பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

உலகின் நவீன பொருளாதார நாடுகளில் எஃகு உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் எஃகின் சக்தி இருக்கிறது:பிரதமர்

இன்று உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக உள்ளது: பிரதமர்

தேசிய எஃகுக் கொள்கையின் கீழ், 2030-ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர்

எஃகுத் தொழிலுக்கான அரசின் கொள்கைகள், பிற இந்தியத் தொழில்களை உலக அளவில் போட்டியிட வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்

நமது அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களின் நோக்கம் "ஏற்றுமதி இல்லை" மற்றும் "நிகர ஏற்றுமதி" என்பதாகும் : பிரதமர்

நாட்டின் எஃகுத் துறையானது புதிய செயல்முறைகள், தரங்கள், அளவுருக்களுக்கு தயாராக இருக்க வேண்டும்: பிரதமர்

எதிர்காலத்தை மனதில் கொண்டு எஃகு உற்பத்தியை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் எதிர்காலத்துக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்: பிரதமர்

கடந்த 10 ஆண்டுகளில், சுரங்க நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதன் வாயிலாக இரும்புத் தாது கிடைப்பது எளிதாகியுள்ளது: பிரதமர்

ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களையும், நாட்டின் வளங்களையும் முறையாகப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. பசுமை வயல் சுரங்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர்

நாம் ஒருங்கிணைந்து நெகிழ்த்திறன் கொண்ட, புரட்சிகரமான, எஃகு போன்ற வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர்

Posted On: 24 APR 2025 2:49PM by PIB Chennai

மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களில், நாட்டின் முன்னோடித் துறையான எஃகுத் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதையுமா அதனை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். எஃகு உற்பத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது என்றும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஸ்டீல் 2025 கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நவீன பொருளாதாரத்தில் எஃகு துறை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று கூறிய பிரதமர் வானளாவிய கட்டிடங்கள், கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில் போக்குவரத்து, நவீன நகரங்கள் அல்லது தொழில்துறை வழித்தடங்கள் என அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் எஃகு உற்பத்தி முக்கியக் காரணியாக உள்ளது என்று குறிப்பிட்டார். "5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பணியில் எஃகு உற்பத்தி முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். தேசிய எஃகு கொள்கையின் கீழ், 2030-ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தற்போது தனிநபர் எஃகு நுகர்வு சுமார் 98 கிலோவாக உள்ளது என்றும் 2030-ம் ஆண்டில் அது 160 கிலோவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். அதிகரித்து வரும் எஃகு தேவையை கருத்தில் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் செயல்படுத்தப்படுவதன் காரணமாக எஃகு உற்பத்தியில் அதன் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். பல்வேறு பயன்பாட்டு சேவைகள், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றையும் எஃகு தொழில் ஒருங்கிணைப்பதாக அவர் குறிப்பிட்டார். சுரங்கப் பகுதிகள், எஃகு ஆலைகள் மேம்படுத்தப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் கிழக்குப் பகுதியில் எஃகு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய உள்கட்டமைப்பு தயார்நிலைத் திட்டம் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் கூறினார். சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், குழாய்கள் ஆகியவற்றின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் நடைபெற்று வருவதாகவும், நகரங்களை பொலிவுரு நகரங்களாக மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சிகள் எஃகுத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் கிராமப் புறங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நலத்திட்டங்கள் எஃகுத் தொழிலுக்கு புதிய வலிமையை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு திட்டங்களில் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் எஃகை பயன்படுத்துவதற்கான அரசின் முடிவை எடுத்துரைத்த அவர், கட்டுமானம், உள்கட்டமைப்பு துறைகளில் எஃகின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு இது காரணமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு எஃகு முக்கிய அங்கமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், எஃகுத் தொழிலுக்கான அரசின் கொள்கைகள், நாட்டில் உள்ள பல்வேறு தொழில்களை உலக அளவில் போட்டியிட வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாகதா தெரிவித்தார். உற்பத்தி, கட்டுமானம், இயந்திரங்கள், வாகனம் போன்ற துறைகள் இந்திய எஃகுத் தொழிலால் வலிமை பெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' முன்முயற்சியை விரைவுபடுத்துவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் தேசிய உற்பத்தி இயக்கத்தை அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கம் சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், எஃகு துறையில் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்த வழிவகுக்கும் என்று கூறினார்.

பாதுகாப்பு, உத்திசார் துறைகளுக்கு முக்கியமான உயர்தர எஃகின் தேவைக்கு இந்தியா நீண்டகாலமாக இறக்குமதியையே சார்ந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஃகு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது பெருமிதம் அளிப்பதாக கூறினார். வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்கு இந்திய எஃகு துறை முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார். இது இந்தியாவின் திறன் மற்றும் நம்பிக்கையை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உயர்தர எஃகு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்த மாற்றம் சாத்தியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது தற்போது தொடக்க நிலையில் உள்ளது என்றும், எஃகு உற்பத்தியை அதிகரிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வரும் பெரும் திட்டங்களின் காரணமாக உயர்தர எஃகுக்கான தேவை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், கப்பல் கட்டும் தொழிலானது உள்கட்டமைப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நவீன, பெரிய கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் குழாய் அமைப்பதற்கான தரமான எஃகு மற்றும் அரிப்பைத் தாங்கும் வகையிலான உலோகக் கலவையுடன் கூடிய எஃகின் தேவை அதிகரித்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் ரயில் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு  வசதிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து நிகர ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். "இந்தியா தற்போது 25 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 2047-க்குள் எஃகு உற்பத்தி திறனை 500 மில்லியன் டன்களாக உயர்த்துவது நோக்கமாக உள்ளது" என்று குறிப்பிட்ட அவர், புதிய செயல்முறைகள், தர நிலைகள், அளவுருகளுக்கு ஏற்ப எஃகு துறையை நவீனப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் மனநிலையுடன் தொழில்துறையை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எஃகுத் துறையின் வளர்ச்சியானது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், தனியார் மற்றும் பொதுத் துறைகள் புதிய சிந்தனைகளை வளர்த்து, அவற்றை பிற துறைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தினார்.

எஃகுத் தொழிலின் வளர்ச்சியில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மூலப்பொருள் பாதுகாப்பு ஒரு முக்கிய சவாலாக உள்ளது என்று கூறினார். நிக்கல், கோக்கிங் நிலக்கரி, மாங்கனீசு போன்ற தாதுக்களுக்கு இந்தியா இறக்குமதியைச் சார்ந்துள்ளது என்று கூறினார். உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகள், தொழில்நுட்ப மேம்பாடுகளில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். எரிசக்தி திறன், குறைந்த கார்பன் உமிழ்வு, டிஜிட்டல் முறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். "எஃகு  உற்பத்தித் துறையின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை, மறுசுழற்சி, துணை தயாரிப்பு பயன்பாடு ஆகியவற்றால் வடிவமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்தப் பிரிவுகளில் முயற்சிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலகளவில் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இத்துறையில் உள்ள சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதி, குறிப்பாக கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செலவுகள், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கோக்கிங் நிலக்கரிக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கான வழிவழிகளை ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நவீன தொழில்நுட்பங்கள் கிடைப்பதை எடுத்துரைத்த அவர், அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலியுறுத்தினார். நாட்டின் நிலக்கரி வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும், இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் நிலக்கரி வாயுமயமாக்கலை திறம்பட பயன்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், எஃகு தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்கவும், இந்த திசையில் முன்னேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

பயன்படுத்தப்படாத பசுமை சுரங்கப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சுரங்க சீர்திருத்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இரும்புத் தாது கிடைப்பது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களை திறம்பட பயன்படுத்த வேண்டிய தருணம் இது என்று அவர் வலியுறுத்தினார். இந்த நடைமுறையில் ஏற்படும் காலதாமதம் தொழில்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்த பிரதமர், இத்தகைய சவால்களை எதிர்கொள்ள பசுமை சுரங்க முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியா உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுடன், உலக அரங்கில் பிற நாடுகளுக்கு வழிகாட்டவும் தயாராகி வருகிறது என்று பிரதமர் கூறினார். உயர்தர எஃகு விநியோகம் செய்யும் நம்பகமான நாடாக இந்தியாவை உலக நாடுகள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எஃகு உற்பத்தியில் உலகத் தரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், திறன்மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல், பல்வகை போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்குதல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவை இந்தியாவை உலகளாவிய எஃகு உற்பத்தி மையமாக உருவெடுக்க செய்ய உதவிடும் என்று அவர் கூறினார். திறன்மேம்பாட்டை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புதிய யோசனைகளை செயல்படுத்தக் கூடிய தீர்வுகளாக மாற்றவும் இந்தியா வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், நெகிழ்திறன், புரட்சிகர மற்றும் எஃகு போன்ற வலிமையான இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 2124042)
TS/SV/RR/KR

 


(Release ID: 2124075) Visitor Counter : 26