பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 21 APR 2025 1:52PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

 

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு குடிமைப் பணிகள் தினம் பல காரணங்களுக்காக சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆண்டு நாம் நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம், இது சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டாகும். ஏப்ரல் 21, 1947 அன்று சர்தார் வல்லபாய் படேல் உங்கள் அனைவரையும் "இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு" என்று குறிப்பிட்டார். சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கு அவர் புதிய அளவுகோல்களை ஏற்படுத்தினார். தேசத்திற்கு சேவை செய்வதை தனது உயர்ந்த கடமையாகக் கருதும் ஒரு அரசு ஊழியர். ஜனநாயக முறையில் ஆட்சியை நடத்துபவர். நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்தவர். நாட்டின் லட்சியங்களுக்காக இரவு பகலாக உழைப்பவர். இன்று, 'வளர்ந்த இந்தியா'வை உருவாக்கும் தீர்மானத்துடன் நாம் முன்னேறிச் செல்லும் போது, சர்தார் வல்லபாய் படேலின் வார்த்தைகள் மேலும் பொருத்தமானதாக மாறியுள்ளன. சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வைக்கு இன்று நான் அஞ்சலி செலுத்துகிறேன், அவருக்கு எனது இதயபூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்.

 

நண்பர்களே ,

 

இன்றைய பாரதம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று சில காலத்திற்கு முன்பாக செங்கோட்டையில் இருந்து நான் கூறினேன். நாம் இதை ஒரு குறிப்பிட்ட வழியில் பார்த்தால், இந்த ஆயிரம் ஆண்டு காலத்தின் (மில்லினியம்)  25 ஆண்டுகள் ஏற்கனவே கடந்துவிட்டன. இது புதிய நூற்றாண்டின் 25 ஆம் ஆண்டாகும், மேலும் புதிய மில்லினியத்தின் 25 ஆம் ஆண்டாகும். இன்று நாம் உருவாக்கும் கொள்கைகள், நாம் எடுக்கும் முடிவுகள், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கும். நமது சாஸ்திரங்கள் பின்வருமாறு கூறுகின்றன: एवं पुरूषकारेण विना दैवं न सिध्यति॥ அதாவது: ஒரு தேர் எப்படி ஒரு சக்கரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நகர முடியாதோ, அதேபோல் கடின உழைப்பு இல்லாமல் விதியை மட்டும் நம்பி வெற்றியை அடைய முடியாது. 'வளர்ந்த பாரதம்' என்ற நமது இலக்கை அடைய, முன்னேற்றம் என்ற ரதத்தின் ஒவ்வொரு சக்கரமும் ஒன்றாக இயங்க வேண்டும். இந்த இலக்கிற்காக நாம் வாழ வேண்டும், அதை அடைய நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

வேகமாக மாறிவரும் உலகை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் குடும்பங்களில் கூட, நீங்கள் கவனித்திருக்கக் கூடும் - 10 அல்லது 15 வயது குழந்தை இருந்தால், அவர்களுடன் பேசும்போது, நீங்கள் பின்தங்கி இருப்பதை உணரலாம். காலம் மிக வேகமாக மாறுவதால் இது நிகழ்கிறது. சாதனங்கள் ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும் உருவாகின்றன. ஒரு விஷயத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு அல்லது கற்றுக்கொள்வதற்கு முன்பு, புதிதாக ஒன்று வருகிறது. நமது இளம் குழந்தைகள் இந்த விரைவான மாற்றங்களுடன் வளர்ந்து வருகிறார்கள். நமது அதிகாரத்துவம், நமது பணி முறை, நமது கொள்கை வகுத்தல்  ஆகியவற்றால் பின்தங்கிய முறைகளை இனியும் பின்பற்ற முடியாது. அதனால்தான், 2014 முதல், நாட்டில் அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் தொடங்கியது. இந்த வேகத்திற்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்கிறோம். இன்று, பாரதத்தின் அபிலாஷைகள் நிறைந்த சமுதாயமான நமது இளைஞர்கள், நமது விவசாயிகள், நமது பெண்களின்  கனவுகள் அடையும் உயரம், உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாததாகும். இந்த அசாதாரண விருப்பங்களை நிறைவேற்ற, அசாதாரண வேகமும் தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில், எரிசக்தி பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விளையாட்டு, விண்வெளி மற்றும் பல இலக்குகள் என ஏராளமான முக்கிய மைல்கற்களை பாரதம் கடக்கும். ஒவ்வொரு துறையிலும், நாட்டின் கொடியை புதிய உயரத்திற்கு உயர்த்த வேண்டும். இதைப் பற்றி நான் பேசும்போது, தேசம் இதை கற்பனை செய்யும் போது, எல்லா கண்களும் உங்கள் மீது உள்ளன, நம்பிக்கை உங்கள் அனைவர் மீதும் உள்ளது, எனது சக ஊழியர்களே, ஒரு பெரிய பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது. பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படாது என்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு.

 

நண்பர்களே,

 

இந்த ஆண்டு குடிமைப் பணிகள்  தினத்தின் மையக்கருத்தான "இந்தியாவின் முழுமையான வளர்ச்சி" என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது வெறும்  ஒரு கருப்பொருள் அல்ல, இது இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் அளித்த உறுதிமொழி. இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பதன் அர்த்தம், எந்த ஒரு கிராமமும் பின்தங்கிவிடக்கூடாது, எந்த குடும்பமும் பின்தங்கிவிடக்கூடாது, எந்த குடிமகனும் பின்தங்கிவிடக்கூடாது என்பதாகும். உண்மையான முன்னேற்றம் என்பது சிறிய மாற்றங்களை அர்த்தப்படுத்துவதில்லை, இது முழு அளவிலான தாக்கத்தை குறிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குடிநீர், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் நிதி வசதி, ஒவ்வொரு கிராமத்தையும் டிஜிட்டல் பொருளாதார பயன்கள் சென்றடைவது – இதுதான் முழுமையான வளர்ச்சி என்பதன் உண்மையான அர்த்தம். ஆளுகையில் தரம் என்பது திட்டங்களை தொடங்குவதால் மட்டும் வந்துவிடாது என்று நான் நம்புகிறேன். மாறாக, ஒரு திட்டம் எவ்வளவு ஆழமாக மக்களைச் சென்றடைகிறது மற்றும் அது எத்தகைய உண்மையான தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பொறுத்தே ஆளுகையின் தரம் வரையறுக்கப்படுகிறது. இன்று, ராஜ்கோட், கோமதி, தின்சுகியா, கோராபுட் உள்ளிட்ட பல மாவட்டங்கள் இந்த தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிப்பது முதல் சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வது வரை, பல மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்து, தங்கள் இலக்குகளை அடைந்துள்ளன. இவற்றில் பல மாவட்டங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் மற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்துக் குழுக்களுக்கும் நான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே ,

 

கடந்த 10 ஆண்டுகளில், பாரதம் படிப்படியான மாற்றத்தைத் தாண்டி, தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைக் கண்டுள்ளது. இன்று, பாரதத்தின் ஆளுகை மாதிரி அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்பம், புதுமை மற்றும் புதுமையான நடைமுறைகள் மூலம், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியை நாங்கள் குறைத்து வருகிறோம். இதன் தாக்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், தொலைதூர பகுதிகளிலும் காணப்படுகிறது. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பற்றி நான் அடிக்கடி பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் முன்னேற விரும்பும் வட்டாரங்கள்  திட்டத்தின் வெற்றியும் சமமாக குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டு ஆண்டுகளில், இந்த வட்டாரங்களில் காணப்பட்ட மாற்றங்கள் முன்னெப்போதும் இல்லாதவை. சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூக மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற குறியீடுகளில் இந்த வட்டாரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில், அவை மாநில சராசரியை விஞ்சியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தின் பிப்லு வட்டாரத்தில் அங்கன்வாடி மையங்களில் 20% குழந்தைகள் மட்டுமே சரியாக அளவிடப்பட்டனர். தற்போது, அந்த எண்ணிக்கை 99 சதவீதமாக உயர்ந்துள்ளது. பீகாரின் பாகல்பூரின் ஜகதீஷ்பூர் வட்டாரத்தில், முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களின் பதிவு வெறும் 25% மட்டுமே இருந்தது. தற்போது, அது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரின் மார்வா தொகுதியில், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை 30% முதல் 100% வரை உயர்ந்துள்ளன. ஜார்க்கண்டின் குர்தி தொகுதியில், குழாய் நீர் இணைப்புகள் 18% முதல் 100% வரை உயர்ந்துள்ளன. இவை வெறும் எண்கள் அல்ல, அவை கடைசி மைல் விநியோகத்திற்கான எங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதைக் குறிக்கின்றன. சரியான நோக்கம், திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் மூலம், விரும்பிய மாற்றம் மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட சாத்தியமாகும் என்பதை அவை காட்டுகின்றன.

 

நண்பர்களே,

 

கடந்த 10 ஆண்டுகளில், பாரத் பல மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், சாதனையின் புதிய உயரங்களை எட்டியுள்ளது. இன்று, பாரதம் அதன் வளர்ச்சிக்கு மட்டும் பெயர் பெறவில்லை, ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்கும் பெயர் பெற்றது. நமது ஜி20 தலைமைத்துவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், ஜி 20 வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற ஒரு பெரிய மற்றும் உள்ளடக்கிய தடம் பதிக்கப்பட்டது.  இதுதான் ஒரு முழுமையான அணுகுமுறை. பொதுமக்கள் பங்கேற்பு குறித்த நமது முன்மாதிரி பல நாடுகளை விட நம்மை 10-11 ஆண்டுகள் முன்னிலையில் வைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், தாமதப்படுத்தும் கலாச்சாரத்தை அகற்ற முயற்சித்தோம்.  திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க  புதிய செயல்முறைகளை உருவாக்கியுள்ளோம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். வர்த்தகத்தை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக, நாங்கள் 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்களை நீக்கியுள்ளோம் மற்றும் 3,400-க்கும் மேற்பட்ட சட்ட விதிகளை நீக்கியுள்ளோம். இணக்கத்தின் சுமையை குறைக்க நாங்கள் பணியாற்றியபோது, வழக்கமான வணிக நடவடிக்கைகளின் போது நடக்கும் சில தவறுகளை குற்றமற்றதாக்கியபோது, சில மூலைகளில் எதிர்ப்புக் குரல்கள் இருந்தன என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலர், "இதற்கு முன் இப்படி செய்ததில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள்? அது இருக்கட்டும் - அது நன்றாக வேலை செய்கிறது. ஏன் கவலைப்பட வேண்டும்? மக்கள் இணங்கிக் கொண்டே இருக்கட்டும். ஏன் வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறீர்கள்?" போன்று அனைத்து திசைகளிலிருந்தும் விவாதங்கள் நடந்தன. பதில்கள் வந்தன, ஆனால் எங்கள் இலக்குகளை அடைவதற்கான அழுத்தம் எதிர்ப்பின் அழுத்தத்தை விட அதிகமாக இருந்தது. அதனால்தான் நாங்கள் அழுத்தத்திற்கு அடிபணியவில்லை, இலக்கில் கவனம் செலுத்தினோம். பழைய பாதைகளை நாம் தொடர்ந்து பின்பற்றினால், புதிய முடிவுகள் வருவது கடினம். நாம் வித்தியாசமான ஒன்றைச் செய்யும்போதுதான், வெவ்வேறு முடிவுகளைப் பெறுகிறோம். இன்று, இந்த மனநிலை காரணமாக, எளிதாக வர்த்தகம் செய்யும் தரவரிசையில் பாரதம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. இன்று, உலகம் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது, இந்த வாய்ப்புகளை நாம் தவறவிடாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பாகும். அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில, மாவட்டம் மற்றும் தொகுதி மட்டங்களில், சிவப்பு நாடா முறையின் ஒவ்வொரு தடயத்தையும் நாம் அகற்ற வேண்டும். அப்போதுதான் இந்த அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைய முடியும்.

 

நண்பர்களே,

 

கடந்த 10-11 ஆண்டுகளில் நாடு அடைந்த வெற்றிகள் 'வளர்ந்த பாரதத்திற்கு' மிகவும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. இப்போது, இந்த உறுதியான அடித்தளத்தின் மீது 'வளர்ந்த பாரதம்' என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியை நாடு தொடங்கியுள்ளது. ஆனால் இந்த செயல்முறையில், நாங்கள் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பாரதம் இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடைசி மைல் விநியோகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். காலப்போக்கில், நமது குடிமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் இரண்டும் வேகமாக மாறி வருகின்றன. குடிமைப் பணிகள்  இப்போது சமகால சவால்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவை பொருத்தமானதாக இருக்க முடியும். நமக்கான புதிய அளவுகோல்களை நாம் தொடர்ந்து நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை தொடர்ந்து பூர்த்தி செய்து அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். வெற்றிக்கான மிகப்பெரிய திறவுகோல் உங்களுக்கு நீங்களே சவால் விடுவதாகும். நேற்று சாதிக்கப்பட்டது, திருப்திக்கான ஒரு புள்ளியாக இருக்கக்கூடாது, அது நம்மை மேலும் சவால் செய்ய ஒரு காரணமாக இருக்க வேண்டும், இதனால் நாளை நம்மால் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும். முந்தைய அரசுகளுடன் நம்மை ஒப்பிட்டு நமது செயல்திறனை இனியும் அளவிட முடியாது. "மாவட்டத்தில் எனது முன்னோடி இவ்வளவு செய்தார், நான் இன்னும் அதிகமாக செய்தேன்" என்பது இனி போதாது. இப்போது நாம் நமது சொந்த தரங்களை உருவாக்க வேண்டும். நாம் கேட்க வேண்டியது: 2047 க்குள் 'வளர்ந்த பாரதம்' இலக்குகளிலிருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? திரும்பிப் பார்த்து செயல்படும் நேரம் முடிந்துவிட்டது. இப்போது கேள்வி என்னவென்றால், ‘இன்று நான் நிற்கும் இடத்திலிருந்து இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? அந்த தூரத்தை குறைக்க எனது செயல்திட்டம் என்ன? என் வேகம் என்ன? மற்றவர்களை விட 2047 இன் இலக்குகளை நான் எவ்வாறு வேகமாக அடைவது?’ இதுவே நமது கனவு, நமது நோக்கம், இலக்காக இருக்க வேண்டும்.

 

ஒவ்வொரு துறையையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்: நாம் நிர்ணயித்த இலக்குகளை அடைய நமது தற்போதைய வேகம் போதுமானதா? இல்லையென்றால், நாம் துரிதப்படுத்த வேண்டும். முன்பு இல்லாத தொழில்நுட்பங்களை இப்போது நாம் அணுகுகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்தியுடன் நாம் முன்னேற வேண்டும். 10 ஆண்டுகளில், 4 கோடி ஏழைகளுக்கு நிரந்தர வீடுகளை கட்டினோம். ஆனால் இப்போது, மேலும் 3 கோடி வீடுகளைக் கட்டுவதற்கான இலக்கை கொண்டுள்ளோம். 5-6 ஆண்டுகளில், 12 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளை குழாய் நீருடன் இணைத்துள்ளோம். இப்போது, ஒவ்வொரு கிராமப்புற வீட்டையும் நாம் விரைவில் இணைக்க வேண்டும். 10 ஆண்டுகளில், ஏழைகளுக்காக 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டியுள்ளோம். இப்போது, கழிவு மேலாண்மை தொடர்பான புதிய இலக்குகளை நாம் அடைய வேண்டும். கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது, நாடு முழுவதும் ஊட்டச்சத்துக்கான புதிய உறுதிமொழிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.100% மக்களை பயன்கள் சென்றடைதல், 100% தாக்கம் என்பது  நமது ஒற்றை இலக்காக  இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வர உதவியுள்ளது. இதே அணுகுமுறை வறுமை இல்லாத இந்தியாவுக்கு வழிவகுக்கும்.

 

நண்பர்களே,

 

அதிகாரத்துவத்தின் பங்கு முதன்மையாக ஒரு ஒழுங்குபடுத்துபவராக இருந்த ஒரு காலம் இருந்தது, இது தொழில்மயமாக்கல் மற்றும் தொழில்முனைவின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் நாடு இப்போது அந்த மனநிலையைத் தாண்டி வெகுதூரம் நகர்ந்துள்ளது. இன்று, குடிமக்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் மற்றும் ஒவ்வொரு தடைகளையும் கடக்க அவர்களுக்கு உதவும் சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். எனவே, குடிமைப் பணிகள் வெறும்  விதி புத்தகங்களின் பாதுகாவலராக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கு செயலூக்கமான வசதி செய்து கொடுப்பவராகவும் மாற வேண்டும். எம்.எஸ்.எம்.இ துறையின் உதாரணத்தை நான் உங்களுக்கு தருகிறேன். நாடு உற்பத்தி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த இயக்கத்தின் வெற்றி பெரும்பாலும் நமது எம்.எஸ்.எம்.இ துறையைப் பொறுத்தது. உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு இடையே, நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புதிய தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நாம் மிகவும் போட்டித்தன்மையுடன் மாறுவது முக்கியம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர், சிறு தொழில்முனைவோர்களுடன் மட்டும் போட்டியிடவில்லை, அவர்கள் உலகளவில் போட்டியிடுகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய நாடு தனது தொழில்களுக்கு இணக்கத்தை எளிதாக்குவதை சிறப்பாக வழங்கினால், அது நம் நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுடன் போட்டியிட சிறந்த நிலையில் இருக்கும். அதனால்தான் உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை நாம் தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். பாரத்தின் தொழில்கள் உலகளவில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றால், பாரத்தின் அதிகாரத்துவம் உலகின் சிறந்த எளிதான இணக்க சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த உலகில், குடிமைப் பணி அதிகாரிகளுக்கு தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமின்றி, புத்திசாலித்தனமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கும் பயன்படுத்த உதவும் திறன்களும் தேவை. "தொழில்நுட்ப யுகத்தில், ஆளுகை என்பது அமைப்புகளை நிர்வகிப்பது பற்றியது அல்ல, அது சாத்தியக்கூறுகளைப் பெருக்குவது பற்றியது." நாம் தொழில்நுட்ப ஆர்வலர்களாக மாற வேண்டும், இதனால் ஒவ்வொரு கொள்கையும் திட்டமும் தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் திறமையானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க முடியும். தரவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பதில் நாம் நிபுணர்களாக மாற வேண்டும், இதனால் கொள்கை வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் மிகவும் துல்லியமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் இயற்பியல் எவ்வளவு விரைவாக உருவாகி வருகின்றன என்பதை நீங்கள் காண்கிறீர்கள். விரைவில், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சி இருக்கும், இது இன்று நமக்குத் தெரிந்த டிஜிட்டல் மற்றும் தகவல் யுகத்திற்கு அப்பாற்பட்டது. இந்த எதிர்கால தொழில்நுட்ப புரட்சிக்கு நீங்கள் உங்களையும், முழு அமைப்பையும் தயார்படுத்த வேண்டும், இதனால் குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் அவர்களின் அபிலாஷைகளைப்  பூர்த்தி செய்யவும் முடியும். நமது குடிமைப் பணியாளர்களின் திறன்களை நாம் மேம்படுத்த வேண்டும், அப்போதுதான் எதிர்காலத்திற்குத் தகுந்த குடிமைப் பணிகளை நம்மால் உருவாக்க முடியும். அதனால்தான் நான் இப்போது குறிப்பிட்ட கர்மயோகி இயக்கம் மற்றும் குடிமைப் பணிகள்  திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன்.

 

நண்பர்களே,

 

வேகமாக மாறிவரும் இந்த சகாப்தத்தில், உலகளாவிய சவால்களை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கின்றன, குறிப்பாக உலகளாவிய தெற்கிற்கு, இந்த பிரச்சினைகள் கடுமையான நெருக்கடியாக மாறியுள்ளன. நடந்து கொண்டிருக்கும் உலகளாவிய மோதல்கள் பல நாடுகளில் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளன. இது மக்களை பாதித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பரஸ்பர தொடர்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கேற்ப நமது கொள்கைகள் மற்றும் உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், பெருந்தொற்றுகள் அல்லது சைபர் அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும், பாரதம் நடவடிக்கை எடுப்பதில் பத்து படிகள் முன்னால் இருக்க வேண்டும். நாம் உள்ளூர் அளவிலான உத்திகளை வடிவமைக்க வேண்டும் மற்றும் நெகிழக்கூடிய வளர்ச்சி மாதிரிகளை உருவாக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

நான் செங்கோட்டையிலிருந்து ஐந்து உறுதிமொழிகள் பற்றிப் பேசினேன்: வளர்ந்த பாரதத்திற்கான உறுதிப்பாடு; அடிமை மனநிலையிலிருந்து விடுதலை; நமது பாரம்பரியத்தின் பெருமை; ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு; நமது கடமைகளை நேர்மையாக செய்வது. இந்த ஐந்து உறுதிப்பாடுகளை சுமப்பவர்கள் நீங்கள்தான். ஒவ்வொரு முறையும் நீங்கள் வசதிக்கு பதிலாக நேர்மை, செயலற்ற தன்மைக்கு பதிலாக புதுமை அல்லது அந்தஸ்தை விட சேவைக்கு முன்னுரிமை அளிக்கும்போது, நீங்கள் தேசத்தை முன்னோக்கி நகர்த்துகிறீர்கள். உங்கள் அனைவர் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தங்கள் தொழில்முறை பயணத்தைத் தொடங்கியுள்ள இளம் அதிகாரிகளுக்கு, நான் மேலும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன்: சமூகத்தின் ஆதரவு இல்லாமல் சமூகத்தில் வெற்றியை அடைந்தவர்கள் யாரும் இல்லை. சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல், ஒரு அடி கூட முன்னேறுவது கடினம். அதனால்தான் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வழிகளில் சமூகத்திற்கு திருப்பித் தர விரும்புகிறார்கள். நீங்கள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் திருப்பித் தர உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கும், அதிகமானவற்றை மக்களுக்குத் திருப்பித் தருவதற்கும் நாடு, சமூகம் உங்களுக்கு இந்த மகத்தான பொறுப்பை வழங்கியுள்ளது.

 

நண்பர்களே,

 

குடிமைப் பணிகளில் சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. சீர்திருத்தங்களின் வேகத்தை நாம் துரிதப்படுத்த வேண்டும், அவற்றை அளவிடவும் வேண்டும். உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், உள்நாட்டு பாதுகாப்பு, ஊழலை ஒழிப்பதற்கான நமது இயக்கம், சமூக நலத் திட்டங்கள் அல்லது விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் இலக்குகள் என ஒவ்வொரு துறையிலும் நாம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதுவரை நாம் சாதித்திருப்பது பாராட்டத்தக்கது, ஆனால் இப்போது நாம் அதை விட பல மடங்கு அதிகமாக சாதிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மத்தியில், நாம் எப்போதும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: "எவ்வளவுதான்  தொழில்நுட்பத்தால் உலகம் இயக்கப்பட்டாலும், மனித தீர்ப்பின் முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. "உணர்வுபூர்வமாக இருங்கள், ஏழைகளின் குரலைக் கேளுங்கள், அவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுங்கள், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை உங்கள் முன்னுரிமையாக ஆக்குங்கள். அதிதி தேவோ பவ (விருந்தினரே கடவுள்) என்று நாம் கூறுவதைப் போல, 'நாக்ரிக் தேவோ பவ' (குடிமகனே கடவுள்) என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். ஒரு அரசு ஊழியராக மட்டும் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளாமல், 'வளர்ந்த பாரதத்தின்' சிற்பியாக உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

ஒருவர் அரசு ஊழியராக மாறி, அந்தப் பொறுப்பில் வளர்ந்து, அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றிய காலம் ஒன்று இருந்தது. காலம் மாறிவிட்டது. பாரதத்தின் மீது நான் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வை, 140 கோடி இந்தியர்களின் கண்களில் நான் காணும் கனவுகள், இதைச் சொல்ல என்னைத் தூண்டுகின்றன: நீங்கள் இனி அரசு ஊழியர்கள் மட்டுமல்ல. நீங்கள் புதிய பாரதத்தின் சிற்பிகள். சிற்பிகள் என்ற முறையில் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நமக்கு நாமே அதிகாரம் அளித்துக் கொள்ள வேண்டும், தேசிய இலக்குகளுக்காக நமது நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும், ஒவ்வொரு சாதாரண குடிமகனின் கனவுகளையும் நமது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் அதைச் செய்யும்போது, 'வளர்ந்த பாரதம்' எழுச்சி பெறுவதை நம் கண்களாலேயே காண்போம். இன்று நான் பேசிக்கொண்டிருக்கும்போது, என் பார்வை இங்கே அமர்ந்திருக்கும் ஒரு இளம் பெண்ணின் மீது விழுந்தது, ஒரு சிறிய பொம்மை போன்ற குழந்தை. ஒருவேளை, 2047 வாக்கில், அவள் உங்கள் இடத்தில் அமர்ந்திருப்பாள். இந்தக் கனவுகளைத்தான் நாம் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே நமது 'வளர்ந்த பாரதத்தின்' இலக்காக இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மிக்க நன்றி!

 

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

RB/DL


(Release ID: 2123321) Visitor Counter : 8