பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்

Posted On: 13 AUG 2025 11:27AM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஏதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு 845 நகரங்களில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களில் 1.62 கோடி பேர் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தனர். நடப்பாண்டில் நாடு முழுவதும் 1,800-க்கும் கூடுதலான மாவட்டங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் (2,500 இடங்களில்) நவம்பர் 1 முதல் 30 வரை இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் நடத்தப்பட உள்ளதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஜூலை 30 அன்று ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த முகாம்கள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிக் கிளைகள், அஞ்சலக பேமெண்ட் வங்கிகள், ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், தொலைத்தொடர்புத் துறை, ரயில்வே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்புத்துறையின் தலைமை கணக்கு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலர் திரு வி ஸ்ரீனிவாஸ் ஆய்வு செய்தார்.

 

---

AD/SV/KPG/SS


(Release ID: 2156034)