தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாடு தழுவிய அளவில் நடைபெறும் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி திரைப்பட விழா, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையின் சினிமா கதைகளைக் காட்சிப்படுத்துகிறது
Posted On:
11 AUG 2025 5:22PM by PIB Chennai
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி-தேசபக்தி திரைப்பட விழா இன்று உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 11–13, 2025 வரை நடைபெறும் இந்த விழா, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் (NFDC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா, பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இல்லம் தோறும் மூவண்ணக்கொடி என்ற பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக் கொடியுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பை ஆழப்படுத்தவும், ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் புதுப்பிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தவும் முயல்கிறது. கவனமாகத் தொகுக்கப்பட்ட திரைப்படத் திரையிடல்கள் மூலம், இந்தியாவின் சுதந்திரப் பயணத்தை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவது, எண்ணற்ற ஹீரோக்களின் தியாகங்களைக் கொண்டாடுவது மற்றும் நாட்டின் அடையாளத்தை வடிவமைத்த கதைகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி என்சிடி-இன் கலை, கலாச்சாரம் மற்றும் மொழி அமைச்சர் திரு கபில் மிஸ்ரா கூறுகையில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை அழியாததாக்கும் மற்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு என்றார். இந்தத் திரைப்பட விழா வெறும் திரைப்பட கொண்டாட்டம் மட்டுமல்ல, நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பயணத்தின் நினைவூட்டலாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய இந்திய ஊடகத் துறை செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு, திரைப்பட விழா, இந்தியாவின் வளமான கலாச்சார வரலாறு மற்றும் பாரம்பரியத்தை திரைப்பட ஊடகம் மூலம் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். திரைப்படம் ஒரு காட்சி ஊடகமாக இருப்பதால், பார்வையாளர்கள் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே, இந்த விழா அனைத்து இந்தியர்களிடையேயும் தேசபக்தி உணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு. ஜாஜு மேலும் கூறினார்.
தில்லி, மும்பை, சென்னை மற்றும் புனேவில் தொடக்க விழாக்கள் நடைபெற்றன. சென்னையில் தாகூர் திரைப்பட மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு இயக்குநர் திரு வசந்த் தலைமை தாங்கினார். நடன இயக்குனர் திருமிகு கலா மாஸ்டர், தமிழ் வர்த்தக சபையின் தலைவர் திரு. சோழ நாச்சியார் நடிகை திருமிகு நமீதா, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.வி.எஸ். சிவகுமார்; நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திரு. வீரா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். சென்னையில் நடைபெறும் திருவிழாவின்போது வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி, உரி போன்ற திரைப்படங்கள் திரையிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155109
***
(Release ID: 2155109)
AD/RB/DL
(Release ID: 2155340)