பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 JUL 2025 11:03PM by PIB Chennai
வணக்கம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!
வணக்கம்!
இன்று கார்கில் வெற்றி தினம். முதலில், கார்கிலின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
நண்பர்களே,
நான்கு நாள் வெளிநாடுகளில் பயணித்த பிறகு, பகவான் ராமரின் இந்த புனித பூமிக்கு நேரடியாக வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் வெளிநாட்டில் இருந்தபோது, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கையின் அடையாளமாகும். இந்த தன்னம்பிக்கையுடன், நாம் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை, ஒரு வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். இன்றும் கூட, ராமேஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன், திருச்செந்தூர் முருகன் ஆகியோரின் ஆசீர்வாதங்களுடன், தூத்துக்குடியில் வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணியை தூத்துக்குடி தொடர்ந்து கண்டு வருகிறது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு பிப்ரவரியில், வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக கொள்கலன் முனையத்திற்கு அடிக்கல் நாட்டினேன். அந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. செப்டம்பரில், புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையத்தை நான் திறந்து வைத்தேன். இன்று மீண்டும் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. விமான நிலையம், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே திட்டங்கள், மின்சாரத் துறை தொடர்பான முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இதற்காக தமிழக மக்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பும் எரிசக்தியும் முதுகெலும்பாகும். இந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, எரிசக்தித் துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துவது, தமிழ்நாட்டின் வளர்ச்சி எங்களுக்கு எவ்வளவு பெரிய முன்னுரிமை என்பதைக் காட்டுகிறது. இன்றைய அனைத்து திட்டங்களும் தூத்துக்குடியையும் தமிழ்நாட்டையும் புதிய வாய்ப்புகளின் மையமாக மாற்றும்.
நண்பர்களே,
தமிழ்நாடும் இந்த தூத்துக்குடி நிலமும் அதன் மக்களும் பல நூற்றாண்டுகளாக வளமான, வலுவான இந்தியாவிற்கு பங்களித்துள்ளனர். வ உ சிதம்பரம் பிள்ளை போன்ற தொலைநோக்கு பார்வையாளர்கள் பிறந்த மண் இது. அடிமைத்தனத்தின் காலத்தில் கடல் வர்த்தகத்தின் சக்தியை அவர் புரிந்து கொண்டார். கடலில் உள்நாட்டுக் கப்பல்களை இயக்குவதன் மூலம் அவர் ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுத்தார். இந்த மண்ணில், வீர-பாண்டிய கட்டபொம்மன் மற்றும் அழகு முத்துகோன் போன்ற சிறந்த மனிதர்கள் சுதந்திரமான, வலுவான இந்தியாவின் கனவை கட்டமைத்தனர். தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியும் இந்த இடத்திற்கு அருகிலேயே பிறந்தார். உங்களுக்குத் தெரியும், சுப்பிரமணிய பாரதிக்கு தூத்துக்குடியுடன் ஒரு வலுவான பிணைப்பு இருந்தது.
நண்பர்களே,
எனக்கு நினைவிருக்கிறது, கடந்த வருடம்தான் நான் தூத்துக்குடியின் புகழ்பெற்ற முத்துக்களை பில் கேட்ஸுக்குப் பரிசளித்தேன். அவருக்கு அந்த முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. இங்குள்ள பாண்டிய முத்துக்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இந்தியாவின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்தன.
நண்பர்களே,
இன்று, எங்கள் முயற்சிகளால், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு - வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கிறோம். பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்று, இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் அதன் வளர்ச்சியைக் காண்கிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய பலத்தை அளிக்கும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நமது வேகத்தை இந்த ஒப்பந்தம் துரிதப்படுத்தும்.
நண்பர்களே,
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரிட்டனில் விற்கப்படும் 99% இந்தியப் பொருட்களுக்கு வரி இருக்காது. இந்தியப் பொருட்கள் பிரிட்டனில் மலிவாக மாறினால், அங்கு தேவை அதிகரிக்கும். மேலும் இந்தியாவில் அந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நண்பர்களே,
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டின் இளைஞர்கள், நமது சிறு தொழில்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்றோர் அதிக அளவில் பயனடைவார்கள். அது தொழில்துறையாக இருந்தாலும் சரி, நமது மீனவ சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி. ஆராய்ச்சித் துறையினராக இருந்தாலும் சரி, இது அனைவருக்கும் பயனளிக்கும்.
நண்பர்களே,
இன்று, மத்திய அரசு இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நீங்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் சக்தியைப் பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயங்கரவாதத்தின் மறைவிடங்களை அழிப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன.
நண்பர்களே,
தமிழ்நாட்டின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த, மத்திய அரசு தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில், துறைமுக உள்கட்டமைப்பை உயர் தொழில்நுட்பமாக மாற்றுகிறோம். இது தவிர, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேவும் ஒன்றோடொன்று ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்பட்ட முனையத்தின் திறப்பு விழா இன்று இந்த திசையில் மற்றொரு பெரிய படியாகும். ₹ 450 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த முனையம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும். முன்பு இதன் ஆண்டு பயணிகள் கையாளும் திறன் 3 லட்சம் மட்டுமே.
நண்பர்களே,
இந்தப் புதிய முனையம் தூத்துக்குடியை நாட்டின் பல வழித்தடங்களுடன் இணைக்கும். தமிழ்நாட்டில் கல்வி மையங்கள், சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவை இதன் மூலம் அதிக பயனடையும். இதனுடன், இந்தப் பகுதியின் சுற்றுலாத் திறனும் புதிய சக்தியைப் பெறும்.
நண்பர்களே,
இன்று நாம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சாலைத் திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சாலைகள், சென்னையின் இரண்டு பெரிய வளர்ச்சிப் பகுதிகளை இணைக்கப் போகின்றன. இந்த சாலைகள் காரணமாக, டெல்டா மாவட்டங்களுடனான சென்னையின் இணைப்பு மேலும் மேம்படும்.
நண்பர்களே,
இந்தத் திட்டங்களின் உதவியுடன், தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் மேம்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதோடு, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளையும் திறக்கும்.
நண்பர்களே,
நமது அரசு நாட்டின் ரயில்வே துறையை தொழில்துறை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதுகிறது. அதனால்தான், கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் புதிய கட்டத்தைக் கண்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கல் இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு உள்ளது. அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை எங்களது அரசு மேம்படுத்தி வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். நாட்டின் முதலாவது, தனித்துவமான செங்குத்துத் தூக்கு ரயில் பாலமான பாம்பன் பாலமும் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் வணிகம் செய்வதற்கான எளிமை, பயணத்திற்கான எளிமை இரண்டையும் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
இன்று, நாட்டில் பெரிய அளவில் நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய இயக்கம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலம் ஒரு பொறியியல் அற்புதம். இந்த பாலம் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகரை முதல் முறையாக ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது கட்டப்பட்டுள்ளது, அசாமில் போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள சோனமார்க் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுபோன்ற பல திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
நண்பர்களே,
இன்றும் கூட, தமிழ்நாட்டில் நாங்கள் அர்ப்பணித்துள்ள ரயில்வே திட்டங்கள் தென் தமிழ்நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான பாதை மின்மயமாக்கல் இப்போது வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்க வழியைத் திறந்துள்ளது. இந்த ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கப் போகின்றன.
நண்பர்களே,
இன்று, 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின் திட்டத்துடன் தொடர்புடைய மின் பரிமாற்றத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் ₹550 கோடி செலவில் கட்டப்படும் இந்த அமைப்பு, வரும் ஆண்டுகளில் நாட்டிற்கு தூய எரிசக்தியை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. இந்த எரிசக்தித் திட்டம் இந்தியாவின் உலகளாவிய எரிசக்தி இலக்குகளையும் சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக செயல்படும். மின்சார உற்பத்தி அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் தொழில்துறையும் மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.
நண்பர்களே,
தமிழ்நாட்டில் பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை இல்ல திட்டமும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை, அரசுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் 40,000 வீடுகளில் இந்த அமைப்பை நிறுவும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் இலவசமாக சுத்தமான மின்சாரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
நண்பர்களே,
தமிழ்நாட்டின் வளர்ச்சி, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்ற கனவு எங்கள் முக்கிய உறுதிப்பாடாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான கொள்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு அதிகாரப் பகிர்வு மூலம் தமிழ்நாட்டிற்கு மூன்று லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்தத் தொகை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய தொகையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த பதினொரு ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு பதினொரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன. முதல் முறையாக, கடலோரப் பகுதிகளில் மீன்வளத் துறையுடன் தொடர்புடைய சமூகங்கள் மீது அதிக அக்கறை காட்டப்பட்டுள்ளது. நீலப் புரட்சி மூலம் கடலோரப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துகிறோம்.
நண்பர்களே,
இன்று, தூத்துக்குடியின் இந்த நிலம் வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண்கிறது. போக்குவரத்து இணைப்பு, மின் பரிமாற்றம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் அனைத்து திட்டங்களும் வளர்ச்சியடைந்த தமிழ்நாடு - வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கொள்கைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கப் போகின்றன. இந்தத் திட்டங்களுக்காக எனது தமிழ்நாட்டு குடும்பத்தினர் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி. எனக்கு இன்னொரு வேண்டுகோள் உள்ளது. இன்று நீங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்பதைக் காண்கிறேன். ஒன்று செய்யுங்கள், உங்கள் மொபைல் போனை எடுத்து, உங்கள் மொபைல் போனின் விளக்கு வெளிச்சம் மூலம் இந்த புதிய விமான நிலையத்தின் மகிமையை மேம்படுத்துங்கள்.
பாரத் மாதா கி ஜெ
பாரத் மாதா கி ஜெ
பாரத் மாதா கி ஜெ
மிக்க நன்றி.
வணக்கம்!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேச மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.
*****
(Release ID: 2148956)
AD/PLM/RJ
(Release ID: 2149095)