பிரதமர் அலுவலகம்
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
Posted On:
14 APR 2025 4:17PM by PIB Chennai
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
இன்று, அன்னை சரஸ்வதி தோன்றிய நிலம், தேவி மந்திரம் வசிக்கும் இடம், ஐந்து முகம் கொண்ட ஹனுமான் இருக்கும் இடம், கபால்மோச்சன் சாஹிப்பின் ஆசீர்வாதங்களைப் பெறும் இடம், கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் சங்கமம் எங்கே பாய்கிறதோ அந்த நிலத்திற்கு இன்று நான் தலைவணங்குகிறேன். இன்று பாபாசாகேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையும், உத்வேகமும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தில் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன.
நண்பர்களே,
யமுனாநகர் வெறும் நகரம் மட்டுமல்ல – இது இந்தியாவின் தொழில்துறை வரைபடத்தின் ஒரு முக்கிய பகுதியும் கூட. மரம் முதல் பித்தளை மற்றும் எஃகு வரை, இந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.
நண்பர்களே,
நான் ஹரியானாவின் பொறுப்பாளராக இருந்தபோது, பஞ்ச்குலாவுக்கும் இங்கும் அடிக்கடி பயணம் செய்தேன். அர்ப்பணிப்புள்ள பழைய கட்சித் தொண்டர்கள் பலருடன் இங்கு பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடின உழைப்பாளிகளின் அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
நண்பர்களே,
தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஹரியானா இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சியின் இரட்டை வேகத்தைக் காண்கிறது. 'வளர்ச்சியடைந்த ஹரியானா' - வளர்ச்சியடைந்த இந்தியா' இதுதான் நமது தீர்மானம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவும், ஹரியானா மக்களுக்கு சேவை செய்யவும், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவும் நாங்கள் அதிக வேகத்திலும், மிகப் பெரிய அளவிலும் பணியாற்றி வருகிறோம். இன்று இங்கு தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் இதற்கு வாழும் உதாரணம். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ஹரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பாபாசாகேப்பின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதுடன் எங்கள் அரசு முன்னேறி வருவது குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் தொழில் வளர்ச்சியை சமூக நீதிக்கான பாதையாகப் பார்த்தார். இந்தியாவில் சிறு நில உடைமைகளின் பிரச்சனையை அம்பேத்கர் அங்கீகரித்தார். பாபாசாகேப் தலித் மக்களிடம் விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லை, எனவே தொழிற்சாலைகள் அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று கூறினார். பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வை என்னவென்றால், தொழிற்சாலைகள் தலித்துகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதாகும். பாபாசாகேப் நாட்டின் முதல் தொழில்துறை அமைச்சராக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் இணைந்து பாரதத்தில் தொழில்மயமாக்கும் திசையில் பணியாற்றினார்.
நண்பர்களே,
கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சவுத்ரி சரண் சிங் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் இதிலிருந்து வேறுபட்டதல்ல.
நண்பர்களே,
இந்த உணர்வு, இதே யோசனை, இந்த உத்வேகம் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் 'தற்சார்பு இந்தியா' ஆகியவை மனதில் உள்ளன. அதனால்தான் எங்கள் அரசு இந்தியாவில் உற்பத்திக்கு இவ்வளவு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், உற்பத்தி இயக்கத்தை நாங்கள் அறிவித்தோம். தலித், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி அளித்தல்; வணிக செலவுகளை குறைத்தல்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையை வலுப்படுத்தல் ஆகியன முக்கியமானவை ஆகும். நண்பர்களே,
'விக்சித் பாரத்'தை உருவாக்குவதில் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. மின்சாரம் கிடைப்பதை அதிகரிக்க எங்கள் அரசு அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறது. ஒரே நாடு-ஒரே மின் தொகுப்பு முன்முயற்சி, புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய சக்தி அல்லது அணுசக்தித் துறையின் விரிவாக்கம் என எதுவாக இருந்தாலும், மின்சாரப் பற்றாக்குறை தேச நிர்மாணத்திற்கு ஒரு தடையாக மாறாத வகையில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதே நமது முயற்சியாக இருக்கும்.
நண்பர்களே,
காங்கிரஸ் ஆட்சியின் நாட்களை நாம் மறந்துவிடக் கூடாது. 2014 க்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாடு முழுவதும் இருட்டடிப்பு ஏற்பட்ட நாட்களை நாம் கண்டோம் - முழு பிராந்தியங்களும் மின்சாரம் இல்லாமல் இருக்கும். காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்றும் நாடு இதுபோன்ற இருட்டடிப்புகளை சந்தித்திருக்கும். தொழிற்சாலைகள் இயங்காது, ரயில்கள் இயங்காது, தண்ணீர் வயல்களுக்கு வராது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காங்கிரஸ் இன்னும் அதிகாரத்தில் இருந்திருந்தால், இதுபோன்ற நெருக்கடிகள் தொடர்ந்திருக்கும், மேலும் நாடு பிளவுபட்டு சிக்கித் தவிக்கும். ஆனால் பல வருட முயற்சிக்குப் பிறகு, இன்று நிலைமை மாறி வருகிறது.
நண்பர்களே,
ஒருபுறம் அனல் மின் நிலையங்களில் முதலீடு செய்கிறோம், மறுபுறம் நாட்டு மக்களை அவர்களையே மின் உற்பத்தி செய்பவர்களாக மாற்றி வருகிறோம். நாங்கள் பிரதமரின் மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை தொடங்கியுள்ளோம். தங்கள் விடுகளின் கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளை நிறுவுவதன் மூலம், மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும். அதுமட்டுமின்றி, கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எந்த மின்சாரத்தையும் கூடுதல் வருமானத்திற்கு விற்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 1.25 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும் இந்த முயற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், அதைச் சுற்றியுள்ள சேவை சுற்றுச்சூழல் அமைப்பும் வளர்ந்து வருகிறது. சூரிய சக்தி பேனல்களில் துறையில் புதிய திறன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின்றன, இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
நண்பர்களே,
நமது சிறிய நகரங்களில் உள்ள சிறு தொழில்களுக்கு போதுமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
நண்பர்களே,
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு முக்கிய தூண்களுக்கு அதிகாரம் அளிக்க இரட்டை என்ஜின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நம் அனைவரின் முயற்சியால், ஹரியானா நிச்சயமாக வளர்ச்சியடையும். இதை நான் என் கண்களால் காண்கிறேன் – ஹரியானா செழுமையடைந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும். இந்த எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இரு கைகளையும் உயர்த்தி முழு ஆற்றலுடன் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத் மாதா கீ ஜெய்!
பாரத் மாதா கீ ஜெய்!
பாரத் மாதா கீ ஜெய்!
மிகவும் நன்றி!
***
(Release ID: 2121591)
TS/IR/RR/KR
(Release ID: 2121763)
Visitor Counter : 8