பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் விஜய் உத்சவ் (வெற்றி விழா) இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்: பிரதமர்

இந்த விஜய் உத்சவ் உணர்வோடு இந்தியாவின் கண்ணோட்டத்தை முன்வைக்க நான் அவையில் நிற்கிறேன்: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூர் தற்சார்பு இந்தியாவின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூரின் போது, கடற்படை, ராணுவம், விமானப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு பாகிஸ்தானின் அடித்தளத்தை உலுக்கியது: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு அதன் சொந்த மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்பதையும், அணு ஆயுத மிரட்டலை பொறுத்துக்கொள்ளாது என்பதையும், பயங்கரவாத ஆதரவாளர்களும் அதற்கு மூளையாக இருப்பவர்களும் ஒரே மாதிரியாக நடத்தும் என்பதையும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா பரவலாக உலகளாவிய ஆதரவைப் பெற்றது: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. பாகிஸ்தானின் எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கைக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர்

எல்லைகளில் வலுவான இராணுவம் இருப்பது துடிப்பான, பாதுகாப்பான ஜனநாயகத்தை உறுதி செய்கிறது: பிரதமர்

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஆயுதப் படைகளின் வலிமை அதிகரித்து வருவதற்கு தெளிவான சான்றாக ஆபரேஷன் சிந்தூர் உள்ளது: பிரதமர்

இந்தியா புத்தரின் பூமி, யுத்தத்தின் பூமி அல்ல. வலிமையின் மூலம் நீடித்த அமைதி வரும் என்பதை அறிந்து, வளம் மற்றும் நல்லிணக்கத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம்: பிரதமர்

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது: பிரதமர்

Posted On: 29 JUL 2025 10:37PM by PIB Chennai

பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான, தீர்க்கமான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அவையின் கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த அமர்வு  இந்தியாவின் வெற்றியின்  கொண்டாட்டமாகவும், இந்தியாவின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.

பயங்கரவாதத் தலைமையகத்தை முற்றிலுமாக அழிப்பதையே 'விஜய் உத்சவ்' குறிக்கிறது என்பதை எடுத்துக்காட்டிய திரு மோடி, விஜயோத்சவ் என்பது தேச பக்தி மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் சிந்தூருடன்  எடுக்கப்பட்ட புனிதமான சபதத்தை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது என்றார். "விஜய் உத்சவ் இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்" என்று அவர் உறுதிபட தெரிவித்தார். விஜயோத்சவ் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை, மன உறுதி மற்றும் கூட்டான வெற்றியைக் கொண்டாடுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் கண்ணோட்டத்தை முன்வைக்க வெற்றி உணர்வோடு அவையில் தாம் நிற்பதை உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் கண்ணோட்டத்தைக் காணத் தவறியவர்களுக்கு, ஒரு கண்ணாடியைத் தாங்கி நிற்கிறேன் என்றார்.  140 கோடி மக்களின் உணர்ச்சிகளுடன் தமது குரலை இணைக்க வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டு உணர்வுகளின் எதிரொலி அவையில் கேட்கப்பட்டதாகவும், அதனை எதிரொலிக்கும் உணர்வோடு தமது குரலைச் சேர்க்கத் தாம் இங்கு  நிற்பதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய மக்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கும் ஆசீர்வாதங்களுக்கும்  நன்றி தெரிவித்த பிரதமர், நாட்டுக்கு எப்போதும் தாம் கடன்பட்டிருப்பதாகக் கூறினார். குடிமக்களின் கூட்டான உறுதியை அங்கீகரித்த அவர், இந்த நடவடிக்கையின் வெற்றியில் அவர்களின் பங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிரதமர் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை மதம் என்ன என்று கேட்டு கொடூரமாக சுட்டுக் கொன்றனர் - இது கொடுமையின் உச்சம் என்று அவர் கூறினார். இந்தியாவை வன்முறைத் தீயில் மூழ்கடித்து, வகுப்புவாதக் கலவரத்தைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார். ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இந்த சதியை முறியடித்ததற்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஏப்ரல் 22-க்குப் பின், இந்தியாவின் நிலையை உலகிற்குத் தெளிவுபடுத்துவதற்காக, ஆங்கிலத்திலும் ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டதை திரு மோடி நினைவு கூர்ந்தார். பயங்கரவாதத்தை நசுக்குவது இந்தியாவின் உறுதியான தீர்மானம் என்று அவர் அறிவித்தார். அதற்கு மூளையாகச் செயல்படுபவர்கள் கூட கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தினார். ஏப்ரல் 22 அன்று தாம்  வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாகவும், உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்ட உடனடியாகத் திரும்பி வந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு உறுதியான பதிலடி கொடுக்க கூட்டத்தில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது ஒரு தேசிய உறுதிப்பாடு என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்திய ஆயுதப் படைகளின் திறன், வலிமை மற்றும் துணிவில் தமது முழுமையான நம்பிக்கையை உறுதிப்படுத்திய திரு மோடி, நேரம், இடம் மற்றும் பதிலடி கொடுக்கும் முறையைத் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதாகக் கூறினார். உயர்நிலைக் கூட்டத்தில்  இந்த வழிகாட்டுதல்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன என்றும், சில அம்சங்கள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவர்களின் மூளையாக இருந்தவர்கள் கூட தொடர்ந்து தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பதிலடியையும், ஆயுதப் படைகளின் வெற்றியையும் இந்த அவையின் மூலம் நாட்டின்முன் வைக்க விரும்புவதாக பிரதமர் கூறினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் பெரிய பதிலடியை  பாகிஸ்தான் ராணுவம் எதிர்பார்த்ததாகவும், இதனால் அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். முதல் பரிமாணத்தை கோடிட்டுக் காட்டிய அவர், திட்டமிட்டபடி, 2025 மே 6, 7 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் இந்தியா தனது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதனால் பாகிஸ்தானால் எதிர்வினையாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். ஏப்ரல் 22 தாக்குதலுக்கு, இந்திய ஆயுதப் படைகள் வெறும் 22 நிமிடங்களில் தங்கள் இலக்குகளை அழித்து பழிவாங்கின என்பதை திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.

இந்திய ராணுவ பதிலடியின் இரண்டாவது பரிமாணத்தை அவையின் மூலம் கோடிட்டுக் காட்டிய திரு மோடி, கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் இந்தியா பல போர்களை நடத்தியிருந்தாலும், முன்னர் பாதிக்கப்படாத இடங்களை அடையும் ஓர் உத்தி செயல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என்றார். பாகிஸ்தான் முழுவதும் பயங்கரவாத மறைவிடங்கள், இந்தியாவால் அடைய முடியும் என்று யாரும் கற்பனை செய்யாத பகுதிகள் உட்பட தீர்க்கமாக குறிவைக்கப்பட்டன.  பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவை அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.  இந்தத்  தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தியாவின் ஆயுதப் படைகள் பயங்கரவாத தளங்களை வெற்றிகரமாக அழித்துவிட்டன என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் வெற்றுக் கூச்சல் என்பது  நிரூபிக்கப்பட்டது  என்ற மூன்றாவது பரிமாணத்தை திரு மோடி உறுதிப்படுத்தினார். அணு ஆயுத அச்சுறுத்தலை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும், அதற்கு முன் இந்தியா ஒருபோதும் பணிந்து போகாது என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்  கீழ் நாட்டின் நான்காவது உத்திசார் பரிமாணத்தை அவர் எடுத்துரைத்தார். பாகிஸ்தானில் உட்பகுதியில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் அந்நாட்டின் விமான தளங்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் மூலம் இக்கட்டான தருணங்களில் இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறனை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். நாம் தற்போது தொழில்நுட்பம் அடிப்படையிலான போர்த்திறன் கொண்ட உலகில் இருப்பதாகவும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி தயார்நிலையில் இல்லாதிருந்தால் இந்த நவீன தொழில்நுட்பம் சார்ந்த உலகில் ஏராளமான இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, 5-வது பரிமாணமாக சுயசார்பு இந்தியாவின் வலிமையை முதல்முறையாக உலக நாடுகள் அறிந்துகொண்டுள்ளதாக அவர் கூறினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் திறன்களை சுட்டிக்காட்டிய அவர் பாகிஸ்தானின் ஆயுத அமைப்புகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

முப்படைகளின் தளபதி வெளியுட்டுள்ள அறிவிப்பை மேற்கோள் காட்டிய பிரதமர் நாட்டில் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டு வரும் குறிப்பிடத்தக்க சாதனைகளை சுட்டிக் காட்டினார். கடற்படை, ராணுவம், விமானப்படை என முப்படைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பாகிஸ்தான் நாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

நாட்டில் ஏற்கெனவே நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து அவர் தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாக கூறினார். தற்போது இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளதாக அவர் கூறினார். இன்று, ஒவ்வொரு தாக்குதலுக்கும் பிறகு அதற்கு காரணமானவர்கள் உறக்கத்தை இழந்துள்ளதாகவும், தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா உரிய பதிலடி  அளிக்கும் என்று அறிந்து வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இந்தியா தற்போது, புதிய பரிமாணத்தை நிலைநிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்

சிந்தூர் முதல் சிந்து மகாணம் வரை பாகிஸ்தான் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் இந்திய உத்திசார் செயல்பாடுகளின் தீவிரத்தையும், அதன் உச்சத்தையும் உலக நாடுகள் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  நாட்டின் புதிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளதாக பிரதமர் கூறினார். இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு காரணமானவர்களுக்கும் உதவியவர்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிப்பட கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் மூன்று தெளிவான கொள்கைகளை கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். முதலாவதாக, தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டின் சுயக்கட்டுப்பாடுகள், வழிமுறைகள் மற்றும் தகுந்த நேரத்தில் மேற்கொள்ளப்படுவதாகும். இரண்டாவதாக, அணு ஆயுதங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும் எத்தகைய அச்சுறுத்தல்களும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாடாகும். மூன்றாவதாக, தீவிரவாதிகளுக்கு, உதவி செய்பவர்கள் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் என வேறுபடுத்தாமல் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதாகும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் செயல்பாடுகளுக்கு உலக நாடுகள் முழு ஆதரவு வழங்கியதாக மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நாட்டின் பாதுகாப்பில் இந்தியா மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ நடவடிக்ககளுக்கு உலக நாடுகள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு குவாட் மற்றும் பிரிக்ஸ் அமைப்புகள், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுதாயம் வலுவான ஆதரவை வழங்கியதாக பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளபோதும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் வீரத்திற்கு எதிர்கட்சிகள் ஆதரவளிக்காத நிலை தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததாக பிரதமர் தெரிவித்தார். ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு சில எதிர்கட்சி தலைவர்கள் அரசை கேலி செய்ய தொடங்கியதாகவும், அரசு தோல்வி அடைந்தவிட்டதாக குறை கூறியதாகவும் பிரதமர் கூறினார். பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்த துக்கமான சூழலின்போது அரசியல் ஆதாயம் தேடும் வகையில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் இருந்ததாக பிரதமர் கூறினார். இதுபோன்ற மலிவான அறிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை குலைக்கும் என்று அவர் தெரிவித்தார். சில எதிர்கட்சி தலைவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு படையினரின் திறன் மீதும் வலிமையின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மீது சந்தேகங்களை எழுப்பியதாக பிரதமர் குறை கூறினார். எதிர்கட்சிகளின் இதுபோன்ற கருத்துகள் அரசியல் செயல்பாடுகளுக்கான தலைப்புச் செய்தியாக இருப்பதற்கு உதவிடுவதை தவிர மக்களின் நம்பிக்கையையும், மரியாதையை பெறுவதற்கு வழிவகுக்காது என்று அவர் தெரிவித்தார்.

மே மாதம் 10-ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு பலதரப்பட்ட ஊகங்களுக்கும் குறிப்பாக எல்லை தாண்டிய தவறான பிரச்சாரங்களுக்கு வழிவகுத்ததாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் ஆயுதப் படையினரால் வழங்கப்பட்ட உண்மையான செய்திகளுக்கு மாறாக பாகிஸ்தானிலிருந்து வெளியிடப்பட்ட தவறான தகவல்களின் அடிப்படையில் எதிர்கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வருவதாக பிரதமர் குறை கூறினார். பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்கள் எப்பொழுதும் தெளிவாகவும், உறுதியுடன் இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை குறிவைத்து தெரிவிக்கப்படும் கருத்துகள் இருந்தபோதும்  நாட்டின் தெளிவான வியூகங்கள் மற்றும் அதனை செயல்படுத்திய விதங்கள் குறித்து  நினைவுகூர்ந்த  பிரதமர் சூரிய உதயத்திற்கு முன்னதாக ஒரே இரவிற்குள் இந்தியா எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாக பிரதமர் கூறினார்பாலகோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து நினைவுகூர்ந்த பிரதமர் தீவிரவாத பயிற்சி முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் வரையறுக்கப்பட்ட தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அவர்களது கட்டமைப்புகள், தீவிரவாத திட்டத்தை வகுக்கும் இடங்கள், பயிற்சி மையங்கள், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்பம் மற்றும் இதர வழிகளில் வழங்கப்படும் ஆதரவுகளை கண்காணித்தல் மற்றும் ஆயுத விநியோக சங்கிலி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தாக்கி அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இலக்குகளை குறிவைத்து தாக்குதவதில் பாதுகாப்பு படையினர் மீண்டும் ஒரு முறை தங்களது திறனை 100% வெளிப்படுத்தி நாட்டின் வலிமையை உணர்த்தியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மிகுந்த நடவடிக்கைகளை மறந்துவிட்டு எதிர்கட்சிகள் வேண்டுமென்றே விமர்சித்து வருவதாக அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மே 6-ம் தேதி இரவு தொடங்கி மே 7-ம் தேதி காலையில் நிறைவடைந்ததாகவும், மே 7-ம் தேதியன்று பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர் சந்திப்பில் ராணுவ நடவடிக்கை வெற்றியடைந்ததாக குறிப்பிட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். தீவிரவாதிகளின் கட்டமைப்புகள் தீவிரவாத செயல்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் அவர்களது ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்கி அழிப்பதே பாதுகாப்பு படையினரின் நோக்கமாக இருந்தது என்று பிரதமர் எடுத்துரைத்தார். திட்டமிட்டபடியே ராணுவ நடவடிக்கைகள் அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு படையினர் ஒரு சில நிமிடங்களில் பாகிஸ்தான் படையினருக்கு இந்த வெற்றியை தெரிவித்ததாக பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியதை மேற்கோள்காட்டிய பிரதமர் திட்டமிட்டபடி எந்தவித தவறுதலும் இல்லாமலும், ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றதாக கூறினார். பாகிஸ்தான் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் நம்பிக்கைக்கு புறம்பாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரதிபலித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அறிவுப்பூர்வமான முறையில் அவர்கள் செயல்பட்டிருந்தால் இதுபோன்று தவறுகள் நிகழ்ந்திருக்காது என்று பிரதமர் தெரிவித்தார்இருந்தபோதிலும், சரியான தருணத்திற்காக இந்தியா முழு தயார் நிலையுடன் காந்திருந்ததாகவும், தீவிரவாதத்தை முழுவதுமாக அழிப்பதையே நமது நோக்கமாக கொண்டிருந்ததாகவும், அந்த நாட்டுடன் மோதல் போக்குகளை கடைபிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் பிரதமர் தெளிவுப்படுத்தினார். எனினும், தீவிரவாதிகளின் ஆதரவுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் முடிவெடுத்த நிலையில்  அதற்கு எதிராக இந்தியா வலிமையான பதிலடி கொடுத்ததாக அவர் கூறினார். மே 9-ம் தேதி நள்ளிரவு தொடங்கி மே 10-ம் தேதி காலை வரை இந்தியாவின் ஏவுகணை தாக்குதல் பாகிஸ்தான் முழுவதும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகள் பாகிஸ்தானை அடி பணிய வைத்ததாக மக்களவையில் பிரதமர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையும் அவர்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் குறிப்பிட்டார். இதனையடுத்து பாகிஸ்தானை ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் நேரடியாக இந்தியாவை தொடர்பு கொண்டு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதிசெய்த பின்னரே அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்இது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மே 7-ம் தேதி காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது விரிவாக விளக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினரின் நோக்கங்கள் வெற்றியடைந்ததாகவும், இதற்கு பின்னர் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையின் மீதும் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்இந்தியாவின் கொள்கைகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் உரிய கவனத்துடன் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எவ்வித எல்லையை மீறாமல் தாக்குதல் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் செயல்பாடுகளுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார். மே 9-ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் பலமுறை தம்மை தொடர்புகொள்ள முயற்சி செய்த நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளுடனான உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தன்னிடம் கூறியதாக பிரதமர் கூறினார்இதற்கு பதிலளித்த போது பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினால் இந்தியா கடும் பதிலடியை கொடுக்கும் என்று தாம் அவரிடம் தெரிவித்ததாக பிரதமரிடம் கூறினார். மே 9-ம் தேதி இரவு மற்றும் மே 10-ம் தேதி காலை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானின் கட்டமைப்புகள் கடும் சேதம் அடைந்ததாக அவர் கூறினார். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியரும் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் உரிய பதிலடி தருவார்கள் என பாகிஸ்தான் முழுமையாக உணர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை தாக்குதலில் ஈடுபட்டால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் முடிவடையாமல் தொடர்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்றைய இந்தியா முழு நம்பிக்கையுடனும், தற்சார்பு உணர்வுடனும், விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் நாடாக உள்ளது என்றும், தற்சார்பு இந்தியாவை இலக்குகளை எட்டும் வகையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சிகள் பேசி வருவது துருதிரிஷ்டவசமானது என்று அவர் கூறினார். மக்களவையில் 16 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தின்போது எதிர்கட்சிகள் பாகிஸ்தானிலிருந்து வரும் செய்திகளை அடிப்படையாக கொண்டு விவாதித்தது வருத்தத்திற்குரியது என்று பிரதமர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் போர்முறைக்கான உத்திகளின் அது சார்ந்த தகவல்கள் மற்றும் புனையப்பட்ட கதைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு தவறான பிரச்சாரங்கள் பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை குலைப்பதுடன் பொதுமக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். எதிர்கட்சிகள் நாட்டின் நலனை கருத்தில்கொள்ளாமல் பாகிஸ்தான் நாட்டின் செய்தி தொடர்பாளர் போல கருத்துகளை தெரிவித்து வருவதாக பிரதமர் தனது கவலையை வெளியிட்டார்.

இந்திய பாதுகாப்பு படையினரின் சாதனைகள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் நடவடிக்கைகள் வெற்றி பெற்ற பிறகும் எதிர்கட்சி தலைவர்கள் அதற்கான ஆதாரங்களை கோரிவருவதாகவும், பிரதமர் கூறினார். பாதுகாப்பு படையினருக்கு மக்களின் ஆதரவு பெருகிவரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் துல்லிய தாக்குதலின் எண்ணிக்கையை 3-லிருந்து 15 என தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்

பாலக்கோட் வான்வழி தாக்குதலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கையை நேரடியாக சவால் விடுக்க முடியாமல் மாறாக புகைப்பட ஆதாரங்களை கோரத் தொடங்கினார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். தாக்குதல் எங்கு நடந்தது, என்ன அளிக்கப்பட்டது, எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விகள் பாகிஸ்தானின் கேள்வியை எதிரொலித்ததாக கூறினார்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் பிடிபட்டபோது அந்நாட்டில் கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். எனினும், பிரதமர் பிரச்சனைகளில் இருப்பதாகவும், அபிநந்தன் மீண்டும் மீட்கப்படுவாரா என்றும் இந்தியாவில் சில நபர்கள்  சந்தேகங்களை எழுப்பினார்கள் என்று அவர் தெரிவித்தார். அபிநந்தன் இந்தியாவிற்கு திரும்புவது துணிச்சலுடன் உறுதி செய்யப்பட்டதாகவும், அப்போது இது போன்ற குறை கூறியவர்கள், அமைதியாக இருப்பதாகவும் கூறினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பாகிஸ்தானால், சிறைபிடிக்கப்பட்ட போது அரசை குறை கூற ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சிலர் நம்பியதாக திரு மோடி தெரிவித்தார். அவர்களுடைய அமைப்பு சமூக ஊடகங்கள் முழுவதும் ஏராளமான கதைகளை பரப்பினார்கள் என்றும் படை வீரரின் நிலை குடும்பத்தினரின் நிலை அவர் நாடு திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்து ஊகத்தின்  அடிப்படையில் கேள்விகளை எழுப்பினார்கள் என்று கூறினார். இம்முயற்சிகள் இருந்த போதிலும், இந்தியா தெளிவாகவும் கண்ணியத்துடனும், பதில் அளித்தது என்றும் தெரிவித்தார்தவறான தகவல்களைக் களைந்து ஒவ்வொரு வீரரரையும் பாதுகாப்பதற்கான  தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தது என்று அவர் கூறினார்.

பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு பிடிபட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நாடு திரும்பினார் என்று கூறிய திரு மோடி, அதைக் கண்டு பயங்கரவாதிகளும் அவர்களைக் கையாள்பவர்களும், இந்தியாவில் சிலரும் துயரம் அடைந்தனர் என்று தெரிவித்தார். துல்லிய தாக்குதல்களின் போது அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அவை கவனம்  பெற தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்விமானத் தாக்குதலின் போது இதே போன்ற முயற்சிகள் நடைபெற்றதாகவும், அவையும் தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்  நிகழ்ந்து கொண்டிருக்கும் போது குறை கூறுவோர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டனர் என்றும் இந்நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முதலில் மறுத்துவிட்டு  பின்னர் அது ஏன் நிறுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்கள் என்று கூறினார். எதிர்ப்பவர்கள் எப்போதும் ஒரு காரணத்தைத் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப் படைகள் மீது எதிர்க்கட்சிகள், நீண்ட காலமாகவே, எதிர்மறையான அணுகுமுறையை பின்பற்றி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், அண்மையில், கார்கில் வெற்றி தினத்தைக் கூட எதிர்க்கட்சிகள் கொண்டாடவில்லை என்றும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். டோக்லாம் மோதலின் போது, இந்தியப் படையினர் துணிச்சலை வெளிப்படுத்திய வேளையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து ரகசியமாக விளக்கங்களை தேடினார்கள் என்பது வரலாற்றுச் சாட்சி என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் குற்றமற்றது என்பது போல் எதிர்க்கட்சிகளின் கூற்று இருந்தது என்று அவர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான  ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் கோரியது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்இது பாகிஸ்தான் கூறும் அதே கோரிக்கை என்று அவர் தெரிவித்தார். வெளிநாட்டு கதைகளை எதிரொலிக்கும் இது போன்ற பழக்கங்களும் துணிச்சல்களும் எதிர்க்கட்சியிடம் உள்ளதாக அவர் கூறினார். மக்களுக்கு முன்பாக தெளிவாகத் தெரியக் கூடிய ஆதாரங்களையும் உண்மைகளையும் சிலர் இன்னும் சந்தேகங்களை எழுப்பி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அத்தகைய தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களுடைய நடவடிக்கைகள் இன்னும் தவறாக வழிநடத்தியிருக்கும் என்றும் அல்லது பொறுப்பற்றதாக இருந்திருக்கும் என்று கூறிய அவர், அப்போது இவர்கள் எப்படி எதிர்வினையாற்றியிருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதி குறித்து விவாதத்தில் பெரும்பாலும் கவனம் செலுத்தினாலும் நாட்டின் பெருமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தக் கூடிய தருணங்கள் கவனத்திற்குரியவை என்று திரு மோடி  சுட்டிக்காட்டினார்இந்தியாவின் விமானப்படை அமைப்பை பாராட்டிய அவர், அவை உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்  பாகிஸ்தானின் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் துரும்புகளைப் போல  அவர்கள் தகர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார். மே 9 அன்று இந்தியாவை நோக்கி சுமார் 1,000 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உள்ளடக்கிய பெரும் தாக்குதலை பாகிஸ்தான் முயற்சித்ததாக அவர் தரவுகளை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். இந்த ஏவுகணைகள் இறங்கியிருந்தால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறினார். அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை அவற்றை நடுவானிலேயே அழித்தது என்று குறிப்பிட்டார். இந்தச் சாதனை ஒவ்வொரு குடிமகனையும் பெருமையடைய செய்தது என்று தெரிவித்தார்.

ஆதம்பூர் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களை வெளியிட்டதாகவும், அந்தப் பொய்ச் செய்திகளை தொடர்ந்து பெருமளவில் பரப்ப முயன்றதாகவும் கூறிய திரு மோடி, அதற்கு அடுத்த நாளே தாம் நேரடியாக ஆதம்பூர் சென்ற போது பொய்ச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இது போன்ற தவறான தகவல்கள் நீண்ட நாட்களுக்கு வெற்றி பெறாது என்றும் கூறினார்.

தற்போதைய எதிர்க்கட்சிகள், இந்தியாவை குறிப்பிட்ட காலம் ஆட்சி செய்துள்ளதாகவும், நிர்வாக முறைகளின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் முழுமையாக அறிந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த அனுபவம் இருந்த போதிலும், அதிகாரப்பூர்வ விளக்கங்களை ஏற்பதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையாக இருந்தாலும் சரி வெளியுறவு அமைச்சரின் தொடர் பதிலாக இருந்தாலும் சரி அல்லது உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் விளக்கங்களாக இருந்தாலும் சரி அவற்றை நம்புவதற்கு எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி, நாட்டின் அரசு நிறுவனங்களில் இந்த அளவு நம்பிக்கையின்மையை எவ்வாறு காணமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான்  இயக்குவது போல் எதிர்க்கட்சிகள் தற்போது செயல்படுவதாகவும் அதன்படி  அவர்களுடைய நிலை மாறுபடுவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்  எழுத்துப்பூர்வமான அறிக்கைகளைத் தயார் செய்து தங்கள் சார்பாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச வைப்பது குறித்து பிரதமர் திரு மோடி, குறை கூறினார். அத்தகைய தலைவர்கள் துணிச்சலுடன் பேச இயலாமல் இருப்பதையும், பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு காட்சி என்று விவரித்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இந்த அறிக்கை ஒரு கொடூரமான சம்பவத்தின் நினைவின் மீது அமிலத்தை ஊற்றுவதற்கு சமமானது என்றும் இது ஒரு வெட்கக் கேடான செயல் என்று விவரித்தார்.

ஆபரேஷன் மகாதேவ் மூலம் நேற்று இந்தியப் பாதுகாப்புப் படையினர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை கொன்றதாக திரு மோடி கூறினார். இந்நடவடிக்கையின் நேரம் குறித்த கேள்விகளுடன்  சிரிப்பும், ஏளனமும் இருந்தது குறித்து அவர் குறிப்பிட்டார். இந்த சாவான் மாதத்தில் புனித திங்கட்கிழமை அன்று இது திட்டமிடப்பட்டதா என்று அவர் கேலியாக கேட்டார். இந்த அணுகுமுறை தீவிர விரக்தியைப் பிரதிபலிப்பதாகவும் எதிர்க்கட்சிகளின்  அணுகுமுறையின் சீர்குலைந்த  தன்மையை இது காட்டுவதாகவும் அவர் குறை கூறினார்.

பழங்கால வேதங்களைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, ஒரு நாடு ஆயுதங்களால் பாதுகாக்கப்படும் போது அறிவைத் தேடுவதும் தத்துவமிக்க சொற்பொழிவும் செழிக்கும் என்று தெரிவித்தார்எல்லைகளில் வலுவான ராணுவம் ஒரு துடிப்புமிக்க பாதுகாப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வதாக திரு மோடி கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ அதிகாரமளித்தலுக்கு நேரடி ஆதாரமாக திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். அத்தகைய வலிமை தன்னிச்சையாக உருவாகவில்லை என்றும் முயற்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவு என்றும்  அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பில் தற்சார்பு என்பது குறித்து கருதப்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது கூட காந்திய தத்துவத்தில் உள்ள தற்சார்பு என்ற சொல் புறக்கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் ஆட்சியின் போது ஒவ்வொரு பாதுகாப்பு ஒப்பந்தமும் தனிப்பட்ட நலனுக்கான வாய்ப்பாக இருந்தது என்று திரு மோடி, அடிப்படை சாதனங்களுக்கு கூட வெளிநாட்டு விநியோகஸ்தர்களை  இந்தியா சார்ந்திருந்தது என்று கூறினார். குண்டு துளைக்காத  ஆடைகள், இரவில் காணக்கூடிய புகைப்படக் கருவிகள் இல்லாதது ஆகிய குறைபாடுகள் குறித்து அவர் பட்டியலிட்டார். மேலும், ஜீப்கள் முதல் ஃபோபர்ஸ் வரையும் ஹெலிகாப்டர்கள் வரையும் அனைத்துப் பாதுகாப்பு கொள்முதலும் ஊழல்களில் தொடர்புடையவை என்று அவர் சுட்டிக்காட்டினார். நவீன ஆயுதங்களுக்காக இந்தியப் படையினர் பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியிருந்தது என்பதையும்  வரலாற்று ரீதியாக பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். வாள் சண்டையின் போதுகூட இந்தியப் படையினரின் ஆயுதங்கள் சிறப்பானது என்று கருதப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வலுவான பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழல் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டு சீர்குலைக்கப்பட்டதாக கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கான வழிமுறைகள் பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது என்றும் அந்த கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்திருந்தால் இந்த 21-ம் நூற்றாண்டில் ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கற்பனை கூட செய்திருக்க முடியாது என்றார். இது போன்ற சூழல்களில் உரிய நேரத்தில் ஆயுதங்கள், உபகரணங்கள், மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறிய இந்தியா போராடியிருக்கும் என்றும் ராணுவ நடவடிக்கைகளின் போது இடையூறுகளால் அஞ்சியிருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் வலுவான தற்சார்புடைய நவீன தேசத்தைக் கட்டமைக்க உறுதிபூண்டதையும் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக தொடர்ச்சியான பாதுகாப்பு சீர்திருத்தங்கள் நடைபெற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். முப்படைகளின் தலைமைத் தளபதி  நியமனம் ஒரு பெரிய சீர்திருத்தம் என்றும் இது உலக அளவில் நீண்ட விவாதத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது  என்றும் இந்தியாவில் முன்னதாக அது செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த முப்படைகளின் முறையை ஏற்றுக் கொண்டு ஆதரவு அளித்ததற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

கூட்டுப் படை மற்றும் ஒருங்கிணைப்பின் தற்போதைய வலிமை குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடற்படை, விமானப்படை, ராணுவம் ஆகிய முப்படைகளின் ஒருங்கிணைப்பு இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அதிகரித்துள்ளது என்றும் இந்த மாற்றத்தை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பிரதிபலித்ததாகவும் அவர் கூறினார்.

போராட்டங்கள் உள்ளிட்ட தொடக்கக் கால எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். தேசிய நலனை முதன்மைப்படுத்தியதற்கும் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டதற்கும் அதிக உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளதற்கும் தொழிலாளர்களை அவர் பாராட்டினார். இந்தியா தற்போது பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தனியார் துறையினர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருவதாகவும் கூறினார். பாதுகாப்புத் துறையில் நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள்  இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் உட்பட 27 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் நிபுணர்களால் வழிநடத்தப்படுகின்றன என்றும் இவை புதுமை கண்டுபிடிப்புகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதன்மையாக 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட தனிநபர்களால் ட்ரோன் துறை வழிநடத்தப்படுவதாகவும் அவர்களுடைய பங்களிப்பு ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்கு வகித்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்அத்தகைய பங்களிப்பாளர்கள் அனைவரையும் தாம் பாராட்டுவதாகவும் நாடு தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் 'இந்தியாவில் தயாரிப்போம்' என்பது வெறும் முழக்கமாக மட்டும் இருக்கவில்லை என்பதை வலியுறுத்திய திரு மோடி, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்புகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் புதிய முயற்சிகள் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட்டன என்றும், இதனால் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது என்றும் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு உற்பத்தி தோராயமாக 250 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்றுமதிகள் கடந்த 11 ஆண்டுகளில் 30 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, இப்போது கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

வரலாற்றில் சில சாதனைகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறிய பிரதமர், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவை உலக பாதுகாப்பு உபகரண சந்தையில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது என்று சுட்டிக் காட்டினார். இந்திய ஆயுதங்களுக்கான அதிகரித்து வரும் தேவை உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இளம் இந்தியர்கள் இப்போது தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் பாதுகாப்புத் துறையிலான எழுச்சி என்பது தேசிய நலனுக்கு மட்டுமல்ல, உலக அமைதிக்கும் அவசியம் என்று திரு மோடி தெளிவுபடுத்தினார். "இந்தியா புத்தரின் பூமி, யுத்த பூமி அல்ல, நாடு செழிப்பையும் அமைதியையும் விரும்புகிறது என்றாலும், இரண்டிற்கும் செல்லும் பாதை வலிமையும் மன உறுதியும் நிறைந்தாக இருக்க வேண்டியது அவசியம்" என்று திரு மோடி கூறினார். இந்தியா சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாராஜா ரஞ்சித் சிங், ராஜேந்திர சோழன், மகாராணா பிரதாப், லச்சித் போர்புகன் மற்றும் மகாராஜா சுஹேல்தேவ் போன்ற சிறந்த போர்வீரர்களின் பூமி என்று அவர் விவரித்த அவர், வளர்ச்சி மற்றும் அமைதிக்கு உத்திசார்ந்த வலிமை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு குறித்த தெளிவான பார்வையை எதிர்க்கட்சி ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்றும், அதில் தொடர்ந்து சமரசம் செய்து கொண்டுள்ளதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஏன் மீட்கப்படவில்லை என்று இப்போது கேள்வி எழுப்புபவர்கள் பாகிஸ்தானின் கை ஓங்க அனுமதித்தது யார் என்பதற்கு முதலில் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் மீது தொடர்ந்து சுமையை ஏற்படுத்தும் சுதந்திரத்திற்குப் பிந்தைய முடிவுகளை கடுமையாக விமர்சித்த திரு மோடி, முக்கியமா தவறான கணிப்புகளால் தரிசு நிலம் என்று தவறாக முத்திரை குத்தப்பட்ட அக்சாய் சின் பகுதியில் 38,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை இழக்க நேரிட்டது என்பதை எடுத்துரைத்தார். 1962 மற்றும் 1963 க்கு இடையில், அப்போதைய ஆளும் கட்சித் தலைவர்கள் பூஞ்ச், உரி, நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கிஷன்கங்கா உள்ளிட்ட ஜம்மு & காஷ்மீரின் முக்கிய பகுதிகளை தாரை வார்க்க முன்மொழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"அமைதிக்கான எல்லைக்கோடு" என்ற போர்வையில் இந்த தாரை வார்ப்பு நிகழ்வு முன்மொழியப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 1966 ஆம் ஆண்டில் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக சர்ச்சைக்குரிய சாத் பெட் பகுதி உட்பட சுமார் 800 சதுர கிலோமீட்டர் நிலம் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது என்று எதிர்க்கட்சியை அவர் விமர்சித்தார். 1965 போரில் இந்தியப் படைகள் ஹாஜிபிர் கணவாயை மீட்டெடுத்த போதிலும், அப்போதைய ஆளும் கட்சி அதை பாகிஸ்தானுக்கே திருப்பி அளித்தது என்றும் இது நாட்டின் உத்திசார் வெற்றியைக் கூட தரம் தாழ செய்துவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

1971 போரின் போது, இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பாகிஸ்தான் பகுதியைக் கைப்பற்றி 93,000 போர்க் கைதிகளை வைத்திருந்தது என்பதை பிரதமர் நினைவுகூர்ந்த பிரதமர், நமக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்பதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது என்றார். எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கர்தார்பூர் சாஹிப்பைக் கூட பாதுகாக்க முடியவில்லை என்று அவர் விமர்சித்தார். 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாக அளிக்க எடுக்கப்பட்ட முடிவும் வருந்தத்தக்கது என்று   தெரிவித்த அவர், இந்த முடிவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் துயரங்களை சுட்டிக்காட்டி இதை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

தேசிய பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டு, சியாச்சினில் இருந்து இந்தியப் படைகளை திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் பல தசாப்தங்களாக முயற்சி செய்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

26/11 மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து, துயரச் சம்பவம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, அப்போதைய அரசாங்கம் வெளிநாட்டு நிர்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்ததாக பிரதமர் அவைக்கு நினைவூட்டினார். 26/11 தாக்குதல்களின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், அப்போதைய அரசாங்கம் பாகிஸ்தான் தூதரை வெளியேற்றவோ அல்லது ஒரு விசாவை கூட ரத்து செய்யவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தடையின்றி தொடர்ந்தன என்றும், ஆனால் அப்போதைய அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தான் "மிகவும் விரும்பத்தக்க நாடு" என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது என்றும், அது ஒருபோதும் ரத்து செய்யப்படவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மும்பை தாக்குதலுக்கு நீதி கோரி நாடு வேண்டுகோள் விடுத்த நிலையில், அப்போதைய ஆளும் கட்சி பாகிஸ்தானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் திரு மோடி சுட்டிக் காட்டினார். பயங்கரவாதிகளை அனுப்பி அழிவை ஏற்படுத்த பாகிஸ்தான் முயன்று வந்த அதே வேளையில், அப்போதைய அரசாங்கம் இந்தியாவில் அமைதிக்கு குரல் கொடுக்கும் கவிநயம் மிக்க கூட்டங்களை நடத்தியது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

து போல ஒருபுறம் பயங்கரவாத போக்கும் மறுபுறம் தவறான நம்பிக்கை அடிப்படையிலுமான நிகழ்வுகளுக்கு தனது அரசாங்கம் முடிவு கட்டியதாகவும், பாகிஸ்தானின் மிகவும் அனுசரணையான நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலமும், விசாக்களை நிறுத்தியதன் மூலமும், அட்டாரி-வாகா எல்லையை மூடியதன் மூலமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் தேசிய நலன்களை தொடர்ந்து அடகு வைப்பதற்காக எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார், இதற்கு அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பிட்டார். நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருந்து வரும் இந்தியாவிலிருந்து உருவாகும் ஆறுகள் தொடர்பான இந்த ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமரே நிறைவேற்றினார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

 

ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமாக விளங்கிய சிந்து மற்றும் ஜீலம் போன்ற ஆறுகள், இந்தியாவின் சொத்தாக திகழும் நதிகள் மற்றும் நீர்வளம் நடுவர் மன்ற முடிவுகளுக்காக உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன என்று திரு மோடி கூறினார். இந்த நடவடிக்கை இந்தியாவின் சுயமரியாதை மற்றும் கலாச்சார நெறிமுறைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் நீர்வள உரிமைகள் மற்றும் வளர்ச்சியை சமரசம் செய்த வரலாற்று ரீதியில் பிழையான முடிவுகளைக் கண்டித்த பிரதமர், இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் 80% தண்ணீரை பாகிஸ்தானுக்கு ஒதுக்க அப்போதைய பிரதமர் ஒப்புக்கொண்டதாகவும், இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டிற்கு 20% தண்ணீரை மட்டுமே விட்டுச் சென்றதாகவும் எடுத்துரைத்தார். இந்த ஏற்பாட்டின் பின்னணியில் உள்ள நியாயத்தை அவர் கேள்வி எழுப்பியதோடு இது அரசியல் ஞானம், ராஜதந்திரம் மற்றும் தேசிய நலன் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தோல்வி என்று கூறினார்.

இந்திய மண்ணிலிருந்து உருவாகும் ஆறுகள் நாட்டின் குடிமக்களுக்கு, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர் விவசாயிகளுக்கு சொந்தமானது என்று திரு மோடி குறிப்பிட்டார். அப்போதைய ஆளும் கட்சியின் ஒப்பந்தம் நாட்டின் பெரும்பகுதியை நீர் பற்றாக்குறையில் தள்ளி, உள் மாநில அளவிலான நீர் தகராறுகளைத் தூண்டியது, அதே நேரத்தில் பாகிஸ்தான் அதன் நன்மைகளைப் பயன்படுத்திக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

இந்த நதிகளுடனான இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய தொடர்பு புறக்கணிக்கப்பட்டது என்றும், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக  இந்திய விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதார உரிமையான தண்ணீருக்கான அணுகல் மறுக்கப்பட்டது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிலைமை ஏற்படாமல் இருந்திருந்தால், மேற்கு நதிகளில் ஏராளமான பெரிய நீர்த் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி முழுவதும் உள்ள விவசாயிகள் போதுமான தண்ணீரைப் பெற்றிருப்பார்கள், மேலும் குடிநீர் பற்றாக்குறை இருந்திருக்காது. கூடுதலாக, இந்தியா தொழில்துறை அமைப்புகள் வாயிலாக கூடுதலாக மின்சாரத்தை தயாரித்திருக்கும் என்றார்.

அப்போதைய அரசாங்கம் இந்த ஆறுகளில் கால்வாய்கள் கட்ட பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கியது இந்தியாவின் நலன்களுக்கு மேலும் பாதகமாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசிய நலனைக் கருத்தில் கொண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அரசாங்கம் இப்போது நிறுத்தி வைத்துள்ளதாக திரு மோடி தெரிவித்தார். "இரத்தமும் தண்ணீரும் ஒருங்கிணைந்து பாய முடியாது என்று இந்தியா முடிவு செய்துள்ளது" என்று பிரதமர் தீவிரமாக வலியுறுத்தினார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, நாடு தொடர்ந்து பாதுகாப்பின்மையின் கரங்களில் கட்டுண்டு கிடந்ததாக குறிப்பிட்ட திரு. மோடி, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள் போன்ற பொது இடங்களில் வெடிகுண்டுகள் பற்றிய அச்சம் காரணமாக கவனிக்கப்படாத பொருட்களைத் தவிர்க்குமாறு அடிக்கடி அறிவிப்புகள் செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். இது நாடு முழுவதும் நிலவிய அச்சத்தின் சூழல் என்று அவர் விவரித்தார். அப்போதைய ஆளும் ஆட்சியின் கீழ் பலவீனமான நிர்வாகம் காரணமாக எண்ணற்ற பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது என்பதை அவர் சுட்டிக் காட்டினார், அரசு அதன் குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் அவர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திய திரு. மோடி, கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டி, 2004 மற்றும் 2014 க்கு இடையில் நாட்டைப் பாதித்த பயங்கரவாத சம்பவங்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் சரிவைக் குறிப்பிட்டார்.

 

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியம் எனும்போது முந்தைய நிர்வாகங்கள் அத்தகைய பயனுள்ள நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு முந்தைய ஆட்சிகள் பயங்கரவாதம் செழிக்க அனுமதித்தன என்று அவர் குற்றம் சாட்டினார்.

 

2001-ம் ஆண்டு நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவு கூர்ந்த திரு மோடி, சந்தேகத்தின் பலனை அப்சல் குருவுக்கு வழங்குமாறு மூத்த எதிர்க்கட்சித் தலைவர் பேசியதாகக் கூறினார். பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிடிக்கப்பட்டு, அவர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர் என்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், 26/11 மும்பை தாக்குதல்களை "காவி பயங்கரவாதம்" என்று அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

அப்போதைய ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர், லஷ்கர்--தொய்பாவை விட இந்து குழுக்கள் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரிடம் கூறியதாகவும், இது வெளிநாட்டில் அவர்கள் ஏற்படுத்திய சித்தரிக்கப்பட்ட பிம்பத்திற்கு ஒரு உதாரணம் என்றும்  பிரதமர் மேற்கோள் காட்டினார்.

ஜம்மு & காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதைத் தடுத்ததற்காக எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக சாடினார். பாபா சாஹேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் இப்பகுதியில் நுழைவது தடைசெய்யப்பட்டது என்று கூறி பிரதமர்  தேசிய பாதுகாப்பை தொடர்ந்து சமரசம் செய்து கொள்ளும் வகையிலான திருப்திப்படுத்தும் அரசியலே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்தார்.

நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் திரு மோடி, அரசியல் வேறுபாடுகள் நீடிக்கலாம், ஆனால் தேசிய நலன் என்ற நோக்கத்தின் அடிப்படையிலான ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று குறிப்பிட்டர். பஹல்காம் துயரத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அது நாட்டை எவ்வாறு ஆழமாக காயப்படுத்தியது என்பதையும், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் தேசிய உறுதியை உள்ளடக்கிய ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் தீர்க்கமான பதிலடிக்கு வழி வகுத்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

உலகளவில் தேசத்தை உறுதியுடனும் தெளிவான பார்வையுடனும் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய பிரதிநிதிகளை அவர் பாராட்டினார். இந்தியாவிலும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலித்த அவர்களின் குரல் நாட்டை தற்போது வழி நடத்தும் 'சிந்தூர் உத்வேகத்தை' நினைவுபடுத்தியதாக அவர் கூறினார்.

இந்தியாவின் உறுதியான உலகளாவிய நிலைப்பாட்டை எதிர்த்த சில எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினை குறித்து அதிருப்தி தெரிவித்த பிரதமர், தேசத்தின் நலனைப் பாதுகாக்க சபையில் பேசியவர்களை மௌனமாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து வருத்தம் தெரிவித்தார். இந்த மனநிலையைப் பற்றி குறிப்பிட்ட அவர், துணிச்சலான மற்றும் நல்ல நோக்கத்தின் அடிப்படையிலான சொற்பொழிவை நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்த கவிநயமான கருத்து ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரா நிலைப்பாட்டில் சமரசமான போக்கை கடைபிடிக்கும் அரசியல் நிர்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் இடம் தரக் கூடாது என்று திரு மோடி வலியுறுத்தினார். மேலும் நாட்டின் வெற்றித் தருணங்களை அரசியல் கேலிக்கூத்தாக மடை மாற்றுவதைத் தவிர்க் வேண்டும் அன்றும் அவர் எச்சரித்தார்.

பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தும் வேரடி மண்ணோடும் அகற்றுவதை இந்தியா உறுதியாக நிறைவேற்றும் என்பதை பிரதமர் நிதர்சனமாக தெளிவுபடுத்தினார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுக்கு நேரடி எச்சரிக்கையாக விளங்கும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்பதோடு இந்தியா அதன் பதிலடி  நடவடிக்கைகளைத் தொடரவே செய்யும் என்றார் பிரதமர்.

இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் வளமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான உறுதியான தீர்மானத்தை முன்மொழிந்து திரு மோடி தனது உரையை முடித்தார். மேலும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபட்டதற்காக அவைக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

------

(Release ID: 2149994)

AD/SM/SMB/SV/IR/KPG/SG/KR/DL


(Release ID: 2150450)