கூட்டுறவு அமைச்சகம்
நாட்டில் கூட்டுறவுத்துறை 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
17 JUL 2025 5:08PM by PIB Chennai
கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குள் 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத் திருவிழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில அரசுப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்டப்ட 8,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன்களை வழங்கியதுடன், தானிய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சிறுதானிய விற்பனை மையங்களையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார். கிராமப்புற மக்களில் 98 சதவீதம் பேருக்கு கூட்டுறவு இயக்கம் பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 8.5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளுடன் 31 கோடி மக்கள் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் நெல், கோதுமை ஆகியவற்றில் 20 சதவீத அளவை கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதாக அவர் தெரிவித்தார். 35 சதவீத உரங்களையும், 30 சதவீத சர்க்கரையையும் கூட்டுறவு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இவற்றில் 40,000 சங்கங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், துணை நிதிகளை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டுறவு இயக்கம் முக்கியப் பங்காற்றுவதாக கூறிய திரு அமித் ஷா, அனைவரும் இணைந்து மேலும் இதனை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
******
AD/TS/PLM/KPG/DL
(Release ID: 2145602)