பிரதமர் அலுவலகம்
நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை
Posted On:
10 JUL 2025 6:20AM by PIB Chennai
மேன்மைதங்கிய அதிபர் அம்மையார் அவர்களே,
துணை அதிபர் அவர்களே,
பிரதமர் அவர்களே,
நமீபியாவின் அமைச்சர் பெருமக்களே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
நமீபியா நாட்டின் மிக உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்' விருதை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெறுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மரியாதையையும் அளிப்பதாக உள்ளது.
இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த விருதின் பெயரில் உள்ள 'வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்'' என்ற தாவர வகை, கால மாற்றத்தைக் கண்டுள்ள குடும்பத்தின் மூதாதையர்களைப் போன்றது. இது நமீபிய நாட்டு மக்களின் போராட்டங்கள், துணிச்சல், கலாச்சாரத்தின் அடையாளமாகும். இது இந்தியா - நமீபியா இடையே உள்ள வலுவான நட்புக்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
இன்று, அத்தகைய சிறப்புக்களைக் கொண்ட தாவரத்தின் பெயருடன் இந்த விருது இணைந்திருப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். இந்த விருதை நமீபியா மற்றும் இந்திய மக்களுக்கும், அவர்களின் தொடர் முன்னேற்றம், மேம்பாடு, ஆகியவற்றில் உறுதியான நட்புறவு மற்றும் நீடித்த வலிமைக்கும் அர்ப்பணிக்கிறேன்.
நண்பர்களே,
இக்கட்டான தருணங்களில் மட்டுமே, உண்மையான நண்பர்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இந்தியா - நமீபியா நாடுகள் தங்களது சுதந்திரப் போராட்ட காலங்களிலிருந்து ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அரசியலை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், பகிரப்பட்ட போராட்டங்கள், ஒத்துழைப்பு, பரஸ்பரம் ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளன.
இவ்விரு நாடுகளிடையேயான பிணைப்பு பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான பொதுவான கனவுகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வரும் காலங்களில், வளர்ச்சிக்கான பாதையில் நாம் இணைந்து பணியாற்றுவோம்.
நண்பர்களே,
உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக நமீபியா திகழ்கிறது. மேலும், இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ளது. எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வைரங்களைப் போலவே நன்றாகப் பிரகாசிக்கும் என்று நம்புகிறேன்.
எனவே, இந்தியா - நமீபியா நாடுகள் ஒன்றிணைந்து, அந்நாட்டு அதிபரின் நீண்ட ஆயுளுக்கும், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கும், வளத்திற்கும், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புக்கும் நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
மிக்க நன்றி.
**
(Release ID: 2143602)
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2143670)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam