பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகாரின் காராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களின் முகாம்களை நமது ராணுவம் அழித்து விட்டது: பிரதமர்

இந்திய புதல்விகளின் குங்கும சக்தியை பாகிஸ்தானும், உலகமும் பார்த்தது: பிரதமர்

மாவோயிச வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு கிராமத்துக்கும் அமைதி, பாதுகாப்பு, கல்வி, வளர்ச்சி சென்றடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை: பிரதமர்

பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற பீகார் மக்களின் நீண்டநாள் கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது: பிரதமர்

எங்களின் அரசு மக்கானா வாரியம் அறிவித்ததும், பீகாரின் மக்கானாவுக்கு புவிசார் குறியீடு வழங்கியதும் மக்கானா விவசாயிகளுக்கு பெருமளவு பயனளித்துள்ளது: பிரதமர்

Posted On: 30 MAY 2025 1:11PM by PIB Chennai

பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் புனிதபூமியில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் கடமையை தாம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். ரூ.48,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்ததையும் அவர் எடுத்துரைத்தார். தம்மை அசீர்வதிப்பதற்கு வந்துள்ள பெருந்திரளான பீகார் மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்த பிரதமர், மிக உயர்ந்த அளவில் அவர்களின் ஆதரவை தாம் எப்போதும் பெற்றிருப்பதாக கூறினார். பீகாரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தமது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

சாசாராமின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த அவர், இதன் பெயர் கூட பகவான் ராமரின் மரபுரிமையைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒரு வாக்குறுதியை அளித்து விட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சமரசமற்ற, உறுதியான கோட்பாடு பகவான் ராமரின் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பதாக திரு மோடி கூறினார். வழிகாட்டும் தத்துவமான இது புதிய இந்தியாவின் கொள்கையாக தற்போது மாறியுள்ளது என்று அவர் உறுதிபட தெரிவித்தார். பஹல்காமில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த திரு மோடி, அப்பாவி மக்கள் பலரின் உயிரை அது பறித்தது என்றார். இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் தாம் பீகாருக்கு வருகை தந்ததையும், பயங்கரவாதத்தின் மூளைகளாக இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத தண்டனையை பெறுவார்கள் என்றும் நாட்டுக்கு மக்களுக்கு உறுதி அளித்தது பற்றி அவர் குறிப்பிட்டார். பீகாருக்கு மீண்டும் வருகை தந்துள்ள இப்போது தமது உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு நமது சகோதரிகளின் சிந்தூரம் அழித்தவர்களின் முகாம்களை நமது ராணுவம் அழித்து விட்டது என்று திரு மோடி தெரிவித்தார். இந்திய புதல்விகளின் குங்கும சக்தியை பாகிஸ்தானும், உலகமும் பார்த்தது என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் தாங்கள் இருப்பதாக நினைத்த பயங்கரவாதிகள், இந்திய ராணுவத்தின் உறுதியான ஒற்றை நடவடிக்கையால் மண்டியிட்டார்கள் என்றார். சில நிமிடங்களுக்குள் பாகிஸ்தானின் விமான தளங்களும், ராணுவ முகாம்களும் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு மோடி, “இது புதிய இந்தியா – ஏராளமான சக்தியும், உறுதியும் கொண்ட இந்தியா” என்றார்.

வீரத்திற்கு பெயர் பெற்ற வீர் கன்வர் சிங்கின் பூமி பீகார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், தேசத்தைப் பாதுகாக்க இந்திய ராணுவத்திலும், எல்லைப் பாதுகாப்புப் படையிலும் பணியாற்றும் பீகாரின் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார். ஆபரேஷன் சிந்தூரின் போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்திய அசாதாரணமான தைரியத்தையும், அசைக்க முடியாத துணிவையும் பாராட்டிய அவர், அவர்களின் ஒப்பற்ற வீரத்தை இந்த உலகம் பார்த்ததாகக் கூறினார். இந்தியாவின் எல்லைகளில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் தகர்க்க முடியாத கேடயமாக விளங்குகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் கடமை உணர்வு அன்னை இந்தியாவை பாதுகாப்பதாகக் கூறினார். எல்லைப் பகுதியில் தமது கடமையை நிறைவேற்றும் போது மே 10 அன்று உயிர்த் தியாகம் செய்த எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் திரு இம்தியாசுக்கு அஞ்சலி செலுத்திய அவர், பீகாரின் துணிச்சல்மிக்க இந்த புதல்வருக்கு மரியாதையும் செலுத்தினார். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட சக்தி அம்பறாத்தூணியிலிருந்து எய்யப்பட்ட ஓர் அம்பு மட்டும்தான் என்பதை பீகாரிலிருந்து பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

எல்லைக்கு அப்பாலிருந்து செயல்படுபவர்களாக இருந்தாலும் அல்லது நாட்டுக்கு உள்ளேயே இருந்து செயல்படுபவர்களாக இருந்தாலும் தேசத்தின் ஒவ்வொரு எதிரிக்கும் எதிராக இந்தியா போராடுகிறது என்று திரு மோடி கூறினார். கடந்த பல ஆண்டுகளாக வன்முறை மற்றும் சீர்குலைவு சக்திகள் அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை பீகார் பார்த்திருப்பதாக அவர் கூறினார். சாசாராம், கைமூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கடந்த கால நிலைமைகளையும் இந்தப் பகுதியில் நக்சலிசம் ஒரு காலத்தில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பதையும் முகமூடி அணிந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நிரந்தர அச்சுறுத்தல்களாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். அரசுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் போது அவை நக்சல் பாதித்த கிராமங்களின் மக்களை சென்றடைவதில்லை. அங்கு மருத்துவமனைகளோ, செல்பேசி கோபுரங்களோ இல்லை. பள்ளிகள் எரிக்கப்படுகின்றன என்று திரு மோடி மேலும் கூறினார். சாலை அமைக்கும் பணியாளர்கள் தொடர்ந்து இலக்காக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லையென்று அவர் கூறினார். இத்தகைய சவாலான சூழ்நிலைகள் உள்ள போதும் வளர்ச்சியை நோக்கி நிதிஷ்குமார் பணியாற்றியதை அங்கீகரித்த அவர், 2014 முதல் இந்தத் திசையில் முயற்சிகள் வேகமடைந்துள்ளன என்றார். மாவோயிஸ்டுகளின் செயல்களுக்காக அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுகின்றனர்.  வளர்ச்சியின் மைய நீரோட்டத்தில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதை அவர் எடுத்துரைத்தார். 11 ஆண்டு கால உறுதியான முயற்சிகளின் பலன்கள் இப்போது கண்கூடாகத் தெரிகின்றன என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் 125-க்கும் அதிகமான மாவட்டங்கள் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது 18 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் அரசு சாலைகளை கட்டமைப்பதோடு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. மாவோயிச வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு கிராமத்துக்கும் அமைதி, பாதுகாப்பு, கல்வி, வளர்ச்சி சென்றடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று பிரதமர் திரு மோடி உறுதிபட தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நிறுத்தப்படவும் இல்லை, வேகம் குறையவும் இல்லை என்று கூறிய அவர், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் மறைவிடத்திலிருந்து அது வெளியே இழுக்கப்பட்டு உறுதியாக நசுக்கப்படும் என்று அறிவித்தார்.

பாதுகாப்பும், அமைதியும் வளர்ச்சியின் புதிய தளங்களுக்கு வழிவகுக்கின்றன என்று கூறிய பிரதமர், நிதிஷ்குமார் தலைமையின் கீழ் காட்டாட்சி வெளியேற்றப்பட்டு பீகார் வளர்ச்சியடைந்துள்ளது என்றார். சிதைந்த நெடுஞ்சாலைகள், சீரழிந்த ரயில்பாதைகள், அளவான விமான இணைப்பு என்பதெல்லாம் இப்போது கடந்தகாலம் ஆகி விட்டது என்று அவர் தெரிவித்தார். பீகாரில் ஒரு காலத்தில் பாட்னா என்ற ஒரேயொரு விமான நிலையம் மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்று தர்பங்கா விமான நிலையமானது தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானப் போக்குவரத்தை வழங்குகிறது. பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்கும் பீகார் மக்களின் நீண்டநாள் கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். நேற்று மாலை பாட்னா விமான நிலைய புதிய முனைய கட்டடத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் ஒரு கோடி பயணிகளை   இப்போது கையாள முடியும் என்றார். பீகார் விமான நிலையத்தில் ரூ.1400 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பீகார் முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறுவழிச்சாலை என விரிவான வளர்ச்சி ஏற்பட்டு வருவதை எடுத்துரைத்த திரு மோடி, பாட்னாவிலிருந்து பக்சார் வரை, கயாவிலிருந்து தோபி வரை, பாட்னாவிலிருந்து புத்தகயா வரை இணைக்கின்ற நெடுஞ்சாலைகள் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றார். பாட்னா – ஆரா – சாசாராம் பசுமை வழித்தடப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். கங்கை, சான், கண்டக், கோசி போன்ற முக்கிய நதிகளின் மீது புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறிய திரு மோடி, பீகாருக்கு புதிய வாய்ப்புகளையும், சாத்தியக் கூறுகளையும் அதிகரிக்க செய்வதில் அவற்றின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு இந்தப் பிராந்தியத்தில் சுற்றுலாவையும், வர்த்தகத்தையும் அதிகரிக்க செய்யும் என்றும் அவர் கூறினார்.

பீகார் மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள  மாற்றத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், அம்மாநிலத்தில் உலகத் தரம் வாய்ந்த வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும், ரயில் வழித்தடங்களை  இரட்டிப்பாக்குதல் மற்றும் மும்மடங்காக்கும் நடவடிக்கைகளின்  தற்போதைய செயல்முறையையும் திரு. நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். சாப்ரா, முசாபர்பூர் மற்றும் கதிஹார் போன்ற பகுதிகளில் இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். சோன் நகர் - அன்டால் இடையே பல வழித்தடங்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இது ரயில் போக்குவரத்து சேவையை கணிசமான அளவில் மேம்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார். 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்போது சசாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதாகவும், இது இப்பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து இணைப்பிற்கான வசதிகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். நீண்டகால சவால்களுக்கு தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், ரயில்வே கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இத்தகைய முன்னெடுப்புகளை முந்தைய ஆட்சிக்காலத்திலேயே செயல்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் பீகார் மாநிலத்தின் ரயில்வே கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்குப் பொறுப்பானவர்கள் தங்களது சுய லாபத்திற்காக ஆட்சேர்ப்பு செயல்முறைகளைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறை கூறினார். இதன் காரணமாக மக்கள் தங்களது  உரிமையான வாய்ப்புகளை இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பீகார் மாநில மக்கள், முந்தைய ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மின்சாரம் இல்லாமல் வளர்ச்சி முழுமையடையாது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில்துறை முன்னேற்றம், எளிதான வாழ்வியல் முறை ஆகியவை நம்பகமான மின்சார விநியோகத்தைச் சார்ந்துள்ளது என்று கூறிய பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் பீகார் மாநிலம் மின்சார உற்பத்தியில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அம்மாநிலத்தில் மின்சார நுகர்வு பத்தாண்டு காலத்திற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நபிநகரில் ரூ. 30,000 கோடி முதலீட்டில் மிகப் பெரிய தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கும் திட்டம் தற்போது கட்டுமானப் பணி நிலையில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் அம்மாநிலத்திற்கு 1,500 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் என்றும் பிரதமர் அறிவித்தார். பக்சர் மற்றும் பிர்பைன்டி பகுதிகளில் புதிய அனல் மின் நிலையங்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

எதிர்காலத்தில், குறிப்பாக பீகார் மாநிலம் பசுமை எரிசக்தி உற்பத்தியில்   முன்னோடி மாநிலமாக உருவெடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக கஜ்ரா-வில் ஒரு சூரிய மின் உற்பத்திக்கான பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். பிரதமரின் விவசாயிகள் மின்சார பாதுகாப்பு உறுதித் திட்டத்தின் கீழ், விவசாயிகள் சூரிய மின்சக்தி மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக வேளாண் மூலப்பொருட்களுக்கான பண்ணைகளுக்கு மின்வசதியை வழங்குகின்றன என்றும், இவை வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் இத்தகைய முயற்சிகளின் விளைவாக, மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதுடன், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என்றும் அவர் கூறினார். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்குகிறது என்றும், இதன் காரணமாக, பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள  முடியும் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முதலீடுகள் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கின்றன என்றும் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் வர்த்தக உச்சிமாநாட்டை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தில் ஏற்படும் தொழில்துறை வளர்ச்சி, தொழிலாளர் இடம்பெயர்வுக்கான தேவைகளைக் குறைப்பதுடன், மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ள முடியும் என்று கூறினார். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள், விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை அதிக தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்ய உதவுகின்றன. இது, வேளாண் துறையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பீகாரில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், அம்மாநிலத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருவதாகக் கூறினார். தாமரை விதைகள் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மக்கானா வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார். பீகார் மாநிலத்தின்  மக்கானாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இது மக்கானா விவசாயிகளுக்கு கணிசமான பலனை அளித்துள்ளது என்று கூறினார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பீகார் மாநிலத்தில் தேசிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு, காரீப் பருவத்திற்கான நெல் உட்பட 14 பயிர் வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த முடிவு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யும் என்றும், அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பீகார் மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சமூக நீதி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக எதிர்கட்சிகளை பிரதமர் விமர்சித்தார். அவர்களது ஆட்சிக் காலத்தில், பீகாரில் உள்ள ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நல்ல வாழ்வாதாரத்தைத் தேடி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். "பல தசாப்தங்களாக, அம்மாநிலத்தில் உள்ள தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின  சமூகங்கள் அடிப்படை சுகாதார வசதிகள் எதுவுமின்றி இருந்தனர்" என்றும் பிரதமர் கூறினார். இந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு  வங்கிச் சேவை கிடைக்காத நிலை இருந்தது. அவர்கள் பெரும்பாலும் வங்கிகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, பெரும்பாலும் வீடற்றவர்களாகவே இருந்தனர் என்று கூறினார். லட்சக்கணக்கான மக்கள் சரியான தங்குமிட வசதி இல்லாமல் வாழ்கின்றனர் என்பதை அவர் சுட்டுக் காட்டினார். கடந்த கால அரசுகளின் கீழ் பீகார் மாநில மக்கள் அனுபவித்த துன்பங்கள், இன்னல்கள் மற்றும் அநீதிகள் ஆகியவை எதிர்க்கட்சிகள் வாக்குறுதியளித்த சமூக நீதியா? என்று அவர் வினவினார். இதைக் காட்டிலும் பெரிய அநீதி எதுவும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் போராட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் ஒருபோதும் உண்மையான அக்கறை செலுத்தியதில்லை என்றும், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்குப் பதிலாக, அம்மாநில மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, அவர்களின் வறுமை நிலையை வெளிப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்து வந்ததற்காக எதிர்க்கட்சிகள்  விமர்சிக்கப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் தவறுகளால் தலித்துகள், விளிம்புநிலையில் உள்ள மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தங்களை தொலைதூரமாக விலக்கிக் கொண்ட பிறகு, சமூக நீதியை வலியுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் தங்களது அடையாளத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக பிரதமர் குற்றம் சாட்டினார்.

தமது தலைமையிலான அரசின் கீழ், பீகார் மாநிலம் உட்பட நாடு முழுவதும் சமூக நீதியின் புதிய விடியலைக் கண்டிருப்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, ஏழை மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்றும், தகுதியுள்ள 100% பயனாளிகளுக்கும் சலுகைகளை வழங்குவதற்காக பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏழை மக்களுக்காக நான்கு கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்றும், 'லட்சாதிபதி சகோதரி' என்ற முயற்சி மூலம் மூன்று கோடி பெண்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன என்றும், இதனால் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார். 70 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற உரிமை உண்டு என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். உதவி தேவைப்படும் மக்களுக்கு மாதந்தோறும் இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஒவ்வொரு ஏழை மற்றும் பின்தங்கிய நபர்களுடனும் அவர்களின் நல்வாழ்வையும் மேம்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் அவர்களுடன் அரசு துணை நிற்கிறது" என்று திரு நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எந்தவொரு கிராமமோ அல்லது தகுதியுள்ள குடும்பமோ அதன் நலத்திட்ட முயற்சிகளில் இருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான அரசின் கடப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார். இத்தகைய  தொலைநோக்குப் பார்வையுடன் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சமக்ர சேவா திட்டத்தைத் தொடங்கியதில் பிரதமர் திருப்தி தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் கீழ், அரசு 22 அத்தியாவசியத் திட்டங்களுடன் கிராமங்கள் மற்றும் சமூகங்களை ஒரே நேரத்தில் சென்றடைகிறது என்றும், தலித்துகள், மகாதலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஏழைகளுக்கு நேரடியாக பயனளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும், லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நலத்திட்ட உதவிகள்  பயனாளிகளை நேரடியாகச் சென்றடையும்போது, பாகுபாடு மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், சமூக நீதியின் உண்மையான உருவகமாக அரசின் அணுகுமுறை அதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

பாபா சாகேப் அம்பேத்கர், கற்பூரி தாக்கூர், பாபு ஜகஜீவன் ராம் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரால் கற்பனை செய்யப்பட்ட பீகார் மாநிலத்தை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக் காட்டிய திரு. நரேந்திர மோடி, இறுதி இலக்காக வளர்ச்சியடைந்த பீகார் என்றும், இது வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு பங்களிப்பதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பீகார் மாநிலம் முன்னேற்றம் அடையும் போதெல்லாம், இந்தியா உலகளவில் புதிய உச்சங்களை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவரும் இணைந்து வளர்ச்சிக்கான வேகத்தை துரிதப்படுத்தும் முயற்சிகளில் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்று  நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு. ஜிதன் ராம் மஞ்சி, திரு. கிரிராஜ் சிங், திரு. ராஜீவ் ரஞ்சன் சிங், திரு. சிராக் பாஸ்வான், திரு. நித்யானந்த் ராய், திரு. சதீஷ் சந்திர துபே, டாக்டர். ராஜ் பூஷண் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

பின்னணி:

இந்தப் பகுதியில் மின்சார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பீகார் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஔரங்காபாத் மாவட்டத்தில் ரூ.29,930 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தின்  இரண்டாம் கட்டப் பணிகளுக்கு  (3x800 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதுடன்,  வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இப்பகுதியில் மலிவு விலையில் மின்சாரம் கிடைப்பதற்கும் வகை செய்கிறது. இந்தப் பகுதியில் சாலை உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக்கான இணைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை  - 119ஏ - ன் பாட்னா-அர்ரா-சசாரம் பிரிவின் நான்கு வழிச்சாலை, வாரணாசி-ராஞ்சி-கொல்கத்தா நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை - 319 பி) மற்றும் ராம்நகர்-கச்சி தர்கா பாதை (தேசிய நெடுஞ்சாலை - 119 டி) ஆகியவற்றின் ஆறு வழிச்சாலை, மற்றும் பக்சர் - பராலி இடையே புதிய கங்கா மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் வர்த்தகம் மற்றும் பிராந்திய இணைப்பை அதிகரிப்பதோடு, மாநிலத்தில் தடையற்ற அதிவேக வாகனங்களுக்கான சாலைகளையும் உருவாக்கும். தேசிய நெடுஞ்சாலை - 22 - ல் சுமார் ரூ.5,520 கோடி மதிப்பிலான பாட்னா - கயா - தோபி பிரிவின் நான்கு வழிச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை - 27 - ல் உள்ள கோபால்கஞ்ச் நகரில் உயர்மட்ட  நெடுஞ்சாலையின் நான்கு வழித்தடங்களையும், தரம் உயர்த்தப்பட்ட சாலைகளையும் அவர் திறந்து வைத்தார். நாடு முழுவதும் ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதியான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் ரூ.1330 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான  சோன் நகர் - முகமது கஞ்ச் இடையேயான 3-வது ரயில் வழித்தடத்தையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

***

(Release ID : 2132621)

AD/TS/SMB/RR/SG


(Release ID: 2132751)