மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ புதுதில்லியில் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
Posted On:
29 JUL 2025 3:10PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புது தில்லியில் அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோர் தேசிய கல்வி கொள்கை 2020-ன் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான தளமாக இம்மாநாடு நடத்தப்பட்டது.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி, வடகிழக்கு பிராந்திய கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், முக்கிய கல்வியாளர்கள், சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா, நவோதயா ஆகியவற்றின் பிராந்திய அதிகாரிகள், இயக்குநர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பிற அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், மாநில கல்விச் செயலாளர்கள், உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசிய கல்விக் கொள்கை 2020 வரைவுக் குழுவின் தலைவரான பத்ம விபூஷண் டாக்டர் கே. கஸ்தூரிரங்கனின் தொலைநோக்குத் தலைமைத்துவத்தையும், நாட்டின் கல்வி மற்றும் விண்வெளித் துறைகளுக்கு முன்னோடியாகப் பங்களித்ததையும் அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தியதன் மூலம் நிகழ்வு தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கேந்திரிய வித்யாலயா மாணவர்களால் வரவேற்புப் பாடல் இசைக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5-ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரதமரின் செய்தியையும் இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த வெற்றிக்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
"வளர்ச்சியடைந்த இந்தியா 2047" என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு முன்னேறும்போது, தேசிய கல்விக் கொள்கை முன்னோக்கிச் செல்லும் ஒரு தேசிய நோக்கமாக செயல்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கல்வி முறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்து வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் சமூகங்களைச் சென்றடைவதில் அரசு தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கொள்கையிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு வகுப்பறையும் அர்த்தமுள்ள கற்றலுக்கான இடமாக மாறுவதையும், ஒவ்வொரு குழந்தையின் ஆற்றலும் வளர்க்கப்படுவதையும் உறுதிசெய்ய அனைத்து பங்குதாரர்களும் கவனம் செலுத்திய மற்றும் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2149668)
AD/IR/SG/KR
(Release ID: 2149739)