சேவைத் திருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக டி டி நேஷனல், டி டி நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். அப்போது ஆவணப்படங்களின் முன்னோட்டக் காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், தூர்தர்ஷன் மற்றும் பிரசார் பாரதி வெளியிட்டுள்ள ஆவணப் படங்கள், கர்மயோகியின் உத்வேகத்தையும் பிரதமர் மோடியின் வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டையும் பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டினார். தொடக்கக் காலம் முதலே பிரதமர், தமது வாழ்க்கையை நாடு மற்றும் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகவும், தனிப்பட்ட நலன்கள் இன்றி நாட்டைக் கட்டமைக்கும் இயக்கத்திற்காக அயராது பாடுபட்டு வருவதாகவும் கூறினார். இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் கடைக்கோடி கிராமங்களில்கூட வளர்ச்சிக் காணப்பட்டதாகவும், முன்பு, பல பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பம், படைப்பாற்றல், சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற துறைகளில் உலக அளவில் இந்தியாவிற்கு புதிய அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
சேவைத் திருவிழாவின் போது, அனைவரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்த அவர், சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியின் அடையாளமாக ரத்த தானத்துடன் தாம் இந்நாளை தொடங்கியதாக கூறினார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ பேசிய போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமிக்க பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
சேவைத் திருவிழாவின் கீழ், ஒலிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியில், பன்முக முன்முயற்சிகள் மூலம் நாட்டைக் கட்டமைப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை விளக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய அளவில் 3 ஆவணப்படங்களை டி டி நியூஸ் ஒலிபரப்ப உள்ளது. அத்துடன் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்த கதைகளை விளக்கும் மேரா கான் ஆஜ் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது. டி டி நேஷனல் தொலைக்காட்சி ஸ்வ செ சமக்ரா தக் ஆவணப்படத்தை ஒலிபரப்ப உள்ளது.
டி டி நியூஸின் பிராந்திய அலைவரிசைகளில், பிராந்திய மொழிகளிலும் ஆவணப்படங்கள் ஒலிபரப்பாகும்.
---
SS/IR/KPG/KR/SH