பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
Posted On:
15 AUG 2025 3:52PM by PIB Chennai
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் முன்னேற்றம் தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி, 2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வையை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். உத்திசார் பாதுகாப்பு முதல் குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்) வரை, தூய எரிசக்தி முதல் விவசாயம் வரை, டிஜிட்டல் இறையாண்மை முதல் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் வரையிலான துறைகளில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவும், உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், சமூக ரீதியாக உள்ளடக்கியதாகவும், உத்தி ரீதியாக தன்னாட்சி பெற்றதாகவும் மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
பிரதமரின் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.
1. பொதுவான அம்சங்கள்:
* இந்த மாபெரும் சுதந்திர விழா நமது மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும்.
* இந்தியா தொடர்ந்து ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி வருகிறது.
* 75 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல நம்மை வழிநடத்தி வருகிறது.
* அரசியலமைப்பிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த நாட்டின் முதல் சிறந்த ஆளுமை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆவார்.
* இயற்கை நம் அனைவரையும் சோதித்து வருகிறது. கடந்த சில நாட்களில், நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் எண்ணற்ற பிற இயற்கை சீற்றங்கள் போன்ற பல இயற்கை பேரழிவுகளை நாம் சந்தித்துள்ளோம்.
* செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆபரேஷன் சிந்தூரின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்த இன்று ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
* இவ்வளவு காலமாக தாங்கிக் கொண்டிருந்த அணுஆயுத அச்சுறுத்தல்களை இனியும் பொறுத்துக்கொள்வதில்லை என பாரதம் இப்போது முடிவு செய்துள்ளது.
* நமது எதிரிகள் எதிர்காலத்தில் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்தால், நமது ராணுவம் அதன் சொந்த நிலைப்பட்டின்படி, அது தேர்ந்தெடுக்கும் நேரத்தில், அது பொருத்தமாகக் கருதும் விதத்தில் முடிவெடுக்கும். நாம் பொருத்தமான பதிலடியைக் கொடுப்போம்.
* இந்தியா இப்போது முடிவு செய்துள்ளது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது என்பதே அந்த முடிவு. சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். சிந்து நதி நீர் எதிரி நிலங்களுக்கு பாசனம் அளித்தது. அதே நேரத்தில் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
* நமது விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
* ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளம் ஒரு தற்சார்பு பாரதமாகும்.
* பிறரது சார்பு ஒரு பழக்கமாக மாறும்போதும், நாம் தற்சார்பை உணராமல், மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்போதும் அது ஒரு பெரிய துரதிர்ஷ்டமாக அமைகிறது.
* தன்னம்பிக்கை நமது திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது திறனைப் பாதுகாக்க, பராமரிக்க, மேம்படுத்த, தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம்.
* இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் ஒரு நவீன சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது, மேலும் நவீன அமைப்பு நமது நாட்டை ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவு அடையச் செய்யும்.
* நாட்டின் இளைஞர்கள் தங்கள் புதுமையான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய யோசனை எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும். இந்தப் பயணத்தில் நான் உங்களுடன் தோளோடு தோள் நிற்பேன்.
* உலகளவில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய உள்நாட்டு தடுப்பூசிகளிலிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாம் புதுமை உணர்வை விரிவுபடுத்த வேண்டும்.
* நமது விஞ்ஞானிகளும் இளைஞர்களும் நமது சொந்த ஜெட் இன்ஜின்களை உருவாக்க வேண்டும்.
* ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளைப் பெற வேண்டும். இதன் மூலம் இந்தியா அதன் சொந்த சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் மருத்துவத் தன்னிறைவு திறனை நிரூபிக்க வேண்டும்.
* தேசிய உற்பத்தி இயக்கம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
* இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் பெரும் பங்கு இன்னும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு செல்கிறது. இந்தியாவின் கடல்சார் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதற்கும், எரிசக்தி தன்னிறைவை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணி தொடங்கப்படும்.
* மக்களும் கடைக்காரர்களும் "உள்ளூர் பொருட்களுக்கான குரல்" முன்முயற்சியின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்க வேண்டும்.
* சுதேசி என்பது பெருமை மற்றும் வலிமையிலிருந்து உருவாக வேண்டும். கட்டாயத்திலிருந்து அல்ல.
* தற்சார்பை அதிகரிக்கவும், தொழில்முனைவோரை ஆதரிக்கவும், இந்தியாவின் பொருளாதார, தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்தவும், கடைகளுக்கு வெளியே "சுதேசி" விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* இந்தியாவின் பலம் அதன் மக்கள், புதுமை, தன்னம்பிக்கைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் உள்ளது.
* கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா சீர்திருத்தம் செய்து, சிறப்பாக செயல்பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இன்னும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
* சட்டங்கள், ஒழுங்குமுறை செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில்முனைவு ஊக்குவிக்கப்பட்டு, ஒவ்வொரு இந்தியரும் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பங்களிக்கக்கூடிய சூழல் அமைப்பை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
* அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான ஒரு பணிக்குழு உருவாக்கப்படும். இது பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான தற்போதுள்ள அனைத்து சட்டங்கள், விதிகள் நடைமுறைகளை மதிப்பீடு செய்யும்.
* சீர்திருத்தங்கள் புதுமை, தொழில்முனைவு, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவான சூழல் அமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
* சமூக நீதியை உறுதி செய்வதற்காக ஒரு நிறைவான அணுகுமுறையுடன் பணியாற்றி வருகிறோம்.
* அரசு ஒரு அணுகுமுறையுடன் வீட்டு வாசலுக்கு வருகிறது. கோடிக்கணக்கான பயனாளிகள் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுகிறார்கள். நேரடிப் பணப் பரிமாற்றம் உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.
* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் வறுமையை வென்று அதிலிருந்து வெளியேறி, ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளனர்.
* நாங்கள் சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்களைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை. முன்னேற விரும்பும் மற்றும் வட்டாரத் திட்டங்கள் மூலம் பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம்.
* இந்தியா இனி தனது தேசிய நலன்களில் சமரசம் செய்யாது.
* மற்றவர்களைச் சார்ந்திருப்பது ஒரு நாட்டின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சார்ந்திருப்பது ஒரு பழக்கமாக, ஆபத்தான ஒன்றாக மாறும்போது அது துரதிர்ஷ்டவசமானதாகிறது. தற்சார்பு என்பது ஏற்றுமதி, இறக்குமதி, ரூபாய் அல்லது டாலர் பற்றியது மட்டுமல்ல. அது நமது திறன்களைப் பற்றியது.
* சீர்திருத்தம் என்பது வெறும் பொருளாதாரத்தைப் பற்றியது மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றுவது பற்றியது.
* எங்கள் அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கத்தைக் குறிப்பதாக அமைகின்றன.
* இந்தியா, ஒழுங்குமுறை, கொள்கை, செயல்முறை மற்றும் நடைமுறை சீர்திருத்தங்களுக்கு உறுதிபூண்டுள்ளது.
* மற்றவர்களின் வரம்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியா தனது சொந்த முன்னேற்றப் பாதையை விரிவுபடுத்துகிறது.
* அதிகரித்து வரும் பொருளாதார சுயநல உலகில், இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துதல், வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
* ஒவ்வொரு இந்தியரும் தேசக் கட்டுமானத்திற்கு பங்களிக்க வேண்டும். நாட்டின் சுதந்திர நூற்றாண்டுக்குள் ஒரு வளமான, சக்திவாய்ந்த, வளர்ச்சியடைந்த பாரதத்தை உறுதி செய்ய வேண்டும்.
* வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியை, நாங்கள் நிறுத்த மாட்டோம். நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம்.
* சட்டங்கள் மற்றும் மரபுகளில் அடிமைத்தனத்தின் ஒரு சுவடு கூட இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அனைத்து வகையான அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்.
* நமது அடையாளத்தின் மிகப்பெரிய ஆபரணம் நமது பாரம்பரியம். நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்படுவோம்.
* இவை அனைத்திலும் ஒற்றுமையே மிகவும் சக்திவாய்ந்த மந்திரம். எனவே ஒற்றுமையை யாரும் உடைக்க முடியாது என்பது நமது கூட்டுத் தீர்மானமாக இருக்க வேண்டும்.
2. பாதுகாப்பு அமைச்சகம்:
* இந்தியாவின் பாதுகாப்புத் துறை தன்னம்பிக்கை மற்றும் நமது தற்சார்பின் நிரூபணமே ஆபரேஷன் சிந்தூர் ஆகும்.
* பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கி கடந்த பத்து ஆண்டுகளில் நிலையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாத கட்டமைப்புகளும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன.
* அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியா இனி பொறுத்துக் கொள்ளாது.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தேசிய பாதுகாப்புத் திறனை நிரூபிக்கிறது.
* இந்திய கண்டுபிடிப்பாளர்களும் இளைஞர்களும் இந்தியாவிற்குள் ஜெட் இன்ஜின்களை உருவாக்க வேண்டும்.
* இந்தியா தனது வளமான கலாச்சார மற்றும் புராண பாரம்பரியத்திலிருந்து உத்வேகத்தைப் பெற்று, நவீன பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை வழிநடத்துகிறது. இந்தியாவின் தாக்குதல் மற்றும் தடுப்பு திறன்களை வலுப்படுத்த, "சுதர்சன் சக்ரா" இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
* ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தைப் போலவே, இந்தப் பணியும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் விரைவான, துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த பதிலடிகளை உறுதி செய்யும்.
நிதி அமைச்சகம்:
தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படும். இது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும். அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, மிகவும் திறன் வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும்.
* வரி முறையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்ற வருமான வரி சீர்திருத்தம், இணையதளம் மூலம் மதிப்பீடு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.
* 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க ஆர்வமுள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
* உற்பத்தியில் நமது வலிமையை உலகம் அங்கீகரிக்க, குறைபாடுகள் இல்லாத, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் தரத்தில் தொடர்ந்து புதிய உயரங்களை நாம் அடைய வேண்டும்.
* நமது ஒவ்வொரு பொருளும் அதிக மதிப்புடையதாக இருக்க வேண்டும், ஆனால் குறைந்த விலையில் இருக்க வேண்டும். இந்த மனப்பான்மையுடன்தான் நாம் முன்னேற வேண்டும்.
* உலகளாவிய ஸ்திரமின்மைக்கு மத்தியில், இந்தியாவின் நிதித்துறை ஸ்திரத்தன்மை, இந்தியாவின் நிதித்துறை சக்தி ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முழு உலகமும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
4. உள்துறை அமைச்சகம்
• இந்தியாவின் மக்கள்தொகையில் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
• எல்லைப்புற பகுதிகளில் ஊடுருவுதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக இடம்பெயர்தல் காரணமாக மக்கள்தொகையில் சமநிலையின்மை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
• உயர்நிலை அதிகாரம் கொண்ட மக்கள்தொகை இயக்கம் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படும். இது மூலோபாய மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும்.
• நமது பழங்குடியினப் பகுதிகளும் இளைஞர்களும் மாவோயிசத்தின் பிடியில் சிக்கி இருந்தனர். இன்று நாம் அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கையை 125-ல் இருந்து 20-ஆக குறைத்துள்ளோம்.
• முன்னர் ‘சிவப்பு வழித்தடம்’ என்று அழைக்கப்பட்டிருந்த பிராந்தியங்கள் இப்பொழுது பசுமை மேம்பாட்டின் வழித்தடங்களாக மாறி வருகின்றன. இது நமக்கு பெருமை தரும் விஷயம் ஆகும்.
• பாரதத்தின் வரைபடத்தில் ஒரு காலத்தில் குருதியின் ரத்தக்கறை படிந்திருந்த பகுதிகளில் இன்று நாம் அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் வளர்ச்சியின் மூவண்ணக் கொடியை ஏற்றி உள்ளோம்.
5. வேளாண் & விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகம்
• நாட்டின் சார்புநிலையில் இருந்து சுய-சார்பிற்கான பயணத்தில் இந்தியாவின் விவசாயிகள் முதுகெலும்பாக உள்ளனர்.
• காலனிய ஆட்சி நாட்டை வறுமையில் ஆழ்த்தி இருந்தது. ஆனால் விவசாயிகளின் அயராத முயற்சிகளால் பாரதத்தின் தானியக்கிடங்குகள் நிரம்பின. நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது.
• இந்தியா தனது விவசாயிகளின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
• ”விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கொள்கைக்கும் எதிராகவும் நான் ஒரு சுவராக நின்று பாதுகாப்பேன்” என்று பிரதமர் கூறினார்.
• கடந்த ஆண்டு இந்திய விவசாயிகள் தானிய உற்பத்தியில் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தனர்.
• இந்தியாவின் வளர்ச்சியில் வேளாண்மை ஒரு மைல்கல்லாக விளங்குகின்றது. பால், பருப்பு வகைகள் மற்றும் சணல் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திலும் அரிசி, கோதுமை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
• வேளாண் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை கடந்து, நாட்டின் சர்வதேச போட்டித்தன்மையை பிரதிபலிக்கிறது.
• விவசாயிகளுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் விவசாயம் பின்தங்கிய 100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் - கிசான் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் கால்நடை பாதுகாப்பு திட்டங்கள் போன்ற செயல்பாட்டில் உள்ள திட்டங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் பயனளிக்கிறது. வளமைக்கான இந்தியாவின் முதுகெலும்பு வலுவானதாகவும் மீள்தன்மையுடனும் இருப்பதை இவை உறுதி செய்கின்றன.
• பிரதமரின் கிசான் சம்மான் நிதி, மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள், தரமான விதைகள் விநியோகம் மற்றும் குறித்த நேரத்தில் உரங்கள் விநியோகம் ஆகிய அரசுத்திட்டங்கள் ஒன்றிணைந்து நாட்டில் விவசாயிகளின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளன.
6. கால்நடை பராமரிப்பு அமைச்சகம்
• வட இந்தியாவில் மட்டுமே சுமார் 125 கோடி இலவச தடுப்பூசிகள் கோமாரி நோயைத் தடுப்பதற்காக கால்நடைகளுக்கு போடப்பட்டு உள்ளன.
7. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
• 50-60 ஆண்டுகளுக்கு முன்பு செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முயற்சிகள் கருவிலேயே அழிக்கப்பட்டன. ஆனால் அதேசமயம், மற்ற நாடுகள் இதில் முன்னேற்றம் கண்டிருந்தன. இப்பொழுது இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் விரைவாக செயல்படுகிறது.
• 2025-ம் ஆண்டின் இறுதியில் இந்தியா, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி-கண்டக்டர் சிப்கள் பயன்பாட்டுக்கு வரும். இது முக்கியமான தொழில்நுட்பப் பிரிவுகளில் நாட்டின் வளர்ந்து வரும் வலிமையை பிரதிபலிப்பதாக இருக்கும்.
• சர்வதேச போட்டித் தன்மையை எதிர்கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவில் புத்தாக்கம், சைபர் பாதுகாப்பு மற்றும் இயங்கு தளங்கள் முக்கியமானவை ஆகும்.
8. விண்வெளித் துறை
• குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி மையம் என்ற திட்டத்துடன் நாடு தற்சார்பு இந்தியா தொழில்நுட்பத்துடன் ககன்யானுக்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. உள்நாட்டு விண்வெளித் திறன்களின் புதிய சகாப்தத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
• செயற்கைக்கோள்கள், விண்வெளிப் பயணம் மற்றும் அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் புத்தாக்க முயற்சிகளை 300 ஸ்டார்ட்-அப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை இந்தியா பங்கேற்கிறது என்று மட்டுமல்லாமல் விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயணத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கிறது என்பதை உறுதி செய்கின்றன.
9. அணுசக்தி துறை
• தற்போது 10 புதிய அணுஉலைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்திய சுதந்திரத்தின் 100-ம் ஆண்டிற்குள் நாடு தனது அணுசக்தி திறனை 10 மடங்கு அதிகரிக்கவும், எரிசக்தியில் சுயசார்பை வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் குறிக்கோள்களை கொண்டுள்ளது.
• இந்தியா அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்பிற்கு வழிவகுத்துள்ளது. ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
• இந்தியா எரிபொருள் இறக்குமதியை சாராமல் இருந்திருந்தால் சேமிக்கப்படும் தொகையானது விவசாயிகளின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்பட்டு தேசத்தின் செழுமையின் முதுகெலும்பு மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கும்.
10. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
• பிரதம மந்திரி விக்ஷித் பாரத் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற மிகப்பெரும் வேலைவாய்ப்புத் திட்டம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக வேலையில் சேரும் இளைஞர்கள் ரூ.15,000 பெறுவார். 3 கோடி இந்திய இளைஞர்களுக்கு பலன் அளிப்பதை இந்தத் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சுதந்திர பாரதம் என்பதில் இருந்து வளமான பாரதத்திற்கான பாலத்தை இது வலுப்படுத்துகிறது.
• இந்த முன்முயற்சியானது இந்தியாவின் மக்கள்தொகையின் திறனை உண்மையான பொருளாதார மற்றும் சமூகச் செழிப்பாக உருமாற்றும்.
• நாட்டின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு இளைஞர்கள் செயலூக்கமாக பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
11. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்
• தீபாவளி அன்று அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் வெளியிடப்படும். அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடத்துபவர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
• அரசின் சீர்திருத்தங்கள் புத்தொழில் நிறுவனங்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இணக்கச் செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதேநேரத்தில் காலாவதியான சட்ட விதிகள் குறித்து எழும் அச்சத்தில் இருந்து விடுபடுவதை இந்தச் சீர்திருத்தங்கள் உறுதி செய்கின்றன. வணிக வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை இவை உருவாக்கித் தருவதோடு புத்தாக்கங்களுக்கும் பொருளாதார சுயசார்பிற்கும் ஊக்கமளிக்கின்றன.
12. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
• இந்தியா தன்னை ‘உலகின் மருந்தகம்’ என்ற நிலைக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
• ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் கூடுதலாக முதலீடு செய்வது அவசரத் தேவையாகும்.
• ‘மனித குலத்தின் நல்வாழ்விற்காக சிறந்த மற்றும் செலவு குறைந்த மருந்துகளை வழங்குகின்றவர்களாக நாம் இருக்க வேண்டாமா?’
• உள்நாட்டு மருந்தியல் கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமையானது புதிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.
• இறக்குமதிகளால் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.
• உரங்கள் மற்றும் முக்கியமான விவசாய உள்ளீடுகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய அவசரத்தேவை உள்ளது. இது இந்திய விவசாயிகள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்வதாகவும் பாரதத்தின் விவசாயம் யாரையும் சார்ந்திராமல் செழிப்படைவதையும் உறுதி செய்கிறது.
• ஏனைய நாடுகளை சார்ந்திருக்காமல் இந்தியாவின் தேவைகளுக்கேற்ப நமது சொந்த உரங்களை உற்பத்தி செய்யும் புதிய வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.
• இது விவசாயிகளின் நல்வாழ்விற்கு மட்டுமே முக்கியமானதாக இல்லாமல் நாட்டின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகும்.
13. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
• மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அற்புதங்களை செய்துள்ளன. அவற்றின் தயாரிப்புப் பொருட்கள் உலகம் முழுவதும் சர்வதேச சந்தைகளை சென்றடைந்துள்ளன.
• இந்தியாவின் புதல்விகள் புத்தொழில் நிறுவனங்களில் இருந்து விண்வெளித்துறை வரை, விளையாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு படைகள் வரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் தோளோடு தோள் நின்று நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெருமையுடன் பங்கேற்றுள்ளனர்.
• பெண்களுக்கான ஒரு புதிய அடையாளமாக நமோ ட்ரோன் சகோதரி திட்டம் உருவாகி உள்ளது.
• 3 கோடி பெண்களை ‘லட்சாதிபதி சகோதரிகளாக’ மாற்றுவதற்கு நாம் உறுதி எடுத்துள்ளோம்.
14. சட்டம் & நீதி அமைச்சகம்
• கடந்த ஆண்டுகளில் அரசு வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டு 40,000-க்கும் அதிகமான தேவையற்ற இணக்க விதிகளை நீக்கியதோடு 1500 காலாவதியான சட்டங்களையும் ரத்து செய்துள்ளது.
• சுமார் 12 ஏனைய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. குடிமக்களின் நலன்கள் எப்பொழுதும் முன்னணியில் வைத்து பார்க்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மட்டும் 280-க்கும் மேற்பட்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன. இது ஆளுகையை எளிமையானதாகவும் ஒவ்வொரு இந்தியரும் எளிதாக அணுகுவதாகவும் மாற்றி உள்ளது.
• நாங்கள் பீனல் கோட் என்ற தண்டனைச் சட்டத்தை நீக்கிவிட்டு பாரதிய நியாய சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பாரதத்தின் குடிமக்கள் மீது நம்பிக்கையை இந்தச் சட்டம் தருகிறது.
15. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சம்
• உடல்பருமன் என்பது நம் நாட்டில் மிகக்கடுமையான நெருக்கடியாக மாறி வருகிறது.
• உடல் பருமனை எதிர்த்துப் போராடும் வகையில் ஒவ்வொரு குடும்பமும் 10% குறைவான சமையல் எண்ணெயை பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
16. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
• மாவோயிசம் மற்றும் நக்சலிசத்தில் இருந்து விடுபட்ட பிறகு இன்று பஸ்தாரின் இளைஞர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
• இந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டா பிறந்து 150ஆவது ஆண்டாகும். இந்த பழங்குடியினப் பகுதிகளை நக்சலிசத்தில் இருந்து விடுவித்தது மற்றும் எனது பழங்குடியின குடும்பங்களின் இளைஞர்களின் வாழ்வை காப்பாற்றியது ஆகியவற்றின் மூலம் நாம் அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி உள்ளோம்.
17. கலாச்சார அமைச்சகம்
• இந்த ஆண்டு நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பாதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்த குரு தேக் பகதூர் அவர்களின் 350ஆவது தியாக ஆண்டாகும்.
• நமது கலாச்சாரத்தின் வலிமை நமது பன்முகத் தன்மையில்தான் உள்ளது.
• மகா கும்பமேளாவின் வெற்றி பாரதத்தின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
• மராத்தி, அசாமிஸ், பங்ளா, பாலி மற்றும் ப்ராகிருதத்திற்கு நாம் செம்மொழி அந்தஸ்தை வழங்கி உள்ளோம். நமது மொழிகள் எந்தளவு வளர்ச்சி அடைகின்றதோ அந்தளவிற்கு அவைகள் செழுமை அடைகின்றன. அதனால் நமது ஒட்டுமொத்த அறிவு அமைப்பும் வளர்கின்றது.
• ஞானபாரதம் இயக்கத்தின் கீழ் கையால் எழுதப்பட்ட பிரதிகள், கைப்பிரதிகள், நூற்றாண்டு பழமையான ஆவணங்கள் ஆகியவற்றை நாடு முழுவதும் கண்டறியத் தொடங்கி உள்ளோம். வருங்காலத் தலைமுறையினருக்கு அவற்றின் அறிவு வளத்தைப் பாதுகாப்பதற்காக இன்றைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
• தேசிய சேவையில் நூற்றாண்டுகால பயணத்தில் பங்களித்த அனைத்து ராஷ்ட்ரிய சுயம் சேவகர்களையும் நான் வணங்குகின்றேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் அர்ப்பணிப்பான இந்த பயணத்தில் நாடு பெருமை கொள்கிறது. இது தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்.
18. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
• இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்விற்கு எரிசக்தி சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இது நிறைவேற்றப்படும்.
• கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தியில் சுயசார்பை அடைய வேண்டுமென்ற நமது லட்சியத்துடன் இந்தியாவில் சூரிய எரிசக்தி 30 மடங்கு அதிகரித்து உள்ளது.
• பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் பாரதம் இன்று கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்கிறது.
• உலகளாவிய வெப்பமாதல் குறித்து உலகம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் 2030-க்குள் 50 சதவிகிதம் தூய எரிசக்தியை அடைய வேண்டுமென்று இந்தியா உறுதி கொண்டுள்ளது. மக்களின் அர்ப்பணிப்பால் இந்த இலக்கு 2025-க்குள்ளாகவே அடையப்பட்டு விட்டது.
• சூரிய சக்தி, அணுசக்தி, நீரியல் சக்தி மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் ஆகியவை முன்னேற்றம் அடைந்து வருகின்றன. எரிசக்தி சுதந்திரத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான படிநிலையை இது குறிக்கிறது.
19. மின்சார அமைச்சம்
• சூரியசக்தி பேனல்களாக இருந்தாலும் சரி அல்லது மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களாக இருந்தாலும் சரி நாம் அவற்றை சொந்தமாக உற்பத்தி செய்ய வேண்டும்.
20. சுரங்க அமைச்சகம்
• எரிசக்தி, தொழிற்சாலை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றிற்கு மூலாதாரங்களை பெறுவதற்காக இந்தியா தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் கனிமங்கள் கிடைக்கக்கூடிய 1200 இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
• இந்தக் கனிமங்களை கண்டெடுப்பது மூலோபாய தன்னாட்சியை வலுப்படுத்துவதோடு இந்தியாவின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தொழில்துறைகள் சுயசார்பாக இருப்பதை உறுதி செய்கிறது.
21. இளையோர் நலன் & விளையாட்டுக்கள் அமைச்சகம்
• இளைஞர்கள் இந்தியாவிற்கென சொந்தமான சமூக ஊடகப் தளங்களையும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும். தகவல்தொடர்பு, தரவு மற்றும் தொழில்நுட்ப சூழல்சார் அமைப்புகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் தன்னாட்சியை வலுப்படுத்த வேண்டும்.
• விளையாட்டுக்களை மேம்படுத்த நாங்கள் தேசிய விளையாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
• நாட்டில் கேலோ இந்தியா கொள்கையை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
குறிப்பு: சில அம்சங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதன்படி அவை மீண்டும் மீண்டும் கூறப்பட்டிருக்கலாம்.
***
(Release ID: 2156841)
AD/PLM/TS/RJ
(Release ID: 2157024)
Visitor Counter : 6
Read this release in:
Malayalam
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Odia
,
English
,
Urdu