பிரதமர் அலுவலகம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
கடந்த பத்தாண்டுகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, தொழில்நுட்பத்தின் மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன: பிரதமர்
கடந்த பத்தாண்டுகளில் ஊரகப் பொருளாதாரம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது: பிரதமர்
கடந்த பத்தாண்டுகள் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தசாப்தம்: பிரதமர்
மக்கானா இன்று நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு முக்கிய உணவாகும், ஆனால் மிதிலாவில் இது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், இங்குள்ள வளமைக்கான ஆதாரமாகவும் உள்ளது: பிரதமர்
140 கோடி இந்தியர்களின் மன உறுதி தற்போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் முதுகெலும்பை முறிக்கும்: பிரதமர்
பயங்கரவாத செயல்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது: பிரதமர்
Posted On:
24 APR 2025 2:11PM by PIB Chennai
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் இன்று ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 22-ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும் மிதிலா மற்றும் பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சாரம், ரயில்வே, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் இம்மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாபெரும் கவிஞராகவும் தேசிய அடையாளமாகவும் திகழ்ந்த ராம்தாரி சிங் தினகர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை விரிவுபடுத்திய பூமி பீகார் என்று குறிப்பிட்ட திரு மோடி, நாட்டின் கிராமப்புறங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியமாகும் என்ற மகாத்மா காந்தியின் உறுதியான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டினார். பஞ்சாயத்து ராஜ் என்ற கருத்தாக்கம் இந்த உணர்வில் இருந்து வேரூன்றிய தாகவும் அவர் கூறினார். "கடந்த பத்தாண்டுகளாக, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பஞ்சாயத்து அமைப்புக்களை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாயத்து அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், நில உரிமைச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை எளிதாகப் பெற முடியும் என்று கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 30,000 புதிய பஞ்சாயத்து அமைப்புகளுக்கான கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து அமைப்புகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் உயர் முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் கூறினார். "கடந்த 10 ஆண்டுகளில், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார்.
கிராம பஞ்சாயத்து அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக நிலங்கள் தொடர்பான பிரச்சினை உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரு நிலம் குடியிருப்பு, விவசாயம், பஞ்சாயத்து என எதற்கு சொந்தமானது அல்லது அரசுக்கு சொந்தமானது என்பதில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை குறிப்பிட்டார். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நிலப் பதிவேடுகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தேவையற்ற சச்சரவுகளைத் திறம்படத் தீர்க்க உதவியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
பஞ்சாயத்து அமைப்புகள் சமூக பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் பீகார் என்று குறிப்பிட்டார். இன்று, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகள், தலித்துகள், மகாதலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் பீகாரில் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றி வருவதாக அவர் கூறினார். இது உண்மையான சமூக நீதி, சமூக பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் பங்கேற்பதன் காரணமாக ஜனநாயக நடைமுறைகள் வலுப்பெறுவதாக அவர் தெரிவித்தார். இந்தத் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு பயனளிப்பதுடன், நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.
பெண்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இயக்க முறையில் செயல்பட்டு வருகிறது என்று கூறிய திரு நரேந்திர மோடி, பீகாரில் பல்வேறு பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ள 'ஜீவிகா தீதி' திட்டத்தின் எழுச்சியை விரிவாக எடுத்துரைத்தார். இன்று, பீகாரில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலை மேலும் வலுப்படுத்தும் என்றும், நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்குக்கு பங்களிக்கும் என்றும் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஊரகப் பொருளாதாரம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஏழைகளுக்கு வீடுகள், சாலைகள், சமையல் எரிவாயு இணைப்புகள், குடிநீர் இணைப்புகள், கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் கிராமங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று கூறினார். தொழிலாளர்கள், விவசாயிகள், வாகன ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக பல தலைமுறைகளாக பின்தங்கிய சமூகங்களுக்கு இது மிகவும் பயனளித்துள்ளது என்று அவர் கூறினார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், நாட்டில் எந்தவொரு குடும்பமும் வீடற்றவர்களாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் கூடுதலான நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பீகாரில் மட்டும் 57 லட்சம் ஏழைக் குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், தலித்துகள், பஸ்மாண்டா குடும்பங்கள் போன்ற பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் மேலும் 3 கோடி நிரந்தர வீடுகள் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்படும் என்று திரு நரேந்திர மோடி அறிவித்தார். இன்று, பீகாரில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் தங்களது புதிய நிரந்தர வீடுகளுக்கு குடியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பீகாரைச் சேர்ந்த 3.5 லட்சம் பயனாளிகள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பீகாரில் 80,000 கிராமப்புற குடும்பங்கள், 1 லட்சம் நகர்ப்புற குடும்பங்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளுக்காக நிதி உதவி விடுவிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கடந்த பத்தாண்டுகள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தசாப்தமாக இருந்தது" என்று கூறிய பிரதமர், இந்த நவீன உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வலுவான அடித்தளத்தை அமைக்க உதவிடும் என்று குறிப்பிட்டார். முதன்முறையாக 12 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன என்று குறிப்பிட்ட அவர், 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். சமையல் எரிவாயு அடுப்புகளில் சமைப்பதை ஒருபோதும் கற்பனை செய்து கூட பார்க்காதவர்களுக்கு இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்துள்ளன என்று கூறினார். "அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது கடினமாக உள்ள லடாக் மற்றும் சியாச்சின் போன்ற உயரமான பகுதிகளில் கூட, 4 ஜி மற்றும் 5 ஜி மொபைல் இணைப்புகள் நிறுவப்பட்டுள்ளனதாகவும் அவர் கூறினார். இது நாட்டின் தற்போதைய தேவைகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் ஒரு காலத்தில் தில்லி போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இருந்தன என்று குறிப்பிட்ட பிரதமர், சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சுட்டிக்காட்டினார். தர்பங்காவில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட்டு வருவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஜான்ஜார்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமப் புறங்களில் தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக, பீகாரில் 10,000-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் உட்பட நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்கள் மருந்தக மையங்கள் 80% தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்குவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகள் வெகுவாக குறைந்துள்ளது என்று அவர் கூறினார். பீகாரில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மக்கள் சுகாதார மையங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்கள் தங்களின் மருத்துவ செலவுகளில் ரூ.2,000 கோடியை மிச்சப்படுத்துவதாகக் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பீகாரில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுள்ளன என்றும், இதன் விளைவாக இந்தக் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு மூலம் இந்தியா தனது போக்குவரத்து இணைப்பில் அதிவேகமாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, பாட்னாவில் மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்கள் இப்போது மெட்ரோ வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாட்னாவுக்கும் ஜெய் நகருக்கும் இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்படுவதாக அறிவித்த அவர் இது இந்த இரு இடங்களுக்கும் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்றார். இதன் மூலம் சமஷ்டிபூர், தர்பங்கா, மதுபானி, பெகுசாராய் ஆகியவற்றைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றும், அவர் தெரிவித்தார்.
பீகாரில் பல புதிய ரயில் பாதைகள் தொடங்கப்படுவது பற்றி குறிப்பிட்ட பிரதமர் சஹர்சா- மும்பை இடையே நவீன அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். இந்த சேவை தொழிலாளர் குடும்பங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார். பீகாரில் மதுபானி, ஜான்ஜர்பூர் உட்பட பல ரயில் நிலையங்களை அரசு நவீனமயமாக்கி வருகிறது என்று அவர் கூறினார். தர்பங்கா விமான நிலையத்தால் மிதிலா, பீகார் ஆகியவை விமானப் போக்குவரத்து இணைப்பில் கணிசமான அளவு மேம்பட்டுள்ளன என்றும், பாட்னா விமானநிலையத்தின் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது என்றும், பிரதமர் தெரிவித்தார். இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் பீகாரில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊரகப் பொருளாதாரத்திற்கு விவசாயிகள் முதுகெலும்பு என்றும் இந்த முதுகெலும்பை வலுவாக்குவது கிராமங்களை வலுவாக்குவதாகும் என்றும் இதையடுத்து நாடு வலுவாகும் என்றும், திரு மோடி கூறினார். மிதிலா, கோசி ஆகிய பிராந்தியங்களில் தொடர்ந்து சவாலாக உள்ள வெள்ளத்தை கட்டுப்படுத்த ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டில் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இந்த முதலீட்டின் மூலம் பாக்மதி, தார், புதிகண்டக், கோசி ஆகிய நதிகளின் மீது அணைகள் கட்டப்படும் என்றும், இதன் மூலம் கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டு பாசனத்திற்கான தண்ணீர் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முன்முயற்சியானது வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பது மட்டுமின்றி ஒவ்வொரு விவசாயியின் வயலுக்கும் போதிய அளவு மட்டுமே தண்ணீர் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவின் கலாச்சார அடையாளமாக உள்ள மக்கானா, இப்போது உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதை எடுத்துரைத்த திரு மோடி இது இந்த பிராந்தியத்தின் உற்பத்தி பொருளாக அதிகாரபூர்வமான சான்றிதழ் பெற்றதாகும் என்றார். மக்கானா ஆராய்ச்சி மையம் தேசிய அந்தஸ்தை பெற்றிருப்பதாகவும், அவர் கூறினார். மக்கானா வாரியம் பற்றிய பட்ஜெட் அறிவிப்பை எடுத்துரைத்த பிரதமர் மக்கானா விவசாயிகளின் வாழ்க்கையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பீகாரின் மக்கனாவுக்கு தற்போது சர்வதேச சந்தை கிடைத்துள்ளது என்றும் கூறினார். தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கல்வி கழகம் பீகாரில் அமைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்ட அவர் இது உணவு பதப்படுத்துதல் தொடர்பான சிறு நிறுவனங்கள் தொடங்க இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். வேளாண்மையோடு மீன் வளத்திலும் பீகார் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று கூறிய அவர் மீனவர்கள் தற்போது விவசாயக் கடன் அட்டையின் பயன்களைப் பெற முடியும் என்பதை எடுத்துரைத்தார். பிரதமரின் மீனவர் நலத்திட்டத்தின் கீழ் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பீகாரில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொடூரமாககா கொல்லப்பட்டது பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய திரு மோடி இதனால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது என்றும் துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவையும் அவர் தெரிவித்தார். சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த சம்பவத்தில் பலர் தங்களின் பிள்ளைகளை, சகோதரர்களை, வாழ்க்கைத் துணைவர்களை இழந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர் பாதிக்கப்பட்டவர்கள் பெங்காலி, கன்னடம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, போன்ற மொழிகளைப் பேசும் பின்னணி கொண்டவர்களாக இருந்ததாகவும் கூறினார். கார்கில் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு துயரத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு மோடி இந்தத் தாக்குதல் என்பது நிராயுதபாணியான சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என்றார். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும் இதற்கு சதி திட்டம் தீட்டியவர்களும், அவர்கள் கற்பனை செய்ய முடியாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் அறிவித்தார். பயங்கரவாதத்தின் எஞ்சியுள்ள பலத்தை அழிக்கும் காலம் வந்துவிட்டது என்று அவர் உறுதிபட தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் மனஉறுதி தற்போது பயங்கரவாத குற்றம் புரிவோரின் முதுகெலும்பை முறித்துள்ளது என்று அவர் கூறினார்.
பயங்கரவாதி ஒவ்வொருவரையும் அவர்களுக்கு பின்பலமாக இருந்தவர்களையும் அவர்களுக்கு உதவி செய்தவர்களையும், கண்டறிந்து, பின் தொடர்ந்து இந்தியா தண்டனை வழங்கும் என்பதைப் பீகார் மண்ணிலிருந்து பிரதமர் பிரகடனம் செய்தார். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வை ஒருபோதும் சிதைக்க முடியாது என்றும், பயங்கரவாதம் தண்டிக்காமல் விடப்படக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த தருணத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
துரிதமான வளர்ச்சிக்கு அமைதியும், பாதுகாப்பும் மிக முக்கயமான முன் தேவைகள் என்று கூறிய திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வளர்ச்சியடைந்த பீகார் முக்கியமானது என்றார். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பற்றி எடுத்துரைத்த பிரதமர் அனைத்து தரப்பினரின், அனைத்து பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தமது உரையை நிறைவு செய்தார். பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் திரு நித்திஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திரு ஜித்தன் ராம் மாஞ்சி, திரு கிரிராஜ் சிங், திரு சிராக் பாஸ்வான் திரு நித்யானந்த ராய், திரு ராம்நாத் தாக்கூர், டாக்டர் ராஜ் பூஷன் சௌத்ரி மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி
பீகாரின் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்றார். சிறந்த முறையில் செயல்பட்ட பஞ்சாயத்துகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய பஞ்சாயத்து விருதுகளையும் இந்த நிகழ்வில் அவர் வழங்கினார்.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவா என்ற இடத்தில் சமையல் எரிவாயுவை சிலிண்டரில் அடைக்கும் ரூ.340 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த பிராந்தியத்தில் மின்சார உள்கட்டமைப்பை அதிகரிக்க ரூ.1170 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், மின்சாரத்துறையில் ரூ.5030 கோடி மதிப்பிலான பலவகைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அம்ரித் பாரத் விரைவு ரயில், நமோ பாரத் விரைவு ரயில் ஆகியவற்றையும் பிரதமர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். தீன் தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பீகாரைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவி குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதியத்திலிருந்து ரூ.930 கோடி மதிப்பிலான பலன்களை பிரதமர் விநியோகித்தார்.
நாடு முழுவதும் பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பயனாளிகளுக்கு தவணைத் தொகையை விடுவித்த பிரதமர் 15 லட்சம் புதிய பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை ஒப்படைத்தார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு புதுமனை புகுவிழாவை குறிக்கும் வகையில் வீட்டு சாவிகளை ஒப்படைத்தார்.
***
(Release ID:2124029)
TS/SV/SMB/RR/SG/KR
(Release ID: 2124085)
Visitor Counter : 35
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam