பிரதமர் அலுவலகம்
அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
Posted On:
28 AUG 2025 8:41PM by PIB Chennai
ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.
எனது பயணத்தின் போது, கடந்த பதினொரு ஆண்டுகளில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள எங்கள் சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்துவோம். எங்கள் ஒத்துழைப்புக்கு புதிய ஆற்றலை வழங்கவும், பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளின் நோக்கம் மற்றும் லட்சியத்தை விரிவுபடுத்தவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சிப்போம். இந்தப் பயணம், நமது மக்களை இணைக்கும் நமது நாகரிக பிணைப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானில் இருந்து நான் சீனாவுக்குச் செல்வேன். இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிரமான மற்றும் ஆக்கபூர்வமான உறுப்பினர். எங்கள் தலைமையின்போது, புதுமை, சுகாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் புதிய யோசனைகளை அறிமுகப்படுத்தி ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளோம். பகிரப்பட்ட சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. உச்சிமாநாட்டின் இடையே சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் திரு புதின் மற்றும் பிற தலைவர்களுடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
ஜப்பான் மற்றும் சீனாவிற்கான எனது பயணம் நமது தேசிய நலன்களையும் முன்னுரிமைகளையும் மேம்படுத்தும் என்றும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை உருவாக்க முக்கிய பங்களிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161680
***
(Release ID: 2161680)
AD/RB/DL
(Release ID: 2161713)
Visitor Counter : 47