பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 23 APR 2025 2:23AM by PIB Chennai

முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல் இசா இன்று ஜெட்டாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

2023 ஜூலையில் புதுதில்லியில் பொதுச் செயலாளருடன் நடத்திய சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். சகிப்புத்தன்மை மற்றும் விழுமியங்களை ஊக்குவிப்பதிலும், அமைதியை ஆதரிப்பதிலும், சமூக நல்லிணக்கத்தை முன்னெடுப்பதிலும் முஸ்லிம் உலக லீக்கின் பங்கை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் பழமையான தத்துவமான உலகம் ஒரே குடும்பம் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியா பல கலாச்சாரம், பல மொழி, பல இனங்கள், பல மதங்களைக் கொண்ட சமுதாயம் என்றும், வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் பன்முகத்தன்மை, அதன் துடிப்பான சமூகம்  மதிப்புமிக்க பலமாகும் என்று அவர் கூறினார். தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான உலக முஸ்லிம் லீக்கின் உறுதியான நிலைப்பாட்டை அவர் பாராட்டினார்.

சவுதி அரேபியாவுடனான உறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இப்போது பல்வேறு களங்களில் நீடித்த ஒத்துழைப்பாக இது உருவெடுத்துள்ளது என்றார். நெருங்கிய சமூக-கலாச்சார உறவுகள் இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாக அமைகின்றன எனப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

***

(Release ID: 2123659)
TS/PLM/RR/KR


(Release ID: 2123714) Visitor Counter : 18