பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்தார்
காங்க்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் சேதத்தை பிரதமர் ஆய்வு செய்தார்
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1500 கோடி நிதியுதவியை பிரதமர் அறிவித்தார்
Posted On:
09 SEP 2025 3:01PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொட்டிய பலத்த மழை, அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (9 செப்டம்பர் 2025) இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் முதலில் வான்வழியாக ஆய்வு செய்தார். அதன்பிறகு, பிரதமர் மோடி காங்க்ராவில் ஒரு அதிகாரப்பூர்வ கூட்டத்தை நடத்தினார். இமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளைக் கேட்டறிந்த பிரதமர், சேதத்தை ஆய்வு செய்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 1500 கோடி நிதி உதவியை அறிவித்தார். மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியை முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு பிராந்தியத்தையும் மக்களையும் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர பல பரிமாணக் கண்ணோட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இவை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகளை மீண்டும் கட்டுதல், தேசிய நெடுஞ்சாலைகளை மீட்டெடுத்தல், பள்ளிகளை மீண்டும் கட்டுதல், பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் வழங்குதல் போன்ற பல வழிகளில் செய்யப்படும்.
விவசாய சமூகத்தை ஆதரிப்பதற்கான முக்கியமான தேவையை உணர்ந்து, தற்போது மின்சார இணைப்புகள் இல்லாத விவசாயிகளை இலக்காகக் கொண்டு கூடுதல் உதவி வழங்கப்படும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், சேதமடைந்த வீடுகளின் புவிசார் குறியிடல் செய்யப்படும். இது துல்லியமான சேத மதிப்பீட்டிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக உதவி வழங்குவதற்கும் உதவும்.
தடையற்ற கல்வியை உறுதி செய்வதற்காக, பள்ளிகளின் சேதங்கள் குறித்து புகாரளிக்கவும், பள்ளியின் இருப்பிடத்தை குறியிடவும் முடியும். இதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் சரியான நேரத்தில் உதவி செய்ய முடியும்.
மழைநீரைச் சேகரித்து சேமிக்க உதவும் வகையில் நீர் சேகரிப்புக்கான மறுசீரமைப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். இந்த முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதுடன், சிறந்த நீர் மேலாண்மையை ஆதரிக்கும்.
சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே மத்திய அமைச்சகங்கள் நிலையிலான குழுக்களை அனுப்பியுள்ளது, மேலும் அவர்களின் விரிவான அறிக்கையின் அடிப்படையில் மேலும் உதவி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பிரதமர் சந்தித்தார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் தமது இரங்கலையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் நெருக்கமாக பணியாற்றி அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்கும் என்று அவர் கூறினார்.
வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும் சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் ஒருங்கிணைந்த வகையில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
***
(Release ID: 2164920 )
SS/PKV/AG/KR
(Release ID: 2164983)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam