பிரதமர் அலுவலகம்
செப்டம்பர் 22-ம் தேதி பிரதமர் அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
இட்டாநகரில் ₹3,700 கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
போக்குவரத்து, சுகாதாரம், பிற மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
திரிபுராவில், மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
21 SEP 2025 9:54AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2025 செப்டம்பர் 22) அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இட்டாநகரில் ₹5,100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.
அதன்பிறகு, அவர் திரிபுராவுக்குச் சென்று பூஜை, வழிபாடுகள் செய்து, மாதாபாரியில் உள்ள 'மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின்' மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பிரதமர்
இப்பகுதியின் பரந்த நீர் ஆற்றலைப் பயன்படுத்தி, நிலையான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் இட்டாநகரில் ₹3,700 கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் சியோம் துணைப் படுகைப் பகுதியில் ஹியோ நீர்மின் திட்டம் (240 மெகாவாட்), டாடோ-I நீர்மின் திட்டம் (186 மெகாவாட்) ஆகியவை உருவாக்கப்படவுள்ளன.
தவாங்கின் எல்லை மாவட்டத்தில் நவீன மாநாட்டு மையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 9,820 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மையம், தேசிய, சர்வதேச மாநாடுகள், கலாச்சார விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான ஒரு முக்கிய வசதியாக செயல்படும். 1,500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் திறன் கொண்ட இந்த மையம், உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்வதுடன் பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சார ஆற்றலை மேம்படுத்தும்.
போக்குவரத்து இணைப்பு, சுகாதாரம், தீ தடுப்புப் பாதுகாப்பு, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ₹1,290 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இந்த முயற்சிகள் இப்பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் செய்வதை எளிதாக்குதல், துடிப்பான தொழில்முனைவோர் சூழல் அமைப்பை வளர்ப்பது என்ற தமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் உள்ளூர் வரி செலுத்துவோர், வர்த்தகர்கள், தொழில்துறை பிரதிநிதிகளுடன் சமீபத்திய சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விகித சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து விவாதிப்பார்.
திரிபுராவில் பிரதமர்
இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரை புத்துணர்ச்சி- ஆன்மீக பாரம்பரிய மேம்பாட்டு இயக்கமான பிரசாத் திட்டத்தின் கீழ், மதாபாரியில் உள்ள 'மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின்' மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இது திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தில், கோயில் வளாகத்தில் மாற்றங்கள், புதிய பாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள், தடுப்புகள், வடிகால் அமைப்பு, விற்பனை அரங்கங்கள், தியான மண்டபம், விருந்தினர் தங்குமிடங்கள், அலுவலக அறைகள் உள்ளிட்ட புதிய மூன்று மாடி வளாகம் ஆகியவை அடங்கும். இது சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு, வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
***
(Release ID: 2169144)
AD/PLM/RJ
(Release ID: 2169243)