பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 18 JUL 2025 5:57PM by PIB Chennai

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர்  சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே,  ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!

நமது துர்காப்பூர், எஃகு நகரம் என்பதற்கு அப்பால் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலாளர் சக்தியின்  மையமாகவும் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் துர்காப்பூர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளது. இன்று இந்தப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். சற்று நேரத்திற்கு முன்,  5,400 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன மற்றும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இந்தத் திட்டங்கள் இப்பிராந்தியத்தின் போக்குவரத்துத் தொடர்பை விரிவாக்கும். மேலும், இவை எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து முறையையும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும். இந்த முன்முயற்சிகள்  இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி என்ற மந்திரத்தின் கீழ், மேற்கு வங்கத்தை முன்னேற்றுவதற்கு உதவியாக இருக்கும். இங்குள்ள இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரயில் போக்குவரத்து இணைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. பெருமளவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்ற மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் உள்ளது. கொல்கத்தார மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிவேகத்தில் விரிவடைந்து வருகிறது. புதிய ரயில்பாதைகள் அமைக்கப்படுகின்றன. ரயில் பாதையை மின்சார மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  பல ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று மேலும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மேற்கு வங்கத்திற்கு  வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையை எளிதாக்க குறிப்பிடத்தக்க வகையில், உதவி செய்யும்.

நண்பர்களே,

எஃகு மற்றும் மின்சார திட்டங்களைக் கொண்டுள்ள துர்காப்பூர், ரகுநாத்பூர் ஆகியவை புதிய தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை மிகுந்த திறனுடன் செயல்படுவதோடு உலகளாவிய போட்டிக்கும் தயாராக உள்ளன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதற்காக மேற்கு வங்க மக்களுக்கு நான் சிறப்பு வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு மூலம் தற்சார்பு, உணர்திறன் மூலம் நல்ல நிர்வாகம் என்ற கோட்பாடுகள் மூலம், மேற்கு வங்கத்தை  இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஆற்றல் மிக்க எந்திரமாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

----

(Release ID: 2145851)

AD/TS/SMB/KPG/KR


(Release ID: 2146320) Visitor Counter : 9