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, சர்வதேச அளவில் புத்தொழில் நிறுவனங்களை அடையாளப்படுத்தவும், இது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இந்த மாநாடு உதவும் என்றார். புதுமைப்படுத்துதல், துரிதப்படுத்துதல் மற்றும் முன்னேறுதல் என்ற மூன்று மந்திரங்களின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் ஏழு அமர்வுகள் நடைபெறும் என்றும், வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் ஒன்றிணைத்து, பிரதமர் மோடியின் “மனதில் இருந்து சந்தைக்கு” என்ற தொலைநோக்குப் பார்வைக்கான ஒரு தளத்தை இது வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்திய கல்வி அமைப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கான இடத்தை வழங்கியுள்ளதாகவும், இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கல்வி அறிவை பயன்படுத்தி இந்திய இளைஞர்கள் உலகத் தரத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய இளைஞர்கள் புத்தொழில் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2000-வது ஆண்டில் இந்தியாவில் புத்தொழில் மற்றும் அதற்கான சூழல் குறித்து எந்த நிலைப்பாடும் இல்லை என்றும், 2014-ம் ஆண்டில் 500-க்கும் குறைவான புத்தொழில் நிறுவனங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டில் புத்தொழில் இந்தியா இயக்கத்தை பிரதமர் தொடங்கியதாகவும் இன்று உலகத்தரம் வாய்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்தியா வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170168

*** 

SS/GK/AG/SH

 


(Release ID: 2170400)