பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 MAY 2025 12:46PM by PIB Chennai

புகழ்பெற்ற பிரதிநிதிகள், மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நண்பர்களே,

வணக்கம்!

உலக விண்வெளி ஆய்வு மாநாடு 2025-ல் உங்கள் அனைவருடனும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. இது ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம். இந்தியாவின் விண்வெளிப் பயணம் இந்த உணர்வையே பிரதிபலிக்கிறது. 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டைச் செலுத்தியதில் இருந்து, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக மாறியது வரை, நமது பயணம் குறிப்பிடத்தக்கது. நமது ராக்கெட்டுகள் விண்கலன்களை மட்டுமல்லாமல் 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன. இந்தியாவின் சாதனைகள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் ஆகும். அதையும் தாண்டி, மனித  உந்துதல் உணர்வுகள் புவிஈர்ப்பு விடையைத் தாண்டும் என்பதற்கு அவை சான்றாகும். 2014-ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்து இந்தியா வரலாறு படைத்தது. சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது. சந்திரயான்-2 சந்திரனின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை நமக்கு வழங்கியது. சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரித்தது. சாதனை அளவாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கினோம். ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தினோம். நமது செலுத்து வாகனங்களில் 34 நாடுகளுக்காக 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளோம். இந்த ஆண்டு, இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தினோம். இது ஒரு பெரிய சாதனையாகும்.

நண்பர்களே,

இந்தியாவின் விண்வெளிப் பயணம் மற்றவர்களுடனான போட்டி அல்ல. அது ஒன்றாக இணைந்து உச்சத்தை அடைவது பற்றியதாகும். மனிதகுலத்தின் நன்மைக்காக விண்வெளியை ஆராய்வதற்கான பொதுவான இலக்கை நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம். தெற்காசிய நாடுகளுக்காக ஒரு செயற்கைக்கோளை செலுத்தினோம். நமது ஜி20 தலைமைத்துவ காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜி20 செயற்கைக்கோள் இயக்கம், உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கு ஒரு பரிசாக அமையும். புதிய நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். அறிவியல் ஆய்வின் எல்லைகளைத் தாண்டி நாம் செயல்பட்டு வருகிறோம். நமது முதல் மனித விண்வெளி-பயணப் பணியான 'ககன்யான்', நமது நாட்டின் எதிர்பார்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. வரும் வாரங்களில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இஸ்ரோ-நாசா கூட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்வார். 2035-ம் ஆண்டுக்குள், பாரதிய அந்தரிக்ஷா  நிலையமானது ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் புதிய எல்லைகளைத் திறக்கும். 2040-ம் ஆண்டுக்குள், ஒரு இந்தியரின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளியும் நமது ஆய்வுப் பணிகளின் வரிசையில் உள்ளன.

நண்பர்களே,

இந்தியாவைப் பொறுத்தவரை, விண்வெளி என்பது ஆய்வு மற்றும் அதிகாரமளித்தல் பற்றியதாகும். இது நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. தலைமுறைகளை ஊக்குவிக்கிறது. மீனவர் எச்சரிக்கைகள் முதல் விரைவுசக்தி தளம் வரை, ரயில்வே பாதுகாப்பு முதல் வானிலை முன்னறிவிப்பு வரை, நமது செயற்கைக்கோள்கள் ஒவ்வொரு இந்தியரின் நலனையும் கவனத்தில் கொள்கின்றன. நமது விண்வெளித் துறையில் புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க வழி செய்துள்ளோம். இன்று, இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை செயற்கைக்கோள் தொழில்நுட்பம், உந்துவிசை அமைப்புகள், இமேஜிங் உள்ளிட்ட பலவற்றில் அதிநவீன முன்னேற்றங்களுக்குப் பங்களிக்கின்றன. மேலும், நமது பல பயணங்கள் பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுவது என்பது கூடுதல் ஊக்கமளிக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவின் விண்வெளிப் பார்வை, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பண்டைய இந்திய ஞானத்தின் அடித்தளமாக உள்ளது. அதாவது, நாம் நமது சொந்த வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், உலகளாவிய அறிவை வளப்படுத்தவும், பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கவும் பாடுபடுகிறோம். இந்தியா ஒன்றாக கனவு கண்டு, ஒன்றாக தேசத்தைக் கட்டமைத்து, விண்வெளியில் சாதனைகளை இணைந்து படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிறந்த எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் பகிரப்பட்ட கனவுகளால் வழிநடத்தப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஒன்றாக எழுதுவோம்.

நன்றி.  

***

(Release ID: 2127421)
TS/PLM/RR/KR

 


(Release ID: 2127498)