பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு

Posted On: 09 JUL 2025 6:02AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.

இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முகத்தன்மையுடன் கூடிய உத்திசார் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துகள், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், உணவு பதப்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, யுபிஐ, பாரம்பரிய மருத்துவம், யோகா, விளையாட்டு, கலாச்சாரம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அரிய வகை கனிமங்கள், புதிய மற்றும் வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமைச்சர்கள் நிலையிலான அமைப்பை உருவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியா – மெர்கோசர் வர்த்தக  ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் இதில் இடம் பெற்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது எனவும் ஹைட்ரோ கார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் உள்ள ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை  பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்ததற்காக பிரேசில் நாட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார். பயங்கரவாதச் செயல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான செயல்களின் அனைத்து வடிவங்களையும் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதை அந்நாட்டு அதிபர் திரு லூலா ஒப்புக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச நிர்வாக அமைப்புகளில்  சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர். பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். விரைவில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டிற்காக பிரேசிலுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். உலகின் தென்பகுதியில் உள்ள  வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது எனவும் இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்புத் துறையில் தகவல் பரிமாற்றம், வேளாண் ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பு  ஆகிய துறைகளில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  இறுதி செய்யப்பட்டன. பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்நாட்டு அதிபர் திரு லூலா மதிய விருந்தளித்தார்.  அந்நாட்டு அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்தியாவுக்கு  வருகை  தருமாறு  அழைப்பு விடுத்தார்.

----

(Release ID: 2143278)

VL/TS/SV/KPG/KR


(Release ID: 2143388) Visitor Counter : 4