உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு, பயணிகள் வசதி மற்றும் விமான செயல்திறன் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 19 JUN 2025 5:25PM by PIB Chennai

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பாதுகாப்பு, பயணிகள் வசதி மற்றும் விமான செயல்திறன் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

 

விபத்துக்குப் பிந்தைய சோதனைகள், வானிலை மாற்றங்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக சில வான்வெளிகள் மூடல் போன்ற பல காரணங்களால் விமானங்களின் அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து, தரைமட்ட தயார்நிலை மற்றும் பயணிகள் ஆதரவு வழிமுறைகளை ஆய்வு செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலைய இயக்குநர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற விரிவான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தலைமை தாங்கினார்.

 

கூட்டத்தின்போது, பயணிகள் பிரச்சினைகள் விரைவாகவும், அந்த இடத்திலேயே தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக விமான நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக விமான தாமதங்கள் அல்லது நெரிசல் ஏற்படும் போது, ​​முனையங்களில் உணவு, குடிநீர் மற்றும் போதுமான இருக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. பயணிகளின் குறைகளை முன்கூட்டியே நிர்வகிக்க முக்கிய தொடர்பு புள்ளிகளில் போதுமான பணியாளர்களை ஈடுபடுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பான விமான நிலைய சூழலைப் பராமரிக்க, வனவிலங்கு ஆபத்து மேலாண்மையை வலுப்படுத்த விமான நிலைய இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருடன் உயர் மட்ட சந்திப்பை நடத்தினார். செயல்பாட்டு தொடர்ச்சியைப் பராமரிப்பது, பொதுமக்களுடன் வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய தகவல்தொடர்பை ஆதரிப்பது மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதயை மேம்படுத்துவது ஆகிய மூன்று  முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

 

சிவில் விமானப் போக்குவரத்தின் அனைத்து அம்சங்களிலும் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிக உயர்ந்த முன்னுரிமையை அளிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137718

 

***

AD/RB/DL


(Release ID: 2137849)