பிரதமர் அலுவலகம்
கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
03 JUL 2025 2:35AM by PIB Chennai
அதிபர் திரு ஜான் மஹாமா அவர்களே,
இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த பெருமை.
கானாவில் எங்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ள நபராக இருக்கிறேன்.
அதிபரே என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயமாகும்.
2024 டிசம்பர் பொதுத் தேர்தலில் அதிபர் திரு மகாமா 2-வது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மகத்தான வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை அவரை வாழ்த்துகிறேன்.
இந்த வெற்றி கானா மக்கள் அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் அவரது தலைமையின் மீது கொண்டுள்ள வலுவான நம்பிக்கையைக் குறிக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான நட்பின் மையமாக நமது பகிரப்பட்ட நம்பிக்கைகள், அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட கனவு ஆகியவை உள்ளன.
நமது நாடுகளின் சுதந்திரப் போராட்டம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.
இப்போதும் கூட, கானாவின் துடிப்பான ஜனநாயகம் மேற்கு ஆப்பிரிக்காவில் "நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக" செயல்படுகிறது.
தற்போது, அதிபரும் நானும் எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
கானாவை கட்டியெழுப்பும் பயணத்தில், இந்தியா ஒரு ஆதரவாளராக மட்டுமல்ல, சக பயணியாகவும் உள்ளது.
கிராண்ட் ஜூபிலி ஹவுஸ், வெளிநாட்டு சேவைகள் நிறுவனம், கோமெண்டா சர்க்கரை தொழிற்சாலை, இந்தியா-கானா கோஃபி அன்னன் ஐசிடி மையம், தேமா மபகாடன் ரயில் பாதை போன்றவை வெறும் செங்கற்கள், மோட்டார் இயந்திரங்கள் மட்டுமல்ல, அவை எங்களது ஒத்துழைப்பின் அடையாளச் சின்னங்களாகும்.
எங்கள் இருதரப்பு வர்த்தகம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்திய நிறுவனங்கள் சுமார் 900 திட்டங்களில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.
தற்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
நிதி தொழில்நுட்பத் துறையில், கானாவுடன் யுபிஐ டிஜிட்டல் கட்டண அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
நண்பர்களே,
வளர்ச்சியில் ஒத்துழைப்பு எங்கள் முக்கிய தூணாகும்.
அதிபர் திரு மகாமாவின் 'பொருளாதார மறுசீரமைப்பு' முயற்சிகளுக்கு இந்தியாவின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குகிறோம்.
தற்போது, கானாவிற்கான ஐடிஇசி, ஐசிசிஆர் உதவித்தொகைகளை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம்.
இளைஞர்களின் தொழிற்கல்விக்காக ஒரு திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
விவசாயத் துறையில், அதிபர் திரு மகாமாவின் "ஃபீட் கானா" திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மக்கள் மருந்தக மையங்கள் மூலம் கானா மக்களுக்கு மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பையும் நம்பகமான சேவையையும் வழங்க இந்தியா முன்வருகிறது.
தடுப்பூசி உற்பத்தியில் ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்.
பாதுகாப்புத் துறையில், "நிலைத்தன்மை மூலம் பாதுகாப்பு" என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறுகிறோம்
ஆயுதப்படைகளின் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு, ராணுவத் தளவாடங்கள், இணையதள பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும்.
முக்கியமான கனிமங்களை ஆராய்வதிலும் சுரங்கங்கள் அமைப்பதிலும் இந்திய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கும்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற தளங்களில் இந்தியாவும் கானாவும் ஏற்கனவே ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், குறிப்பாக தூய்மையான சமையல் எரிவாயுவில் கானாவின் முயற்சிகளை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும், நாங்கள் அவர்களை உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் இணைத்துள்ளோம்.
நண்பர்களே,
நாங்கள் இருவரும் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் உறுப்பினர்கள். அவற்றின் முன்னுரிமைகளுக்கு முழுமையாக உறுதியளித்துள்ளோம்.
உலகளாவிய தென்பகுதி நாடுகளின் குரல் உச்சி மாநாட்டில் தீவிரமாக பங்கேற்றதற்காக கானாவுக்கு நன்றி கூறுகிறோம்.
எங்கள் ஜி20 தலைமையின் போது ஆப்பிரிக்க யூனியன் ஜி20-ல் நிரந்தர உறுப்பினராக இடம் பெற்றது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
சஹேல் பகுதி உட்பட பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதங்களை நடத்தினோம். பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி என்ற எங்கள் பார்வையில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் கானா அளித்த ஒத்துழைப்புக்கு நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தச் சூழலில், பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் எங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். ஐ.நா. சீர்திருத்தங்கள் குறித்த எங்கள் கண்ணோட்டங்களும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் நடந்து வரும் மோதல்கள் குறித்து நாங்கள் இருவரும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளோம். இது போரின் சகாப்தம் அல்ல என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியாகும்.
நண்பர்களே,
கானாவில் உள்ள இந்திய சமூகம் நமது மக்களுக்கு இடையேயான உறவுகளில் ஒரு முக்கிய இணைப்பாகும்.
பல ஆண்டுகளாக, இந்திய ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் கானாவில் பணியாற்றி வருகின்றனர்.
கானாவின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு இந்திய சமூகம் நேர்மறையான பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்திய சமூகத்தினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அதிபர் அவர்களே,
நீங்கள் இந்தியாவின் நெருங்கிய நண்பர். நீங்கள் இந்தியாவை நன்கு அறிந்தவர்.
இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். உங்களை வரவேற்க எங்களுக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் அன்பான விருந்தோம்பலுக்காக உங்களுக்கும், கானா அரசுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
----
(Release ID: 2141691)
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141789)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam