பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
வகை-VII அடுக்குமாடி குடியிருப்புகள் தன்னிறைவு பெற்றதாகவும், முழு அளவிலான நவீன வசதிகளுடன் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன
குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்று நட்டு, தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்
Posted On:
10 AUG 2025 10:44AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (ஆகஸ்ட் 11, 2025) காலை சுமார் 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்வின் போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் சிந்தூர் வெற்றியை நினைவுகூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடுகிறார். இந்த நிகழ்வின் போது பிரதமர் தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். அதன் பின்னர் நடைபெறும் கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.
இந்த வளாகம் தன்னிறைவு பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழு அளவிலான நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பசுமை தொழில்நுட்பத்தை இணைத்து, இந்த திட்டத்தில் கிரிஹா -3 (GRIHA 3) நட்சத்திர மதிப்பீட்டின் தரநிலைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய கட்டடக் குறியீடு (NBC) - 2016-க்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான அம்சங்களைக் கொண்ட எரிசக்திப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயனுள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு இந்த புதிய வளாகம் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தின் பயன்பாடு இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அலுமினிய ஷட்டரிங் கொண்ட ஒற்றைக்கல் கான்கிரீட் முறை இத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க உதவியது. அதே நேரத்தில் இந்தக் கட்டமைப்பு நீடித்த உழைப்பை உறுதி செய்கிறது. இந்த வளாகம் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கும் ஏற்றது. இது அனைவரையும் உள்ளடக்கிய வடிவமைப்பிற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான வீட்டுவசதி இல்லாமல் பற்றாக்குறை இருந்ததன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனினும் போதுமான நிலம் கிடைக்காததால், நிலப் பயன்பாட்டை மேம்படுத்துவதையும் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட அடுக்குமாடி வீட்டுவசதித் திட்டங்களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடியிருப்பும் உத்தேசமாக 5,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகும். இது குடியிருப்புத் தேவைக்கும் உறுப்பினர்களின் அலுவல் ரீதியான நிகழ்வுகளுக்கும் போதுமான இடமாக இருக்கும். அலுவலகங்கள், ஊழியர்கள் தங்குமிடம், சமூக மையம் ஆகியவற்றிற்கான பிரத்யேக பகுதிகளும் உள்ளன. இவை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பொறுப்புகளை எளிதில் நிறைவேற்றுவதை உறுதி செய்யும்.
இந்த வளாகத்திற்குள் உள்ள அனைத்து கட்டடங்களும் நவீன கட்டட வடிவமைப்பு விதிமுறைகளின்படி, பூகம்பத்தைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. அனைத்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக ஒரு விரிவான, வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
****
(Release ID: 2154805)
AD/SM/PLM/SG
(Release ID: 2154828)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam