பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில், 27.07.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
27 JUL 2025 11:39AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.
நண்பர்களே,
நீங்கள் INSPIRE-MANAK என்ற இயக்கத்தின் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் புதுமைகள் படைத்தல் திறனை மேம்படுத்தும் இயக்கம் இது. இதிலே அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஐந்து குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு புதிய கருத்தை முன்வைப்பார்கள். இந்த இயக்கத்தோடு இதுவரை இலட்சக்கணக்கான குழந்தைகள் இணைந்துவிட்டார்கள். மேலும் சந்திரயான் – 3க்கும் பிறகு இவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. தேசத்தில் விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்புகளும் விரைவுகதியில் அதிகரித்து வருகின்றன. ஐந்தாண்டுகள் முன்பாக 50ற்கும் குறைவான ஸ்டார்ட் அப்புகளே இருந்த நிலையில் இன்று, 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றன, விண்வெளித்துறையில் மட்டும். நண்பர்களே, அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தேசிய விண்வெளி தினம் வரவிருக்கிறது. நீங்கள் இதை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள் என்பது குறித்து எனக்கு நமோ செயலியில் கண்டிப்பாகச் செய்தி அனுப்புங்கள்.
நண்பர்களே,
21ஆம் நூற்றாண்டு பாரதத்தில் இன்று அறிவியல் ஒரு புதிய சக்தியோடு முன்னேறி வருகிறது. சில நாட்கள் முன்பாக நமது மாணவர்கள், சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றார்கள். தேவேஷ் பங்கஜ், சந்தீப் குசி, தேவதத்த பிரியதர்ஷி, உஜ்வல் கேசரி ஆகிய நால்வரும் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்கள். கணித உலகிலே பாரதம் தனது முத்திரையை மேலும் வளமாக்கியது. ஆஸ்ட்ரேலியாவிலே நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நமது மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.
நண்பர்களே,
அடுத்த மாதம் மும்பையிலே வானியல் மற்றும் வான் இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதிலே 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், விஞ்ஞானிகளும் வருவார்கள். இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய ஒலிம்பியாட் போட்டியாக இது இருக்கும். ஒருவகையிலே பார்த்தால், பாரதம் இப்போது ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பியாட் போட்டிகள், இரண்டிலுமே முன்னேறி வருகின்றது.
எனதருமை நாட்டுமக்களே, நம்மனைவரையும் பெருமையில் ஆழ்த்தவல்ல மேலும் ஒரு செய்தி யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வந்திருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பானது 12 மராட்டியக் கோட்டைகளுக்கு உலக மரபுச் சின்னங்களாக அங்கீகாரம் அளித்திருக்கிறது. இவற்றில் 11 கோட்டைகள் மஹாராஷ்டிரத்திலும், ஒரு கோட்டை தமிழ்நாட்டிலும் இருக்கின்றது. இந்தக் கோட்டைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல, இவை பாரதநாட்டின் ஆன்மா, பிரும்மாண்டமானவை, உயரமானவை, வெல்லக் கடினமானவை. ஒவ்வொரு கோட்டையின் வரலாற்றோடும் ஒருஒரு புத்தகமே அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வுக்குச் சான்று பகர்கிறது. சல்ஹேர் கோட்டையில்தான் முகலாயர்களின் தோல்வி அரங்கேறியது. ஷிவனேரி, சத்ரபதி சிவாஜி மகராஜா பிறந்த இடம், எதிரிகளால் தகர்க்க முடியாத ஒன்று. காந்தேரிக்கோட்டை, கடலின் நடுவில் அமைக்கப்பட்ட அற்புதமான கோட்டை. எதிரிகள் அவரைத் தடுக்க நினைத்தாலும், சிவாஜி மஹராஜ், அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கிக் காட்டினார். பிரதாப்கட் கோட்டை, அஃப்ஸல் கான் வெற்றி கொள்ளப்பட்ட இடம், இந்த வெற்றிக் காதையின் எதிரொலி இன்றும்கூட கோட்டைச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்துர்க், இதன் ரகசியச் சுரங்கங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் தொலைநோக்கிற்குக் கட்டியம் கூறுகின்றன. நான் சில ஆண்டுகள் முன்பு ராய்கடைச் சுற்றிப் பார்த்தேன். சத்ரபதி சிவாஜி மஹராஜின் உருவச்சிலைக்கு முன்பாக பிரார்த்தனை செய்தேன். இந்த அனுபவம் என் வாழ்க்கை முழுவதும் எனக்குள்ளேயே இருக்கும்.
நண்பர்களே,
தேசத்தின் இன்னும்பிற பகுதிகளிலும் கூட இப்படிப்பட்ட அற்புதமான கோட்டைகள் இருக்கின்றன, இவை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கின்றன, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், சுயமரியாதையை-சுயகௌரவத்தை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. இராஜஸ்தானத்தின் சித்தௌட்கட் கோட்டை, கும்பல்கட் கோட்டை, ரண்தம்பௌர் கோட்டை, ஆமேர் கோட்டை, ஜைசால்மேர் கோட்டை எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை. கர்நாடகத்தின் குல்பர்கா கோட்டையும் கூட மிகப்பெரியது. சித்ரதுர்க்கா கோட்டையின் பிரும்மாண்டம்….. உங்களுக்குள்ளே குதூகலத்தை நிரப்பிவிடும், அந்தக் காலத்தில் எப்படி நமது முன்னோர்கள் இப்படிப்பட்டக் கோடைகளை உருவாக்கினார்கள் என்று வியப்பில் ஆழ்த்தி விடும்.
நண்பர்களே,
உத்தர பிரதேசத்தின் பாந்தாவில் இருப்பது காலிஞ்ஜர் கோட்டை. கஜினி முகமது பலமுறை இந்தக் கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தாலும், ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவி இருக்கிறான். புந்தேல்கண்டிலே இப்படிப்பட்ட பல கோட்டைகள் இருக்கின்றன-குவாலியர், ஜான்சி, ததியா, அஜய்கட், கட்குண்டார், சந்தேரி எனப்பல. இந்தக் கோட்டைகள் வெறும் செங்கற்கள்-கற்களாலானவை மட்டுமல்ல, இவை நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். நற்பண்புகள் மற்றும் சுயமரியாதை – இன்றும் கூட இந்தக் கோட்டைகளின் வானுயர் சுவர்களிலிருந்து இவை உற்றுப் பார்க்கின்றன. இந்தக் கோட்டைகளுக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள், நம்முடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், கௌரவத்தை உணர்ந்து பாருங்கள் என்று நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, சற்றே கற்பனை செய்து பாருங்கள்!! விடியற்காலை வேளை, பிஹாரின் முஜஃப்ஃபர்புர் நகரம், 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி, ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நாற்சந்தியும், அனைத்து ஒலிகளும் ஊரும் அடங்கி, நிசப்தமாக இருந்தது. மக்களின் கண்களில் கண்ணீர், ஆனால் இதயங்களில் கனன்று கொண்டிருந்ததோ ஜுவாலை. மக்கள் சிறைச்சாலையைச் சூழ்ந்து விட்டார்கள், அங்கே 18 வயதேயான ஒரு இளைஞன், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனது தேசபக்தியை வெளிப்படுத்தியமைக்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருந்தான். சிறைக்குள்ளே, பரங்கி அதிகாரிகள், ஒரு இளைஞனைத் தூக்கிலிடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் முகத்திலே அச்சமேதும் இல்லை, மாறாக பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெருமிதம், தேசத்திற்காக உயிர் துறப்போரிடத்தில் குடிகொண்டிருக்கும் பெருமிதம். அந்த வீரன், அந்த சாகஸம் நிரம்பிய இளைஞன்…… குதிராம் போஸ். வெறும் 18 வயதே நிரம்பிய அந்த இளைஞன் வெளிப்படுத்திய துணிச்சல், ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போட்டது. “குதிராம் போஸ் தூக்குக்கயிற்றை நோக்கி நடந்த போது, அவருடைய முகத்திலே புன்முறுவல் பூத்திருந்தது”, என்று அப்போது செய்தித்தாள்கள் கூட எழுதின. இப்படிப்பட்ட கணக்கேயில்லாத உயிர்த்தியாகங்கள் புரிந்த பிறகு, பல நூற்றாண்டுக்காலத் தவத்திற்குப் பிறகு, நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. தேசப்பற்றாளர்கள் தங்கள் உதிரத்தால் சுதந்திரப் போராட்ட வயலில் பாசனம் செய்தார்கள்.
நண்பர்களே,
ஆகஸ்ட் மாதம் புரட்சி மாதம் என்று அழைக்கப்படுவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி லோக்மான்ய பால் கங்காதர் திலகரின் நினைவுநாளும் கூட. இந்த மாதத்திலேயே, ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று காந்தியடிகளின் தலைமையின் கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தான் ஆங்கிலேயர் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்தது. பிறகு வருவது ஆகஸ்ட் 15, நமது சுதந்திரத் திருநாள், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்திக் கொள்வோம், அவர்களிடமிருந்து உள்ளெழுச்சி பெறுவோம்; ஆனால் நண்பர்களே, நமது சுதந்திரத்தோடு கூடவே, தேசப்பிரிவினையின் வலியும் துயரும் இணைந்தே இருக்கிறது. ஆகையால் தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை தேசப்பிரிவினை பயங்கரத்தின் நினைவுநாள் என்ற வகையிலே நாம் கடைப்பிடிக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு நாளும், சும்மா ஒன்றும் வரவில்லை சுதந்திரம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. இந்தச் சுதந்திரத்தின் பின்னே இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம் இருக்கின்றது. நாம் இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், நமது உறுதிப்பாடுகள் மூலம் இதை மேலும் வலுவுடையதாக ஆக்க வேண்டும்.
என் கனிவான நாட்டுமக்களே, 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று மேலும் ஒரு புரட்சியின் தொடக்கம் ஏற்பட்டது. சுதேசி இயக்கமானது, உள்ளூர் உற்பத்திக்கு, குறிப்பாக கைத்தறிக்குப் புதிய உந்துசக்தியை அளித்தது. இந்த நினைவைப் போற்றும் வகையிலே தேசம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியோடு, தேசிய கைத்தறி தினமாக நாம் கொண்டாட ஆரம்பித்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நமது கதர்ப்பொருட்கள் எப்படி சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய பலத்தை அளித்தனவோ, அதே போல இன்றும் கூட, வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் திசையில் நாம் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் வேளையிலே, ஜவுளித்துறையானது தேசத்தின் பலமாக உருவாக்கம் பெற்று வருகின்றது. இந்தப் பத்தாண்டுகளிலே தேசத்தின் பல்வேறு இடங்களில் இந்தத் துறையோடு இணைந்த இலட்சக்கணக்கானவர்கள் தாம் வெற்றியின் பல படிகளைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தின் பைட்டண் கிராமத்தின் கவிதா தவலே அவர்கள், முன்பெல்லாம் ஒரு சிறு அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், இடமோ, வசதிகளோ ஏதும் இருக்கவில்லை. அரசாங்க உதவி கிடைத்த பிறகு, இப்போது இவருடைய திறமைகள் சிறகு விரிக்கத் தொடங்கி விட்டன. இவர் மூன்று மடங்கு அதிகம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஒடீஷாவின் மயூர்பஞ்ஜிலும் இதே மாதிரியான வெற்றிக் கதை தான். இங்கே 650ற்கும் அதிகமான பழங்குடியினப் பெண்கள், சந்தாலீ புடவைகளுக்கு மீண்டும் உயிரூட்டி இருக்கிறார்கள். இப்போது இந்தப் பெண்கள், ஒவ்வோர் மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் வெறும் துணியை மட்டும் நெசவு செய்யவில்லை, தங்களுடைய அடையாளத்தையே நெய்கிறார்கள். பிஹாரின் நாலந்தாவைச் சேர்ந்த நவீன் குமார் அவர்களின் சாதனை உத்வேகம் அளிக்கவல்லது. இவருடைய குடும்பத்தார், பல தலைமுறைகளாக இந்தப் பணியோடு தொடர்புடையவர்கள். ஆனால் மிகவும் அருமையான விஷயம் என்னவென்றால், இவருடைய குடும்பத்தார் இப்போது இந்தத் துறையில் நவீனத்துவத்தையும் இணைத்திருக்கிறார்கள். இப்போது இவர்களுடைய குழந்தைகள் கைத்தறித் தொழில்நுட்பத்தைப் படிக்கிறார்கள். பெரிய ப்ராண்டுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த மாற்றம் ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்களில் மட்டுமல்ல, இது அக்கம்பக்கம் அநேக குடும்பங்களையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
ஜவுளித்துறை, பாரதத்தின் ஒரு துறை மட்டுமல்ல, இது நமது கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கான எடுத்துக்காட்டு. இன்று ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தை வெகு விரைவாக முன்னேறி வருகிறது, இந்த முன்னேற்றத்தின் மிக அழகான விஷயம் என்னவென்றால், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், நகரங்களின் ஆடை வடிவமைப்பாளர்கள், மூத்த நெசவாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளைத் தொடங்கும் நமது இளைஞர்கள் என அனைவரும் இணைந்து இதை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இன்று பாரதத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல ஸ்டார்ட் அப்புகள், பாரதத்தின் கைத்தறித் துணிகளின் அடையாளத்துக்கு, உலகளாவிய உயரங்களை அளித்திருக்கின்றன. நண்பர்களே, 2047இன் வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை, தற்சார்பைக் கடந்து பயணிக்கிறது, உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் உணர்வுக்கு, தற்சார்பு பாரதம் தான் மிகப்பெரிய ஆதாரம். பாரதத்தில் தயாராகும் பொருட்களாக இருக்க வேண்டும், அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் வியர்வை சிந்தப்பட்டிருக்க வேண்டும், உள்ளூரிலேயே வாங்குங்கள், உள்ளூரிலேயே விற்பனை செய்யுங்கள். இதுவே நமது உளவுறுதிப்பாடாக இருக்க வேண்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதத்தின் பன்முகத்தன்மையின் மிக அழகான காட்சியை நமது நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பாரம்பரியங்களில் காணலாம், இதன் அங்கம் தான் நமது பஜனைப் பாடல்களும், நமது கீர்த்தனங்களும். ஆனால் கீர்த்தனைப் பாடல்கள் வாயிலாக காட்டுத்தீ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்து நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? நீங்கள் ஒருவேளை நம்பாமல் போகலாம் ஆனால், ஓடிஷாவின் கியோஞ்ஜார் மாவட்டத்தில் ஒரு அற்புதமான செயல் நடந்தேறி வருகிறது. இங்கே ராதாகிருஷ்ண சங்கீர்த்தன மண்டலி என்ற பெயர்கொண்ட ஒரு குழு இருக்கிறது. பக்தியோடு கூடவே, இந்தக் குழுவானது, இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற மந்திரத்தையும் கூடவே சேர்த்து ஜபித்து வருகிறது. இந்த முன்னெடுப்புக்கான உத்வேகக் காரணியாக இருந்தவர் பிரமீலா பிரதான் அவர்கள். காடுகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்காக இவர் பாரம்பரியமான பாடல்ளோடு புதிய சொற்களை இணைத்தார், புதிய செய்திகளை இழைத்தார். இவரது குழுவானது கிராமங்கள்தோறும் சென்றது. பாடல்கள் வாயிலாக காட்டுத்தீயால் எத்தனை அழிவு ஏற்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைத்தார். இந்த எடுத்துக்காட்டு, நமது மக்கள் பாரம்பரியங்கள் என்னவோ கடந்த போன காலங்களின் எச்சங்கள் அல்ல, இவற்றிலே சமூகத்திற்கு நல்வழிகாட்டும் சக்தி இன்னமும் இன்றும் இருக்கின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
என் இனிமையான நாட்டுமக்களே, பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான், ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது – நமது நிகழ்காலம் மற்றும் நமது வரலாற்றை நாம் ஆவணப்படுத்திக்க் கொண்டே வரவேண்டும் என்பதுதான் அந்தப் பக்கம். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சைமுறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது. நண்பர்களே, இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் அவர்கள். இன்றைய தலைமுறையினர் தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினரின் காலத்தில் இந்த விலைமதிப்பில்லாத மரபுச்செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கருதினார். ஆகையால் அவர் மாலைநேர வகுப்புகளைத் தொடங்கினார். அதிலே மாணவர்கள், வேலைபார்க்கும் இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலர் அங்கே கற்கத் தொடங்கினார்கள். மணிமாறன் அவர்கள், தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் பற்றிக் கற்பித்தார். இன்று பல முயற்சிகளுக்குப் பிறகு பல மாணவர்கள் இந்த வழிமுறையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். சில மாணவர்கள், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவமுறை மீதான ஆய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றால், நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடக்காமல், புதிய தலைமுறையினருக்கு விழிப்பேற்படுத்தும் பணியை ஆற்றும் இல்லையா? இந்த எண்ணத்தால் உத்வேகம் அடைந்து, பாரத அரசு, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், ’ஞான பாரத இயக்கம்’ என்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாரதத்தின் ஞானப் பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள இயலும். நீங்களும் இப்படிப்பட்ட முயற்சியோடு இணைந்திருந்தாலோ, இணைய விரும்பினாலோ, மைகவ் அல்லது கலாச்சார அமைச்சகத்தைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள்; ஏனென்றால் இவை சுவடிகள் மட்டுமல்ல, இவை இனிவரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதத்தின் ஆன்மாவின் அத்தியாயங்கள்.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, உங்களிடம் எத்தனை வகையான புள்ளினங்கள் இருக்கின்றன என்று கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே, நீங்கள் என்ன கூறுவீர்கள்? தினமும் ஒரு 5-6 பறவைகளை என்னால் பார்க்க முடிகிறது, சிலவற்றை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது, சில பறவைகளைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், நமக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் பறவையினங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அண்மையில் இப்படிப்பட்ட ஒரு அருமையான முயற்சி, அசாமில் உள்ள காசிராங்கா தேசியப்பூங்காவில் நடந்தது. பொதுவாகப் பார்த்தால், இந்த இடம் காண்டாமிருகங்களுக்குப் பெயர் போனது என்றாலும் இந்த முறை இங்கே இருக்கும் புல்வெளியும், அதில் வசிக்கும் புள்ளினங்களும் தான் விவாதப் பொருளானது. இங்கே முதன்முறையாக புல்வெளிப் புள்ளினங்களின் கணக்கெடுப்பு நடந்தது. இந்தக் கணக்கெடுப்பு காரணமாக பறவைகளின் 40க்கும் மேற்பட்ட புள்ளின வகைகள் அடையாளம் கண்டறியப்பட்டன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இவற்றிலே மிக அரியவகைப் பறவைகளும் அடக்கம். இத்தனை பறவைகளை எப்படி அடையாளம் காண முடிந்தது என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படலாம். இங்கே தான் தொழில்நுட்பம் தன் வித்தையைக் காட்டியது. கணக்கெடுப்பில் ஈடுபட்ட குழுவானது, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவியைப் பொருத்தியது. பிறகு, கணிப்பொறி வாயிலாக அந்த ஒலிகள் ஆய்ந்து அலசப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்த ஒலிகள் மூலம் மட்டுமே பறவைகள் அடையாளம் காணப்பட்டன, அதுவும் எந்தவொரு தொந்திரவும் கொடுக்காமலேயே. சிந்தித்துப் பாருங்கள்!! தொழில்நுட்பமும், புரிந்துணர்வும் ஒன்றிணைந்து செயல்படும்போது, இயற்கையைப் புரிந்து கொள்ளுதல் எத்தனை எளிதாகவும், ஆழமாகவும் ஆகிவிடுகிறது பாருங்கள்!! நாம் இத்தகைய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும், அப்போது தான், நாம் நமது உயிரினப் பன்முகத்தன்மையை அடையாளம் காண முடிவதோடு, அடுத்த தலைமுறையையும் இதோடு இணைக்க இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் எங்கே மிக அதிகமான இருள் கவிந்திருக்கிறதோ, அங்கிருந்துதான் பேரொளி பீறிட்டுக் கொண்டு புறப்படும். இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுத் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் காணப்படுகிறது. ஒரு காலத்தில், இந்தப் பகுதியில் மாவோவாதிகளின் வன்முறை நடைபெற்றுவந்தது. பாசியா வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்கள் வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தன, மக்கள் பீதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வேலைவாய்பிற்கான எந்த சாத்தியமும் தென்படாமல் இருந்தது, நிலங்கள் ஆளரவமற்றுப் போயின, இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். ஆனால், மிகவும் அமைதியான, நிதானம் நிறைந்த மாற்றம் ஒன்றின் தொடக்கம் ஏற்பட்டது. ஓம்பிரகாஷ் சாஹு என்ற பெயர் கொண்ட இளைஞர் ஒருவர், வன்முறைப் பாதையைத் துறந்தார். இவர் மீன்வளர்ப்பினை மேற்கொண்டார். பிறகு தன்னைப் போன்ற இன்னம்பிற கூட்டாளிகளையும் இப்படிச் செய்ய ஊக்கப்படுத்தினார். இவருடைய இந்த முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. முன்னர் துப்பாக்கியைத் தாங்கியவர்கள் எல்லாம் இப்போதோ மீன்பிடி வலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, ஓம்பிரகாஷ் சாஹு அவர்களின் தொடக்கம் எளிதாக இருக்கவில்லை. எதிர்ப்பு இருந்தது, மிரட்டல்கள் விடப்பட்டன என்றாலும், அவரது நம்பிக்கை தகரவில்லை. பிரதம மந்திரி மீன்வளத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்குப் புதிய பலம் கிடைத்தது. அரசிடமிருந்து பயிற்சி கிடைத்தது, குளங்களை அமைக்க உதவி கிடைத்தது, பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்தில், கும்லாவில் மீன்பிடிப் புரட்சி உருவானது. இன்று பாசியா வட்டாரத்தின் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்வளர்ப்போடு இணைந்திருக்கின்றன. ஒருகாலத்தில் நக்சல் அமைப்புக்களோடு இருந்தவர்கள் இப்போது, கிராமத்திலேயே கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார்கள். பாதை சரியாக இருந்தால், மனதில் நம்பிக்கை நிறைந்தால், மிகக்கடினமான சூழ்நிலைகளிலும் கூட வளர்ச்சியின் விளக்கு பிரகாசமாக ஒளிவிட்டெரியும் என்பதைத் தான் கும்லாவின் இந்தப் பயணம் நமக்குக் கற்பிக்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு ஏற்பாடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? ”உலகக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் விளையாட்டுக்கள்” என்பதுதான் விடை. உலகெங்கும் இருக்கும் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்போடு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் தாம் இவை. இந்த முறை இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்தன, இதிலே பாரதம் வரலாறு படைத்திருக்கிறது. பாரதம் கிட்டத்தட்ட 600 பதக்கங்களை வென்றது. பங்கெடுத்த 71 நாடுகளிலே நாம் முன்னணி மூன்று நாடுகளில் இடம் பிடித்தோம். இரவுபகலாக தேசத்தின் பொருட்டு சேவையாற்றுவோரின் கடின உழைப்பு பலனளித்தது. நமது இந்த நண்பர்கள் இப்போது விளையாட்டு மைதானத்திலும்கூட நாட்டின் பெயரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். நானும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களின் பயிற்றுநர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 2029ஆம் ஆண்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் பாரதத்திலே நடைபெறும் என்ற சுவாரசியமான விஷயத்தையும் உங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே. உலகெங்கிலுமிருந்தும் விளையாட்டு வீரர்கள் பாரதம் வரும்போது நாம் நம் நாட்டிலே அவர்களை உபசரிப்போம், நமது விளையாட்டுக் கலாச்சாரத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.
நண்பர்களே, கடந்த நாட்களிலே பல இளம் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பெற்றோரும் அனுப்பிய செய்தி என்னை வந்தடைந்தது. இதிலே கேலோ பாரத் 2025 வழிமுறையை மிகவும் பாராட்டி இருந்தார்கள். இந்தக் கொள்கையின் இலக்கு தெளிவாக ஒன்று தான் – பாரதம் விளையாட்டு உலகிலே சூப்பர் பவராக ஆக வேண்டும் என்பதுதான். கிராமங்கள், ஏழைகள், பெண்கள் தாம் இந்தக் கொள்கையின் முதன்மைகள். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன இப்போது விளையாட்டுக்களை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக ஆக்கும். விளையாட்டுக்களோடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள், அவை விளையாட்டுக்களின் மேலாண்மையோடு அல்லது தயாரிப்போடு தொடர்புடையதாக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும். தேசத்தின் இளைஞர்கள் சுயதயாரிப்பான ரேக்கட், மட்டை மற்றும் பந்தோடு விளையாடும்போது தற்சார்பு நோக்கிற்கு எந்த அளவுக்கு பலம் கிடைக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நண்பர்களே, விளையாட்டுக்கள் குழுவுணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த உடலுறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஒரு பலமான பாரதத்தை நிர்மாணிக்கும் பாதையாகும். ஆகையால் நன்றாக விளையாடுங்கள், நன்றாக விளையாடுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, சிலருக்கு சில வேளைகளில் சில வேலைகள் சாத்தியமில்லாதவையாகத் தோன்றும். இது நடக்குமா என்ற நினைவு எழும். ஆனால், தேசம் ஒரே சிந்தனையில் ஒன்றுபட்டு நிற்கும் போது, சாத்தியமில்லாதவையும் சாத்தியப்படும். தூய்மை பாரதம் இயக்கம்தான் இதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு. விரைவிலேயே இந்த இயக்கம் 11 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்துவிட்டது. மக்கள் இதை தங்களுடைய கடமையாகவே கருதுகிறார்கள், இது தானே மெய்யான மக்கள் பங்கெடுப்பு.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தூய்மை ஆய்வு இந்த உணர்வை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு தேசத்தின் 4500க்கும் மேற்பட்ட நகரங்களும், சிறுநகரங்களும் இதில் கலந்து கொண்டன. 15 கோடிக்கும் அதிகமானோர் இதிலே பங்கு பெற்றார்கள். இது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. இதுவே தூய்மை பாரதத்தின் குரல்.
நண்பர்களே, தூய்மை விஷயத்தில் நமது நகரங்களும், சிறுநகரங்களும் தங்கள் தேவைகள் மற்றும் சூழல் தொடர்பாக பல்வேறு வழிமுறைகளின்படி பணியாற்றி வருகின்றன. இவற்றின் தாக்கம் நகரங்களோடு மட்டும் நின்று போகவில்லை, தேசமெங்கும் இந்த வழிமுறைகளை தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கின்றது. உத்தராகண்டின் கீர்த்திநகரைச் சேர்ந்தவர்கள், மலைகளில் கழிவுப்பொருள் மேலாண்மைக்கான புதிய எடுத்துக்காட்டை அமைத்திருக்கிறார்கள். இது போலவே மங்களூருவிலே தொழில்நுட்பத்தின் துணையோடு உயிரிக் கழிவுப் பொருள் மேலாண்மை விஷயத்தில் பணிகள் நடந்து வருகின்றன. அருணாச்சலிலே ஒரு சிறிய நகரத்தின் பெயர் ரோயிங். ஒரு காலத்தில் இங்கிருக்கும் மக்களின் உடல்நலத்திற்கு கழிவுப் பொருள் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருந்தது. இந்த மக்கள் பொறுப்பை ஏற்றார்கள், Green Roing முன்னெடுப்பைத் தொடக்கினார்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப்பொருட்களைக் கொண்டு ஒரு பூங்காவையே உருவாக்கிவிட்டார்கள். இதைப் போன்றே கராடிலே, விஜயவாடாவிலே, நீர் மேலாண்மைக்கான பல உதாரணங்களைக் காண முடியும். அஹமதாபாதின் ஆற்றுக்கரையிலே உள்ள கட்டுமான அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
நண்பர்களே, போபாலில் ஒரு குழுவின் பெயர் சகாராத்மக் சோச், அதாவது ஆக்கபூர்வமான சிந்தனை. இதிலே 200 பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைப் பணியை மட்டும் மேற்கொள்வதில்லை, சிந்தனையையும் மாற்றுகிறார்கள். ஒன்றாக இணைந்து நகரின் 17 பூங்காக்களைத் தூய்மைப்படுத்துவது, துணிப்பைகளை விநியோகம் செய்வது என, இவர்களின் அனைத்துப் பணிகளிலும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே போபாலிலும் கூட இப்போது தூய்மைப்பணி ஆய்விலும் கணிசமான முன்னேற்றம் வந்திருக்கிறது. லக்னௌவின் கோமதி நதிக்குழு பற்றிப் பேசுவதும் அவசியமானது. பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சற்றும் சளைக்காமல், தடைப்படாமல் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சத்திஸ்கட்டின் பில்ஹாவின் எடுத்துக்காட்டும் அருமையானது. இங்கே பெண்களுக்கு கழிவுப்பொருள் மேலாண்மைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது, இவர்கள் ஒன்றிணைந்து நகரத்தின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள். கோவாவின் பணஜி நகர்தரும் உதாரணமும் உத்வேகம் அளிக்கவல்லது. இங்கே குப்பைகள் 16 வகையாகப் பிரிக்கப்பட்டு, இதற்கான தலைமைப் பொறுப்பையும் பெண்களே ஏற்றிருக்கிறார்கள். பணஜிக்கு குடியரசுத் தலைவர் விருதும் கிடைத்திருக்கிறது. நாம் ஆண்டிலே ஒவ்வோர் நாளும் ஒவ்வொரு கணமும் தூய்மைக்கு முதன்மை அளிக்கும்போது, தேசத்தால் தூய்மையாக இருக்க இயலும்.
நண்பர்களே, மழைக்காலத் தூரல்களுக்கு இடையே, தேசம் மீண்டும் ஒருமுறை பண்டிகைகளின் வண்ணங்களால் வண்ணமயமாக இருக்கிறது. இன்று ஹரியாலி தீஜ் பண்டிகை, அடுத்து நாக பஞ்சமி, ரக்ஷா பந்தன், பிறகு ஜன்மாஷ்டமி….. நமது விஷமக்காரக் கண்ணன் அவதரித்த நாள் கொண்டாட்டம். இந்தத் திருநாட்கள் அனைத்திலும் நமது உணர்வுகள் கலந்திருக்கின்றன, இவை நம்மை இயற்கையோடு இணைத்து வைப்பதோடு, சமநிலை பற்றிய செய்தியையும் அளிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் இந்தப் புனிதமான திருநாட்களுக்கான ஏராளமான நல்வாழ்த்துக்கள். பிரியமான என் நண்பர்களே, உங்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் மேலும் சில, புதிய சாதனைகள் மற்றும் உள்ளெழுச்சிகளை அறிந்துணர்வோம். உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள்.
*****
AD/RJ
(Release ID: 2149014)
Read this release in:
Urdu
,
Manipuri
,
English
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam