பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற கடமை மாளிகையின் திறப்பு விழாவில் உரையாற்றினார்


கடமை மாளிகை, வளர்ந்த இந்தியாவின் கொள்கைகள் மற்றும் திசையை வழிநடத்தும்: பிரதமர்


கடமை மாளிகை, நாட்டின் கனவுகளை நனவாக்கும் உறுதியை உள்ளடக்கியுள்ளது: பிரதமர்


இந்தியா ஒரு முழுமையான தொலைநோக்குப் பார்வையால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அங்கு முன்னேற்றம் ஒவ்வொரு பிராந்தியத்தையும் அடைகிறது: பிரதமர்


கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு நிர்வாக மாதிரியை உருவாக்கியுள்ளது: பிரதமர்


அனைவரும் இணைந்து, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம், இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் தற்சார்பு இந்தியாவின் வெற்றிக் கதையை எழுதுவோம்: பிரதமர்

Posted On: 06 AUG 2025 8:35PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற கடமை மாளிகை -3-ன் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக ,புரட்சி மாதமான ஆகஸ்ட், மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொடர்புடைய முக்கிய சாதனைகளை இந்தியா ஒன்றன் பின் ஒன்றாகக் காண்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். புதுதில்லியைப் பற்றி குறிப்பிட்டு, கடமைப் பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத மண்டபம், யசோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் இப்போது கடமை மாளிகை போன்ற சமீபத்திய உள்கட்டமைப்பு அடையாளங்களை திரு மோடி பட்டியலிட்டார். இவை வெறும் புதிய கட்டிடங்கள் அல்லது வழக்கமான உள்கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவை வடிவமைக்கும் கொள்கைகள் இந்தக் கட்டமைப்புகளிலேயே வகுக்கப்படும் என்றும், வரும் தசாப்தங்களில், இந்த இடங்களிலிருந்தே நாட்டின் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

 

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்தக் கட்டிடத்திற்கு 'கடமை மாளிகை' என்று பெயரிடப்பட்டதாக திரு மோடி கூறினார். கடமைப் பாதை மற்றும் கடமை மாளிகை இரண்டும் இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அரசியலமைப்பின் மைய உணர்வை எதிரொலிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டினார். பகவத் கீதையை மேற்கோள் காட்டி, ஒருவர் ஆதாயம் அல்லது இழப்பு எண்ணங்களைத் தாண்டி உயர்ந்து கடமை உணர்வில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய கலாச்சாரத்தில், 'கர்தவ்ய' (கடமை)என்ற சொல் பொறுப்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக இந்தியாவின் செயல் சார்ந்த தத்துவத்தின் சாரத்தை உள்ளடக்கியது என்பதை அவர் வலியுறுத்தினார். கடமையின் உண்மையான அர்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுறவைத் தழுவுவது தன்னலனிற்கு அப்பாற்பட்ட ஒரு மகத்தான முன்னோக்கு என்று பிரதமர் மேலும் விவரித்தார். கடமை என்பது வெறும் ஒரு கட்டிடத்தின் பெயர் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் கனவுகளை நனவாக்கும் புனிதமான இடம் அது என்பதை எடுத்துரைத்தார். "கடமை என்பது ஆரம்பம் மற்றும் விதி இரண்டும் ஆகும், இரக்கம் மற்றும் விடாமுயற்சியால் பிணைக்கப்பட்டுள்ளது, கடமை என்பது செயலின் இழை, அது கனவுகளின் துணை, தீர்மானங்களின் நம்பிக்கை மற்றும் முயற்சியின் உச்சம்" என்று திரு மோடி கூறினார்.  கடமை என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் விளக்கை ஏற்றி வைக்கும் மன உறுதியின் சக்தி என்று அவர் வெளிப்படுத்தினார், கோடிக்கணக்கான குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடித்தளம்  கடமை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  கடமை என்பது இந்தியத் தாயின் உயிர் சக்தியைக் கொண்டு செல்வதாகவும், 'குடிமகன்தான் கடவுள்' என்ற மந்திரத்தை உச்சரிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தேசத்தின் மீது பக்தியுடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்  கடமையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்தியாவின் நிர்வாக இயந்திரங்கள் ஆங்கிலேய காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களிலிருந்து இயங்கின என்பதை எடுத்துரைத்த பிரதமர், போதுமான இடம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இல்லாத இந்த பழைய நிர்வாகக் கட்டிடங்களில் மோசமான பணிச்சூழல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். உள்துறை அமைச்சகம் போன்ற ஒரு முக்கியமான அமைச்சகம், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக ஒரே கட்டிடத்தில் இருந்து எவ்வாறு செயல்பட்டது என்பதை கற்பனை செய்வது கடினம் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தற்போது  தில்லி முழுவதும் 50 வெவ்வேறு இடங்களில் இயங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திரு. மோடி, இந்த அமைச்சகங்களில் பல, வாடகைக் கட்டிடங்களில் இயங்குகின்றன என்று கூறினார். வாடகைக்கான வருடாந்திர செலவு மட்டும் ₹1,500 கோடி என்ற திகைப்பூட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சிதறடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களுக்கான வாடகைக்கு மட்டுமே இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவதாகக் கூறியா அவர், மற்றொரு சவாலையும் வலியுறுத்தினார், அதுதான் இந்த பரவலாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பணியாளர்களின் தளவாட இயக்கம். அமைச்சகங்களுக்கு இடையில் தினமும் 8,000 முதல் 10,000 ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள், இதன் விளைவாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன, அதிக செலவுகள் ஏற்படுகின்றன மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனால் ஏற்படும் நேர இழப்பு நிர்வாகத் திறனை நேரடியாகப் பாதிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

21 ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டின்  நவீன கட்டிடங்கள் தேவை என்பதை வலியுறுத்திய திரு மோடி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றில் முன்மாதிரியான கட்டமைப்புகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்தகைய கட்டிடங்கள் ஊழியர்களுக்கு வசதியான சூழலை உருவாக்கவும், விரைவான முடிவெடுப்பதை எளிதாக்கவும், சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்யவும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். கடமை மாளிகை போன்ற பெரிய அளவிலான கட்டிடங்கள், முழுமையான தொலைநோக்குப் பார்வையுடன் கடமைப் பாதையைச் சுற்றி கட்டப்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், முதல் கடமை மாளிகை நிறைவடைந்துள்ள நிலையில், பல கடமை மாளிகைகளின் கட்டுமானம் வேகமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த அலுவலகங்கள் புதிய வளாகங்களுக்கு மாற்றப்பட்டவுடன், ஊழியர்கள் மேம்பட்ட பணிச்சூழலால் பயனடைவார்கள், மேலும் தேவையான வசதிகளை அணுகுவார்கள், இது அவர்களின் ஒட்டுமொத்த பணி வெளியீட்டை அதிகரிக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். அமைச்சக அலுவலகங்களுக்கான வாடகைக்கு தற்போது செலவிடப்படும் ₹1,500 கோடியையும் அரசு மிச்சப்படுத்தும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

 

"பிரமாண்டமான கடமை மாளிகை மற்றும் புதிய பாதுகாப்பு வளாகங்கள் உட்பட பிற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் வேகத்திற்கு ஒரு சான்றாக மட்டுமல்லாமல், அதன் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகவும் உள்ளன" என்று பிரதமர் கூறினார். இந்தியா உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வை நாட்டிற்குள்ளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார். லைஃப் இயக்கம் மற்றும் 'ஒரு பூமி, ஒரு சூரியன், ஒரு தொகுப்பு’ போன்ற இந்தியாவின் உலகளாவிய பங்களிப்புகளை எடுத்துரைத்த திரு மோடி, இந்த யோசனைகள் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். கடமை மாளிகை போன்ற நவீன உள்கட்டமைப்பு, மக்கள் சார்ந்த உணர்வையும், பூமி சார்ந்த கட்டமைப்பையும் உள்ளடக்கியது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடமை மாளிகையில் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்கலங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மேம்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகளும் கட்டிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும், பசுமை கட்டிடங்கள் என்ற தொலைநோக்குப் பார்வை இப்போது இந்தியா முழுவதும் விரிவடைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

 

 

முழுமையான தொலைநோக்குப் பார்வையுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசு ஈடுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய பிரதமர், நாட்டின் எந்தப் பகுதியும் இன்று வளர்ச்சியால் பாதிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தினார்.  தில்லி, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கண்டிருந்தாலும், நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பவன்கள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கடமை மாளிகை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களுடன், ஏழைகளுக்காக நான்கு கோடிக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். தேசிய போர் நினைவுச்சின்னம் மற்றும் காவல் நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளன என்றும், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தில்லியில் பாரத மண்டபம் அமைக்கப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட அமிர்த பாரத ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதில் காணப்படுவது போல், யசோபூமியின் மகத்துவம் மாற்றத்தின் அளவைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

 

உரிமைகளும் கடமைகளும் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன, கடமைகளை நிறைவேற்றுவது உரிமைகளின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை நினைவு கூர்ந்த திரு. மோடி, குடிமக்களிடமிருந்து கடமைகள் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், அரசும் அதன் பொறுப்புகளை மிகுந்த தீவிரத்துடன் நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார். ஒரு அரசு தனது கடமைகளை உண்மையாக நிறைவேற்றும்போது, அது அதன் நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகள் நாட்டில் நல்லாட்சியின் பத்தாண்டுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார். நல்லாட்சி மற்றும் வளர்ச்சியின் நீரோட்டம் சீர்திருத்தங்களின் நதிப்படுகையிலிருந்து உருவாகிறது என்றும், சீர்திருத்தங்களை ஒரு நிலையான மற்றும் காலக்கெடு செயல்முறையாக விவரித்தார், மேலும் இந்தியா தொடர்ந்து பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார். "இந்தியாவின் சீர்திருத்தங்கள் நிலையானவை மட்டுமல்ல, துடிப்பானவை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை" என்று திரு. மோடி கூறினார், அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துதல், வாழ்க்கைநிலையை மேம்படுத்துதல், பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்தல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்தத் துறைகளில் நாடு தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். "கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா வெளிப்படையான, உணர்திறன் வாய்ந்த மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு நிர்வாக மாதிரியை உருவாக்கியுள்ளது" என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

 

 

தான் செல்லும் ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் செல்பேசி ஆகியவை அடங்கிய ஜாம் திட்டம் உலகளவில் பரவலாக விவாதிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன என்பதை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவில் அரசுத் திட்டங்களை வெளிப்படையாகவும், கசிவு இல்லாததாகவும் இத்திட்டம் செய்துள்ளது என்பதை வலியுறுத்தினார். குடும்ப அட்டைகள், எரிவாயு மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் போன்ற திட்டங்களில், கிட்டத்தட்ட 10 கோடி பயனாளிகளின் விவரம் சரிபார்க்கப்படவில்லை என்பதையும், அவர்களில் பலர் போலியாக உருவாக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். முந்தைய அரசுகள் இந்த போலி பயனாளிகளின் பெயர்களில் நிதியை மாற்றியதைக் குறிப்பிட்டு, நிதி, சட்டவிரோத கணக்குகளுக்கு திருப்பி விடப்பட்டது, தற்போதைய அரசின் தலைமையின் கீழ், 10 கோடி மோசடி பெயர்களும் பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பதை திரு மோடி உறுதிப்படுத்தினார். இந்த நடவடிக்கை சுமார் ₹4.3 லட்சம் கோடி,  தவறான கைகளில் சென்றடையாமல் காப்பாற்றியுள்ளது என்பதையும், இந்த கணிசமான தொகை இப்போது வளர்ச்சி முயற்சிகளுக்கு மாற்றப்படுகிறது என்பதையும் குறிக்கும் சமீபத்திய புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொண்டார். உண்மையான பயனாளிகள் திருப்தி அடைந்துள்ளனர் என்றும், தேசிய வளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

 

 

ஊழல் மற்றும் கசிவுகளுக்கு அப்பால், காலாவதியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நீண்ட காலமாக குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், அரசு முடிவெடுப்பதைத் தடுக்கும் வகையில்  இருப்பதை வலியுறுத்திய திரு. மோடி, இதை நிவர்த்தி செய்ய, 1,500க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், அவை பல தசாப்தங்களாக நிர்வாகத்தைத் தொடர்ந்து தடை செய்துள்ளன என்றும் பிரதமர் கூறினார். அடிப்படை நிறுவனங்களுக்கு கூட, தனிநபர்கள் முன்னர் ஏராளமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது என்பதை மேற்கோள் காட்டி, இணக்கச் சுமைகளும் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர் மேலும் எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட இணக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த பகுத்தறிவு நிலையான வேகத்தில் தொடர்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். முன்னர், துறைகள் மற்றும் அமைச்சகங்கள் முழுவதும் ஒன்றுடன் ஒன்று பொறுப்புகளின் தாமதங்கள் மற்றும் தடைகளுக்கு வழிவகுத்ததை பிரதமர் குறிப்பிட்டார். செயல்பாட்டை சீராக்க, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன, நகல் நீக்கப்பட்டன, மேலும் தேவையான இடங்களில், அமைச்சகங்கள் இணைக்கப்பட்டன அல்லது புதிதாக உருவாக்கப்பட்டன. நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜல் சக்தி அமைச்சகம், கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதற்கான கூட்டுறவு அமைச்சகம், இந்தத் துறைக்கு முன்னுரிமை அளிக்க முதல் முறையாக மீன்வள அமைச்சகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதற்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் போன்ற முக்கிய அமைச்சகங்களை உருவாக்கியதை திரு மோடி மேற்கோள் காட்டினார். இந்த சீர்திருத்தங்கள் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தி, பொது சேவைகளை வழங்குவதை துரிதப்படுத்தியுள்ளன என்று அவர் உறுதிப்படுத்தினார்.

 

 

அரசின் பணி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், கர்மயோகி இயக்க்கம் மற்றும் ஐ-காட் போன்ற டிஜிட்டல் தளங்கள் போன்ற முயற்சிகளை எடுத்துரைத்தார். இவை அரசு ஊழியர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சியை வழங்குகின்றன. மின்-அலுவலகம், கோப்பு கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் ஒப்புதல்கள் போன்ற அமைப்புகள் நிர்வாக செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. அவை, அவற்றை விரைவாக மாற்றுவது  மட்டுமல்லாமல், முழுமையாகக் கண்டறியக்கூடியதாகவும் பொறுப்புணர்வுடனும் ஆக்குகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

புதிய கட்டிடத்திற்குள் குடிபெயர்வது புதுப்பிக்கப்பட்ட உற்சாக உணர்வைத் தூண்டுகிறது மற்றும் ஒருவரின் ஆற்றலை கணிசமாக உயர்த்துகிறது என்று கூறிய பிரதமர், அங்குள்ள அனைவரும் புதிய கட்டிடத்தில் தங்கள் பொறுப்புகளை அதே வீரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு தனிநபரும், பதவியைப் பொருட்படுத்தாமல், தங்கள் பதவிக் காலத்தை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்ற பாடுபட வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். ஒருவர் இறுதியில் ஓய்வு பெறும்போது, அவர் தனது  நூறு சதவீதத்தை தேச சேவையில் அர்ப்பணித்துள்ளார் என்ற பெருமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கோப்புகள் மற்றும் ஆவணங்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, ஒரு கோப்பு, ஒரு குறை அல்லது விண்ணப்பம் வழக்கமானதாகத் தோன்றலாம், ஆனால் ஒருவருக்கு, அந்த காகிதத் துண்டு அவரது ஆழ்ந்த நம்பிக்கையைக் குறிக்கலாம் என்று குறிப்பிட்டார். ஒரு கோப்பு எண்ணற்ற தனிநபர்களின் வாழ்க்கையுடன் சிக்கலான முறையில் இணைக்கப்படலாம். இந்த விஷயத்தை விளக்கி, ஒரு லட்சம் குடிமக்களைப் பற்றிய ஒரு கோப்பு ஒரு நாள் தாமதமானால், அது ஒரு லட்சம் மனித நாட்களை இழக்கச் செய்கிறது என்று பிரதமர் கூறினார். வசதி அல்லது வழக்கமான சிந்தனைக்கு அப்பால் சேவை செய்வதற்கான மகத்தான வாய்ப்பை உணர்ந்து, இந்த மனநிலையுடன் தங்கள் பொறுப்புகளை அணுகுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். ஒரு புதிய யோசனையை உருவாக்குவது மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து அரசு ஊழியர்களும் கடமை உணர்வோடு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார், இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் பொறுப்பின் கருவில் வளர்க்கப்படுகின்றன என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

 

 

விமர்சனத்திற்கான தருணம் இதுவாக இல்லாவிட்டாலும், நிச்சயமாக சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவைப் போலவே சுதந்திரம் பெற்ற பல நாடுகள் வேகமாக முன்னேறியுள்ளன, அதே நேரத்தில் பல்வேறு வரலாற்று சவால்களால் இந்தியாவின் முன்னேற்றம் ஒப்பீட்டளவில் மெதுவாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த சவால்கள் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்படாமல் பார்த்துக் கொள்வது இப்போது நமது பொறுப்பு என்று திரு மோடி வலியுறுத்தினார். கடந்த கால முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், பழைய கட்டிடங்களின் சுவர்களுக்குள், முக்கியமான முடிவுகள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக 25 கோடி குடிமக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் என்று கூறினார். புதிய கட்டிடங்களில் மேம்பட்ட செயல்திறனுடன், வறுமையை முற்றிலுமாக ஒழித்து, வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதே நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் உற்பத்தி செய்தல்  மற்றும் தற்சார்பு இந்தியா  போன்ற முயற்சிகளின் வெற்றிக் கதைகளுக்கு அனைவரும் பங்களிப்பதன் மூலம், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு கூட்டாக பாடுபடுமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் திரு மோடி அழைப்பு விடுத்தார். தேசிய உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் உறுதிபூண்டதாக அவர் வலியுறுத்தினார், சுற்றுலா பற்றி விவாதிக்கப்படும்போது, இந்தியா ஒரு உலகளாவிய இலக்காக மாறுவதை உறுதிசெய்கிறார், பிராண்டுகள் குறிப்பிடப்படும்போது, உலகம் இந்திய நிறுவனங்களை நோக்கி அதன் பார்வையைத் திருப்புகிறது, கல்வி தேடப்படும்போது, உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் இந்தியாவைத் தேர்வு செய்கிறார்கள், என்றார். இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவது ஒரு பகிரப்பட்ட நோக்கமாகவும், தனிப்பட்ட பணியாகவும் மாற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 

 

வெற்றிகரமான நாடுகள் முன்னேறும்போது, அவர்கள் தங்கள் நேர்மறையான பாரம்பரியத்தை கைவிடுவதில்லை, மாறாக அதைப் பாதுகாப்பார்கள் என்று கூறிய திரு. மோடி, 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறி வருவதாக உறுதிப்படுத்தினார். புதிய கடமை மாளிகைகளின்  திறப்பு விழாவைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் இப்போது இந்தியாவின் வாழும் மரபின் ஒரு பகுதியாக மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்த புகழ்பெற்ற கட்டிடங்கள் "பழங்கால இந்தியாவின் அருங்காட்சியகம்" என்ற பொது அருங்காட்சியகங்களாக மாற்றப்படும், இது ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளமான நாகரிகப் பயணத்தைக் காணவும் அனுபவிக்கவும் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். புதிய கடமை மாளிகைக்குள் மக்கள் நுழையும்போது, இந்த இடங்களில் பொதிந்துள்ள உத்வேகம் மற்றும் பாரம்பரியத்தை அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக இந்திய குடிமக்களுக்கு அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

 

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அரசின் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி:

தில்லியில் உள்ள கடமைப் பாதையில் கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

 

 

இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகள், எரிசக்தித் திறன் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாக நடைமுறைகளை சீரமைக்கும் வகையிலும் உறுதியான நிர்வாகத்தை வழங்கும் வகையிலும் மத்திய செயலகத்தின் பல்வேறு பொதுப் பிரிவுகளின் அலுவலக செயல்பாடுகள் முதல் முறையாக இந்தப் புதிய கட்டடத்தில் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தத் திட்டம் மத்திய அரசின் விரிவான நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகும். பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் மத்திய செயலகத்தின் பொது நிர்வாகத்திற்கான  அமைச்சகங்களுக்கு இடையேயான செயல்பாடுகளை மேம்படுத்துதல், மத்திய அரசின்  கொள்கை செயலாக்கத்தை விரைவுப்படுத்துதல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான சூழல் அமைப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது, 1950-ம் ஆண்டு மற்றும் 1970-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாஸ்திரி பவன், கிரிஷிபவன், உத்யோக் மாளிகை மற்றும் நிர்மாண் மாளிகை போன்ற பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் பழுது மற்றும் பராமரிப்புகளுக்கான செலவுகள் குறைவதுடன் விரைவான செயல்திறன், பணியாளர்களுக்கான நலன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடமை மாளிகை எனப்படும் இந்தப் புதிய கட்டடத்தின் வடிவமைப்பு கட்டடக்கலையின் திறன், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தில்லியில் பல்வேறு இடங்களில்  செயல்பட்டு வரும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வகை செய்கிறது. 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில்  இரண்டு அடித்தளங்களுடன் 7 அடுக்குகளாக (தரைதளம் + 6 அடுக்குகள் ) இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், ஊரக மேம்பாட்டுத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, பெட்ரோலியம் மற்றும்  இயற்கை எரிவாயு, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகிய துறைகள் இந்தப் புதிய கட்டடத்தில் செயல்பட உள்ளன.

இந்தப் புதிய கட்டடம் நவீன நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ற தகவல் தொழில்நுட்ப தயார் நிலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பணியிடங்கள், அடையாள அட்டை அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள், ஒருங்கிணைந்த மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகிய அம்சங்கள் உள்ளன. நான்கு தரநிலையை இலக்காகக் கொண்டு நிலைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில் இரட்டைக் கண்ணாடி அமைப்புடன் கூடிய முகப்புத் தோற்றம் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தித் தகடுகள், சூரிய மின்சக்தியில் இயங்கும், நீர் சூடேற்றும் சாதனம், நவீன வெப்பத்தடுப்பு காற்று வசதி, மற்றும் குளிர்சாதன வசதிகள், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நிகர பூஜ்ய உமிழ்வை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் வளாகத்திற்குள் திடக்கழிவு  மேலாண்மை, மறுசுழற்றி செயல்பாடுகள், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் வசதிகள், கட்டுமானப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வசதிகள் போன்றவையும் இதில் உள்ளன.

பூஜ்ய உமிழ்வு  கொண்ட வளாகமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து சுத்திகரிப்பதற்கான வசதிகளும், தண்ணீர் பற்றாக்குறை  இல்லாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்கள் மற்றும்  இடிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், வெளிப்புறத் தரைதளங்கள், தரையின் மேற்புறத்தில் உள்ள மண்வளத்தைப் பயன்படுத்தி இலகுரக உலர் தடுப்புகள் மற்றும் கட்டுமான சுமை, திடக்கழிவு மேலாண்மை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடம் எரிசக்திப் பயன்பாட்டை 30 சதவீதம் அளவிற்கு குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வெளிப்புற சத்தத்தைக் குறைக்கும் வகையிலும், உட்புறத்தில் குளிர்ந்த சூழல் நிலவும் வகையிலும், சிறப்பு வகைக் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி சேமிப்பை உறுதி செய்யும் வகையில் எல்இடி விளக்குகள், உணர்திறன் நுட்பத்துடன்  கூடிய சுவிட்சுகள், நவீன மின் தூக்கிகள் போன்ற வசதிகளும் உள்ளன. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் நவீன முறையிலான மின்சாரப் பயன்பாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. கர்த்தவிய மாளிகை 3-ன் மேற்கூரையில் சூரிய சக்திக்கான தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் 5.34 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தண்ணீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு சூடான தண்ணீருக்கான சூரிய சக்தி நீர் சூடேற்றும் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

***

(Release ID: 2153346)

AD/RB/DL


(Release ID: 2153387)