உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்: கலைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு), டாக்டர் கே.தாமோதரன் (சமையல்), ஆர்.ஜி.சந்திரமோகன் (தொழில் - வர்த்தகம்), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம், கல்வி), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதி (கலை) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 28 APR 2025 7:20PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (28.04.2025) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கௌரவித்தார். கலைத்துறையில் அவரது சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை வல்லுநர் டாக்டர் கே.தாமோதரன், வர்த்தகம், தொழில் துறையில் சிறந்த பங்களிப்புக்காக ஆர்.ஜி.சந்திரமோகன், இலக்கியம், கல்வித் துறையில் சிறந்த பங்களிப்புக்காக டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர், சிற்பக் கலையில் சிறந்த பங்களிப்புக்காக ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஸ்தபதி ஆகியோருக்குப் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

விருது பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் ஆற்றிய பணிகளும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

திரு எஸ். அஜித் குமார்:

திரு எஸ். அஜித்குமார் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகராவார். நடிகர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு கலாச்சார அடையாளமாக உருவெடுத்துள்ளார்.

1971 மே 1-ல் பிறந்த திரு அஜித் குமாரின் சினிமா பயணம் நீண்டதாகும். அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்துத் தன் திறனை நிரூபித்து, ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அதிரடித் திரைப்படங்கள் முதல் உணர்ச்சி பொங்கும் நடிப்பைக் கொண்ட படங்கள் வரை பல வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் முத்திரை பதித்து, சிறந்த நடிகர் என நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளார்.

 1992-ம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானதிலிருந்து, அவரது பயணம் தனித்துவமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாத்திரத்தையும் சிறப்பாகச் செய்யும் அஜித் குமார், பிராந்திய எல்லைகளைத் தாண்டித் தடம் பதித்துள்ளார்.

அஜித் குமார் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் ஒழுக்கம், பணிவு, விடாமுயற்சி ஆகியவற்றிற்கான அடையாளமாகவும் திகழ்கிறார்.

*******************

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீர்ராகத் திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். 1986 செப்டம்பர் 17 அன்று சென்னையில் பிறந்த அஸ்வின், இந்திய கிரிக்கெட்டில் தமது திறமையால் சிறந்து விளங்கும் நபராகத் திகழ்கிறார். மேற்கு மாம்பலத்தில் சாதாரணமாக விளையாடத் தொடங்கி, உலக கிரிக்கெட்டின் பிரம்மாண்டமான மைதானங்களில் முத்திரை  பதித்தது வரை அவரது பயணம் அசாத்தியமான ஒன்றாகும். அவர் ஒரு பயிற்சி பெற்ற பொறியாளர், ஆனால் களத்தில் ஒரு விஞ்ஞானி. அவர் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை, அவர் அதை மீட்டுருவாக்கம் செய்தார்.

திரு அஸ்வின் 2010-ல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளராக  திறமையை நிரூபித்துள்ளார். அவரது பந்துகளுக்குப் பின்னால் ஒரு தனி உத்தி உள்ளது.

 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளுடன், அவர் இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் ஆறு டெஸ்ட் சதங்கள் அவரது தேர்ச்சியை பேட்டிங்கிலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறும் அவர் தன்னை மாற்றிக்கொண்டார். இந்தியாவின் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்கும் முக்கியமானது.

2014-ம் ஆண்டு அர்ஜுனா விருது, 2016-ம் ஆண்டு சிறந்த ஐசிசி வீரர் விருது என பல விருதுகளை அஸ்வின் பெற்றுள்ளார். அஸ்வின், சுழற்பந்துவீச்சை மறுவரையறை செய்து, கிரிக்கெட்டை மேலும் சுவாரஸ்யமானதாக்கி அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிததுள்ளார்.

************

முனைவர் க. தாமோதரன்:

டாக்டர் கே.தாமோதரன் ஒரு புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் என்பதுடன்  உணவக மேலாண்மை (ஓட்டல் மேனேஜ்மெண்ட்) - உணவுத் தொழில்நுட்பப் (கேட்டரிங் டெக்னாலஜி) பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் ஆவார்.

1954-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் கே தாமோதரன், சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் ஹோட்டல் மேனெஜ்மெண்ட் - கேட்டரிங் டெக்னாலஜியில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர், 1977-ம் ஆண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் தமது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார். 1986-ம் ஆண்டில் ஆசிரியர் தொழிலில் அடியெடுத்து வைத்தார். சென்னையைச் சேர்ந்த ஆசான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், எம்ஜிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி, எம்பீ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி ஆகியவற்றின் தலைவராக அவர் இருந்துள்ளார். இவர் "தாமுஸ் ஹோம் ஃப்ரீ ஸ்டைல் குக்" என்ற நூலின் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். 2010 டிசம்பர் 22 அன்று அவர் 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 வினாடிகளில் 617 உணவுகளை (190 கிலோ உணவு) சமைத்து சாதனை படைத்தார். இவர் கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

 2,700 சமையல் குறிப்புகளுடன் இல்லத்தரசிகளுக்காக 17 சமையல் புத்தகங்களையும், கேட்டரிங் மாணவர்களுக்காக நான்கு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். 2008, 2011-ம் ஆண்டுகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டார். மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,40,000 சத்துணவு பணியாளர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவை வழங்க பயிற்சி அளித்துள்ளார். சமையல் கலையில் தமது சாதனைகளுக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

**********************

திரு ஆர்.ஜி.சந்திரமோகன்:

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை பால் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர்- தலைவர் திரு ஆர்.ஜி.சந்திரமோகன், இந்தியாவின் பால் துறையில் மிக முக்கியமானவர்.

1949-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்த திரு சந்திரமோகன் பால்வளத் துறையில் 50 ஆண்டுகளுக்கும்  அதிகமான அனுபவத்தைக் கொண்டவர். அவரது வழிகாட்டுதலின் கீழ், ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளித்து கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தும் பணியை மேற்கொள்கிறது. அத்தியாவசிய தொழில்நுட்ப உதவி, கால்நடை ஆதரவு, பாலின் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மானிய விலையில் கால்நடை தீவனம் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

 

திரு சந்திரமோகனின் வழிகாட்டுதலின் கீழ், ஹட்சன் நிறுவனம், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உயர் புரத தீவன வகைகளை உருவாக்கியுள்ளது. தற்போது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் இந்தியா முழுவதும் 20 அதிநவீன தொழிலகங்களைக் கொண்டு ஹட்சன் இயக்குகிறது.

 திரு சந்திரமோகன் அறக்கட்டளை மூலம் பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். விளையாட்டை ஊக்குவிக்கும் பணியையும் இவர் செய்து வருகிறார்.

தமது பணிகளுக்காக இந்திய பால் சங்கத்தால் திரு சந்திரமோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

**************

டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர்:

டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர் ஒரு பிரபல பத்திரிகையாளர். தினமலர் தமிழ் நாளிதழில் 1956-ம் ஆண்டு விளம்பர நிர்வாகியாக தமது பணியைத் தொடங்கி, அதன் இணை நிர்வாக ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தார். இவர் சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.

1935 ஜூன் 17-ல் பிறந்த டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியலையும், இங்கிலாந்தின் தாம்சன் அறக்கட்டளையில் செய்தித்தாள் மேலாண்மையில் பட்டயப் படிப்பையும் படித்தார்.

டாக்டர் ராமசுப்பையர் அவ்வப்போது அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்தித்தாள் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். பத்திரிகைத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தவர். 1986 முதல் 1987 வரை இந்திய பிரஸ் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராகவும், 1998 முதல் 99 வரை இந்திய பத்திரிகை சங்கத்தின் தலைவராகவும், 1992 முதல் 1993 வரை இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவராகவும், 2001 முதல் 2003 வரை மும்பை இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

 

அவர் செய்தித்தாள் பணியோடு நிற்காமல் மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய சமூகத்திற்கு தரமான கல்வியை வழங்குவதற்கான தமது முயற்சிகளைத் தொடங்கினார். இந்த நோக்கத்துடன், கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார். வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை வழங்குவதே அவரது நோக்கமாக உள்ளது.

கல்வி - இதழியலில் இவரது பங்களிப்புகளையும் சாதனைகளையும் பாராட்டி 2003-ம் ஆண்டில் அழகப்பா பல்கலைக்கழகமும், 2009-ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகமும் இவருக்கு இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின.

**********

திரு ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதி:

 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதி, இந்த கலையைச் செய்து வரும் குடும்பத்தின் 34- வது தலைமுறையைச் சேர்ந்தவராவார். தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம், சுவாமிமலையில் உள்ள முருகன் ஆலய வெண்கலச் சிலைகள் போன்ற அரிய கோயில் கட்டுமானம், சிற்பக் கலைகளில் இவரது முந்தைய தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

1960-ம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி பிறந்த ஸ்தபதி, குருகுலவாச பாரம்பரியத்தில், பாரம்பரிய பஞ்சலோக சிற்பங்களை வடிவமைப்பது குறித்துச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டார். 1984-ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற சுவாமிமலையின் பாரம்பரிய சிற்பியான மறைந்த எஸ்.தேவசேனாபதி ஸ்தபதி இவரது தந்தை ஆவார். பள்ளிப் படிப்பை (எஸ்எஸ்எல்சி) முடித்த பிறகு, மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிற்ப - கட்டடக்கலை கல்லூரியின் முதல்வரான பத்ம பூஷண் விருது பெற்ற திரு வி.கணபதி ஸ்தபதியிடம் இவர் சிற்பக் கலை குறித்துப் பயின்றார். இவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, இவர் சுவாமிமையில் உள்ள எஸ்.தேவசேனாபதி ஸ்தபதி சன்ஸ் நிறுவனத்தில் தலைமைச் சிற்பியாக பொறுப்புக்கு வந்தார். பல கோயில்களுக்கு பஞ்சலோக சிலைகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறார்.

தில்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்ற பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபம் முன்பு நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 27 அடி உயரமும், 21.5 அடி அகலமும் கொண்டது. சிறப்பு வாய்ந்த இந்தச் சிலை உட்பட புகழ்பெற்ற கோவில்களில் தனித்துவமான சிலைகளை இவர் வடிவமைத்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளில் உள்ள கோவில்களுக்கும் இவர் பஞ்சலோக சிலைகளை வடிமைத்துக் கொடுத்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற விழாவில், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதியை, இந்தியாவின் சிறந்த சிற்பி என்று பாராட்டி அவரை கௌரவித்து, அவரது திறமையை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

***

AD/PLM/AG/DL

 


(Release ID: 2124966) Visitor Counter : 56