பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
24 APR 2025 3:34PM by PIB Chennai
நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன், நீங்கள் எங்கிருந்தாலும், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் இடத்தில் அமர்ந்து, 22 ஆம் தேதி நாம் இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி, அந்தந்த தெய்வங்களை நினைவுகூர்வோம். அவர்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம், அதன் பிறகு நான் இன்று எனது உரையைத் தொடங்குவேன்.
ஓம் சாந்தி-சாந்தி-சாந்தி.
பீகார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அவர்களே, இங்குள்ள பிரபலமான முதலமைச்சரரும் எனது நண்பருமான நிதிஷ் குமார் அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் மூத்த பிரமுகர்களே, பீகாரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.
இன்று, பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் மிதிலாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று, நாடு மற்றும் பீகாரின் வளர்ச்சி தொடர்பான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மின்சாரம், ரயில்வே, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் இந்த பல்வேறு பணிகள் பீகாரில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இன்று தேசியக் கவிஞர் ராம்தாரி சிங் தினகர் அவர்களின் நினைவு தினம். அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்.
நண்பர்களே,
பூஜ்ய (வணக்கத்திற்குரிய) அண்ணல் சத்தியாகிரக மந்திரத்தைப் பரப்பிய பூமி பீகாராகும். இந்தியாவின் கிராமங்கள் வலிமையானதாக மாறாவிட்டால், இந்தியா வேகமாக வளர்ச்சி அடைய முடியாது என்று பூஜ்ய பாபு உறுதியாக நம்பினார். நாட்டில் பஞ்சாயத்து ராஜ் என்ற கருத்தாக்கத்தின் பின்னணியில் உள்ள உணர்வு இதுதான். கடந்த பத்தாண்டுகளில், பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிக்க ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத்தின் மூலம் பஞ்சாயத்துகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்துகள் டிஜிட்டல்மயமாவதால் இன்னொரு நன்மையும் உண்டு. ஆயுள் இறப்பு சான்றிதழ்கள், நில உரிமை சான்றிதழ்கள் மற்றும் இதுபோன்ற பல ஆவணங்களை எளிதாகப் பெறலாம். நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கிடைத்த நிலையில், நாட்டில் 30 ஆயிரம் புதிய பஞ்சாயத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாயத்துகளுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் முன்னுரிமையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாயத்துகளுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நிதி கிடைத்துள்ளது. இந்த பணம் அனைத்தும் கிராமங்களின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்துகளின் மற்றொரு பெரிய பிரச்சினை நிலத் தகராறுகள் தொடர்பானது. எந்த நிலம், எது விவசாய நிலம், எது பஞ்சாயத்து நிலம், எது அரசு நிலம் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நண்பர்களே,
பஞ்சாயத்துகள் எவ்வாறு சமூகப் பங்களிப்புக்கு அதிகாரம் அளித்துள்ளன என்பதை நாம் பார்த்தோம். இவற்றில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலம் பீகார், எனவே நான் நிதிஷ் அவர்களை வாழ்த்துகிறேன். இன்று பீகாரில் ஏழைகள், தலித்கள், மகாதலித்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான சகோதரிகளும், மகள்களும் மக்கள் பிரதிநிதிகளாக சேவை செய்து வருகிறார்கள், இதுதான் உண்மையான சமூக நீதி, இதுதான் உண்மையான சமூகப் பங்களிப்பு. அதிகபட்ச பங்கேற்புடன் மட்டுமே ஜனநாயகம் செழித்து வலுப்பெறும். இந்த சிந்தனையை மனதில் கொண்டு, மக்களவையிலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் இதன் மூலம் பயனடைவார்கள், நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
நண்பர்களே,
நாட்டில் மகளிரின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு இயக்க முறையில் செயல்பட்டு வருகிறது. பீகாரில் இயங்கும் ஜீவிகா தீதி திட்டம் பல சகோதரிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இன்றும் கூட, பீகாரின் சகோதரிகளின் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான உதவி வழங்கப்பட்டுள்ளது. இது சகோதரிகளின் பொருளாதார அதிகாரமளித்தலை மேலும் ஊக்குவிக்கும். நாட்டில் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கை அடைய இது மேலும் உதவும்.
கடந்த பத்தாண்டுகளில், ஊரகப் பொருளாதாரம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. கிராமங்களில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன, சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, கான்கிரீட் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒவ்வொரு பணியின் மூலமும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் கிராமங்களை சென்றடைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் முதல் விவசாயிகள் வரை, மாட்டுவண்டி ஓட்டுநர்கள் முதல் கடைக்காரர்கள் வரை, அனைவருக்கும் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இது பல தலைமுறைகளாக பின்தங்கிய சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கிறது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் உதாரணத்தை நான் உங்களுக்கு தருகிறேன். இந்த திட்டத்தின் நோக்கம், நாட்டில் எந்தவொரு ஏழை குடும்பமும் வீடற்றவர்களாக இருக்கக்கூடாது, அனைவருக்கும் கான்கிரீட் கூரை கிடைக்க வேண்டும் என்பதுதான். இப்போது, இந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் இந்த வீட்டின் சாவிகளை நான் வழங்கிய போது, அவர்களின் முகங்களில் காணப்பட்ட திருப்தி, அவர்களிடம் காணப்பட்ட புதிய நம்பிக்கை, உண்மையில் இந்த ஏழை மக்களுக்காக பணியாற்றுவதற்கான உத்வேகம் அளித்தது. இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பீகாரிலும், இதுவரை 57 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்துள்ளன. இந்த வீடுகள் ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய, பஸ்மாண்டா குடும்பங்கள் மற்றும் அத்தகைய சங்கங்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் மேலும் 3 கோடி கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இன்று, பீகாரில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் தங்கள் புதிய உறுதியான வீடுகளில் நுழைகின்றன. நாடு முழுவதும் 15 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதிக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் மூன்றரை லட்சம் பயனாளிகள் பீகாரைச் சேர்ந்தவர்கள். இன்று மட்டும் சுமார் 10 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட நிதியுதவி அனுப்பப்பட்டுள்ளது. இதில் பீகாரின் 80 ஆயிரம் கிராமப்புற குடும்பங்களும், ஒரு லட்சம் நகர்ப்புற குடும்பங்களும் அடங்கும்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகள் இந்தியாவின் உள்கட்டமைப்பின் தசாப்தமாகும். இந்த நவீன உள்கட்டமைப்பு வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. முதல் முறையாக, நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களின் வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்துள்ளது. 2.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு அடுப்பில் சமைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சிலிண்டர்கள் கிடைத்துள்ளன. நீங்கள் சமீபத்தில் செய்திகளைப் படித்திருப்பீர்கள். அடிப்படை வசதிகளைக் கூட வழங்க முடியாத லடாக் மற்றும் சியாச்சினில், 4 ஜி மற்றும் 5 ஜி செல்பேசி இணைப்புகள் இப்போது அங்கு வந்துள்ளன. நாட்டின் இன்றைய முன்னுரிமைகள் என்ன என்பதை இது காட்டுகிறது. சுகாதாரம் போன்ற ஒரு துறையின் உதாரணமும் நம்மிடம் உள்ளது. முன்பெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மட்டுமே எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் இருந்தன. இன்று தர்பங்காவிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஜான்ஜார்பூரில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
கிராமங்களில் நல்ல மருத்துவமனைகளை உருவாக்க, நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் கட்டப்பட்டுள்ளன. பீகாரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, மக்கள் மருந்தக மையங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணமாக மாறியுள்ளன. இங்கு குறைந்த விலை மருந்துகள் 80 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. பீகாரில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பீகார் மக்களுக்கு மருந்துகளுக்காக ரூ.2000 கோடி மிச்சமாகியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பீகாரில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த குடும்பங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.
நண்பர்களே,
இன்று, ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளுடன் இந்தியா மிக வேகமாக இணைக்கப்பட்டு வருகிறது. பாட்னாவில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன, நாட்டின் 22-க்கும் மேற்பட்ட நகரங்கள் மெட்ரோ வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்று, பாட்னா மற்றும் ஜெய் நகர் இடையே நமோ பாரத் விரைவு ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாட்னா மற்றும் ஜெய் நகர் இடையேயான பயணம் மிகக் குறுகிய காலத்தில் நிறைவடையும். சமஸ்திபூர், தர்பங்கா, மதுபானி மற்றும் பெகுசராய் பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நமோ பாரத் விரைவு ரயில் உதவும்.
நண்பர்களே,
இன்று, பல புதிய ரயில் பாதைகள் இங்கு தொடங்கி வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சஹர்சாவிலிருந்து மும்பைக்கு நவீன அமிர்த பாரத் ரயிலைத் தொடங்குவது நமது தொழிலாளர் குடும்பங்களுக்கு பெரும் வசதியை அளிக்கும். மதுபானி மற்றும் ஜான்ஜார்பூர் உட்பட பீகாரில் உள்ள டஜன் கணக்கான ரயில் நிலையங்களையும் எங்கள் அரசு நவீனப்படுத்தி வருகிறது. தர்பங்கா விமான நிலையத்துடன் மிதிலா மற்றும் பீகாரின் விமான இணைப்பு மேம்பட்டுள்ளது. பாட்னா விமான நிலையமும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சிப் பணிகள் காரணமாக, பீகாரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
நண்பர்களே,
கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நமது விவசாயிகள் உள்ளனர். இந்த முதுகெலும்பு எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு கிராமங்கள் வலிமையாக இருக்கும், நாடு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். மிதிலா, கோசி பகுதி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பீகாரில் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க அரசு பதினோராயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறது. இதன் மூலம், பாக்மதி, தார், புர்ஹி கந்தக் மற்றும் கோசி ஆகிய இடங்களில் அணைகள் கட்டப்படும். இதன் மூலம் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, ஆற்று நீர் பாசனத்திற்கு வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு விவசாயியின் வயலுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இதனால், வெள்ள பிரச்னை குறைந்து, வயல்களுக்கு போதுமான தண்ணீர் சென்றடையும்.
நண்பர்களே,
மக்கானா இன்று நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு சிறந்த உணவாக உள்ளது, ஆனால் இது மிதிலாவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த கலாச்சாரத்தை இங்கு வளத்தின் ஆதாரமாக நாங்கள் மாற்றி வருகிறோம். மக்கானாவுக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளோம். அதாவது மக்கானா இந்த மண்ணின் விளைபொருள், அது இப்போது அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. மக்கானா ஆராய்ச்சி மையத்திற்கும் தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கானா வாரியத்தின் உருவாக்கம், மக்கானா விவசாயிகளின் தலைவிதியை மாற்றப் போகிறது. பீகாரின் மக்கானா ஒரு சிறந்த உணவாக உலக சந்தைகளை அடையும். தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனமும் பீகாரில் கட்டப்பட உள்ளது. உணவு பதப்படுத்துதல் தொடர்பான சிறு தொழில்களை அமைக்க இங்குள்ள இளைஞர்களுக்கு இது மேலும் உதவும்.
நண்பர்களே,
விவசாயத்துடன், மீன் உற்பத்தியிலும் பீகார் தொடர்ந்து முன்னேறி வருகிறது. நமது மீனவர்களால் தற்போது கிசான் கடன் அட்டை வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் பயனடைந்துள்ளன. பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ், பீகாரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
நண்பர்களே,
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் அப்பாவி குடிமக்களை கொடூரமாகக் கொன்ற சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களின் துயரத்தில் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. தற்போது சிகிச்சை பெற்று வரும் குடும்ப உறுப்பினர்கள் விரைவில் குணமடைவதை உறுதி செய்ய அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
இந்த பயங்கரவாத தாக்குதலில் யாரோ ஒருவர் தனது மகனை இழந்தார், ஒருவர் தனது சகோதரரை இழந்தார், யாரோ ஒருவர் தனது வாழ்க்கைத் துணையை இழந்தார். அவர்களில் சிலர் வங்காளம் பேசினர், சிலர் கன்னடம் பேசினர், சிலர் மராத்தி பேசினர், சிலர் ஒடியா பேசினர், சிலர் குஜராத்தி, சிலர் பீகாரைச் சேர்ந்தவர்கள். இன்று, கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, அவர்கள் அனைவரின் மரணத்திலும் எங்கள் துக்கம் ஒன்றுதான், எங்கள் கோபம் ஒன்றுதான். இந்த தாக்குதல் நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகள் மீது மட்டும் நடத்தப்படவில்லை; நாட்டின் எதிரிகள் இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கத் துணிந்துள்ளனர். நான் மிகத் தெளிவான வார்த்தைகளில் கூற விரும்புகிறேன், இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் இந்த தாக்குதலுக்கு சதி செய்தவர்கள் அவர்கள் கற்பனை செய்ததை விட பெரிய தண்டனையைப் பெறுவார்கள். பயங்கரவாதிகளின் எஞ்சியிருக்கும் களத்தையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகெலும்பை முறிக்கும்.
நண்பர்களே,
இன்று, பீகார் மண்ணில் இருந்து, ஒட்டுமொத்த உலகிற்கும் நான் கூற விரும்புவதாவது: ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இந்தியா அடையாளம் கண்டு, கண்காணிக்கும், தண்டிக்கும். பூமியின் மூலைகள் வரை அவர்களைத் துரத்திச் செல்வோம். தீவிரவாதத்தால் இந்தியாவின் உத்வேகம் ஒருபோதும் உடைக்கப்படாது. தீவிரவாதம் தண்டிக்கப்படாமல் இருக்காது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்த தேசமும் இந்த உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது. மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நம்முடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
விரைவான வளர்ச்சிக்கு அமைதியும் பாதுகாப்பும் மிக முக்கியமான நிபந்தனைகள். வளர்ந்த இந்தியாவுக்கு வளர்ச்சியடைந்த பீகார் அவசியம். பீகாரில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், வளர்ச்சியின் பலன்கள் இங்குள்ள ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு பகுதியையும் சென்றடைய வேண்டும் என்பது நம் அனைவரின் முயற்சியாகும். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் இணைந்ததற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி. என்னுடன் கூறுங்கள்-
பாரத் மாதா கி ஜெய்.
பாரத் மாதா கி ஜெய்.
பாரத் மாதா கி ஜெய்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 2124051)
RB/DL
(Release ID: 2124188)
Visitor Counter : 6