பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்ட பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
26 APR 2025 1:08PM by PIB Chennai
வணக்கம்!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இன்று, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நிரந்தர அரசு பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இளைஞர்களாகிய உங்களுக்குப் பொறுப்புகளின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தற்போது உங்கள் கடமை; நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது உங்கள் கடமை; நாட்டிற்குள் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது உங்கள் கடமை; மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அடிப்படை முன்னேற்றங்களை ஏற்படுத்துவதும் உங்கள் கடமை. நீங்கள் உங்கள் பணிகளை எவ்வளவு உண்மையாகவும் நேர்மையாகவும் நிறைவேற்றுகிறீர்களோ, அந்த அளவு குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறையான தாக்கம் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் இடம்பெறும். நீங்கள் உங்கள் பொறுப்புகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் அடித்தளம் அதன் இளைஞர்களிடம் உள்ளது. இளைஞர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாகப் பங்கேற்கும்போது, நாடு விரைவாக முன்னேறி, உலக அரங்கில் தனது இருப்பை நிலைநிறுத்துகிறது. தற்போது, இந்திய இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் புதுமை மூலம், நமது நாட்டிற்குள் இருக்கும் மகத்தான ஆற்றலை உலகிற்கு நிரூபித்து வருகின்றனர். நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் விரிவடைவதை நமது அரசு ஒவ்வொரு அடியிலும் உறுதி செய்து வருகிறது. திறன் இந்தியா, புத்தொழில் இந்தியா மற்றும் மின்னணு இந்தியா போன்ற பல்வேறு முயற்சிகள் இந்தத் திசையில் இளைஞர்களுக்கு புதிய வழிகளை உருவாக்குகின்றன. இந்த முயற்சிகள் மூலம், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு திறந்த தளத்தை நாங்கள் வழங்குகிறோம். இதன் விளைவாக, இந்தப் பத்தாண்டில், நமது இளைஞர்கள் தொழில்நுட்பம், தரவு மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்தியாவை உலகின் முன்னணியில் கொண்டு சென்றுள்ளனர்.
நண்பர்களே,
இந்த ஆண்டு பட்ஜெட்டில், அரசு உற்பத்தி இயக்கத்தை அறிவித்துள்ளது. இதன் நோக்கம் இந்தியாவில் தயாரியுங்கள் முயற்சியை ஊக்குவிப்பதும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரநிலைகளுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும். இந்த இயக்கமானது லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
நண்பர்களே,
உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) எதிர்வரும் நாட்களில் மும்பையில் நடைபெற உள்ளது. முதல் முறையாக, இந்தியா முழுவதிலுமிருந்து வரும் இளம் படைப்பாளிகள் இத்தகைய மதிப்புமிக்க தளத்தில் பங்கேற்கலாம். ஊடகம், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் புதுமையாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்ட இது ஒரு முன்னோடியில்லாத வாய்ப்பை வழங்குகிறது. பொழுதுபோக்கு துறையில் உள்ள தொடக்க நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் இணையக்கூடிய ஒரு தளமாக இது செயல்படும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குக் கனவுகள் இருப்பது போலவே, 140 கோடி சக இந்தியர்களுக்கும் கனவுகள் உள்ளன. உங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருப்பது போல, 140 கோடி குடிமக்களின் கனவுகளை நனவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது தற்போது உங்கள் கடமையாகும். நீங்கள் வகிக்கும் பதவியை நீங்கள் மதிப்பீர்கள், மக்களின் பெருமையை மேம்படுத்துவீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்கு உங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த அன்பான வாழ்த்துக்களுடன், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
TS/IR/AG/RR
(Release ID: 2128393)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam